பத்து சிறந்த ரஷ்ய சிறுகதைகள் (3) – லியோ டால்ஸ்டாய் ‘மனிதன் எதனால் வாழ்கிறான்’

ரஷ்ய செவ்விலக்கிய நாவல்களின் மாஸ்டர்களாகக் கருதப்படும் டால்ஸ்டாய் மற்றும் தஸ்தவ்யஸ்கியின் சிறுகதைகளில் பலவும் அவர்களின் நாவல்களின் முக்கியக் கருத்துகளை விளக்குகின்றன.

தம்வரையில் சிறந்த சிறுகதைகளாக இருந்தாலும், அவர்களது நாவல்களில் அலசப்படும் தத்துவார்த்த விசாரணைகளின் முன்வரைவுகளாகவே எழுதப்பட்டிருக்கின்றன.

டால்ஸ்டாய் எழுதிய இந்த வகையான சிறுகதைகளில் 1885ல் வெளிவந்த “மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்” என்ற கதை சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

ரஷ்யாவுக்கே உரிய கடுமையான பனிக்காலம். சைமன் என்னும் பரம ஏழையான காலணிகள் தைத்து விற்கும் தொழிலாளி எப்படியாவது செம்மறியாட்டுத் தோலை வாங்க விரும்புகிறான். தோலைப் பயன்படுத்தித் தனக்கும் தன் மனைவிக்குமாக பனிக்காலம் முழுக்க உழைக்கக் கூடிய இரண்டு பனிக்கோட்டுகளைத் தைக்க நினைக்கிறான்.

ஆட்டுத்தோல்களை வாங்க அவனுக்குப் பணம் தேவைப்படுகிறது. தன்னிடம் காலணிகளை வாங்கியவர்களிடம் பணம் வசூலிக்கப் போகிறான். அவனுக்குச் சேர வேண்டிய ஐந்து ரூபிள்கள் இருபது கோபெக்குகளில் இருபது கோபெக்குகளே அவனுக்குக் கிடைக்கிறது. இதனால் மனமுடைந்தவனாக கிடைத்த இருபது கோபெக்குகளுக்கு வோட்கா வாங்கிக் குடித்துவிட்டுக் கோட்டு விற்வனைச் சபித்தபடியே வீட்டிற்குத் தள்ளாடியபடி நடக்கிறான்.

ஒரு சிறிய தேவாலயத்தில் முன்னால் குளிரில் நிர்வாணமாக நிற்கும் மனிதன் ஒருவனைக் காண்கிறான். அவன் வெறும் குடிகாரப் பயல் என்று நினைத்து அவனை முதலில் கடந்து போகிறான். பிறகு குளிரில் நிர்வாணமாக இருக்கும் ஒருவனை இரக்கமின்றிக் கடந்து போகிறோமே என்று மனசாட்சி அவனை உறுத்தத் திரும்பி வந்து அவனுக்குத் தனது துணிக் கோட்டுகளில் ஒன்றையும், கையில் வைத்திருக்கும் காலணிகளையும் கொடுக்கிறான். சைமன் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல மறுக்கும் மனிதன் தன் பெயர் மைக்கேல் என்றும் ஆண்டவர் தன்னைத் தண்டித்திருப்பதாகவும் மட்டும் சொல்கிறான்.

இருவரும் சைமனின் வீட்டுக்குப் போகிறார்கள்.

தயாரித்துவைத்த ரொட்டி அடுத்த நாள் காலைவரை வருமா என்று வீட்டில் காத்திருக்கும் சைமனின் மனைவி இருவரும் குடித்திருப்பதாக நினைத்து இருவரையும் ஏசுகிறாள். ஆனால் புதிதாக வந்த மனிதனை அமர வைத்து அவனுக்கு உணவு பரிமாறுகிறாள். சைமனின் பழைய உடைகளையும் அவனுக்குத் தருகிறாள். இதைப் பார்க்கும் மைக்கேல் முதல்முறையாகப் புன்னகைக்கிறான். அவன் சைமனுக்குக் காலணிகள் தைக்க உதவியாக இருக்கலாம் என்று முடிவாகிறது.

ஒரு நாள் சைமனின் வீட்டுக்கு வரும் பணக்காரன் ஒருவன் தனக்குக் கனமான காலணிகளைத் தைத்துத் தர வேண்டுமென்கிறான். அந்தக் காலணிகள் ஒரு வருடத்துக்குத் தேயாமல் உழைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறான். அப்படி அவை உழைக்கவில்லை என்றால் சைமனைப் பற்றிப் போலீஸாரிடம் புகார் சொல்வான் என்றும் எச்சரிக்கிறான். பணக்காரச் சீமான் பேசிக் கொண்டிருக்கும்போது அவனுடைய தோளுக்குப் பின்னால் பார்த்துக் கொண்டிருக்கும் மைக்கேல் இரண்டாவது முறையாகப் புன்னகைக்கிறான்.

பணக்காரன் கிளம்பிய பின்னால் மைக்கேல் அவன் தந்த தோலைப் பயன்படுத்திக் கனமான காலணிகள் தைக்காமல் மெல்லிய செருப்புகளைத் தைக்கிறான். இதற்காகச் சைமன் மைக்கேலைத் திட்டிக் கொண்டிருக்கும்போதே பணக்காரன் செத்துவிட்டதாகவும் அவன் சவ அடக்கத்துக்குத் தோதாகச் செருப்புத் தைத்துத் தர முடியுமா என்று செய்தி வருகிறது.

வேறொரு முறை ஒரு பெண் தனது இரண்டு மகள்களுக்காகக் காலணிகள் தைக்கச் சைமனிடம் வருகிறாள். மகள்களில் ஒருத்திக்கு ஒரு பாதம் பிசகி இருக்கிறது. சைமனின் கேள்விக்கு அந்தப் பெண் பாதம் பிசகி இருக்கும் பெண் குழந்தை தன் மகள் அல்ல என்றும், அந்தக் குழந்தையின் தாய் சாகக் கிடந்த நேரத்தில் மகளின் கால்மீது புரண்டதால் அவள் பாதம் பிசகிவிட்டதென்றும் சொல்கிறாள். அனாதையான குழந்தையை அனாதை இல்லத்தில் விட்டுவிட மனமில்லாமல் அவளை எடுத்து வளர்ப்பதாகச் சொல்கிறாள்.

இதைக் கேட்டு மைக்கேல் மூன்றாவது முறையாகச் சிரிக்கிறான்.

அந்தப் பெண் கிளம்பிப் போன பிறகு மைக்கேல் சைமனிடம் வந்து ஆண்டவன் தன்னை மன்னித்துவிட்டதாகச் சொல்கிறான். அப்படிச் சொல்லும்போது அவன் முகம் ஜோதிமிக்கதாக மாறுகிறது. இது ஏன் என்று சைமன் கேட்க மைக்கேல் தான் ஒரு தூதுவன் என்றும் ஆண்டவன் ஒரு பெண்ணின் உயிரைப் பறிக்க அவனை அனுப்பியபோது அவள்மீது பரிதாபப்பட்டு அவளை வாழவிட்டதால் ஆண்டவரின் சாபத்துக்கு ஆளானதாகவும் சொல்கிறான்.

