1855ல் எழுதப்பட்ட டால்ஸ்டாயின் ஆரம்பகாலக் கதைகளில் ‘விறகு வெட்டுதல்’ ஒன்று. அந்த நேரத்தில் டால்ஸ்டாய் தனது அப்போது ராணுவச் சேவையிலிருந்த தனது அண்ணன் நிகோலேயோடு ரஷ்யாவின் தெற்கிலிருக்கும் காகேஸிய பகுதியில் இருந்தார்.
1830களிலும் 1840களிலும் ரஷ்யப் படைகள் ஜார்ஜியா ஆர்மினியா உட்பட்ட பகுதிகளைக்
கைப்பற்றியிருந்தது. டால்ஸ்டாய் அங்கு இருந்த போது அவை அப்பகுதிகளில் ரஷ்ய ஆட்சியை முஸ்லீம் தார்தார் இனத்தவருக்கு எதிராய் நிலைநிறுத்தும் பணியிலிருந்த.
டால்ஸ்டாய் தன் அண்ணனோடு காகேஸிய போர்முனைகளில் பெற்ற அனுபவங்களே ‘இரண்டு ஹஸ்ஸார்கள்’ (Two Hussars), ‘காகேசிய கைதி’ (Prisoner of the Caucasus), ‘விரைவுத் தாக்குதல்’ (The Raid), ‘ஹாஜி முராட்’ (Hadji Murat) மற்றும் இந்தக் கதைக்கும் அடித்தளமாக அமைந்தன. மேலும் ‘போரும் அமைதியும்’ நாவலின் மகத்தான போர்க்கள வருணனைகளுக்கும் டால்ஸ்டாயின் காகேசிய போர் அனுபவங்கள் வழிவகுத்தன.
‘விறகு வெட்டுதல்’ எளிய கதையமைப்புக் கொண்டதுதான். மலைப்பகுதியில் குளிர்காலத்தின்போது முகாமிட்டிருக்கும் ரஷ்யப் படை வீரர்கள் மறுநாள் அதிகாலை கிளம்பிப் போய் முகாமிற்குத் தேவையான விறகுகளை வெட்டி வருமாறு அனுப்பப்படுகிறார்கள்.
அதற்கடுத்த இருபத்து நான்கு மணி நேரச் சம்பவங்களின் விவரிப்பாகக் கதை. அப்படைவீரர்களின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குத் தலைவனான ஒரு அதிகாரியின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது.
டால்ஸ்டாய் அழகியல் ஆற்றலின் முக்கிய வெளிப்பாடுகளில் ஒன்று அவரது துல்லியமான வருணனைகளில்தான் உள்ளது என்று நபோகோவ் உள்ளிட்ட முக்கியமான விமர்சகர்கள் சொல்லியிருக்கிறார்கள். சம்பவங்களையும் மனிதர்களையும் விவரிக்க டால்ஸ்டாய் தேர்ந்தெடுக்கும் சிறுச் சிறு விவரங்களின் துல்லியத்தாலும் எத்தகைய விவரத்தை சேர்ப்பது என்ற சாமர்த்தியத்தாலும் கண்களுக்கு முன்னாலிருப்பது கதை என்பதையே மறக்கும் அளவுக்கு வார்த்தைகளால் யதார்த்த உலகத்தை உருவாக்கி வாசகரை உள்ளிழுத்துக் கொள்வார்.
அவ்வகையில் ‘விறகு வெட்டுதல்’ கதையின் முதல் பத்துப் பக்கங்கள் டால்ஸ்டாய் பின்னாளில் ‘போரும் அமைதியும்’, ‘அன்னா கரனீனா’ போன்ற பெரும் நாவல்களில் வரப்போகும் அவருடைய வருணனைச் சிறப்புக்கும் மனிதச் சித்தரிப்புக்களின் அழகியல் மேன்மைக்கும் முக்கியச் சான்றாய் அமைகின்றன.
குளிர்கால இரவின் கடுமையான இருட்டில் அதிகாலை புறப்பட வேண்டும் என்ற கட்டளை பிறந்தவுடன் அதிகாரியின் மனதில் ‘எதிரிகளின் பகுதிக்குப் போகிறோமே’ என்று எழும் அச்சம், இருட்டில் புறப்படும்போது குரல்களாலும் இருட்டில் தெரியும் படைத் தளவாடங்களின் சின்ன மினுமினுப்பினாலும் மட்டுமே படைவீரர்கள் ஒருவர் அறிந்து கொள்வது, மெல்ல பகல் வெளுக்கச் சுற்றியிருக்கும் அனைத்தும் பால்போன்ற பனியால் மூடியிருப்பது பின்னர் வெயிலேற நிர்மலமாக கனநீல வானம், தார்தார்கள் ரஷ்யர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும்போது தூரத்தில் எழும் மெல்லிய நீலப் புகை – வாசித்து அனுபவிக்க வேண்டியவை.
