ரஷ்ய இலக்கியத்தின் தேவைப்படாத மனிதர்கள்

வாசிக்கப்பட வேண்டிய பத்து சிறந்த ரஷ்ய நாவல்கள் என்று கடந்த சில நாட்களில் பதிவிட்டிருந்தேன்.

அந்தப் பட்டியலில் இவான் துர்கனேவின் 1850ம் ஆண்டு வெளிவந்த குறுநாவலான “தேவைப்படாத மனிதனின் டைரி” (The Diary of a Superfluous Man)-ஐ வேண்டுமென்றே சேர்க்காமல் விட்டிருந்தேன்.

அழகியல், நாவல் வடிவத்தின் வளர்ச்சி என்ற அடிப்படையில் ‘”தேவைப்படாத மனிதனின் டைரி”-ஐ நான் பட்டியலில் சேர்க்காமல் விட்டது சரிதான். டைரிக் குறிப்புகளால்  கதையை முன் நகர்த்திச் செல்லும் உத்தியை இந்நாவல் கையாள்கிறது.

இந்த வடிவம் 1748லேயே ஆங்கிலத்தில் ஜான் க்லேலாண்டால் தனது ‘காமக் கிளுகிளுப்புகளுக்குப் பஞ்சமில்லாத’ நாவலான Fanny Hill-இல் பயன்படுத்தப்பட்டு விட்டது.  தஸ்தயெவ்ஸ்கிகூட 1846ல் வெளிவந்த Poor Folk நாவல் ரஷ்யாவைப் பிடித்தாட்டும் வறுமையைப் பற்றிய இரு நண்பர்களிடையே நடக்கும் கடிதப் போக்குவரத்தின் வழியிலேயே கதையைச் சொல்லிக் கொண்டு போகிறது.

ஆனால் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் துர்கனேவ்-இன் “”ம்தேவைப்படாத மனிதனின் டைரி” மிக முக்கியமான நாவல்.

உலக இலக்கியத்துக்கு ரஷ்ய இலக்கியம் தந்த மிக முக்கியமான பங்களிப்பான ‘தேவைப்படாத மனிதன்’ என்ற கதாபாத்திர வகைமையை துர்கனேவ்-இன் இந்த நாவல்தான் உலகத்திற்கு (அறிமுகப்படுத்தா விட்டாலும்) அடையாளப்படுத்திக் காட்டியது.

அது என்ன “தேவைப்படாத மனிதன்”? ரஷ்ய நாவல்களில் வரும் கதாபாத்திரங்களில் ஒருவன் மிக நன்றாகப் படித்திருப்பான். அதீத புத்திக் கூர்மையுள்ளவனாக இருப்பான். உயர்ந்த குடும்பத்தைச்  சேர்ந்தவனாக இருப்பான். கலை, இலக்கியம் பற்றிய மிக உன்னதமான கருத்துகளும், ரசனையும்கூட அவனுக்கு இருக்கும். ஆனால் அவனால் உருப்படியாக எதுவும் செய்ய முடியாதபடி இருக்கும். சும்மா சோம்பித் திரிந்தே வாழ்க்கையைக் கடத்துவான். கண்ணெதிரே நடக்கும் அநீதிகளைத் தடுக்கும் ஆற்றலும், சமூக அந்தஸ்து அவனுக்கு இருந்தும் எதுவும் செய்ய மாட்டான். காதலில் விளக்க முடியாத காரணங்களுக்காகத் தோல்வியடைவான். தனது தேர்ச்சிகளால் மற்றவர்களையும் காயப்படுத்தித் தன்னையும் இறுதியில் அழித்துக் கொள்வான்.

துர்கனேவ்வின் “தேவைப்படாத மனிதனின் டைரி” குறுநாவலில் வரும் சுல்காத்துரின் தன்னையே முக்கியமில்லாதவனாய் கருதுகிறான். குறுநாவலின் தொடக்கத்தில் தான் சாகக் கிடப்பதாய்ச் சொல்லும் சுல்காத்துரின் தன் மீது யாரும் அன்போ காதலையோ காட்டியதில்லை என்கிறான். அவன் கணிப்பைப் பொறுத்தவரையில் அவன் வரலாற்றிலிருந்து எளிதில் கழித்துவிடக் கூடிய மனிதன். சுல்காத்துரின் தன்னையே “தேவைப்படாத மனிதன்” என பெயரிட்டு அழைத்துக் கொள்கிறான்.

டைரிக் குறிப்புகள் தொடர சுல்காத்துரின் தனது வாழ்க்கைச் சம்பவங்களை விவரிக்கிறான். பணக்கார அதிகாரி ஒருவரின் மகள் ஒருத்தியைக் காதலித்ததையும், சுல்காத்துரினுக்கு சரியாகப் பேசவோ பழகவோ தெரியாவிட்டாலும் அந்த அழகிய பெண் அவனோடு கனிவாகப் பழகியதாகவும் சொல்கிறான். ஆனால் ஒரு நாள் நடைபெறும் நடன விருந்தின்போது அரங்கத்துக்குள் நுழையும் பணக்கார இளவரசன் மீது அந்தப் பெண்ணின் கண் போகிறது. இதனால் வேதனையடையும் சுல்காத்துரின் இளவரசனை அவமானப்படுத்துகிறான். இருவரும் முட்டாள்தனமான சாகும்வரை சண்டையிடத் தயாராகிறார்கள்.

மொத்தத்தில் அவன் விரும்பிய எதுவும் கிடைக்காமல் சுல்காத்துரின்-இன் வாழ்க்கை பூஜ்ஜியமாக முடிகிறது.

சில விமர்சகர்கள் ரஷ்யாவில் இத்தகைய “தேவைப்படாத மனிதர்கள்” உருவாவதற்கு 19ம் நூற்றாண்டு ரஷ்யாவில் நிலவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைதான் காரணம் என்கிறார்கள். நெப்போலியனின் படையெடுப்பு ரஷ்யாவைச் சர்வநாசம் செய்த பிறகு ஜார் மன்னனின் ஆட்சியில் ரஷ்யாவின் சகல அரசியல்/நிர்வாகத் துறைகளிலும் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடின. இது திறமை வாய்ந்த மேல்தட்டு இளைஞர்களின் முன்னேற்றத்தைத் தடுத்தது. அவர்களும் ஊழல்மிகுந்த அரசாங்கத் துறையில் ஊழலின் மேலிருந்த வெறுப்பால் சேரத் தயங்கினார்கள். சும்மாவே தமது காலத்தைக் கழித்தார்கள். மேல்தட்டுக் குடும்பத்தில் பிறந்தவர்கள் இதைத்தான் செய்யலாம். உடல் உழைப்பு தொடர்புடைய எதையும் செய்யக் கூடாது என்று அன்றைய சமூகக் கட்டுப்பாடும் இந்தத் தலைமுறையின் மாபெரும் சோம்பலுக்கு வழிவகுத்தது.

மற்ற விமர்சகர்கள் அந்தக் காலக்கட்டத்துப் படித்த ரஷ்ய இளைஞர்களுக்கு ஆங்கிலக் கவிஞர் பைரன் மீதிருந்த மோகம்தான் அவர்களைப் பைரனைப்போலவே தீராத சோகத்திலும், அடையவே முடியாத காதல்களை எண்ணியும் வாழ்க்கையைக் கடத்தத் தூண்டியதாகச் சொல்கிறார்கள்.

எது எப்படி இருப்பினும் துர்கனேவ் அடையாளப்படுத்திய “தேவைப்படாத மனிதன்” என்ற கதாபாத்திரம் முக்கியமான ரஷ்ய நாவல்களில் தோன்றியே வந்திருக்கிறது.

துர்கனேவ்  “தேவைப்படாத மனிதனின் டைரி”-ஐ எழுதுவதற்கு முன்னாலேயே வெளிவந்துவிட்ட புஷ்கினின் “இயூஜின் ஓனெகின்” கவிதை நாவலில் வரும் இயூஜின் ஓனெகின், லெர்மந்தோவ்-இன் A Hero for Our Time-இல் வரும் பெச்சோரின் தொடங்கிப் பின்னாளில் தஸ்தவ்யெஸ்கியின் ராஸ்கோல்நிகோவ், மிஷ்கின் இளவரசன், டால்ஸ்டாயின் போரும் அமைதியில் வரும் பேஷுகோவ் ஆகிய அனைவரும் தேவைப்படாத மனிதர்களே. துர்கனேவ்-இன் “தந்தைகளும் மகன்களும்” நாவலில் வரும் பாஸாரோவ்வையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.

வாசிக்க வேண்டிய 10 ரஷ்ய நாவல்கள் (இரண்டாம் பகுதி)

முந்திய பதிவில் குறிப்பிட்டிருந்த (1) கரமசோவ் சகோதரர்கள், (2) அன்னா கரனீனா, (3) போரும் அமைதியும், (4) குற்றமும் தண்டனையும், மற்றும் (5) இவான் இலியிச்சின் மரணம் ஆகிய நாவலகள் அனைவராலும் செவ்வியல்தன்மையுடைய நாவல்கள் என்று ஒப்புக் கொள்ளப்படுபவை.

ஆங்கில மொழியைப் பொறுத்தவரை 1930கள் தொடங்கி ரஷ்ய செவ்வியல் நாவல்களைப் பற்றிய ஆய்வு  உலக இலக்கியத்தில் அவற்றின் முக்கியத்தவத்தைக் குறித்தும் கட்டுரைகள் வெளிவர ஆரம்பித்துவிட்டன.

ஆங்கில நாவல் உலகில் தலைசிறந்தவர்கள் என்று கருதப்பட்ட ஹென்றி ஜேம்ஸ், ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன் போன்றவர்கள் டால்ஸ்டாய், தஸ்தவ்யெஸ்கி, துர்கனெவ் ஆகியோரது நாவல்களைச் சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள்.

ஆர்னல்ட் பென்னட் உலகின் மிகச் சிறந்த பன்னிரண்டு நாவல்களைப் பட்டியல் போட்டார். அதில் இருந்த அத்தனை நாவல்களும் ரஷ்ய நாவல்களாகவே இருந்தன.

வாசிக்க வேண்டிய மிகச் சிறந்த பத்து ரஷ்ய நாவல்கள் பட்டியலில் இரண்டாம் பகுதியாக கொடுக்கப்பட்டுள்ள கீழ்வரும் ஐந்து நாவல்கள் முதல் ஐந்தின் அதே செவ்வியல் தன்மை கொண்டவை அல்ல. (ஓரளவுக்குத் துர்கனேவ்வை வேண்டுமென்றால் செவ்வியல் என்ற வட்டத்துக்குள் சேர்த்துக் கொள்ளலாம்).

இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் ரஷ்ய விமர்சகர் மிக்காயில் பாக்தின்-இன் கருத்தே ஏற்புடையதாகத் தோன்றுகிறது.

ரஷ்ய நாவல்கள் பெற்ற வரவேற்பையும் புகழையும் கோட்பாட்டு ரீதியில் விளக்க முனைந்த பாக்தின் ‘மேற்கு ஐரோப்பாவில் தோன்றிய நாவல் வடிவத்தின் கட்டமைப்பை, உள்ளடக்கத்தை, சமூக/அரசியல் அலசலை, பாத்திர வார்ப்பை, உரையாடல்களை ரஷ்ய நாவல்கள் உள்வாங்கிக் கொண்டு ரஷ்ய பாரம்பரிய அழகியலின் வழியாக இன்னும் பெரிதாக, இன்னும் விரிவாக, இன்னமும் ஆழமாக மாற்றித் தந்ததே’ ரஷ்ய நாவல்களின் வெற்றிக்குக் காரணம் என்கிறார்.

அதாவது டால்ஸ்டாய், தஸ்தவ்யெஸ்கி ஆகியோரது நாவல்கள் மனித குலம் அனைத்துக்கும் பொதுவான பிரச்சனைகளையும் மனித குண இயல்புகளையும் ரஷ்ய அழகியல் என்ற லென்ஸின் மூலமாக ஆராய்ந்து அந்த அலசலின் பலனை மீண்டும் உலகுக்கே தந்தன எனலாம்.