“மனிதர்களுக்குள்ளே என்ன குடியிருக்கிறது?”, ” எது மனிதனுக்குத் தரப்படவில்லை?”, “எதனால் மனிதர்கள் வாழ்கிறார்கள்?” என்ற மூன்று கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிந்து கொள்ளும்வரை அவனுக்குச் சாப விமோசனம் இல்லை என்று ஆண்டவர் சொன்னதாகச் சொல்கிறான்.

சைமனின் மனைவி அவனுக்கு ரொட்டியைத் தந்தபோது “மனிதர்களுக்குள் அன்பே வாழ்வதாகவும்”, பணக்காரன் திடீரென்று செத்தபோது ” மனிதர்களுக்குத் தங்கள் உண்மையான தேவைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு தரப்படவில்லை” என்றும், அனாதைப் பெண் குழந்தையை எடுத்து வளர்த்த பெண்ணைக் கண்ட போது “தங்களுக்காக வாழாமல் மற்றவர்களின்மீது அன்பு காட்டுவதால்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள்” என்று தான் கண்டு கொண்டதாகவும் மைக்கேல் சொல்கிறான். தான் உயிரோடு விட்டுவிட்டுச் சென்ற பெண்ணின் உயிரைப் பறிக்க மீண்டும் போனபோது அவள் புரண்டு தன் மகளின் காலை நசுக்கினாள் என்றும் அந்தப் பெண் குழந்தைதான் காலணி தைக்க வந்தது என்பதையும் மைக்கேல் சொல்கிறான்.

அப்படிச் சொல்லி முடிக்கும்போது மைக்கேலுக்குச் சிறகுகள் வளர்கின்றன. “அன்பே ஆண்டவர், அன்பில் வாழ்பவர்கள் ஆண்டவருக்குள் வாழ்கிறார்கள்” என்று சொன்னபடியே மைக்கேல் வானுலகத்துக்குப் போகிறான்.

கிறித்துவ வேதத்திலிருக்கும் கதைகளை நினைவுகூறும் வகையில் எழுதப்பட்டிருக்கும் சிறுகதை. புதிய ஏற்பாட்டில் அடிபட்டுக் கிடக்கும் மனிதனைக் கண்டும் காணாததுபோல் போகும் மத அறிஞர்களைவிட அவனுக்கு உதவி செய்யும் வேற்று நாட்டவனே கடவுளுக்குப் பிரியமானவன் என்று இயேசு சொன்ன புகழ்பெற்ற கதை ஒன்று உண்டு.

இங்கு காலணி தைப்பவனின் பெயரான சைமன் இயேசுவின் பிரதான சீடனான சைமன் பேதுருவின் பெயரின் சாயல். மைக்கேல் என்பது வேதாகமத்தில் கையில் நீதித்தராசோடு தீர்ப்பு வழங்கும் வானவனின் பெயர்.

நல்லொழுக்கம் கொண்டவர்களிடம்தான் இருப்பார் என்று எல்லோரும் எதிர்ப்பார்க்கும் ஆண்டவர் உண்மையில் வோட்காவிற்கு அடிமையான ஆனால் அன்பு நிறைந்தவனான ஏழை காலணி தைக்கும் தொழிலாளியிடமும் படிப்பில்லாத அவன் மனைவியிடமும்தான் இருக்கிறார் என்பது இந்தச் சிறுகதையின் சாராம்சம். டால்ஸ்டாய் பின்னாளில் எழுதிய பல கதைகளின் மையக் கருத்து இது.

கர்த்தரின் ராஜ்ஜியம் மனிதர்களுக்குள்ளே அன்பின் வடிவத்தில்தான் குடியிருக்கிறது என்ற டால்ஸ்டாயின் தத்துவ முடிவின் பிரதிபலிப்பு.

அப்படி ஆண்டவர் அன்பானவர் என்றால் விதி முடிந்துவிட்ட பெண்ணின் உயிரை பறிக்காமல் விட்ட மைக்கேல் என்ற தூதுவனை அவர் ஏன் தண்டித்தார்? அவள்மீது கொண்ட பரிவிரக்கத்தினால்தானே அவன் அந்தப் பெண்ணை வாழ விட்டான்?

அது அப்படியல்ல. மரணமும்கூட ஆண்டவரின் அன்பின் வெளிப்பாடே என்று மைக்கேல் உணர மறந்ததே அவனை ஆண்டவர் தண்டித்ததற்கான காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. மரணத்தின் கோரத்தை உணர்ந்த நேரத்த்தில் மைக்கேல் அன்பான ஆண்டவர் எப்போதும் தீமை செய்ய மாட்டார் என்ற விசுவாசத்தை மைக்கேல் மறந்ததால் அவன் சபிக்கப்பட்டான்.

உலகில் மரணமும் வன்முறையும் கறுமையும் மண்டிக் கிடக்கும் நேரத்தில்கூட ஆண்டவரின் அன்பே ஜெயிக்கிறது என்பது டால்ஸ்டாய் புத்துயிர்ப்பு போன்ற தனது பின்னாளைய நாவல்களில் சொன்ன செய்தி.

அன்பும் விசுவாசமும்தான் ஆண்டவரின் ராஜ்ஜியத்தை மனிதர்களிடையே கொண்டு வருகின்றன என்பது டால்ஸ்டாயின் திடமான நம்பிக்கை.

அன்பாலும் விசுவாசத்தாலுமே மனிதர்கள் வாழ்கிறார்கள். அதைச் சொல்கிறது இந்தச் சிறுகதை.

ஹூலியோ கோர்த்தாஸாரின் கவிதைகள்

Hopscotch மற்றும் Blow Up and Other Stories ஆகிய சிறந்த நாவலாசிரியராகவும் சிறுகதை ஆசிரியராகவும் அறியப்படும் ஹூலியோ கோர்த்தஸார் 1984ல் நிகழ்ந்த அவருடைய மரணம்வரையில் கவிதையில் மிகப் பெரிய ஈடுபாடு கொண்டவராகவே இருந்தார்.

அவருடைய மொத்த படைப்புகளின் தொகுப்பில் கவிதைகள் மட்டும் கிட்டத்தட்ட 1,400 பக்கங்களுக்கு வருகின்றன. 1971ல் வெளிவந்த அவருடைய Pameos y Meopas என்ற கவிதைத் தொகுப்பின் பின்னட்டையில் (கவிதைகளைக் குறிக்கும் poemas என்ற வார்த்தையை இரண்டு விதமாகத் திருப்பிப்போட்டு உருவாக்கிய தலைப்பு) ஜுவான் கோர்த்தஸார் “எல்லாவற்றுக்கும் மேலாய் ஒரு கவிஞன்” என்று வர்ணிக்கப்படுகிறார்.

Pameos y Meopas தவிர 4 கவிதை தொகுப்புகள்/முக்கியமான நீண்ட கவிதைகளை 1914ல் பிறந்த கோர்த்தஸார் எழுதியுள்ளார்.

1938ல் வெளிவந்த Presencia (“இருப்பு”) என்ற தலைப்பிட்ட தொகுப்பு.

1949ல் Los Reyes (“அரசர்கள்”) என்ற தலைப்பில் பழைய கிரேக்க தொன்மங்களிலில் இருந்து மினோட்டோர் என்ற அரை காளை மாடும் அரை மனிதனுமான உயிரியை அடிப்படையாகக் கொண்ட கவிதை.

