
ஒரு வகையில் முதலாம் உலகப் போர் இரண்டாம் உலகப் போரைவிட கொடூரமானது.
1939ல் இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் தொடங்கியபோது போர்க்களங்களில் கொத்துக் கொத்தாகச் சாவது ஓரளவுக்குச் சாதாரணமாகி இருந்தது.
ஆனால் முதலாம் உலகப் போர் அப்படியல்ல. 1914க்கு முந்திய காலங்களில் நடந்த போர்களில் – 1870ல் நடந்த பிராங்கோ ப்ரஸ்ஸிய போர் உள்பட – மனிதர்களைத் தூரத்திலிருந்து தாக்கி அவர்களை ஒரே நேரத்தில் பெருங்கூட்டமாகச் சாகடிக்கும் வகையில் தொழில் நுட்பமோ, விஞ்ஞானமோ வளர்ந்திருக்கவில்லை.
1914ல் ஒரே நேரத்தில் சரமாரியாகத் தோட்டாக்களைத் துப்பும் இயந்திரத் துப்பாக்கிகள், கண்ணி வெடிகள், டாங்கிகள், போர் விமானங்கள், விஷ வாயு தாக்குதல் எல்லாம் அறிமுகமாயின.
போர் என்பது கொடூரமானது என்றாலும் குறைந்தபட்ச மனிதாபிமான நெறிக்குட்பட்டு நடத்தப்படும் என்று நம்பிப் போருக்குச் சென்ற பல லட்சம் இளையர்கள் யாரால் அடிக்கப்படுகிறோம் என்று அறியாமல் செத்துப் போனார்கள். இன்னும் பல்லாயிரம் பேர் விஷ வாயுவால் மூச்சுத் திணறிச் செத்தார்கள். பலர் குருடர்களாக போர்முனையிலுருந்து திரும்பினார்கள். இன்னும் பல்லாயிரம் பேரின் உடல்களைக் கண்ணிவெடிகள் சிதைத்துக் குரூபமாக்கின.
மிகக் குறுகிய காலத்தில் அதன் இளையர்கள்மீது கட்டவிழ்க்கப்பட்ட அரக்கத்தனமான வன்முறையால் ஐரோப்பா ஆடிப்போனது. முதலாம் உலகப் போரின்போது அனுபவித்த கொடூரம் அதன் ஆன்மாவில் பெரும் வடுவாக இறங்கியது.
போரிலிருந்து தப்பிப் பிழைத்த இளையர்களில் பெரும்பாலும் உடலால் சிதையாமல் இருந்தாலும் மனத்தால் சிதைந்தவர்களாக ஆனார்கள். வாழ்க்கையில் எவ்வித பிடிப்பும், நோக்கமும் இன்றி அலைந்தார்கள். குடியிலும் அர்த்தமே இல்லாத கேளிக்கைக் கொண்டாட்டங்களிலும் வாழ்க்கையைத் தொலைத்தார்கள்.
இவர்களுக்குத் தொலைந்த தலைமுறை என்ற பெயர் தரப்பட்டது. கொடுத்தவர் அமெரிக்க எழுத்தாளர் கேர்ட்டுரூத் ஸ்டெய்ன். ஒரு தடவை ஸ்டெய்ன் தனது வாகனத்தைப் பழுது பார்க்க பிரஞ்சு மெக்கானின் கடையொன்றுக்குப் போயிருந்தபோது வேலையை விரைவில் முடிக்க முடியாமல் தடுமாறிய கடைப்பையனை கடை முதலாளி ‘நீங்கள் எல்லோரும் தொலைந்த தலைமுறை’ என்று திட்டினார்.
இந்தக் கதையைப் பின்னர் ஹெமிங்வேயிடம் சொன்ன ஸ்டெய்ன் ‘அதுதான் நீங்கள். போரில் ஈடுபட்ட வாலிபர்கள் நீங்கள் அத்தனைப் பேரும் தொலைந்த தலைமுறைதான்’ என்று சொன்னதாக ஹெமிங்வே பின்னர் தனது சுயசரிதைக் கட்டுரையான A Moveable Feast நூலில் எழுதுகிறார்.
ஹெமிங்வே பின்னர் இந்த வாசகத்தைத் தனது A Sun Also Rises நாவலின் ஆரம்பத்தில் வைத்தார்.
ஹெமிங்வே, ஜான் ரோட்ரிகோ தோஸ் பாஸோஸ், ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட் ஆகியோர் இந்தத் தொலைந்த தலைமுறையின் முக்கியமான எழுத்தாளர்களாகக் கருதப்படுகிறார்கள்.
(1) மனிதர்களின் தன்மானத்தை முற்றிலும் உறித்துவிட்டு அவர்களை எந்தவிதமான மதிப்புமில்லாத வெற்று இலக்கங்களாக மாற்றும் ஊழலும் அதிகார மமதையும் புரையோடிப் போன சமுதாயக் கட்டமைப்பின் மீதான விமர்சனம், (2) எவ்வித மீட்சியையும் நோக்கி நகர முடியாத தனிமனித அவலம், (3) அர்த்தமில்லாத கொண்டாட்டங்களில் வாழ்க்கை வீணாய்க் கழிவது, (4) கதைசொல்லி புறச்சம்பவங்களை மட்டுமின்றி அகச் சிந்தனை மற்றும் கற்பனை ஓட்டங்களையும் நிகழ்வுகளாகவே பிரதானப்படுத்திக் கதையோட்டத்திற்குள் நுழைத்தல் ஆகிய உத்திகளை தொலைந்த தலைமுறை எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களில் பயன்படுத்தினார்கள்.
தொலைந்த தலைமுறை எழுத்தாளர்களின் தாக்கம் பின்னாளில் கர்ட் வொன்னகுட், ஜாக் கேருவேக், தாமஸ் பிங்கோன் ஆகியோரின் எழுத்துகளிலும் தெரிகிறது.
இந்தத் தலைமுறையின் இலக்கியப் பங்களிப்புகளை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் ஃபிட்ஸ்ஜெரால்டின் The Great Gatsy, தோஸ் பாஸோஸின் Three Soldiers நாவல்களையும் பின்னாளில் கர்ட் வொன்னகுட் எழுதிய Slaughterhouse Five மற்றும் ஜேக் கேருவேக்கின் On the Road நாவல்களையும் வாசித்துப் பார்க்கலாம்.