கீழ்வரும் மற்த ஐந்து நாவல்கள் சிறந்தவை என்றாலும் அவற்றுள் ரஷ்யத் தன்மை மிகுந்ததாலும் உலகத்துப் பயனுள்ளதாக அமையக்கூடிய பொதுப் பார்வை குன்றியதாலும் சற்று மாற்றுக் குறைந்தவையாகவே கருதப்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

6.  தந்தைகளும், மகன்களும் – இவான் துர்கனேவ்

1862ல் வெளிவந்த இவான் துர்கனேவ்-இன் ‘தந்தைகளும் மகன்களும்’ அதன் காலத்தில் மிகுந்த புகழ்ப்பெற்ற நாவலாகக் கருதப்பட்டது. ஆர்காடி கிர்சானோவ் மற்றும் பார்சாரோவ் என்ற இரண்டு நண்பர்களின் கதையை இந்த நாவல் சொல்கிறது. பல்கலைக் கழகப் படிப்பை முடித்துவிட்டு இருவரும் ஆர்காடியின் பண்ணை வீட்டிற்குத் திரும்புகிறார்கள். ஆர்காடி சொந்தமான நிலங்களும் பண்ணையும் உடைய குடும்பத்தைச் சேர்ந்தவன். மருத்துவ மாணவனான பார்ஸாராவ்வோ சாதாரண மருத்துவர் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆர்காடியைவிடவும் பண்ணையாரனா அவன் தந்தை நிக்கோலேயைவிடவும் சாமர்த்தியசாலியாகவும் சுறுசுறுப்பானவனாகவும் பார்ஸாரோவ் இருந்தாலும் சமூக அந்தஸ்தில் அவன் தாழ்ந்தவன் என்பதால் அவனுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன. இதன் பயனாக பார்ஸாரோவ் நிலவும் சமூக அமைப்புக்கள் அனைத்தையையும் புரட்டிப்போட்டுப் புதிதாக்கும் நிஹிலிச கொள்கையைப் பேசுகிறான். பார்ஸாரோவ்வின் கவர்ச்சியில் மயங்கி ஆர்காடியும் நிஹிலிச கொள்கையால் ஈர்க்கப்படுவதைக் கண்டு நிகோலேயும் ஆர்காடியின் சித்தப்பா பாவேலும் பார்ஸாரோவை வெறுக்கிறார்கள். ஏழைகளான பார்ஸாரொவ்வின் பெற்றோர்கள் அவனுடைய அரசியல் எண்ணங்களைக் கண்டு புரியாமல் மிரள்கிறார்கள். இதற்கிடையில் பார்ஸாரோவ் அன்னா செர்கியெவ்னாவிடம் காதல் கொள்கிறான். அன்னா பெண் என்றாலும்கூட பார்ஸாரோவ்வைப் போலவே சமூக அமைப்பின் விதிகளுக்குக் கட்டுப்படாதவளாக இருக்கிறாள். ஆனால் அவள் உயர் மட்டத்தில் உள்ளாவர்களோடு வைத்திருக்கும் பரிச்சயம் அவர்களிடையே காதல் வளர்வதைத் தடுக்கிறது. அன்னா பார்ஸாரோவ்வின் காதலை மறுக்கிறாள். பார்ஸாரோவ் மருத்துவத் தொழிலில் தனது தந்தைக்கு உதவி செய்ய முடிவெடுக்கும் நேரத்தில் பிணம் ஒன்றை அறுக்கும்போது ஏற்படும் காயத்தால் ரத்தத்தில் விஷமேறிச் செத்துப் போகிறான். ரஷ்யச் சமூகத்தின் அக்காலத்து அமைப்பு எப்படி மேல்மட்டத்தினரிடையே போலித்தனங்களை வளர்த்ததென்பதையும், தகுதியுள்ளவர்கள் மேல்வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இல்லாததால் அவர்களுக்கு வாய்ப்புக்கள் எப்படி மறுக்கப்பட்டன என்று சொல்லும் அற்புதமான நாவல். கதாபாத்திரங்களின் உள்ள நிலைப்பாடுகளைத் துல்லியமாக வெளிப்படுத்தும் உரையாடல்களைச் செதுக்குவதில் துர்கனேவ்வும் டால்ஸ்டாய் தஸ்தவ்யெஸ்கி ஆகியோருக்கு நிகரானவர் என்பதற்குத் தெளிவான சான்றாக அமைந்துள்ள நாவல்.

7. A Hero of Our Time, மிக்காயில் லெர்மந்தோவ்

ரஷ்யாவின் முதல் உளவியல் நாவல் என்று அழைக்கப்படும் A Hero of Our Time ரஷ்ய நாவல் இலக்கியத்துக்கு முதன்முறையாக பெச்சோரின் என்ற “எதிர்க் கதாநாயகனை” அறிமுகப்படுத்தியது. நாவலின் தலைமைக் கதாநாயகனான பெச்சோரின் கதாநாயகர்களுக்கே உரிய வசீகரமும் அழகியல் அம்சங்களும் கொண்டவன் என்றாலும்கூட அவனுக்குள் ஆழப் பதிந்திருக்கும் நம்பிக்கையின்மையும் போதாமை உணர்வையும் அவனை அழிவுப் பாதையிலேயே செல்லத் தூண்டுகின்றன. பெலா என்ற சிர்காசிய இளவரசி உட்பட பெச்சோரின் பல பெண்களை அவர்களிடம் உண்மையாக இருக்கும் எண்ணம் எதுவும் இன்றியே அவர்களைக் காதலிப்பதுபோல் நடித்துக் கைவிடுகிறான். அவன் உண்மையிலேயே காதலிக்கும் ஒரே பெண்ணான வெராவைத் தேடிப் போகும் தருணத்தில் விதியே பெச்சோரின் நல்லவனாக மாறுவதைத் தடுக்கிறது. அவன் குதிரை தடுக்கி விழுகிறது. அதனோடு வெராவைத் தேடிச் செல்லும் எண்ணத்தைப் பெச்சோரின் கைவிடுகிறான். க்ருனிட்ஸ்கி என்பவனோடு சண்டைக்குப் போனபின் தாளாத மனச்சோர்வுக்குள் போனபின் காலப்போக்கில் பெச்சோரின் மரணமடைகிறான். எதிலும் நிறைவடையாத ஒருவகை பைரோனிய மனப்பான்மையால் சீரழிக்கப்பட்ட ஒரு தலைமுறையின் குறியீடாகவே லெர்மந்தோவ் பெச்சோரினைச் சித்தரித்திருக்கிறார். ‘அந்நியன்’ குறுநாவலை எழுதிய ஆல்பர்ட் காம்யூவால் மிகவும் கொண்டாடப்பட்ட நாவல்களில் A Hero of Our Time நாவலும் ஒன்று. இந்நாவல் பெச்சோரினின் பன்முகமான குண இயல்புகளைக் காட்டும் ஒன்றோடொன்று தொடர்புடைய ஐந்து கதைகளாய் எழுதப்பட்டிருக்கிறது.

8. Dead Souls, நிக்கோலே கோகோல்

1842ல் வெளிவந்த Dead Souls நாவலை எழுதிய கோகோல் அதனை ‘உரைநடைக் காவியம்’ என்று தலைப்பட்டையில் வர்ணித்தார். சாசரின் கண்டஎபெர்ரி கதைகளைப் போலவே பாவெல் சிச்சிகோவ் என்ற நடுத்தர வர்க்க வணிகனின் பயணங்களையும் அந்நாளைய ரஷ்ய சமூகத்தில் அவன் சந்தித்த மனிதர்களையும் இந்நாவல் சித்தரிக்கிறது. சிச்சிகோவ் தான் யார் என்பதையோ எங்கிருந்து வருகிறான் என்பதையோ யாரிடமும் தெளிவாகச் சொல்லாமல் ஊர் ஊராகச் சென்று செத்துப்போன அடிமைகளை அவர்களுடைய எஜமானர்களிடமிருந்து சொற்பத் தொகைக்கு வாங்குகிறான். அப்போது ரஷ்யாவில் அடிமைகள் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஒவ்வொரு பிரபுவின் செல்வமும் அவர்கள் வைத்திருக்கும் அடிமைகளின் (‘ஆன்மா’க்களின்) எண்ணிக்கையைச் சேர்த்தே கணக்கிடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மக்கட்தொகைக் கணக்கெடுப்பு வரையிலும் அடிமைகளை வைத்திருக்கும் எஜமானர்கள் செத்துப்போன அடிமைகளுக்கும் வரி விதிக்க வேண்டும் என்ற சட்டம் நடப்பில் இருந்தது. சிச்சிகோவ்வுக்குத் தங்கள் அடிமைகளை விற்றுவிட்டால் அவர்களுக்காக வரி கட்டத் தேவையில்லை என்று எண்ணும் எஜமானர்கள் அவனிடம் செத்துப்போன அடிமைகளை விற்று விடுகிறார்கள். காலப்போக்கில் செத்துப்போனவர்களை சிச்சிகோவ் ஏன் வாங்குகிறான் என்று மக்கள் சந்தேகப்படுகிறார்கள். அவன் வெளிநாட்டினரின் ஒற்றனாக இருக்கக்கூடும் என்றும், மாறுவேடத்தில் நெப்போலியனே சிச்சிகோவாக வந்திருக்கிறான் என்றும் வதந்திகள் பரவுகின்றன. அதன் பின்னர்தான் சிச்சிகோவ் முன்னாள் அரசாங்க அதிகாரி என்பதும், தனக்கு இத்தனை அடிமைகள் இருக்கிறார்கள் என்று ஆவணங்களைக் காட்டி வங்கிகளை ஏமாற்றி அவன் பெரும் தொகையைக் கடனாக வாங்கித் தப்பித்துப் போக முடிவு செய்திருக்கிறான் என்பதும் வெளிச்சத்துக்கு வருகிறது. சமுதாயத்தில் முன்னேற வழியில்லாத ஆனால் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த நடுத்தர வர்க்கத்தின் மனநிலையையும் அவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களையும் மிகக் கூர்மையான கதைகூறலின் வழியாகவும், நகைச்சுவை வழியாகவும் சொல்லும் அற்புதமான நாவல்.

9. ஓப்லமோவ், இவான் கோன்சாரோவ்

1859ல் வெளிவந்த இந்த நாவல் “ஓப்லமோவிஸம்” என்ற புதிய வார்த்தையை ரஷ்ய மொழிக்கு வழங்கியது. இந்த நாவலின் கதாநாயகனான ஓப்லமோவ் என்ற சிறு நிலச்சுவாந்தார் மிகுந்த சோம்பல் உள்ளவனாக இருக்கிறான். ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை அவன் படுக்கையிலேயே கழிக்கிறான். படுக்கையிலிருந்தபடியே தனது அன்றாட வேலைகளைச் செய்து முடிக்கிறான். நாவலின் தொடக்கத்தில் அவனுடைய பண்ணையில் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக அவனுக்குக் கடிதம் வருகிறது. ஆனால் ஓப்லமோவ்-இன் சோம்பல் எப்படிப்பட்டது என்றால் தனது பண்ணையில் உள்ள பிர்ச்சனைகளைத் தீர்ப்பதற்காக முயற்சியெடுக்கும் ஓபலமோவ் தனது படுக்கையிலிருந்து அதே அறையிலுள்ள நாற்காலிக்கு நகரவே நாவலின் முதல் அத்தியாயத்தின் பெரும் பகுதி தேவைப்படுகிறது.