1971ல் வெளிவந்த Pameos y Meopasக்குப் பிறகு இந்தியாவின் ஜெய்ப்பூரில் இருக்கும் ராஜா ஜெய் சிங் ஆய்வுக்கூடத்தை அடிப்படையாகக் கொண்ட Prosa de Observatorio (“ஆய்வுக்கூட உரைநடை”) என்ற உரைநடைக் கவிதை.

பின்பு அவர் இறந்த வருடமான 1984ல் வெளிவந்த பெரிய தொகுப்பான Salvo el Crepusculo (“அந்திநேரத்தைக் காப்பாற்றுங்கள்”).

தன் வாழ்நாளின் கடைசிவரைக்கும் கோர்த்தாஸாருக்குக் கவிதையின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்த போதிலும் கவிதை எழுதும் தனது ஆற்றலைப் பற்றிக் கோர்த்தஸார் பலமான சந்தேகங்களைக் கொண்டிருந்தார்.

1938ல் வெளிவந்த தனது முதல் தொகுப்பைத் தனது சொந்த பெயரில் வெளியிட மறுத்து ஹூலியோ டென்னிஸ் என்ற புனைப்பெயரில் வெளியிட்டார்.

கடைசிவரைக்கும் தனது கவிதைகளை வெளியிடுவது கோர்த்தஸாருக்குப் பெருன் போராட்டமாகவே இருந்தது. 1971ல் வெளிவந்த தனது தொகுப்பின் முன்னுரையில் “என் கவிதைகளை அச்சில் கொண்டுவர தேவை இருந்ததாக நான் எப்போதும் நினைத்ததே இல்லை” என்று கோர்த்தஸார் குறிப்பிடுகிறார்.

தன் கவிதைகளைப் பற்றி வந்த எதிர்மறையான விமர்சனங்கள் கோர்த்தஸாரை மிகவும் பாதித்தன. பெரு நாட்டைச் சேர்ந்த விமர்சகரான ஹோசே மிகுவெல் ஓவியேடோ தனது கவிதைகள் “நெஞ்சைத் தொடும் வகையில் மோசமாக இருப்பதாக” சொன்னதைக் கோர்த்தஸார் குறிப்பிட்டுள்ளார்.

கோர்த்தஸாரின் கவிதைகள் கடைசிவரையில் பெரும்பாலான தென்/லத்தீன் அமெரிக்க கவிதைகளிலிருந்து மாறுபட்டவையாகவே இருந்தன. போர்ஹெஸ் போன்றவர்கள் ரூபன் தாரியோவின் தென் அமெரிக்க நவீனத்துவ (modernismo) கவிதையின் யாப்பு வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் கைவிட்டுவிட்ட பிறகுகூட கோர்த்தஸார் modernismo சாயல் உள்ள கவிதைகளை எழுதி வந்தார்.

1800களின் இறுதியில் தோன்றி 1930களின் வாக்கில் வழக்கொழிந்து போன modernismo இயக்கம் கவிதைகள் படைக்கப்படும் கலாச்சாரச் சூழலையும் காலத்தையும் அவை பிரதிபலிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.

லத்தீன் அமெரிக்க அடையாளத்தை முன்னிறுத்துவது, தொன்மங்களிலிருந்து பெற்றுக் கொண்ட படிமங்களைக் கவிதைகளில் பயன்படுத்துவது, ஐம்புலன்களால் உணரக்கூடிய நிறங்களையும், மணங்களையும், சுவைகளையும் கவிதைக்குள் கொண்டு வருவது போன்ற அடிப்படை கோட்பாடுகளை தென் அமெரிக்க நவீனத்துவம் பரிந்துரைத்தது.

மேலும் கவிதை வெறும் உணர்ச்சிப் பிரவாகம் இல்லை என்பதையும், மாறாக மிகுந்த கவனத்துடன் செதுக்கப்பட வேண்டிய கலை வடிவம் என்பதையும் தென் அமெரிக்க நவீனத்துவம் வலியறுத்தியது.

கோர்த்தஸாரின் கவிதைகளில் பல அடி இயைபுகள் (rhyme) கொண்ட பழைய கிரேக்க, ரோமானிய யாப்பு வகைகளிலும் அவற்றின் சாயலிலும் எழுதப்பட்டவை. தென் அமெரிக்க நவீனத்துவத்தின் இலக்கியக் கோட்பாடுகளைப் பிரதிபலிப்பவை.

உதாரணத்துக்கு 1984ம் ஆண்டு வெளிவந்த அவருடைய தொகுப்பில் வரும் Sonnet in a Pensive Mood என்ற கவிதை கண்டிப்பான அசை கட்டுப்பாட்டையுடைய பழைய சொன்னெட் யாப்பு வகையில் அமைந்திருக்கிறது.

“அவள் கறுத்த தலைமயிர் அலைபாயும் காற்றில் அசைகிறது
அவள் பழங்களால் செய்யப்பட்டிருக்கிறாள்
முழுக்க விஷத்தாலும் செய்யப்பட்டிருக்கிறாள்
ஆண்களுக்கு உள்ளதைப்போல் பருத்திருக்கும் அவள் தொடைகளின் அசைவு
மீன்களை அவை ஒன்றோடொன்று கூடி கருத்தரிக்கும் இடங்களுக்கு அனுப்பி வைக்கிறது”

இந்தக் கவிதையில் பெண்ணைக் குறித்த அங்க வருணனையிலும், பழங்களுக்கும் விஷத்துக்கும் அவளை ஒப்பிடும் உத்தியிலும் புலன்களால் உணரக்கூடிய நிறம், சுவை, தொடுதல், முகர்தல் ஆகியவற்றைத் தூண்டக்கூடிய படிமங்களைக் கோர்த்தஸார் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம்.

மேலும் ஆண்களின் சாயலையுடைய பெண் தென் அமெரிக்கத் தொன்மக் கதைகளில் வரும் அமெஸானியர்கள் என்ற பலமுள்ள பெண்களை நினைவுக்குக் கொண்டு வருகிறது.

ஆனால் இந்த படிமத்தில் பெண்ணின் வெறும் பலம் மட்டும் கொண்டாடப்படவில்லை. அந்தப் பலத்தோடு கலந்திருக்கும் அவளுடைய பாலினக் கவர்ச்சியும் கொண்டாடப்படுகிறது. கோர்த்தாஸாரின் கவிதைகளில் இழையோடும் பாலினக் கவர்ச்சி தொடர்பான மெல்லிய படிமங்களுக்கும், ஆண் சாயல் கொண்ட பெண்களின் சித்திரங்களுக்கும் இவ்வரி மிக அழகான உதாரணமாக விளங்குகிறது.

புலன்களைத் தூண்டும் வகையில் அமைந்திருக்கும் படிமங்கள் அதே வேளையில் வாசகர்களின் முன்னே முற்றிலும் வேறுபட்ட கனவு வெளிகளை முன்னிறுத்தக் கூடியவை.

ஜெய்ப்பூர் ஆய்வுக்கூடத்தைப் பற்றிய கவிதை காலத்தின் ஓட்டத்திற்கு அப்பாலிருக்கும் ஒரு நேரத்தில் நடப்பதாகத் தொடங்குகிறது

“இந்த மணி நேரம் மற்ற எல்லா மணி நேரங்களுக்கும் தாண்டியும் வரக்கூடிய கால வலையில் ஓர் ஓட்டை”.