கதையைச் சொல்லிச் செல்லும் அதிகாரியைச் சுற்றியிருக்கும் ஆட்களும் பொருள்களும் இவ்வளவு துல்லியமாக விவரிக்கப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் மரணத்தைக் கொண்டு தரும் தார்தார் வீரர்கள் மட்டும் டால்ஸ்டாயால் தூரத்துப் புகை உருவங்களாக, மெல்லிய மினுமினுப்புக்களாக, விநோதமான ஆடை அணிந்த வடிவங்களாக மட்டுமே கதை முழுவதும் காட்டப்படுவது அற்புதமான நுணுக்கம். காகேசியா மீது படையெடுத்து வந்த ரஷ்யர்களில் பெரும்பாலோர் அங்கு வாழ்ந்த மக்களை கொன்றழிக்க வேண்டிய எதிரிகளாகப் பார்த்தார்களே ஒழிய தங்களைப்போல் பாசம், கருணை, அச்சம், மானம், பெரும்கோபம், வீரம், கோழைத்தனம் என்று அனைத்தும் உடைய மனிதர்களாக என்றுமே பார்த்ததில்லை.
இந்தத் தூரத்து மனிதர்கள் சுடும் குண்டுகளால் அதிகாரியின் குழுவில் இருக்கும் வெலான்ச்சுக் என்ற போர்வீரன் சாகிறான். கதையின் தொடக்கத்தில் படைகள் கிளம்பும் நேரத்தில் திடீரென்று காணாமல் போனவன். அவனைக் கண்டுபிடிக்கும்போது அவன் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கதையில் வருகிறது. மற்ற படைவீரர்கள் அவன் குடித்துவிட்டு எழ முடியாமல் இருந்ததாகச் சொல்லிக் கேலி செய்ய அவனோ ஏதோ ஒன்று அவனைத் தூக்கத்தில் ஆழ்த்தியதாகச் சொல்கிறான். அதற்குப் பின்னால் போர்முனையில் பதினாறு வருடங்கள் கழித்துவிட்டு இந்த மத்திய வயதுக்காரன் தன் கடமை உணர்ச்சியைக் காட்ட முன்னும் பின்னும் அலைவதை
டால்ஸ்டாய் காட்டுவதால் அவன் குண்டடி பட்டுப் பரிதாபமாக விழும்போது நமக்கும் மனது ‘ஐயோ’ என்கிறது.
உண்மையில் இதுதான் ‘விறகு வெட்டுதல்’ என்ற இந்தப் படைப்பின் சாராம்சம். வயசாளிகள், மத்திய வயதுக்காரர்கள், அனுபவமே இல்லாத வாலிபர்கள் என்று ஒரு கூட்டமே ஆட்சியாளர்களின் நாடுபிடிக்கும் ஆசையால் காகேசியாவில் முன்பின் அறிமுகமில்லாத எதிரிகளோடு மோதுவதை டால்ஸ்டாய் பல வழிகளிலும் காட்டுகிறார். தார்தார்கள் மீது ரஷ்யர்களுக்கு இவர்கள்மீது அவர்களுக்கு முன்விரோதம் எதுவும் இல்லை.
ஆனால் கதை சொல்லும் அதிகாரிக்கும் பால்கோவ் என்ற வேறோரு அதிகாரிக்கும் இடையே நடைபெறும் உரையாடல்களில் டால்ஸ்டாய் காட்டுவதைப்போல் போர்முனையில் பல்லாண்டுகளாக இருந்துவிட்ட இந்த ரஷ்ய வீரர்களுக்குச் சொந்த ஊரும் பரிச்சமில்லாத வந்த ஊரும் சொந்தமில்லாத நிலையே மிஞ்சுகிறது. மறுபடியும் ஊருக்குப் போய்ப் பேரோட வேண்டும் என்றால் அவர்கள் பதக்கங்களையும் பதவி உயர்வுகளையும் இங்கே வாங்கிவிட வேண்டும். அதற்கு எதிரிகளில் நிறைய
பேரைக் கொன்று குவிக்க வேண்டும்.
மனிதர்களை ஆட்டுவில்கும் ஒரு கொடூரமான நாகரிகச் சூழலின் அவலம், கொடுமை, நன்மை, தூய்மை, வன்முறை, வீரம், கோழைத்தனம், அலட்சியம் என்ற பன்முகத்தன்மையைப் ‘போரும் அமைதியும்’ காவியமாகக் காட்டியதென்றால் ‘மரம் வெட்டுதல்’ அதன் குறுகிய வடிவம்.
ஆனால் இரண்டிலும் டால்ஸ்டாயின் கலை உச்சத்தில் இருப்பது என்னவோ உண்மைதான்.