ஓப்லமோவ் தனது சோம்பலால் சந்தித்த இழப்புக்கைன் பட்டியலாகவே நாவல் தொடர்கிறது. எதிலும் அக்கறையில்லாத ஓப்லமோவை அவனுடைய நண்பர்கள் ஏமாற்றுகிறார்கள். ஒரு கட்டத்தில் ஓபலமோவ்-இன் பண்ணையிலிருந்து வரும் முழு வருமானத்தையும் அவர்களே கைப்பற்றியும் கொள்கிறார்கள். நண்பர்களின் சூழ்ச்சியாலும், சோம்பலால் தனது பண்ணையைச் சரிவர பராமரிக்காததாலும் பல முறை நொடித்துப் போகும் ஓப்லமோவ்-வை ரஷ்ய தந்தைக்கும் ஜெர்மன் அன்னைக்கும் பிறந்தவனான மிகுந்த உழைப்பாளியான அவனுடைய நண்பன் ஒருவன் மறுபடியும் மறுபடியும் காப்பாற்றி விடுகிறான். ஆனால் ஓப்லமோவ்-இன் சோம்பல் அவனுடைய நண்பனின் அத்தனை முயற்சிகளையும் பயனற்றதாக்கி விடுகிறது. ஓப்லமோவ்-வை இந்த அசுரச் சோம்பலில் இருந்து எப்படியேனும் உலுக்கி எழும்பச் செய்ய நண்பன் அவனுக்கு ஓல்கா என்ற பெண்ணை அறிமுகப்படுத்துகிறான். ஓல்காவும் ஓப்லமோவ்-வும் காதலிக்கிறார்கள். நிச்சயதார்த்தம் செய்து கொள்ளும் அளவுக்கு இந்தக் காதல் முன்னேறுகிறது. ஆனால் ஓப்லமோவ்-இன் சோம்பலையும் செயலாற்ற முடியாமல் அவனைத் தடுத்தபடியே இருக்கும் ஒரு வகையான அச்சத்தையும் கண்டு ஓல்கா கடைசி நிமிடத்தில் நிச்சயத்தை ரத்து செய்கிறாள். பின்பு ஓல்காவுக்கும் ஓப்லமோவ்-இன் நண்பனுக்குமே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.  

நாவலின் இறுதி கட்டத்தில் எப்படியேனும் ஒப்லமோவ்-ஐ அவனுடைய சோம்பலில் இருந்து எழுப்பிவிடுவது என்று ஓல்கா தனது கணவனுடன் அவன் வீட்டிற்குப் போகிறாள். பழைய பண்ணையை இழந்து கொஞ்சம் சிறிய பண்ணையில் வாழும் ஓப்லமோவ் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறான். அவர்களுக்கு பிறந்த மகனுக்கு நண்பனின் பெயரை வைத்திருக்கிறான்

அவர்கள் மூவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் இந்த நாவலின் மிக அற்புதமான பகுதிகளில் ஒன்று. ஓப்லமோவ் தன்னை உணர்ந்தவனாக தனது சோம்பலுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்கிறான். தனது நிலைக்குக் காரணம் ‘ஓப்லமோவிடிஸ்’ என்ற வியாதி என்கிறான். அது கூட பிறந்தது. வெறும் மனித முயற்சிகளால் மாற்ற முடியாதது. ஓப்லமோவ் என்றுமே மாறமாட்டான் என்று ஓல்காவும் அவள் கணவனும் அறிந்து கொள்கிறார்கள். பிறகு ஓப்லமோவ் தூக்கத்தில் செத்துப் போகிறான்.

சோம்பலை மனிதனுக்குள் இருக்கும் ஒரு குறையாகக் கருதுவது நமது மரபு. சோம்பித் திரியேல் என்று அதற்கு நம்மிடையே செய்யுள்களாகவும், பாடல்களாகவும், வாய்மொழியாகவும் பல போதனைகள் உண்டு. ஆனால் ’ஓப்லமோவ்’  நாவலில் சோம்பல் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் ரஷ்யச் சூழலில் பணக்கார வர்க்கத்தினரிடையே நிலவிய பெரும் சோர்வின் வெளிப்பாடாகவே காட்டப்படுகிறது. பண்ணையில் பொருளாதார நெருக்கடி என்று கடித்தத்தால் அறிந்து கொள்ளும் ஓப்லமோவ் படுக்கையிலிருந்து எழ முடியாமல் பலவகையான சிந்தனைகளாலும், பகற்கனவுகளாலும், தனக்குள் நடக்கும் உரையாடல்களாலும் தனக்குள் மூழ்கிக் கிடப்பதாக கோன்சாரோவ் காட்டுகிறார். அதன் பிறகு அவன் மீண்டும் தூங்குகிறான். அப்போது வரும் கனவில் அவன் பெற்றோர் தன்னை எப்படியெல்லாம் வளர்த்தார்கள் என்று அவனுக்குக் காட்டப்படுகிறது. பெரும் பணக்காரர்களான அவர்கள் ஓப்லமோவ்-ஐ எந்த வேலையையும் செய்ய விட்டதில்லை. உல்லாசப் பயணம் போகவும், வேறு அர்த்தமில்லாத காரணங்களுக்காகவும் ஓப்லமோவ்-ஐ அதிக்கடி பள்ளிக்கூடத்திற்குப் போக வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனாலும்கூட ஓப்லமோவ்-வின் சோம்பலை அவனுடைய பெற்றோர்களின் வளர்ப்பில் உள்ள குறை என்று மேம்போக்காக மட்டும் கோன்சாரோவ் சொல்லவில்லை. அந்தக் காலத்தில் பணக்காரர்கள் வீட்டு வேலைகள் செய்து தங்கள் கைகளை அசுத்தப்படுத்திக் கொள்ளக் கூடாது என்பது முதற்கொண்டு மீறமுடியாத சின்னச் சின்ன விதிகள் இருந்தன. அவை எழுதப்படாதவை என்றாலும் அவற்றை மீற ஐரோப்பிய பிரபுக்கள் தயங்கினார்கள். ஏனெனில் சமுதாயத்தில் பிரபுக்களின் வேலை கட்டளையிடுவது, ஏழைகளுக்குத் தந்தையாக இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, தேவையென்றால் தண்டிப்பது. வேலைக்காரர்களின் வேலை சேவகம் செய்வது. கடவுளால் அமைக்கப்பட்ட இந்த முறைமையை மீறினால் இயற்கை தனது சமானத்தை இழந்து உலகம் தலைக்கீழாகிவிடும் என்று நம்பப்பட்டது

கண்ணுக்குத் தெரியாத, அசைக்கவே முடியாத இந்த விதிகளுக்கு உட்பட்டு ஓப்லமோவ் எதையும் சொந்தமாகச் செய்யும் ஆற்றல் இல்லாதவனாகவே மாறிவிடுகிறான். ரஷ்ய, கிரேக்க மொழிகளில் ‘பாவம்’ என்ற விஷயத்தைக் குறிக்கும் வார்த்தைகள் ‘அத்துமீறுதல்’ என்று அர்த்தம் தருவதில்லை. மாறாக ‘காயப்படுதல்’, ‘குறியைத் தவறவிடுதல்’ என்ற அர்த்த்ததையே தருகின்றன.

அவனைச் சோம்பேறியாக்கிய அவனுடைய சமூகச் சூழலால் காயப்பட்டவனாகவே கோன்சாரோவ் இந்த நாவலில் ஓப்லமோவ்-ஐச் சித்தரிக்கிறார். அவனுடைய சோம்பல் எவ்வளவுதான் வெறுக்கத் தகுந்தது என்றாலும் கடைசிவரை ஓப்லமோவ்-விடம் ஒருவகையான அப்பாவித்தனம் – தஸ்தவ்யெஸ்கி நாவல்களில் சொல்லப்படுவது போன்ற அசட்டுத்தனம் – ஒட்டி இருக்கிறது. அவன் ஓல்காவிடம் பேசும் காதல் பேச்சுக்கள் தந்திரமற்றவையாகவே இருக்கின்றன.

சமுதாயச் சூழல்களும் விதிகளும் அவன்மீது சுமத்திய கனத்தைத் தாங்க முடியாதவனாகவே ஓப்லமோவ் காண்பிக்கப்படுகிறான். கடைசியில் வாழ்க்கை முழுவதும் அவன் விரும்பிய தூக்கத்தின் போதே அவன் நிரந்தரமாகத் தூங்கப் போகிறான்.

சமுதாயம் ஒருவர்மீது விதிக்கும் அசைக்க முடியாத விதிகளால் நாம் எப்போதேனும் திகைத்து நின்றிருக்கிறோம் எனில் நாம் எல்லோரும் ஓப்லமோவ்களே.

கோன்சாரோவ்-இன் ‘ஓப்லமோவ்’ நிறைய பேரால் அறியப்படாத, ஆனால் அறிந்து கொள்ள வேண்டிய மிகச் சிறப்பான ரஷ்ய நாவல்.

10. தாய், மாக்ஸிம் கார்க்கி

வெறும் பரப்புரை நாவலாகக் கருதப்படக்கூடிய அபாயம் இதற்கு இருக்கிறது என்றாலும்கூட, 1906ல் வெளிவந்த தாய் நாவலை மீட்டெடுக்கும் அம்சங்கள் இல்லாமல் இல்லை. ரஷ்யப் புரட்சிக்கு முந்திய தொழிலாளர்களின் வாழ்க்கையை அழகியல் உணர்வோடு பதிவு செய்வதில் கார்க்கி வெற்றி பெறுகிறார். தொழிற்சாலை ஒன்றில் சொல்ல முடியாத ஏழ்மைக்கும் அன்றாட சித்திரவதைகளுக்கும் இடையில் நாவலின் தலைமைக் கதாபாத்திரமான பெலாகியா வ்ளாசோவா சாதாரணத் தொழிலாளியாக வேலை செய்கிறாள். குடிகாரனான அவள் கணவன் அவர்களுடைய மகனை வளர்க்கும் பொறுப்பை அவளிடமே விட்டுவிடுகிறான். அவளையும் அடித்துத் துன்புறுத்துகிறான். அப்பனைப் போலவே முதலில் குடிகாரனாகவும் திக்குவாயனாகசும் வளரும் மகன் புரட்சியாளர்களுடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு மனம் திரும்புகிறான். அடிப்படை படிப்பறிவே இல்லாதவள் என்றாலும்கூட புரட்சிக் கருத்துகளில் ஆர்வம் ஏற்பட்டு பெலாகியா புரட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாள். முதலில் சொன்னதுபோல் இந்நாவலை வெறும் சோசலிச பரப்புரை என்று தள்ளிவிடுவது எளிது. ஆனால் கார்க்கியின் வர்ணனைகளும் கதை சொல்லும் பாங்கும் அழகியலும் நாவலை அந்த அபாயத்திலிருந்து தூக்கி நிறுத்தி விடுகின்றன.

வாசிக்க வேண்டிய 10 ரஷ்ய நாவல்கள் (முதல் பகுதி)

தோரோ “மிகச் சிறந்த நூல்களை முதலில் வாசித்துவிடுங்கள்” என்று அறிவுறுத்துகிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வெளிவந்த ரஷ்ய நாவல்கள் உள்ளடக்கம், பாத்திரப் படைப்பு, கட்டமைக்கப்பட்டிருக்கும் விதம் ஆகியவற்றால் நாவல் வடிவத்தின் உச்சமாகக் கருதப்படுகின்றன.

ஏனைய நாட்டு நாவல்களைத் தாண்டியும் வாழ்வு, மரணம், ஆன்மீகம் ஆகிய தத்துவார்த்த விசாரிப்புகளாலும், தனிமனித அகச்சிக்கல்களையும் அறச்சிக்கல்களையும் துல்லியமாக விவரிக்கும் பாங்கினாலும் உயர்ந்து நிற்கின்றன. ஷேக்ஸ்பியரின் நாடகங்களுக்குப் பின்னர் நினைவில் நிறுத்திக் கொள்ளக் கூடிய இலக்கியக் கதாபாத்திரங்கள் பெரும்பாலானவற்றை ரஷ்ய நாவல்களே தந்திருக்கின்றன.

இதில் எந்த ரஷ்ய நாவல்களைப் படிப்பது என்ற குழப்பம் பல பேருக்கு இருக்கிறது. நாவல் கட்டமைப்பு, கதையின் உள்ளடக்கம் என்ற வகையில் வாசித்தே ஆக வேண்டிய 10 ரஷ்ய நாவல்களின் பட்டியலைத் தந்திருக்கிறேன். இந்த பதிவு முதல் பகுதி.