ஆய்வுக்கூடம் புத்தியின்பாற்பட்ட ஆராய்ச்சிக்கு முற்றிலும் ஒப்புக்கொடுக்கப்பட்ட இடம். ஆனால் கோர்த்தஸார் கவிதை புத்தியின் பிடியைவிட்டும் நழுவிப் போகும் விஷயம் என்கிறார்:

“ஆ, மற்த அழைப்புகளுக்குப் பழக்கமாகிவிட்ட புத்தியின் கவர்ச்சியில் மயங்காமல் வார்த்தைகளுக்குள் நுழைதல், நட்சத்திரங்கள் அல்லது விலாங்கு மீன்களின் வாந்தியில் இருந்து…

விலாங்கு மீன் என்னும் நட்சத்திரம் என்னும் விலாங்கு மீன் என்னும் நடசத்திரம் என்னும் விலாங்கு மீன்”.

மற்றொரு கவிதையில் கோர்த்தஸார் நிறைவேறாத காதலை இப்படிப் பாடுகிறார்.

“பார்த்திருக்கிறாயா?
உண்மையில் பார்த்திருக்கிறாயா?
பனி, தொடக்கம், மென்காற்றின் மெத்தென்ற அடிகள்.

அறிந்திருக்கிறாயா?
உன் தோலின் ஒவ்வொரு மயிர்காலிலும்,
உன் கண்கள், கைகள், மர்மஸ்தானம்,
உன் மென்மையான இதயம்

எவ்வாறு தூக்கியெறியப்பட வேண்டும் என்று
எவ்வாறு கரைக்கப்பட வேண்டும் என்று
எவ்வாறு மீண்டும் கட்டமைக்கப்பட வேண்டும் என்று”

புத்தியை மீறி அல்லது மறுதலித்துவிட்டுப் புலன்களோடு நேரடியாகப் பேசும் கவிதைகள் கோர்த்தஸாரின் கவிதைகள்.

அந்த வகையில் கோர்த்தஸார் பழைய தென் அமெரிக்க ரோமாண்டிஸிச மரபின் கடைசி பிரதிநிதியாக தனித்து நிற்கிறார்.

தன்னையே அழித்து கொள்ளுதல்: காம்யூவின் ‘அந்நியன்’ குறுநாவலில் இருத்தலியல்

ஜான்-பால் சார்த்தரின் இருத்தியலியல் (existentialism) தத்துவத்தின் அடிப்படை குறிக்கோள் தனிமனிதர்களிடமிருந்து பறிக்கப்பட்ட தங்கள் வாழ்க்கையைக் குறித்து முடிவெடுக்கும் சுதந்திரத்தை மீட்டெடுப்பது.

தனது போக்கை யாருடைய தலையீடும் இல்லாமல் தேர்ந்தெடுக்க முடிவதுதான் தனிமனித சுதந்திரத்தில் ஆணிவேராக இருத்தலியல் கருதுகிறது.

ஆனால் தங்களது வாழ்க்கையின் போக்கைத் தேர்ந்தெடுக்கக் கூடிய சுதந்திரம் மிகப் பெரும்பாலான சூழ்நிலைகளில் தனி மனிதர்களிடமிருந்து சமுதாயத்தால் பறிக்கப்பட்டிருக்கிறது.

சமுதாயக் கட்டுப்பாடுகளும் எதிர்ப்பார்ப்புகளும் மனிதர்கள் இன்னின்ன சூழ்நிலைகளில் இப்படி இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

காம்யூவின் ‘அந்நியன்’ குறுநாவல் வட ஆப்ரிக்காவில் இருக்கும் பிரெஞ்சு காலனி ஒன்றில் வாழும் மெர்ஸோல்ட் என்ற பிரஞ்சுக்காரனின் கதையைச் சொல்கிறது. கதையின் போக்கில் மெர்ஸோல்ட் வயதான தனது தாயின் சாவிற்குப் போகிறான். அம்மாவின் சாவுக் காரியங்கள் நடந்து முடிந்த நாளுக்கு அடுத்த நாள் தன் பழைய தோழி ஒருத்தியைச் சந்தித்து அவளுடன் காமெடி திரைப்படம் ஒன்றைப் பார்க்கப் போகிறான். பின்னர் அவளுடன் உடலுறவு கொள்கிறான். அவன் நண்பனுக்கு உண்மையாக இல்லாத அவனுடைய அரபு காதலியை நண்பன் பழி தீர்த்துக் கொள்ள உதவுகிறான். இறுதியில் அவனைத் தாக்க வரும் அரபுப் பெண்ணின் சகோதரனைச் சுட்டுக் கொல்கிறான். அதனால் கைது செய்யப்படுகிறான். அவனுக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதிக்கிறது.


நாவலின் ஆரம்பத்தில் மெர்ஸோல்ட் தனது அம்மாவின் சாவுக்காகத் துக்கம் கொண்டாட வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். அம்மாவின் சாவுக்காக அவன் துக்கப்பட மறுத்தது மட்டுமன்றி அம்மாவின் பிணத்தின் முன்னால் காபி குடித்ததும் அருவருக்கத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது.


சமுதாய எதிர்ப்பார்ப்புகளை மீறிச் செயல்படத் துணிவோரை அருவருக்கத் தக்கவர்களாகப் பார்ப்பது மட்டுமில்லாமல் சமுதாயக் கட்டுபாடுகளின்மீதும் ஒழுக்கங்களின்மீதும் அவர்கள் காட்டும் அலட்சியமே அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்மானிக்கப் போதுமான சாட்சியமாகச் சமூகத்திலுள்ளவர்கள் கருதும் நுண் அரசியலை காம்யூ தனது நாவலில் சித்தரிக்கிறார்.

அரபியனைக் கொன்றதற்காக நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்போது அவன் செய்ததாகச் சொல்லப்படும் கொலைக்கு மெர்ஸோல்ட் எந்தவிதமான வருத்தத்தையும் தெரிவிக்காததையும் அவனுடைய அம்மாவின் சாவிற்காக அவன் அழாததையும் மெர்ஸோல்ட் நிச்சயம் கொலை செய்திருப்பான் என்பதற்கான ஆதாரமாய் அரசாங்க வழக்கறிஞர் முன் வைக்கிறார்.


சமுதாய எதிர்ப்பார்ப்புகளின்படி மெர்ஸோல்ட் கண்ணீர்விடாததே அவன் அரக்கன் என்றும் குற்றவாளி என்றும் தீர்ப்பளிக்க நீதிமன்றத்துக்குப் போதுமானதாக இருக்கிறது. ஏனெனில் காம்யூவின் கணிப்புப்படி நீதி என்பதே சமூக விருப்பு வெறுப்புகளின் பிரதிபலிப்பு மட்டுமே.


தான் செய்த குற்றத்திற்காக பொய்யாகவாவது கண்ணீர் விட்டிருந்தால் மெர்ஸோட்டுக்குக் கருணை காட்டப்பட்டிருக்கலாம்.
மனிதன் உண்மையாக இருப்பதைவிட சமுதாயத்தைத் திருப்திபடுத்தும் வகையில் பொய்யாய் இருப்பது நல்லது என்பது சித்தாந்தம் மட்டுமல்ல, பிழைக்கும் வழியும்கூட.


மாறாக மெர்ஸோல்ட்டின் கதாபாத்திரத்துக்கு எதிர் பிம்பமாகக் காம்யூ சித்தரித்துக் காட்டும் சாலாமானோ என்ற கிழவன் தனது தாயை முதியோர் இல்லத்தில் விட்டதைப் பற்றி மற்றவர்கள் அவனைக் குறைகூறியதைச் சொல்லி வருத்தப்படுகிறான்.


இங்கு சமுதாயக் கட்டுப்பாட்டின் வேறொரு நுணுக்கமும் காம்யூவால் காட்டப்படுகிறது. சமுதாயம் தன்னுடைய கட்டுப்பாடுகளையும் எதிர்ப்பார்ப்புகளையும் தனிமனிதர்கள்மீது திணிக்கிறது என்பது மட்டுமல்ல, சுதந்திரமாக இருப்பதே அபாயகரமானது என்று தனிமனிதர்களை அது நம்பவும் செய்து விடுகிறது.

மனிதர்கள் சுதந்திரர்களாக இருக்கும்படி விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தச் சுதந்திரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக அவர்கள் அல்லல் படுபதாகவும் சார்த்தர் சொல்கிறார். இருத்தியல் தனிமனிதச் சுதந்திரத்தைச் சுமந்து கொள்ள முடியாமல் மனிதர்கள் படும் இந்த அல்லலை anxiety என்று அழைக்கிறது.
சமுதாய வற்புறுத்தலிலிருந்து மனிதன் எப்படி தனது தனி மனிதச் சுதந்திரத்தை மீட்டுக் கொள்வது?

சமுதாயத்தின் கட்டுப்பாடுகளைப் பற்றிக் கவலைபடாமல் மெர்ஸோல்ட்டைப்போல் அந்த கணத்தில் என்ன தோன்றுகிறதோ அப்படி வாழ்வதுதான் ஒரே வழி என்று இருத்தியலியல் சொல்கிறது.
இருத்தலியல் கோட்பாட்டின்படி இதுதான் தனிமனித சுதந்திரத்துக்கு முதல்படி.
ஒரு முறை சார்த்தரிடன் இருத்தியலியல் கோட்பாட்டின் எதிரிகள் ஒரு கேள்வியைக் கேட்டார்கள். “உங்களை ஒரு வரிசையில் நிற்க வைத்து நாஜி ஜெர்மன் அதிகாரி ஒருவன் துப்பாக்கியால் ஒவ்வொருவராகச் சுட்டுக் கொண்டே வருகிறான். எங்கும் சுதந்திரம், எதிலும் சுதந்திரம் என்று சொல்கிறீர்களே. இந்தச் சூழ்நிலையில் உங்களுக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது?” ஒரு விநாடிகூட யோசிக்காமல் சார்த்தர் பதில் சொன்னார். “சாவதற்கு அஞ்சாமல், மற்றவன் என்னைக் கொல்கிறான் என்ற எண்ணத்துக்கு இடம் தராமல் நான் செத்துப் போக முடிவு செய்வேன்.”

இருத்தியல் காட்டும் தனிமனித சுதந்திரத்தில் தன்னைத்தான் அழித்துக் கொள்ளும்.சுதந்திரமே பிரதானமாகப் பேசப்படுகிறது. இருத்தியல் காட்டும் தனிமனித சுதந்திரத்தில் தன்னைத்தான் அழித்துக் கொள்ளும் சுதந்திரமே பிரதானமாகப் பேசப்படுகிறது.

தன்னைத்தான் அழித்துக் கொள்ளுதலே சமுதாய எதிர்ப்பார்ப்புகளுக்கெல்லாம் எதிராக தனிமனிதன் செய்யக்கூடிய மிகத் தீர்மானமான செயல்.


அந்நியன் நாவல் முழுவதும் மெர்ஸோல்ட் தனது செயல்கள் அவனுக்குச் சமுதாயத்தின் கண்டனத்தையும், அதிக பட்ச தண்டனையையும் பெற்றுத் தரலாம் என்ற புரிதலோடே அவற்றைச் செய்கிறான்.


இத்தகைய கடுமையான சுதந்திரத்தை மேற்கொள்ள வேண்டுமென்றால் அடிமைத்தனத்தின்மீதும் சாரமே இல்லாத அன்றாட வாழ்க்கைமீதும் ஒரு மனிதனுக்கு மிகுந்த வெறுப்பு ஏற்பட வேண்டும் என்று இருத்தலியல் சொல்கிறது.


அந்நியன் நாவல் முழுவதும் இந்த வெறுப்பே மிகுந்திருக்கிறது. மெர்ஸோல்ட் தனது அம்மாவின் சாவுக் காரியங்களை வெறுக்கிறான். உடலுறவு கொள்ளும் பெண்ணை வெறுக்கிறான். அவனுடைய நண்பன் தனக்கு உண்மையாக இல்லாத காதலியோடு கடைசியாக ஒரு முறை உடலறவு கொண்டுவிட்டு அவள் முகத்தில் காறித் துப்ப நினைப்பதில் வெறுப்பு மிகுந்திருக்கிறது. மற்றவர்களின் அபிப்பிராயத்தைப் பற்றிக் கவலைப்படும் சாலமானோகூட தனது தொலைந்து போன நாயை வெறுக்கிறான்.


இதற்கெல்லாம் உச்சமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட மெர்ஸோல்ட் தான் சாகடிக்கப்படும்போது பொதுமக்கள் கூட்டமாகத் திரண்டு அவனை வெறுப்போடு சபிக்க வேண்டும் என்று நினைக்கிறான். இப்படி நடந்தால் அவன் வாழ்க்கையின் சூழ்ந்துள்ள தனிமை கொஞ்ச நேரமாவது மறைந்து அவன் வாழ்க்கை ஓரளவேனும் அர்த்தமுள்ளதாகும் என்று நினைக்கிறான்.

விசித்திரமான விருப்பமாக இது தோன்றினாலும் மனிதர்கள் ஓரளவாவது தங்கள் போலி இரக்கத்தைவிட்டு உண்மையாக, சமுதாயக் கட்டுப்பாடுகளை மீறி சுதந்திரர்களாக இருக்க மாட்டார்களா என்ற மெர்ஸோல்ட் மற்றும் காம்யூவின் ஏக்கமாகவே இந்த ஆசை தோன்றுகிறது.


இத்தகைய நாவல் தமிழிலோ வேறெந்த ஆசிய மொழியிலோ சாத்தியமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆசியர்களிடையே சமுதாயப் பிணைப்பு அதிகம்.


ஆனால் ஐரோப்பிய சிந்தனையோட்டத்தில் மிகப் பலமான ஒரு கோட்பாடாய் உள்ள தனிமனித சுதந்திரம் என்ற பிடிப்புக்கு இந்த நாவல் சிறந்த சான்று.


மனித வாழ்வைப் பற்றிய இருத்திலியலின் அலசல் தீர்க்கமானவை என்றாலும் அது தரும் தீர்வுகளை நாம் அப்படியே எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று தோன்றுகிறது.