1. கரமசோவ் சகோதரர்கள், ஃபியோதர் தஸ்தவ்யெஸ்கி

சந்தேகமே இல்லாமல் என்னைப் பொறுத்தவரை ரஷ்ய நாவல்களில் மட்டுமல்லாது உலக நாவல்களிலும் கூட உச்சம் என்று கருதக்கூடிய நாவல். டால்ஸ்டாயிம் ‘அன்னா கரனீனா’ கதாபாத்திரப் படைப்பின் கூர்மையில் ஓரளவுக்கு கரமசோவ் சகோதரர்களோடு  போட்டிப் போடக் கூடும் என்றாலும் கரமசோவ் சகோதரர்களின் அறம் சார்ந்த அலசலின் விஸ்தாரமும் ஆழமும் கரனீனாவின் இல்லை எனலாம். கட்டமைப்பில் ‘போரும் அமைதி’யையும்விட சிறந்தது. தஸ்தவ்யெஸ்கி கரமசோவ் சகோதரர்களை எழுத இரண்டாண்டுகள் எடுத்துக் கொண்டார். 1879/1880ல் கரமசோவ் சகோதரர்கள் அச்சுக்கு வந்த நான்கு மாதங்களில் மரணமடைந்தார். இந்த நாவலில் காட்டப்பட்டிருக்கும் ஃபியோதர், திமித்ரி, ஸோசிமா துறவி, அலோய்ஷா, க்ரூஸென்ஸ்கா ஆகியோரது கதாபாத்திரங்களும் அவற்றுக்கிடையே நடக்கும் உரையாடல்களும் இலக்கியத்தைப் பொறுத்தவரை மிக முக்கியமானவை. மனிதர்களுக்கும் மிருகங்கள்போல் பதுங்கியிருக்கும் காமம் மட்டும் வன்முறையை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டும் நாவல்.

2. அன்னா கரனீனா – லியோ டால்ஸ்டாய்

1878ல் வெளிவந்த இந்த நாவலை டால்ஸ்டாயே தனது ‘உண்மையான முதல் நாவல்’ என்று அழைத்திருக்கிறார். வ்ரோன்ஸ்கி என்ற இராணுவ அதிகாரிக்கும் அன்னா என்ற திருமணமான பெண்ணுக்குமிடையே ஏற்படும் கள்ளத் தொடர்பை இந்த நாவல் சொல்கிறது. அந்தக் கள்ளத் தொடர்புக்கு சமூகத்தில் உள்ள முக்கிய மனிதர்கள் செய்யும் விமர்சனங்களின் வழியாகவும், அவர்களின் எதிர்வினைகளின் வழியாகவும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ரஷ்ய சமுதாயத்தைச் செல்லரிக்க ஆரம்பித்திருந்த அக/அறப் போராட்டங்கள், அரசியல் போராட்டங்கள், நவீனமயமாதலுக்கும், பாரம்பரிய வாழ்வுக்கும் இடையே நடைபெறும் போராட்டம் ஆகியவற்றை டால்ஸ்டாய் இந்த நாவலின் மிகத் துல்லியமாகச் சித்தரிக்கிறார். எட்டு பாகங்களைக் கொண்ட இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் ஏராளமானவைதான் என்றாலும் அந்நாளைய ரஷ்ய சமுதாயத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை வாசகருக்குத் தரும் அளவுக்குச் சுவாரசியமானவை.

3. போரும் அமைதியும், லியோ டால்ஸ்டாய்

1869ல் வெளிவந்த இந்த நாவல் நெப்போலியனின் படையெடுப்பு ரஷ்ய சமுதாயத்தின் மீது ஏற்படுத்திய தாக்கத்தைச் சொல்கிறது. உண்மையில் ரஷ்ய நாவல்கள் அத்தனையிலும் பேசப்படும் அற/அகச் சிக்கல்களை உள்ளடக்கியது போரும் வாழ்வும் எனலாம். நெப்போலியன் படையெடுப்பின்போது வாழ்ந்ததாகக் காட்டப்படும் ஐந்து ரஷ்ய பிரபுத்துவ குடும்பங்களின் வழியாகவும் பார்வையிலும் கதை முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. என்றாலும், நாவலின் நடுநடுவே வரும் ஆன்மிகம், அறம், அரசியல் சார்ந்த நீண்ட தத்துவ விசாரிப்புகளும் அதிகம். கரமசோவ் சகோதரர்களோடு ஒப்பிடுகையில் போரும் அமைதியிலும் வரும் இத்தகைய விசாரிப்புகள் கதையோடு சில சந்தர்ப்பங்களில் ஒன்றிச் செல்லாததால் நாவலின் இடையிடையே சலிப்பேற்படவும் கூடும். கதையோட்டத்தின் மீது அனைத்தையும் அறிந்த கடவுள் தன்மையோடு வீற்றிருக்கும் கதைசொல்லி எந்தவிதச் சிரமமின்றியும் சுவாரசியம் குன்றாமலும் கதாபாத்திரங்களின் உள்ளார்ந்த எண்ணங்களை ஊடுருவி விவரிப்பது, மிக விஸ்தாரமான வருணனைகள் என்ற பல புதிய உத்திகளை டால்ஸ்டாய் இந்த நாவலின் மூலமாக நாவல் வடிவத்திற்குள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

4.  குற்றமும் தண்டனையும், ஃபியோதர் தஸ்தவ்யெஸ்கி

1866ல் வெளிவந்த இந்த நாவல் மனோதத்துவ வகைமை நாவல்களின் முன்னோடியாகவும் உச்சமாகவும் கருதப்படுகிறது. மனோதத்துவ அறிஞர் ஃபிராய்டின் முக்கிய படைப்புகள் வெளிவருவதற்குப் பல்லாண்டுகளுக்கு முன்னமேயே தஸ்தவ்யெஸ்கி குற்றம் மனிதர்கள் அக வாழ்வில் ஏற்படுத்தும் சீர்குலைவுகளையும், குற்றத்தைச் செய்த மனிதன் படும் வேதனைகளையும் மிகத் துல்லியமாக இந்நாவலில் எடுத்துரைத்திருக்கிறார். பரம ஏழையான  ராஸ்கோல்நிகோவ் என்ற பழைய சட்டக் கல்லூரி மாணவன் அடகுக் கடைக் கிழவி ஒருத்தியின் வீட்டில் புகுந்து அவளிடமிருந்து கொள்ளையடித்து அவளைக் கொலை செய்யவும் திட்டமிடுகிறான். அவளைக் கொலை செய்யும் போது அந்த இடத்துக்கு வரும் அவளுடைய தங்கையொருத்தியையும் கொலை செய்கிறான். சமூக முறைமைகளைக் காக்க வேண்ட சட்டப் படிப்பிற்குத் தன்னை ஒப்புக் கொடுத்த ஒருவன் இத்தகைய அர்த்தமற்ற வன்முறையில் ஈடுபடுவதின் முரண் நாவல் முழுவதிலும் காணக் கிடக்கிறது. ரஸ்கோல்நிகோவ்வின் அர்த்தமற்ற குற்றத்தின் வழியாக தஸ்தவ்யெஸ்கி அக்கால ரஷ்ய சமூகத்தின் சீர்கேடுகளை எடுத்தும் காட்டுகிறார். அதே சமயம் ரஸ்கோல்நிகோவ்வின் பாத்திரப் படைப்புக்கு எதிராக கிறித்துவ பண்புகள் நிறைந்த சோனியா என்ற பெண்ணையும் நாவலில் கொண்டு வருகிறார். சோனியா தனது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டி விபச்சாரியாக மாற முடிவெடுக்கிறாள். மிகக் கோரமான ஏழ்மையின் முன்னால் கடவுளும் அறமும் என்ன செய்கின்றன என்ற முக்கியமான கேள்வியை முன்னெடுத்துச் செல்கிறது தஸ்தவ்யெஸ்கியின் குற்றமும் தண்டனையும்.

5. இவான் இலியிச்சின் மரணம் – லியோ டால்ஸ்டாய்

1886ல் வெளிவந்த இந்த நாவல் குறுநாவல் இலக்கியத்தில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசையில் விரும்பாத பெண்ணை மணந்து கொண்டு சொகுசாக வாழும் இவான் இலியிச் என்ற நீதிபதிக்கு ஒரு நாள் வீட்டில் சன்னல் திரைச்சீலைகளை மாட்டிக் கொண்டிருக்கும்போது அடிபடுகிறது.  மருத்துவரிடம் காயத்தைக் காட்டும்போது மருத்துவரால் நீதிபதிக்கு என்ன நோய் என்று சொல்ல முடியாவிட்டாலும் அவருக்கு ஏற்பட்ட காயத்தால் நீதிபதி மரணமடையப் போகிறார் என்பது மட்டும் தெளிவாய்த் தெரிகிறது. மரணத்திற்காக நீதிபதி காத்திருக்கிறார். அவருடைய குடும்பத்தார் மரணத்தைப் பற்றிப் பேசுவதையே தவிர்க்கிறார்கள். இது இவான் இலியச்சை எரிச்சலடையச் செய்கிறது. அதே சமயம், தான் நல்லவன் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கும்போது காரணமே இல்லாமல் தனக்கு ஏற்பட்ட துன்பம் நியாயமானதுதானா என்று அவர் யோசிக்க ஆரம்பிக்கிறார்.அவரைக் கெராசிம் என்ற படிப்பறிவில்லாத வேலைக்காரச் சிறுவன் பரிவோடு பார்த்துக் கொள்கிறான். தனது குடும்பத்தார் யாவரும் மரணத்தைக் கண்டு அஞ்சும்போது கெராசின் மட்டும் மரணத்தைக் கண்டு அஞ்சாதது இவான் இலியிச்சுக்கு வியப்பைத் தருகிறது. அன்பும், பரிவுமே மனிதர்கள் மரணத்தை வெல்ல வழிச் செய்யும் என்பதை இவான் காண்கிறார். குடும்பத்தார் மீதிருக்கும் எரிச்சலும் கோபமும் மாறி அவர்கள்மீது அவருக்குப் பரிவு ஏற்படுகிறது. இதுவே மரண பயத்திலிருந்து அவரை மீட்கிறது. அன்றாட மனித வாழ்க்கையினிடையே ஏற்படும் காரணமே கற்பிக்க முடியாத அநீதிகளின் இடையில் கடவுளின் இருப்பையும், பரஸ்பர அன்பினால் மனிதர்களுக்கி ஏற்பட்டக்கூடிய மீட்பையும் பேசும் மிக முக்கியமான படைப்பு ‘இவான் இலியிச்சின் மரணம்’.

ரஷ்ய நாவல்களில் இயேசு

லத்தீன் கிறித்தவம் என்று அழைக்கப்படும் மேற்கு ஐரோப்பிய கிறித்துவத்துக்கும் கிரேக்கக் கிறித்துவத்தின் வழி வந்த ரஷ்ய கிறித்துவத்துக்கும் இடையே கோட்பாடுகளில் மிகத் தெளிவான வேறுபாடுகள் உள்ளன.

இந்த வேறுபாடுகள் கிறித்துவ இறையியல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் ஓரளவுக்கு அக்காலத்திய ரோமப் பேரரசின் அரசியலும் இவற்றுக்குக் காரணமாக அமைந்தன.

கோகோல், தஸ்தவ்யஸ்கி, டால்ஸ்டாய், புல்காகோவ் ஆகியோரது நாவல்களைப் புரிந்து கொள்ள ரஷ்ய கிறித்துவத்தின் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்வது அவசியம்.

கி.பி. 280ம் ஆண்டில் சாதாரண ரோமப் படைத்தளபதி ஒருவருக்கும் மிகச் சாதாரண குடும்பத்திலிருந்து தோன்றிய ஹெலீனா என்ற பெண்ணுக்கும் பிறந்த கான்ஸ்டண்டைன் ரோமப் பேரரசனாக ஆவதற்காக மில்வியன் பாலத்தில் 312ம் ஆண்டு போர் செய்கிறான்.