ஸ்டீபன் கிங் – எழுத்தாளர்களுக்கு அறிவுரைகள்

எழுத்தைப் பொறுத்தவரையில் என் வாழ்க்கையில் மிக உபயோகமுள்ள அறிவுரைகளை நான் ஐந்து எழுத்தாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டேன்: எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், உம்பர்ட்டோ எஃகோ, கர்ட் வோனகுட் மற்றும் ஸ்டீபன் கிங்.

இவர்களில் ஒவ்வொருவரின் எழுத்திலும் இருக்கும் தனித்தன்மை போலவே அவர்கள் எழுத்தாளர்களுக்கு வழங்கியிருக்கும் அறிவுரைகளிலும் தனித்தன்மைகள் உண்டு.

ஸ்டீபன் கிங் தனது எழுத்துலக அனுபவங்களையும், எழுத்தாளர்களுக்கு அவர் தர விரும்பும் ஆலோசனைகளையும் சேர்த்து ‘On Writing’ என்ற நூலை எழுதியிருக்கிறார்.

எழுத்தாளர்களுக்கு ஸ்டீபன் கிங் வழங்கும் ஆலோசனைகள் அனைத்திலும் இழையோடும் முக்கியக் கருத்து : பியானோ வாசிப்பதைப்போல் கார் ஓட்டப் பழகுவதைப்போல் எழுத்து என்பதும் தளராத பயிற்சியால் மெருகேற்றப்படக் கூடிய திறமை என்பதுதான்.

‘On Writing’ நூலில் ஸ்டீபன் கிங் எழுத்தாளர்களுக்குத் தந்திருக்கும் ஆலோசனைகளில் முக்கியமானவற்றைக் கீழே சுருக்கமாகத் தந்திருக்கிறேன்.

(1) யாருக்காக எழுதுகிறீர்கள் என்பதை தெளிவாக முடிவு செய்து கொள்ளுங்கள்.

எல்லா வாசகர்களையும் திருப்திபடுத்தும் வகையில் எந்தக் கதையையும் எழுத முடியாது. இந்த மாதிரியான வாசகருக்காகத்தான் கதையை எழுதுகிறேன் என்று முடிவு செய்து கொண்டு அந்த வாசகருக்காக எழுதினால் படைப்பு சிறப்பாக அமையும்.

எழுத்தாளர் மனதிற்குள் உருவகம் செய்து கொள்ளும் இந்த வாசகரை கிங் ‘லட்சிய வாசகர்’ என்று அழைக்கிறார். கிங் தனது நாவல்கள் அனைத்துக்கும் தனது மனைவி தபிதாவுக்காக எழுதினார்.


(2) கதையை முன்னகர்த்திச் செல்லாத எதையும் கேள்வியே இல்லாமல் நீக்கிவிடுங்கள்.

அது கதையில் வரும் சம்பவமாக இருக்கலாம். விவரிப்பாக இருக்கலாம். சொல் அலங்காரம், உவமை, உருவகம், உரையாடல் என்பதாகவும் இருக்கலாம். எழுதும்போது எழுத்தாளரின் மனதில் தோன்றும் எண்ணங்கள் தாளிலும் புகுந்து கொண்டு கதைக்குள் கிளை பரப்பி வளர வாய்ப்பிருக்கிறது. உபகதைகள் மூலக்கதைக்கு வலு சேர்க்கும்வரை இது வரவேற்கக் கூடியதுதான். ஆனால் உபகதை மூலக்கதையை மறைக்கும் அளவுக்கோ, வாசகரைக் குழப்பும் அளவுக்கோ வளரும் என்றால் தயவு தாட்சண்யமில்லாமல் அவற்றைக் கத்தரித்து விடுவதே சிறந்தது என்பது கிங்-கின் வாதம்.

(3) எழுதி முடிக்கும்வரை உங்கள் அறையின் கதவை இழுத்து மூடி வைத்துக் கொள்ளுங்கள்

எழுதிக் கொண்டிருக்கும் கதையைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது பயன் தராது என்கிறார் கிங். கதையின் முதல் பிரதியை எழுதி முடிக்கும்வரை யாரிடமும் பேசத் தேவையில்லை. எழுதி முடிப்பதுதான் குறிக்கோளாய் இருக்க வேண்டும்.

(4) திருத்தி எழுதும்போது கதவைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள்.

திருத்தி எழுதும்போது நம்பிக்கையானவர்களின் கருத்தினைக் கேட்பது இன்றியமையாதது. இது படைப்பை மெருகேற்ற உதவும்.

(5) நீளமான பத்திகளையும், வாக்கியங்களையும், வார்த்தைகளையும் தவிர்ப்பது நல்லது.

பத்தி = 4,5 வாக்கியங்கள். வாக்கியம் = 4,5 வார்த்தைகள்.

(6) திருத்தி எழுதப்பட்ட படைப்பு முதல் பிரதியைவிட வார்த்தை எண்ணிக்கையில் 10% குறைவாக இருப்பது நல்லது.

முதலில் எழுதும்போது கதையை முன்னகர்த்துவதற்குத் பயன்படாத வார்த்தைகள் சேர்ந்த் விடுகின்றன. திருத்தி எழுதும்போது தேவையில்லாத வார்த்தைகளை அடித்தோ, ஓரிரண்டு வார்த்தைகளுக்குள் சுருக்கியோ மொத்த வார்த்தை எண்ணிக்கைகளைக் குறைத்துவிடலாம்.

(7) வாசிப்புக்கும் எழுத்துக்கும் அசைக்க முடியாத தொடர்பு உண்டு.

நிறைய எழுத வேண்டும் என்றால் முதலில் நிறைய வாசிக்க வேண்டும். அவருக்குத் தெரிந்து வேறெந்த குறுக்கு வழியும் இல்லை என்கிறார் கிங்.

(8) தினமும் எழுதுங்கள்.

என்ன காரியம் குறுக்கிட்டாலும் தினமும் 2,000 வார்த்தைகளையாவது எழுதிவிடுவதாக கிங் சொல்கிறார். புதிய எழுத்தாளர்கள் ஒவ்வொரு நாளும் 1,000 வார்த்தைகளோடு தொடங்கி எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்ளலாம் என்பது அவருடைய ஆலோசனை.

சைரஸ் மிஸ்திரி – ஒரு பிணந்தூக்கியின் கதை

மரணம் என்பது தூரத்திலிப்பவர்களுக்கு ஆன்மீக மர்மங்களும் தத்துவச் செறிவும் நிறைந்ததாகவும், அருகிலிருந்து பார்ப்பவர்களுக்கு அர்த்தமற்ற அபத்தமாகவும் தோன்றும் இருமை குணம் கொண்டது.

சைரஸ் மிஸ்திரியின் “ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்” என்ற 2019ம் ஆண்டு சாகித்திய அகாதெமியின் விருது பெற்ற ஆங்கில நாவல் பார்ஸி சமூகத்தைச் சேர்ந்த ‘அழுக்குத் துரைகள்’ என்று அழைக்கப்படும் பிணம்தூக்கி ஒருவனின் வாழ்க்கைக் கதையைச் சொல்கிறது.