அப்படி அவர் போர் செய்து கொண்டிருக்கும் போதே ரோமப் பேரரசு ரோமாபுரியைத் தலைநகராகக் கொண்ட மேற்குப் பேரரசு என்றும் கிரேக்கத்தைத் தலைமையிடமாகக் கொண்ட கிழக்குப் பேரரசாகவும் பிளவு பட்டிருந்தது. மில்வியன் பாலத்தின் போரின் போது வானத்தில் தோன்றிய ஒரு சிலுவையையும் அதற்கடியில் ‘இந்த குறியால் வெல்வாயாக’ (in hoc signo vinces) என்ற வாசகத்தையும் கான்ஸ்டண்டைன் காண்கிறான். அதன்பிறகு தன் படைவீரர்களிடம் அவர்களுடைய கவசங்களில் சிலுவையைத் தீட்டிக் கொள்ளாச் சொல்கிறான்.

போரில் வெற்றி கிடைத்ததும் கிறித்துவக் கடவுள்தான் தனக்கு வெற்றியைத் தந்தார் என்று முடிவுக்கு வருகிறான். 313ல் மிலான் பிரகடனத்தின் வழியாக கிறித்துவத்தை ரோமப் பேரரசின் அதிகாரப்பூர்வமான மதமாக அறிவிக்கிறான். அதன் பின்னர் 316க்குப் பிறகு கிழக்குப் பேரரசனாக இருந்த லிசினியஸைக் காண்ஸ்டண்டைன் தோற்கடித்த பிறகு கிறித்துவம் ரோமப் பேரரசு முழுமைக்குமே அதிகாரப்பூர்வ மதமாகிறது. 

அந்நாள் வரைக்கும் ரோமக் கடவுளர்களுக்குக் எதிரானதாகவும் தேச விரோதமாகவும் கிறித்துவம் கருதப்பட்டிருந்தது. ரோம, கிரேக்க மதக் கொள்கைப்படி பேரரசர்களே கடவுள் அம்சமாகக் கருதப்பட்டு வந்தார்கள். அவர்களுக்கென்று தனியாக cultus என்றழைக்கப்பட்ட வழிபாடும் நடந்து வந்தது. ஓரிறைக் கொள்கையாளர்களாகத் தங்களை அறிவித்துக் கொண்ட கிறித்துவர்கள் பேரரசர்களின் சிலைகளை வணங்க மறுத்த போது ரோமப் பேரரசின் நிர்வாக இயந்திரத்தால் கிறிற்றுவத்தை நிராகரிக்கும்படியும் பழைய மதத்தை மீண்டும் தழுவிக் கொள்ளும்படியும் சித்திரவதை செய்யப்பட்டார்கள். பல லட்சம் கிறித்துவர்கள் மரண தண்டனை விதிக்கப்பட்டுப் பொது அரங்குகளில் சிங்கங்களுக்கு இரையாக்கப்பட்டார்கள்.

ஆனால் காண்ஸ்டண்டைன் மதம் மாறிய நொடியிலிருந்து நிலைமை தலைகீழாக மாறியது. கிறித்துவத்துக்குச் சலுகைகள் வழங்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாகப் பழைய மதங்கள் தடைக்கு உள்ளாயின. பழைய கிரேக்க ரோமக் கடவுளர்களின் கோயில்கள் இடிக்கப்பட்டன. கிறித்துவை மறுத்த யூதர்களும் இன்னல்களுக்கு உள்ளானார்கள்.

330ம் ஆண்டு காண்ஸ்டண்டைன் கிரேக்கத்துக்கும் துருக்கிக்கும் இடையே பாஸ்பரஸ் நதிக்கரையில் புதிதாக காண்ஸ்டண்டினோபில் (‘காண்ஸ்டண்டைனின் நகரம்’) என்று புதிய தலைநகரத்தை நிறுவினான்.

இதன்பிறகு கிறித்துவத்தின் தலைமை பீடம் பழைய ரோம் நகரமா அல்லது புதிய காண்ஸ்டண்டினோபிலா என்ற சர்ச்சை எழுந்தது. இதன் அரசியலுக்குள் நாம் புகத் தேவையில்லை.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், பழைய ரோம் நகரத்தின் கிறித்துவத் தலைவர்களாக இருந்த ரோம் நகர பிஷப்புகள் (இன்று போப்பாண்டவர் என்று அழைக்கப்படுபவர்கள்) இயேசுவின் தலைமைச் சீடரான புனித பேதுருவின் வழி வந்த தாங்களே கிறித்துவத்தின் தலைவர்கள் என்று அறிவித்துக் கொண்டார்கள். இதற்கு மாறாக கான்ஸ்டண்டினோபில் நகரத்தின் பிஷப்புகள் பேரரசர் இருக்கும் நகரத்தின் பிஷப்புகளுக்குத்தான் அந்த உரிமை என்று வாதாடினார்கள். 1453ல் காண்ஸ்டண்டினோபில் முஸ்லீம்களின் கைவசமானபோது இந்நகரத்தின் பிஷப்புகளின் அதிகாரம் குன்ற ஆரம்பித்தது. மேற்கில் போப்பாண்டவர்களின் அதிகாரம் 16ம் நூற்றாண்டில் நடந்த புரோடஸ்டண்டு புரட்சி, 18ம் நூற்றாண்டில் நடந்த பிரெஞ்சுப் புரட்சி, 19ம் நூற்றாண்டின் இத்தாலிய விடுதலைப் போராட்டம் வரை நீடித்தது. இன்றும் போப்பாண்டவர்களின் கையில் ரோம் நகரத்தின் ஒரு பகுதி வாத்திகன் என்ற பெயரில் சுதந்திர நாடாக இருக்கிறது.

ஆனால் ஒன்பதாம் நூற்றாண்டிலேயே ரஷ்யா கிரேக்கத் துறவிகளான புனித கிரில் மற்றும் மெத்தோடியஸ் வழியாகக் கிறித்துவத்தை ஏற்றிருந்தது. காண்ஸ்டண்டினோபில் வீழ்ந்ததற்குப் பிறகு ரஷ்யப் பேரரசரின் தலைநகரமான மாஸ்கோ நகரமே கிறித்துவத்தின் புதிய தலைமையிடமான மூன்றாம் ரோமாபுரி என்று ரஷ்யர்கள் அறிவித்தார்கள். இத்தாலியில் இருக்கும் முதல் ரோமாபுரி பதவி மோகமுடைய ரோமாபுரி பிஷப்புகளின் கையில். இரண்டாம் ரோமாபுரியான காண்ஸ்டண்டினோபில் முஸ்லீம் படைகளின் கையில். மூன்றாம் ரோமாபுரி மாஸ்கோவில்.

1918ல் பதவி பறிபோகும் வரைக்கும் ரஷ்யப்.பேரரசர்களான ஜார்கள் காண்ஸ்டண்டினோபில் பேரரசர்களின் சின்னமான இரட்டைத் தலைக் கழுகுச் சின்னத்தையே தங்கள் சின்னமாகவும் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கத்தோலிக்கத் திருச்சபை என்று அழைக்கப்பட்ட லத்தீன் கிறித்துவத்துக்கும் ஆர்த்ததாக்ஸ் சபை என்று அழைக்கப்பட்ட கிரேக்க/ரஷ்ய திருச்சபைக்கும் இடையே சில முக்கியமான கருத்து வேறுபாடுகள் இருந்தன.

இவை அடிப்படையில் கிறித்துவ வேதாகமத்தின் வார்த்தைகளை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட வேறுபாடுகள். முதலில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்த சுவிசேஷங்கள் மிகப் பிந்திய காலத்தில் (நான்காம் நூற்றாண்டில்தான்) லத்தீனுக்கு மொழிபெயர்க்கப்பட்டது. அதுவரை ரோமப் பேரரசு முழுவதிலும் சாமானிய மக்களால் கிரேக்கம் பேசப்பட்டது. பேரரசு பிளவுபட்டுப் போக மேற்கில் லத்தீனும் கிழக்கில் கிரேக்க மொழியும் கோலோச்ச ஆரம்பித்தன. பரஸ்பர புரிதல் இல்லாமல் ஆனது.

கத்தோலிக்கச் சபை, ஆர்த்ததாக்ஸ் சபை ஆகிய இரண்டு திருச்சபைகளுக்கும் மனிதர்களைப் பாவங்களிலிருந்து இரட்சிக்கத்தான் இயேசு மனிதராக அவதரித்தார் என்று திடமாக நம்பின. ஆனால், பாவம் என்பது என்ன என்பதில்தான் இரண்டு சபைகளும் வேறுபட்டன.

கிரேக்க மொழியில் பாவத்திற்கு ‘hamartia’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இதற்கு நேரடி பொருள் ‘குறிக்கோளைத் தவறவிடுதல்’. தேவனின் சாயலாக (‘icon’) படைக்கப்பட்ட மனிதன் தன்னுடைய உண்மை இயல்யினை மறந்து செய்யும் செயல்கள்தான் பாவங்கள் என்ற கருத்து கிரேக்கச் சபையில் வேரூன்றியது. கிரேக்க மத அறிஞர்களைப் பொறுத்தவரையில் பாவம் என்பது மனிதனை மனிதனாக இருக்க விடாமல் தடுக்கும் ஆதி நோய், அல்லது ஆதாம் ஏவாளின் ஆதி பாவத்தால் மனிதர்களுக்கு ஏற்பட்ட காயம். கடுமையான ஜுரமோ, ரத்தக் கொதிப்போ எப்படி ஒருவனை விரும்பியபடி செயல் செய்யவிடாமல் தடுக்குமோ அது போலவே பாவமும் மனிதர்களை நற்செயல்களைச் செய்யவிடாமல் தடுக்கிறது.

மாறாக, லத்தீன் மொழியில் பாவத்தைக் குறிக்கப் பயன்படுத்தபபட்ட transgressio  என்ற வார்த்தை ‘ (சட்டத்திற்கு எதிரான) அத்துமீறல்’ என்ற பொருள் கொடுத்தது. நோய் என்பது குணமாக்கப்பட வேண்டியது என்றால், அத்துமீறல் தண்டனைக்கு உள்ளாக வேண்டியது.

துர்கனேவ், தஸ்தவஸ்கி, டால்ஸ்டாய் ஆகியோரது  நாவல்களில் வரும் ரஸ்கோலிகோவ் போன்ற தவறு செய்பவர்கள் (தஸ்தவ்யிஸ்கி, குற்றமும் தண்டனையும்) கண நேரத்தில் எழுந்து விஸ்வரூபம் எடுக்கும் உணர்ச்சிகளால் உந்தப்படுகிறவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள்.

அத்துமீறல் என்றால் அதன் பின்னால் தெளிவான திட்டமிடலும், காரண காரியங்களும் இருக்கும். நோய் என்பது அத்தகைய தெளிவான படிகளில் நகராது. நோயில் அசைவுகளும், விளைவுகளும் துல்லியமில்லாதவை. ரஷ்யக் கதாசிரியர்களின் பார்வையில் பாவம் என்பது திட்டமிடப்பட்ட அத்துமீறல் இல்லை என்பதால், அவர்கள் நாவல்களில் வரும் கதாபாத்திரங்களும் அவ்வப்போது நற்குணங்களை வெளிப்படுத்தக் கூடியவர்கள்தான் என்றாலும் பாவம் என்னும் ஆதி காயத்தால் தாக்குண்டவர்களாக, தாங்களே புரிந்து கொள்ளா முடியாத ஆழமான உணர்வுந்துதல்களால் இயக்கப்பட்டவர்களாகக் குற்றங்களைச் செய்து தங்களையே அழித்துக் கொள்ளத் தலைப்படுகிறார்கள். தன்னை அறியாமல் தன்னையே அழித்துக் கொள்ளும் இச்செயலுக்குக் குறியீடாகப் பல ரஷ்ய நாவல்களில் மதுபோதை பயன்படுகிறது.

மேலும் அத்துமீறல் என்றால் ஏதோ ஒரு வகையில் அபராதம் கட்டியோ பிராயச்சித்தம் செய்தோ மீண்டும் பரிசுத்தமாகி விடலாம். நோய் அப்படியல்ல. நோயிலிருந்து குணமானாலும்கூட நோய்கண்ட மனிதனிடம் அந்தப் பலவீனம் தொடர்ந்து வந்து கொண்டுதானிருக்கும்.

ஆங்கில, ஜெர்மானிய நாவல்களில் வரும் தலைமைக் கதாபாத்திரங்களோடு ஒப்பிடுகையில் ரஷ்ய நாவல்களில் வரும் தலைமைக் கதாபாத்திரங்கள் எப்போதும் முழுமையான விடுதலையோ, மீட்போ அடையாததற்கு இதுவும் ஒரு காரணம்.

மேற்கு இலக்கியம் மனிதனைப் பெரும்பாலும் அத்துமீறாதவன், அத்துமீறியவன், அத்துமீறி மீட்புக்குள்ளானவன் என்ற படிநிலைகளிலேயே பார்க்கையில், ரஷ்ய நாவல்கள் அவனைப் பாவம் என்னும் நோயில் விழ எப்போதும் சித்தமாய் இருப்பவன் என்றாலும் மனித குணத்தின் உன்னதங்களையும் வெளிப்படுத்தவும் கூடியவன் என்ற நிலையில்தான் பார்க்கின்றன.

ரஷ்ய நாவல்களில் வரும் ரஸ்கோல்நிகோவ், திமித்ரி காரமசோவ், அனதோல் குராகின் (போரும் அமைதியும்), ரோகோசின் (அசடன்), பாஸாரோவ் (தந்தைகளும் மகன்களும்) போன்ற பாத்திரங்களின் வசீகரத்துக்கு இந்தப் அடிப்படையே காரணமாக இருக்கிறது.

முழுமையாக மீட்படைய முடிய முடியாது என்றால் இத்தகைய கதாபாத்திரங்களுக்கு விடிவுதான் என்ன?

இயேசுவின் நிபந்தனையற்ற அன்போடு, சுய தியாகத்தோடும், பரிசுத்தத்தோடும் வரும் கதாபாத்திரங்களோடு ஏற்படும் தொடர்பால் இத்தகைய கதாபாத்திரங்கள் தங்கள் வீழ்ந்த நிலைமையை உணர்ந்து கொண்டு மீட்சியைத் தேடி நகர்கின்றன.

குற்றமும் தண்டனையிலும் சோனியா, அசடனின் மிஸ்கின்,  தந்தையரும் மகன்களிலும் ஆர்காடி மணந்து கொள்ளும் காத்யா ஆகிய கதாபாத்திரங்கள் இத்தகைய பாத்திரங்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

உண்மையில் சோனியா, மிஸ்கின் போன்ற பாத்திரங்கள் மனிதர்களிடையே அவதரித்து அவர்களை நல்வழிப்படுத்தி ரட்சித்த இயேசுவவின் சாயலில் படைக்கப்பட்ட பாத்திரங்களே. ரஷ்ய நாவல்களில் இத்தகைய பாத்திரங்கள் எதிர்நோக்கிம் இன்னல்களும், ஏளனமும் நிராகரிப்புகளும் இயேசுவின் பாடுகளையும் அவர் பட்ட அவமானங்களையும் பிரதிபலிப்பவையே.

ரஷ்ய  நாவல்களின் நோக்கில் இயேசு தூரத்தில் அமர்ந்து தீர்ப்பெழுதும் நீதிபதியாக மட்டும் இல்லாமல் மனிதர்களிடையே உழன்று அவர்களது பலவீனங்களைத் தாங்கிக் கொள்ளும் மீட்பராகவே சித்தரிக்கப்படுகிறார்.

மனிதர்களை ஆட்டிப்படைக்கும் ஆதிநோயான பாவத்தின் விளைவுகளுக்கும் இயேசு உலகுக்கு வழங்குவதாய் நம்பப்படும்  இந்த மீட்சிக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களின் விமர்சனமாக எழுதப்பட்டவைதான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மகத்தான ரஷ்ய நாவல்கள்

இலக்கிய விமர்சனம் – இலக்கியத்திற்கு நிகர நஷ்டம்

இலக்கிய விமர்சனம் – இலக்கியத்துக்கு நிகர நஷ்டம் –

இலக்கிய விமர்சனங்களைப் பற்றி இன்றைய என் வலைப்பூ பதிவுக்குத் தனது கருத்தாக க. விக்னேஷ்வரன் எழுதியிருக்கிறார். சுட்டி இந்தப் பதிவுக்குக் கீழே தரப்பட்டுள்ளது.

ஆழமான, நிச்சயம் சிந்திக்க வைக்கும் பதிவு.

அவர் சொல்வதன் சாராம்சம்:

1. இலக்கிய விமர்சனங்கள் முன்புபோல் தீவிரமானவையாக இல்லை.

2. விமர்சனங்களை விமர்சனங்களாக ஏற்றுக் கொள்ளாமல் தனிமனித தாக்குதல்களாகச் சித்தரிப்பதால் நிறைய பேர் விமர்சனம் செய்யத் தயங்குகிறார்கள்.

3. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியும் அதில் ஏற்படுத்தித் தரும் மனித உறவுகளும் இந்தத் தயக்கத்தை மேலும் வலுவாக்கிறது.

4.  இதனால் நிகர நஷ்டம் இலக்கியத்துக்கே.

இதில் எனக்கு அனுபவமே உள்ளது. ஒரு வாரத்துக்கு முன்னால் வேறோர் இடத்தில் உள்ள கவிதைத் தொகுப்பைப் பற்றி என் கருத்தைப் பதியப் போக, சிங்கப்பூரிலும் சேர்த்து மற்ற சிலரும் வாலண்டியராக வந்து நான் அவர்களைத்தான் சொன்னேன் என்று திட்டிவிட்டுப் போனார்கள்.

அதிலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். இனிமேல் மற்றவர் எண்ணம் புண்படுமே என்று பொதுப்படையாகப் பதிவுகளைப் போடக் கூடாது. பெயர்களையும் விவரங்களையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.  We shall name names.

ஆனால் இது விக்னேஷ்வரன் கேட்ட கேள்விக்குப் பதிலாகாது. இலக்கியம் அநாதையாக இருக்கிறது என்கிறார்.

உண்மைதான். இலக்கிய விமர்சனமும் உரையாடலும் நலிவடையும்போது இலக்கியத் தரமும் நலிவடையத்தான் செய்யும்.

ஆனால் விமர்சனம் மட்டுமே இலக்கியத்தை வாழ வைத்துவிடும் என்பதிலும் எனக்கு நம்பிக்கையில்லை. அதற்கு வேறு காரணிகளும் அவசியம். அதைத்தான் காலையில் சொன்னேன்.

விமர்சனத்தைப் பொறுத்தவரை விக்னேஷ் சொல்வதற்கு ஒரே தீர்வுதான் உண்டு.

எது வந்தாலும் வராவிட்டாலும், ஒரு படைப்பைப் பற்றிய நேர்மையான கருத்தை சாதகங்களுக்கோ பாதகங்களுக்கோ அஞ்சாமல் பதிவிடுவது.

அதற்கு வரும் எதிர்வினைகளை மதிப்பு தந்து ஏற்றுக் கொள்வது.

எதிர்க்கருத்தில் சொல்லப்பட்டிருப்பதை ஆராய்வது.  தவறிருந்தால் சுட்டிக் காட்டுவது. சரியென்றால் ஏற்றுக் கொள்வது.

இதனால் தனிமனித எதிர்ப்பு வராமல் இருக்குமா? நிச்சயம் வரத்தான் செய்யும்.

ஆனால் இலக்கியத்தின்மீது அக்கறையிருந்தால் நம் தலைமுறைக்கு நாம் என்ன விட்டுச் செல்கிறோம் என்பதன் மீது அக்கறை இருந்தால் இந்த எதிர்ப்புகளை கடந்து வரலாம்.

நல்ல விமர்சனத்துக்கு அக்கறைதான் அடிப்படை. அக்கறைதான் அடிநாதம்.

அக்கறையில்லாத விமர்சனங்கள் வெறும் ஆர்ப்பாட்டங்கள். அவை ஒன்று, வெறும் தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்ட கத்திக்குத்துகளாக அமையும். அல்லது, வெறும் பாராட்டு மழையாகத் திகட்டும்.

நண்பர் விக்னேஷ் ஜெயமோகன் போன்றவர்களின் விமர்சனங்களைக் குறிப்பிடுகிறார்.

ஜெயமோகனின் பதிவுகளிலும் அவரைப் போன்றவர்களின் பதிவுகளிலும் நான் காண்பது சமகால இலக்கியத்தின் மீதான அக்கறையைத்தான்.

நமக்கும் தேவை அதே அக்கறைதான்.

இது ஒன்றுதான் இலக்கியம் அநாதையாகி விடாமலும் தடுக்கும்.

https://m.facebook.com/story.php?story_fbid=2765581420168464&id=100001499004580

இலக்கிய விமர்சனம் என்பது யாதெனின்…

சங்கீத ஸீஸன் போல இது இலக்கிய விமர்சன ஸீசன்.

நிறைய பேர் விமர்சனத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். விமர்சனம்  மட்டும் அர்த்தமுள்ளதாக, நேர்மையானதாக இருந்தால் இலக்கியம் எங்கேயோ போய்விடும் என்று சொல்கிறார்கள்.

இலக்கியக் குழுக்கள் விமர்சனத்துக்குக் கணிசமான நேரத்தை ஒதுக்க ஆரம்பித்திருக்கின்றன.

இதனால் என்ன பயன் என்பது நல்ல கேள்வி.

அப்படி இலக்கியத்தை உயர்த்தக்கூடிய விமர்சனமும் எப்படி இருக்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி.

முதலில், இலக்கியம் உயர்வதற்கு விமர்சனம் மட்டும் போதுமானது என்று நான் கருதவில்லை. இதற்குக் காரணங்கள் இரண்டு.

முதலாவதாக, தரமுள்ள இலக்கியம் உருவாவதற்கு விமர்சனம் மட்டும் போதாது.

எழுத்தாளரின் பரந்த இலக்கிய மற்றும் தத்துவம் சார்ந்த வாசிப்பு, மொழி வளம், ஒரு  தனது சிறிய வட்டத்துக்குள் இருந்து வெளியேறி இலக்கிய “ரிஸ்கு” களை எடுக்கும் தைரியம், நல்ல எடிட்டரின் உதவி, அக்கறையுள்ள வாசகர்கள் ஆகிய அனைத்துமே நல்ல விமர்சனம் போலவே தரமான இலக்கியம் உருவாதற்கு அவசியம்.

படைப்பின் கடைசி வடிவத்தை மட்டுமே பெரும்பாலான விமர்சனங்கள் சீர்தூக்கிப் பார்க்கின்றன. அதாவது தேர்வுத்தாளைத் திருத்தும் ஆசிரியர் பாஸா ஃபெயிலா என்று சொல்வது போலத்தான் இது. தப்பு எங்கே நிகழ்ந்திருக்கிறது என்று வேண்டுமானால் எழுத்தாளர் இதனால் அறிந்து கொள்ள வாய்ப்புண்டு. ஆனால் அவற்றை நிவர்த்திச் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று சொல்வது விமர்சனத்தால் ஆகாத காரியம். இது விமர்சனத்தின் வேலையும் அல்ல.

இலக்கியம் உயர்வதற்கெல்லாம் இது பத்தாது.

மேற்குலகிலும் ஜப்பான், சீனா போன்ற நாடுகளிலும் எழுத்தாளர்கள் எப்படி தமது படைப்புகளை எழுதினார்கள், அவர்களது படைப்புகளின் சமுதாய மற்றும், தத்துவார்த்த அடிப்படைகள் என்பதை விவரிக்கும் வகையில் எழுத்தாளர்களின் வாழ்க்கைச் சரித்திரங்களும், அவர்கள் எழுதிய கடிதங்களும், படைப்புகளை அவர் திட்டமிடும்போது பயன்படுத்திய நோட்டுப் புத்தகங்களும் அச்சாகி வருகின்றன.

இவற்றை ஆய்வு செய்து விவரிக்கும் கட்டுரைகளும், நேர்காணல்களும் வெளிவருகின்றன  எழுத்தை எடிட்டிங் எப்படிச் செய்வது என்று உதாரணங்களோடு புத்தகங்கள் வருகின்றன.