பழைய நாளில் பர்ஸியா என்றழைக்கப்படும் ஈரானிலிருந்து எட்டாம் நூற்றாண்டில் மும்பைக்குக் குடிபெயர்ந்த பார்ஸிகள் நெருப்பை வணங்குபவர்கள். அவர்கள் மதத்தின் மிகுந்த தனித்தன்மை வாய்ந்த அம்சமாகச் செத்தவர்களுக்கு அவர்கள் நடத்தும் இறுதிச் சடங்குகள் இருக்கின்றன. மரித்துப் போன பார்ஸி பிணங்களைக் குளிப்பாட்டிச் சடங்குகளை நடத்திய பிறகு பார்ஸிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் அமைதித் தோட்டத்திலுள்ள உயரமான கோபுரங்களின் உச்சியில் பிணத்தை கழுகுகளுக்கு இரையாக வைப்பது பார்ஸிகளின் வழக்கம்.

சாகும் நேரத்தில் இயற்கைக்கு ஒரு பார்ஸி செய்யும் இறுதிக் கொடையாக இச்செயல் பார்க்கப்படுகிறது. பிணத்தைத் தூக்கி வந்து தயார் செய்வதற்காகப் பார்ஸிகளிடையே பிணந்தூக்கிகள் என்ற துணைஜாதி உருவாகியிருக்கிறது. மிகத் தூய்மையான பணியினைச் செய்பவர்கள் என்று இந்தப் பிணந்தூக்கிகளுக்குப் பெயரிருந்தாலும் அவர்களை ஏனைய பார்ஸிகள் தீண்டத்தகாதவர்களாகவே பார்க்கிறார்கள்.

ஒரு பிணந்தூக்கிக் குடும்பத்தின் பெண்ணைக் காதலித்து அவளைத் திருமணம் செய்து கொள்வதற்காக அவள் தந்தையின் வற்புறுத்தலால் பிணந்தூக்கியாகவே மாறி 1942ல் பார்ஸி பிணந்தூக்கிகளின் வேலை நிறுத்தத்தை நடத்திய ஓர் இளைஞனின் கதையை அடிப்படையாகக் கொண்டு மிஸ்திரி இந்நாவலை எழுதியுள்ளார்.

நாவலின் முக்கிய பாத்திரமான ஃபெரொஸ் எல்சிதனா அக்னி கோவில் பூசாரி ஒருவரின் இரண்டாவது மகன். பிணந்தூக்கிக் குடும்பத்துப் பெண்ணான செப்பிதேயைக் காதலித்துப் புனிதமான பூசாரிக் குடும்பச் சூழலை விட்டு விலகிப் பிணந்தூக்கியாகிறான்.

நாவல் ஆரம்பமாகும் 1942ம் ஆண்டில் மும்பை நகரத்தைத் தாக்கும் கொள்ளை நோயால் பல மரணங்கள் நிகழ்கின்றன. பொழுது சாய்வதற்கு முன்னால் பிணங்களை அப்புறப்படுத்த வேண்டிய நிலையிலிருக்கும் பிணந்தூக்கிகள் தங்களுக்கு எந்தவித தொழில் அனுகூலங்களையும் வழங்காமல் நாள் கணக்கில் வேலை வாங்கும் பார்ஸி சங்க நிர்வாகிகளுக்கெதிராக வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.

பிணந்தூக்கிகளுக்குச் சாதகமாகவும் பாதகமாகவும் இருக்கும் பார்ஸி சமூக அரசியல், அதன் பின்னணியில் அன்றைய இந்திய சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள், பார்ஸி மதத்திலுள்ள பழமைவாதிகளுக்கும் சீர்திருத்தவாதிகளுக்குமிடையே மதச் சடங்குகளைக் குறித்த விவரங்களை ஒட்டி நிகழும் பூசல்கள் என்று நாவல் 1990கள் வரை நீள்கிறது.

தீண்டாமையும் உயர்சாதி உணர்வும் தனி மனிதர்களின் பொருளாதார நிலைமீதும் உறவுகள்மீதும் ஏற்படுத்தும் அருவருக்கத்தக்க விளைவுகளை எல்சிதனாவின் மகள் ஃபரிதாவின் வழியாகவும், செப்பிதேயின் தாயின் கொடூர மரணத்தின் வழியாகவும், மற்ற பிணந்தூக்கிகளின் வாரிசுகள் வேலை தேடிக் கொள்ளவும், தக்க வாழ்க்கைத் துணைத் தேடிக் கொள்ளவும் எதிர்கொள்ளும் சிரமங்களின் வழியாக மிஸ்திரி மிகச் சிறப்பாக விளக்கியிருக்கிறார்.

மரணத்தின் அநர்த்தத்தைப் போலவே தீண்டாமையின் அர்த்தமற்ற தன்மையும் வாசகரை நாவலின் ஒவ்வொரு திருப்பத்திலும் அசைத்துப் பார்க்கிறது.

அமைதித் தோட்டத்தில் உள்ள எல்லா மிருகங்களிடமும் அன்பாகவே இருந்த செப்பிதேயை தோட்டத்திலிருந்த நல்ல பாம்பே ஏன் கொத்தியது என்று கேட்கும் சிறு வயது ஃப்ரிதாவின் கேள்விக்கு எல்சிதனா எந்த பதிலும் சொல்ல முடியாமல் தவிக்கிறான்.

அதுபோலவே பிணந்தூக்கிகளுக்கு எதிராகவும் ஒரு பார்ஸியாகப் புதைக்கப்ப்ட வேண்டும் என்று ஆசைப்படும் ஜோசப் மலோனிக்கு எதிராகவும் இத்தனைக் கொடூரமான தீண்டாமை ஏன் என்ற கேள்வியும் நம்மிடையே எந்த பதிலும் இல்லாமலேயே நிற்கிறது.

நாவலில் வரும் பழமைவாதிகளானாலும் சரி, பாவிகள், ஒழுக்கமற்றவர்களானாலும் சரி, சீர்திருத்தவாதிகளானாலும் சரி, எல்லோரையும் மிகுந்த கருணையுடனும் அவர்கள் தரப்பு வாதத்துக்கு போதிய இடம் தந்தும் மிஸ்திரி நாவலை முன்னகர்த்திச் சென்றிருக்கிறார்.

நாவலின் இறுதியில் நடக்கும் எல்சிதனாவின் தந்தையின் மரணமும், பார்ஸிகளின் எண்ணிக்கையைப் போலவே சுற்றுச்சூழல் மாசுகளால் அருகிவரும் கழுகுகளின் எண்ணிக்கையைப் பற்றிய விவரிப்புகளும் வாசகனை மெல்ல மிக ஆழமான மௌனத்திற்குள் தள்ளிவிடுகின்றன.

நாவலின் கடைசியில் எண்பது வயதகியிருக்கும் எல்சிதனாவும் இதே மௌனத்திற்குள்தான் குடிபுகுகிறார்.

பார்ஸிகள் வணங்கும் நெருப்பைப் போலவும், அமைதித் தோட்டக் கோபுரங்கள்மீது கிடத்தப்பட்டிருக்கும் பிணங்களைத் தின்னும் கழுகுகளைப் போலவும், மரணத்தைப் போலவும் மௌனத்திற்கும் நம்மைச் சுத்திகரிக்கும் மிகப் பெரிய ஆற்றல் உள்ளது.