இவை தமிழில் இல்லவே இல்லை என்று சொல்ல வரவில்லை. விமர்சனத்தில் செலுத்தும் கவனத்தோடு இந்த விஷயங்களிலும் சிற்றிதழ்களும், இணைய இதழ்களும் கவனம் செலுத்தலாம். இலக்கியத் தரம் உயர்வதில் அக்கறையுள்ள இலக்கிய அமைப்புக்கள் இப்படிப்பட்ட விஷயங்களை முன்னெடுக்கலாம்.

முதலில், தமிழில் உள்ள சிறந்த எழுத்தாளர்களின் இலக்கியங்களை முக்கியமாகக் கொண்டு அவர்களடைய வாழ்க்கைச் சரித்திரங்கள் எழுதப்படுவது பயனுள்ளதாக இருக்கும். ஆங்கிலத்தில் இதற்கு literary biography என்று பெயர்.

நேர்காணல்களில் எழுத்தாளர்களிடம் சமகால இலக்கியம் எப்படி இருக்கிறது, உங்கள் படைப்புகளின் நோக்கம் என்ன, சமுதாயப் பிரச்சனைகளைப் பற்றிய உங்கள் கருத்தென்ன என்று கேட்பது ஒரு வகை கேள்வி.

நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள், உங்கள் எழுத்தின் தத்துவ அடிப்படை என்ன, நீங்கள் எப்படி ஒரு வாக்கியத்தை அமைக்கிறீர்கள், எப்படி மெய்ப்புப் பார்க்கிறீர்கள் என்று கேட்பதும், அந்தப் பதில்களைக் கட்டுரைகளிலும், கலந்துரையாடல்களிலும் ஆராய்வதும் வேறு வகை கேள்வி.

முதல் வகை கேள்வி இலக்கியத்தை மதிப்பெண்களுக்குரிய பொருளாக மட்டும் பார்ப்பதாக என் கருத்து.  இத்தகைய கேள்வியால் எழுத்தாளர் எல்லாம் அறிந்தவராகவும், எழுத்தாற்றல் என்பது சிலருக்கே வழங்கப்பட்ட அருள்கொடை போலவும் சித்தரிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது.

இரண்டாம் வகை கேள்வி இலக்கியத்தை உழைப்பினால் மேம்படுத்த வேண்டிய ஒரு வித்தையாக, craftஆக பார்க்கிறது.

முதலாம் வகை கேள்விகளே வேண்டாம் என்று சொல்லவில்லை. இரண்டாம் வகை கேள்விகளும் வேண்டும் என்கிறேன்.

இலக்கியத்தை முடிந்த முடிவாக இல்லாமல், மெருகேற்றப்படக்கூடிய வித்தையாகவும் craftஆகவும் பார்ப்பதுதான் எழுத்தாளர்களுக்கும், விமர்சகர்களுக்கும் நல்லது என்று ஹேரால்ட் ப்ளூம் சொன்னதாக ஞாபகம்.

எழுத்தின் ரகசியம்: ஏர்னஸ்ட் ஹெமிங்வேயுடனான நேர்காணல்கள்

டி பாரிஸ் ரிவ்யூவுவில் ஹெமிங்வேயுடன் ஜார்ஜ் பிளிம்ப்டன் நடத்திய நேர்காணலின் எனது மொழிபெயர்ப்பு. மே 1954 இதழில் வெளிவந்தது. பிளிம்ப்டன் அக்காலத்தில் புகழ்ப்பெற்ற அமெரிக்க நிருபராகத் திகழ்ந்தவர். விளையாட்டுப் போட்டிகள் பற்றிய வருணனைகளுக்காக பிளிம்ப்டனின் எழுத்துப் பிரபலமாக இருந்தது. ஜார்ஜ் பிளிம்ப்டன்:  எழுதும் செயலில் ஈடுபட்டிருக்கும் நேரம் உங்களுக்குச் சந்தோஷம் தருகின்றதா? ஹெமிங்வே: ரொம்பவும். ஜா.பி,: எழுதுவதில் செலவழிக்கும் நேரத்தைப் பற்றி ஏதேனும் … Continue reading எழுத்தின் ரகசியம்: ஏர்னஸ்ட் ஹெமிங்வேயுடனான நேர்காணல்கள்

ஹெமிங்வே பாணி

ஆங்கிலச் சிறுகதைகளை வாசிப்பதில் ஆர்வமுள்ளவர்களில் பெரும்பாலோர் எர்னஸ்ட் ஹெமிங்வேயைக் கொண்டாடுவார்கள்.

கதை கட்டமைப்பில், காட்சி விவரிப்பில், சொற்களின் சிக்கனத்தில் ஹெமிங்வேயின்  கதைகள் சிறுகதை இலக்கியத்தின் உச்சமாகக் கருதப்படுகின்றன.

‘ஹெமிங்வே பாணி’ என்று சொல்லும் அளவுக்கு ஆங்கிலத்தில் ஒரு எழுத்து நடையை ஹெமிங்வே உருவாக்கினார்.

(1)கதாபாத்திரங்களின் மனதில் எழும் உணர்ச்சிகளை உள்ளிருந்து பார்ப்பதுபோல் எழுத்தாளன் விவரிக்காமல் கதாபாத்திரங்களின் செயல்கள், முகபாவனைகள் மூலமாகவே அவற்றை விவரிப்பது,

(2) இரண்டு அசைகளுக்குமேல் நீளமாக உள்ள வார்த்தைகளை அல்லது கடினமான, பிறமொழி வார்த்தைகளைக் கதைகளில் தவிர்ப்பது;

(3) சொல் அலங்காரங்களை அறவே தவிர்த்தல்;

(4) நான்கைந்து வார்த்தைகளுக்கு மேல் போகாத வாக்கியங்கள்;

(5) அப்பட்டமான உணர்ச்சி, மாய யதார்த்த அல்லது ஆன்மீகக் கூறுகள் எதையும் கதைக்குள் அனுமதிக்காமல் இயல்பான தினசரி நிகழ்ச்சிகளின் விவரிப்பு வழியாகவே கதையில் ஆழமான உண்மைகளைப் பேசுவது

என்பவை ஹெமிங்வே பாணி எழுத்தின் முக்கிய ஐந்து அம்சங்கள்.

இந்த எழுத்துப் பாணியைச் சில விமர்சகர்கள் “பனிக்கட்டி கோட்பாடு” என்று அழைக்கிறார்கள். பனிக்கட்டியின் மிகச் சிறு பகுதியே தண்ணீருக்கு மேல் தெரியும். அதன் மிகப் பெரும் பகுதி தண்ணீருக்குக் கீழேதான் இருக்கும்.

அதுபோல் ஹெமிங்வேயின் கதைகளில் வெளிப்படையாகச் சொல்லப்படும் விவரிப்புக்கள் மிக சொற்பமானவை. அவற்றின் வழியாகச் சொல்லப்படும் உண்மைகளும், வலியும் மிகப் பெரியவை என்பது இவர்கள் கருத்து.

ஆரம்ப காலத்தில் செய்தித்தாள் நிருபராக Kansas City Star என்ற பத்திரிகையில் ஹெமிங்வே வேலை செய்த நேரத்தில்தான் அவர் தனது எழுத்து பாணியை உருவாக்கிக் கொண்டார். இது தொழில் நிமித்தமாக அவருக்கு ஏற்பட்ட தேவை.

நீட்டி முழக்காமல், அலங்காரங்கள் இல்லாத மிகச் சில எளிய  வார்த்தைகளில் நிருபர்கள் சொல்ல வந்த விஷயத்தை வாசகர்களிடம் கொண்டு போக வேண்டும் என்று பத்திரிகை ஆசிரியர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.

அதே சமயம், சொல்லப்படும் விஷயத்தின் முழுமையான விவரங்களும் வாசகர்களைச் சென்று சேர வேண்டும். இதை ஆங்கிலத்தில் ஐந்து டபிள்யூக்களும் (Ws), ஒரு எச்-உம் (H) என்பார்கள்.

ஒரு சம்பவத்தைப் பற்றி எழுதும் நிருபர் எத்தனை குறைவான சொற்களில் முடியுமோ அத்தனைக் குறைவான சொற்களில் யார், எது, எங்கே, எப்போது, ஏன், எப்படி என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். Who, what, where, when, why, how.

ஹெமிங்வேயின் எழுத்தில் கடைசிவரை அவருடைய பத்திரிகை பயிற்சி துணை வந்ததை  அவருடைய ‘கிழவனும் கடலும்’ குறுநாவலின் முதல் வாக்கியத்திலேயே காணலாம்.

அந்த ஒற்றை வாக்கியத்தில் கிழவன் கடலில் எங்கிருக்கிறான், என்ன செய்து கொண்டிருக்கிறான், அவன் படகு எப்படிப்பட்டது, கதை தொடங்கும்போது அவனுடைய நிலை என்ன என்பதை எல்லாம் ஹெமிங்வே தெளிவாகச் சொல்லி விடுகிறார்.

ஹெமிங்வேயின் பாணியில் பின்னாளில் வந்த பலரும் எழுத முயன்றாலும்கூட அதில் பெரும் வெற்றி பெற்றவர்கள் சிலரே. அவர்களில் முக்கியமானவஎ ரேமண்ட் கார்வர்.

ஹெமிங்வேயின் பாணியைப் பிடிக்காத விமர்சகர்கள் அதை ‘பத்திரிகை பாணி’ அல்லது newspaperese என்று விமர்சித்தார்கள்.

ஆனால் ஹெமிங்வேயின் சமகாலத்தில் எழுதிக்கொண்டிருந்த வில்லியம் ஃபால்க்னர் போன்றவர்களின் சொல் அலங்காரங்கள் மிகுந்த, மிக நீண்ட வாக்கியங்களோடு அமைந்த நாவல்களையும் சிறுகதைகளையும் படிப்பவர்களுக்கும் ஹெமிங்வே பாணி எழுத்தின் வசீகரம் புரியும்.

ஹெமிங்வே எழுதிய சிறுகதைகளில் ‘The Short, Happy Life of Francis Maccomber’, ‘Indian Camp’, ‘Fifty Grand”, ‘The Snows of Kilimanjaro’, ‘An Alpine Idyll’, ‘The Battler’, ‘Up in Michigan’, ‘Big, Two Hearted River’ மிகச் சிறந்தவை.

இவற்றில் 10 கதைகளைக் குறிப்புகளோடு தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

பவாவின் டொமினிக் ஆங்கிலத்தில் வந்த பிறகு ஏப்ரலில் இந்தத் தொகுப்பு வெளிவரும். பதிப்பாளர் சிக்கும் பட்சத்தில்.

லதா அருணாச்சலத்தின் மொழிபெயர்ப்புக்கள்

எந்த மொழியிலிருந்து வேண்டுமானாலும் இருக்கட்டும். மொழிபெயர்ப்பு என்பது உயரத்தின் கட்டப்பட்டிருக்கும் கயிற்றின்மேல் நடப்பதற்குச் சமானம்.

நடக்கப்போகும் மிச்ச கயிற்றையும் (மூலப் படைப்பின் முழுமை) பார்க்க வேண்டும், எடுத்து வைக்க வேண்டிய அடுத்த ஓரடியையும் (அந்தக் கணத்தில் மொழிபெயர்க்கும் சொல் அல்லது வாக்கியம்) கவனத்தில் வைத்திருக்க வேண்டும். ஓரக்கண்ணில் தெரியும் தரையும் (மொழிபெயர்ப்பு மொத்தமும்) பயமுறுத்தும்.

இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் தடுமாற்றம் நிகழ்ந்தாலும் மொழிபெயர்ப்பு அதோகதிதான்.

பைபிளை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்த புனித ஜெரோம் என்பவரைப் பற்றி ஒரு கதை உள்ளது. பைபிளின் புதிய ஏற்பாட்டிலுள்ள சுவிசேஷ வரிகளை மொழிபெயர்க்கும் நேரத்தில் கிரேக்க வார்த்தையான “metanoite” என்ற வார்த்தையை அவர் மொழிபெயர்க்க வேண்டியதிருந்தது. இந்த வார்த்தைக்கு “மனத்தை (முழுவதுமாகப் பாவத்திலிருந்து) திருப்பிக் கொள்ளுங்கள்” என்று அர்த்தம். இந்த வார்த்தை எபிரேய மொழி வார்த்தையான ” teshuvah” என்பதின் நேரடி மொழிபெயர்ப்பு. எபிரேய வார்த்தையின் பொருளை அப்படியே கிரேக்க மொழியில் தருவது.

ஆனால் ஜெரோம் லத்தீன் மொழியில் ஜெரோம் இந்த metanoite என்ற வார்த்தையை மொழிபெயர்த்தபோது அதன் இடத்தில் “poenitentiate” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். Poenitentiate என்ற வார்த்தை “பாவத்திலிருந்து திரும்பும் வகையில் உடலை வருத்திக் கொள்ளுங்கள்” என்ற பொருள் தரக்கூடியது. இன்றுவரை ஸ்பானிய, இத்தாலிய மொழிகளில் pena என்ற வார்த்தை வலியைக் குறிக்கிறது. ஆங்கிலத்தில் இந்த வார்த்தைதான் pain ஆனது. பழைய ஆங்கலத்தில் penitentiary என்றால் சிறைச்சாலை.

மனத்தால் இறைவனிடம் திரும்புதல் என்ற தத்துவம் உடலை வருத்திக் கொள்ளுதல் என்று பின்னாளில் ஆனதற்கு இந்த மொழிபெயர்ப்பும் ஒரு காரணம். ஜெரோம் மிகப் பெரிய அறிஞர். உண்மையான பக்தர். ஆனால் மூலப்படைப்பின் மொத்த செய்தியிடமிருந்து ஒரு சின்ன நொடி மொழிபெயர்ப்புத் தடுமாறியதால் ஏற்பட்ட விளைவு இது.

லதா அருணாச்சலம் தனது மொழிபெயர்ப்புகளில் இந்தத் தவறு நிகழ்ந்துவிடக் கூடாது என்று மிகக் கவனமாக இருப்பதாகவே தெரிகிறது.

அண்மையில் விருது பெற்ற “தீக்கொன்றை மலரும் பருவம்” என்ற அவருடைய மொழிபெயர்ப்பு நூலையும், கனலியில் வெளியான ரெபெக்கா லீயின் “உயரே ஒரு நிலம்” என்ற மொழிபெயர்ப்புக் கதையையும் வாசித்தேன். ஒப்பிட்டுப் பார்க்கும் நோக்கில் மேற்கூறிய மொழிபெயர்ப்புகளையும் அவருடைய மற்ற மொழிபெயர்ப்புகளையும் அவற்றின் மூலப் படைப்புகளையும் ஒரு முறை வாசித்தேன்.

ஆங்கிலத்தில் cadence என்பார்கள். ஒரு படைப்பிலுள்ள மொழியின் சந்தம் அல்லது அது செல்லும் வேகம் எனலாம்.  இது எழுத்தாளருக்கு எழுத்தாளர் வேறுபடும். பயன்படுத்தும் சொற்களையும், வாக்கியங்களின் அமைப்பைத் தாண்டியும் ஒரு எழுத்தாளரின் அடையாளமாக இருப்பது இந்த cadenceதான்.

சொற்களின் மொழிபெயர்ப்புத் துல்லியத்தை மீறியும்  லதா தனது மொழிபெயர்ப்புகளில் மூலக்கதையின் இந்த cadenceஐத் தமிழின் தன்மைக்குப்.பங்கம் ஏற்படுத்தாமல் கொண்டு வருவதில் வெற்றி பெறுகிறார்.

இது சாதாரண விஷயமல்ல. ஆங்கில cadenceஐ அப்படியே மொழிபெயர்ப்புக்குள் கொண்டு வந்திருந்தால் படைப்பு தமிழ் வாசகருக்கு அந்நியப்பட்டுப் போயிருக்கும். மொழிபெயர்ப்பு என்று அப்பட்டமாகத் தெரியும்படி செயற்கைத்தனமாகவும் தோன்றியிருக்கும்.

அதே சமயம், முழுக்கத் தமிழ் cadenceஇல் மொழிபெயர்த்தால் இந்தக் கதையை எழுதியது யார் நம்மூர்க்காரரா என்று வாசகர்கள் கேட்டிருப்பார்கள்.

லதாவின் வெற்றி இந்த இரண்டு அபாயங்களிலும் சிக்காமல் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதில் அவர் வெற்றி அடங்கியிருக்கிறது.

அவருடைய அடுத்த பலம் மூலக்கதையிலுள்ள உரையாடல்களை வெகு துல்லியமாகத் தமிழுக்குக் கொண்டு வரும் அவரது ஆற்றல். இது நுணுக்கமான காரியம். மிகப் பல மொழிப்பெயர்ப்பாளர்கள் சறுக்கும் இடம்.

லதா அருணாச்சலம் தமிழில் குறிப்பிடத்தக்க மொழிப்பெயர்ப்பாளராக மேலும் வளர்வார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

ஆனால் இதற்கு அவர் மொழிபெயர்ப்பதற்காகத் தொடர்ந்து சிறந்த இலக்கியப் படைப்புக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ரெபெக்கா லீயின் கதை ஓரளவுக்கு நல்ல கதைதான். ஆனால் மொழிப்பெயர்த்தே ஆக வேண்டிய கதை என்று சொல்ல மாட்டேன்.

ஒரு படைப்பு மொழிபெயர்க்கப்பட்டதால் மட்டுமே அது சிறந்த படைப்பு ஆகிவிடாதல்லவா?

சீனச் சிந்தனை மரபு – முப்பெரும் தாக்கங்கள்

ஃப்பூ ஹ்சி, நூ வா

கெ ஃபெய்-யின் சீன நாவலை மொழிபெயர்த்து முடிந்தவுடன் பதிப்பாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

சீன இலக்கியத்தின் அடிப்படை வேர்களைப் பற்றிப் பேச்சுத் திரும்பியது. சீனச் சிந்தனை மரபில் முப்பெரும் நகர்வுகள் இருப்பதாகப் பேசிக் கொண்டோம்.

முதலாவது, தாவோயிச மரபு. தாவோ என்ற சீன வார்த்தைக்கு வழி என்று பொருள். வழி என்பது ‘செல்ல வேண்டிய பாதை’, ‘கோட்பாடுகள்’ என்று பொருள் தரும் என்றாலும் அந்த வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் அதுவல்ல.

பிரபஞ்ச சக்திகளான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பெரும் பூதங்கள் ஒன்றோடொன்றும், மனிதர்களின் உடல்களோடும் உறவு கொள்ளும் முறைகளைத் தீர்க்கமாக ஆராய்ந்து அறிந்து அந்த முறைகளின் வழியாகவே வாழ்க்கையை அமைத்துக் கொள்வது தாவோ சித்தாந்தத்தின் அடிப்படை.

பிரபஞ்ச நகர்வுகள் – அல்லது இயற்கையின் செயல்களுக்கு – எதிராக அல்லாமல் இயைந்தே வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வது முழுமையான வாழ்வுக்குத் திறவுகோலாகக் கருதப்பட்டது.

தாவோ மதத்தின் தோற்றத்தை விளக்கும் சுவாரசியமான கதை உண்டு. கிறிஸ்துவுக்கு சுமார் 3,300 ஆண்டுகள் முன்னால் மஞ்சள் நதியின் சமவெளியில் ஹுவாய் யாங் என்ற முதல் சீனத் தலைநகரை அமைத்த ஃப்பூ ஹ்சி என்ற மன்னன் தாவோவின் அடிப்படை சித்தாந்தங்களைக் கண்டுபிடித்ததாக சீனர்களின் பழைய வரலாறு சொல்கிறது.

ஃப்பூ ஹ்சி-க்கு உடலின் மேல்பாகம் மனிதர்களைப் போலவும், கீழ்ப் பகுதி ராட்சசப் பாம்பைப் போலவும் இருக்குமாம். ஒரு நாள், வானத்தை உற்றுப் பார்த்த ஃப்பூ ஹ்சி பிரபஞ்சத்தின் நகர்வுகளையும் அவை உலகத்தின் மீதும் மனிதர்களின் மீதும் ஏற்படுத்தும் தாக்கங்களையும் உன்னிப்பாக கண்டு அறிந்தானாம். ஃப்பூ ஹ்சியின் மனைவி நூ வா ஆதி சீனர்களை பெரும் வெள்ளத்திலிருந்து காப்பாற்றினாளாம். [கிறித்துவர்களின் வேதத்தில் வரும் நோவா என்ற கிழவனும் இப்படித்தான் பெருவெள்ளத்திலிருந்து மனித இனத்தைக் காப்பாற்றினான் என்ற கதை உள்ளது.]

ஃப்பூ ஹ்சி கண்டறிந்த பிரபஞ்ச ரகசியமான தாவோவின் வழியாகத்தான் ஆதி சீனர்களின் அரசியல், விஞ்ஞானம், வானவியல், மருத்துவம், ஜோதிடம் ஆகியவை அமைந்திருந்தன.

தாவோ மதச் சித்தாந்தங்களைப் பின்னர் வந்த லாவோ த்ஸு, சுவாங் த்சு போன்றவர்கள் வளர்த்தார்கள். இவர்களும் ஹுவாய் யாங் பெரு வெளியில் வாழ்ந்தவர்கள்.

லாவோ த்சுவுக்குச் சற்றுப் பின்னால் வந்த கன்ஃபூசியஸ் மனிதர்கள் ஒருவரோடொருவர் நடந்து கொள்ள வேண்டிய விதத்தையும், சமூகம் அரசியல் அமைப்புகளோடு அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய விதத்தையும் எடுத்துச் சொன்னார். மனிதர்கள் சமூகத்தோடு வைத்துக் கொள்ள வேண்டிய சீரிய உறவுகளின் பிரதிபலிப்பாகக் கன்ஃபூசியஸின் போதனைகளில் முன்னோர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் பெரும் முக்கியத்துவம் பெற்றன.

பிரபஞ்சத்தோடும் மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையோடும் மற்றும் நின்று போயிருந்த சீனச் சிந்தனை மரபு கன்ஃபூசியஸின் போதனைகளால் பெரும் சமுதாய வாழ்வைப் பேசும் நிலைக்கு விரிவடைந்தது.

ஆயினும் தாவோ சித்தாந்தமும், கன்ஃபூசியஸின் போதனைகளும் மனிதனின் புற உலகை மட்டுமே பேசின. மனிதனின் உள்ளார்ந்த மனம் தொடர்பான வாழ்க்கையையும் மனதால் ஏற்படும் சிக்கல்களைத் தாண்டிப் போகும் வழிகளையும் அவை பேசவில்லை.

இந்தியாவிலிருந்து சாக்கிய புத்தரின் போதனைகள் சீனாவைச் சென்று அடைந்தபோது சீனர்கள் தாவோவோடும், கன்ஃபூசியஸின் போதனைகளோடும் பௌத்தத்தையும் தங்களது சிந்தனை மரபின் மூன்றாவது இழையாக ஏற்றுக் கொண்டார்கள்.

வலுவான ஓரிறைக் கொள்கை கொண்ட பல மதங்களைக் கொண்ட சமுதாயங்களோடு ஒப்பிடுகையில் சீனாவில் தாவோ, கன்ஃபூசியஸ் சித்தாந்தம், பௌத்தம் ஆகியவை ஒன்றோடொன்று சுமுகமான உறவையே கொண்டிருந்தன.

பின்னாளில் கிறித்தவம், மார்க்சியம் போன்ற மிக வலிமையான சிந்தனை மரபுகள் சீனாவுக்குள் வந்த போதும் சீன சமுதாயத்தில் தாவோ, கன்ஃபூசியஸ், பௌத்தம் கலந்த இந்தச் சிந்தனை மரபின் ஆணிவேரை அவற்றால் அசைக்க முடியவில்லை என்றே சொல்லலாம்.

இதற்குக் காரணம் இம்மூன்று சிந்தனைகளின் பிணைப்பும் மனிதர்களின் உடல், சமூக உறவுகள், மனம் ஆகிய முப்பெரும் சிக்கல்களுக்கு ஒரு சேர முழுமையான பதில்களைத் தந்ததுதான் என்றாலும் மிகையாகாது.