மிஸ்திரியின் நாவலில் மேற்கூறிய நான்கு விஷயங்களும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

பார்ஸி கோவிலில் உள்ள நெருப்பைப் போலவே மனிதர்களைச் சுத்திகரிப்பதும் இலக்கியத்தின் வேலைகளில் ஒன்று.

பார்ஸிகளைப் பற்றி ஓரளவாவது அறிந்து கொள்ள விரும்புபவர்கள் வாசிக்க வேண்டிய நாவல்.

மாலன் தமிழில் இந்த நாவலை மொழிபெயர்த்திருக்கிறார். மிக இயல்பான, அலுப்பு தட்டாத மொழிபெயர்ப்பு.

பத்து ரஷ்ய சிறுகதைகள் (2) – கோகோல் ‘மூக்கு’

கோவால்யோவ் என்ற சாதாரண அதிகாரியின் முகத்திலிருந்து தானே கழன்று கொண்ட மூக்கு அவனைவிட உயர்ந்த கவுன்சிலர் பதவியை அடைவதுதான் நிக்கோலே கோகோலின் புகழ்பெற்ற ‘மூக்கு’ சிறுகதையின் சாராம்சம்.

1836ல் அலெக்ஸாண்டர் புஷ்கின் நடத்திய ‘தி கண்டம்பரரி’ இதழில் வெளிவந்த இந்தச் சிறுகதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

முதல் பகுதியில் காலை உணவுக்காகத் தனது மனைவி செய்திருந்த ரொட்டியைப் பிட்டுத் தின்னும் யாகோவ்லெவிச் என்ற நாவிதர் அதற்குள் ஒரு மூக்கு இருப்பதைக் காண்கிறான். அதன் வடிவத்தை வைத்து தன்னிடம் அடிக்கடி முடி திருத்திக் கொள்வதற்கும் சவரம் செய்து கொள்வதற்கும் வரும் கோவால்யோவ்-இன் மூக்குதான் அது என்று அவன் அடையாளம் கண்டு கொள்கிறான். மூக்கை எப்படியாவது அப்புறப்படுத்தி விடும்படி அவனுடைய மனைவி வற்புறுத்துகிறாள். மூக்கைக் கைக்கட்டையில் வைத்து நியேவா ஆற்றுக்குள் வீசப் போகும் யாகோல்லெவிச்சைப் போலீஸ்காரன் ஒருவன் பார்த்துவிடுகிறான். யாகோல்லேவிச் லஞ்சம் தருவதாகச் சொல்லியும்கூட போலீஸ்காரன் அவனைவிட மறுக்கிறான்.

கதையின் இரண்டாவது பகுதியில் கோவால்யோவ் காலையில் எழும்போது தன் முகத்திலிருந்து மூக்கு காணாமல் போயிருப்பதைக் காண்கிறான். இதைப்பற்றி போலீஸாரிடம் புகார் கொடுக்கப் போகும் வழியில் தனது மூக்கு உயரதிகாரியின் உடையில் திரிவதைக் காண்கிறான். மூக்கைப் பின்தொடர்ந்து துரத்திக் கொண்டு ஓடும்போது அது காஸான் தலைமைத் தேவாலயத்துக்குள் போகிறது.

பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் மூக்கை கோவால்யோவ் கேள்வி கேட்கிறான். அது அவன் முகத்தோடு வந்து ஒட்டிக் கொள்ள மறுக்கிறது. கோவால்யோவ்வின் கவனத்தைத் தேவாலயத்திற்குள் வரும் அழகிய பெண் திசை திருப்பிவிடுகிறாள். அந்த நேரத்தில் மூக்கு தப்பித்துப் போகிறது.

மூக்கைத் தேடிப் போகும் கோவால்யோவ் தனது தொலைந்த மூக்கைப் பற்றிப் போலீஸாரிடமும் நீதிமன்றத்திடமும் புகார் தர முயல்கிறான். அவர்கள் எல்லோரும் அவன் புகாரை ஏற்க மறுக்கிறார்கள்.

கோவால்யோவ் வீட்டிற்குப் போய்ச் சேரும்போது யாகோல்லேவிச்சைக் கைது செய்த போலீஸ்காரன் அங்கு இருப்பதைக் காண்கிறான். அவன் கோவால்யோவ்வின் மூக்கை அவனிடமே ஒப்படைக்கிறான். ஆனால் கோவால்யோவ்வால் தனது மூக்கை மருத்தவரின் உதவியை நாடியும் திரும்ப ஒட்டவைக்க முடியவில்லை. கோவால்யோவ் தான் காதலிக்கும் பெண்ணின் தாயார்தான் தன்மீது செய்வினை வைத்துவிட்டதாக எண்ணி அவளுக்கு கடிதம் எழுதுகிறான். பெண்ணின் தாயார் தான் அப்படி எதுவும் செய்யவில்லை என்று மறுக்கிறாள்.

சில வாரங்களுக்குப் பின் கோவால்யோவ் படுக்கையிலிருந்து எழும்போது மீண்டும் அவன் மூக்கு அவன் முகத்தோடு ஒட்டிக் கொண்டிருப்பதை உணர்கிறான். நாவிதனிடம் போய் சவரம் செய்து கொண்டு தனது பழைய ஊதாரி வாழ்க்கையைத் தொடர்கிறான்.

கோகோல் காலத்து ரஷ்யர்கள் ஒரு மனிதனின் வெளிபுறத் தோற்றத்திற்கு மிகுந்த முக்கியத்துவத்தைத் தந்தார்கள். ஒருவனுடைய முகத்தோற்றத்தை வைத்தே அவனுடைய படிப்பையும், சமூக அந்தஸ்தையும் பிற தகுதிகளையும் கணக்கிட்டார்கள்.

குடி பிறப்பென்பதும் சமூக அந்தஸ்து என்பதும் அசைக்க முடியாத இறுக்கமான கட்டுமானமாக மனிதர்களை அடிமைபடுத்தி வைத்திருந்த காலத்தில் முகத்தோற்றம் என்பது எப்படி மற்ற எல்லாத் தகுதிகளையும் மீறி ஒரு மனிதனை எடைபோடப் பயன்படுகிறது என்பதைப் பற்றிய விமர்சனமாகக் கோகோலின் இந்தச் சிறுகதை அமைந்திருக்கிறது.

தஸ்தவ்யஸ்கியைப் பற்றி எழுதிய அவருடைய சமகாலத்தவர்கள் அவருடைய முக லட்சணம் சாமானிய மாஸ்கோ குடியானவன் ஒருவனின் முகத்தோற்றம் போல் புடைத்திருக்கும் நெற்றியோடும் அதிகம் அசைந்து கொண்டிருக்கும் சிறிய சாம்பல் நிறக் கண்களோடும் இருப்பதைக் கண்டு, இப்படிப்பட்ட முகத்தை உடையவரா இப்படிப்பட்ட வீரீயமுள்ள நாவல்களை எழுதியிருப்பார் என்று வியந்ததாகக் குறிப்புகள் உள்ளன. தஸ்தவ்யெஸ்கியேகூட தனது மண்டை ஓட்டின் வடிவம் தனது குண இயல்புகளைப் பற்றி என்ன சொல்கிறது என்று அறிந்து கொள்ள phrenologist என்ற மண்டையோடுகளை ஆராய்ச்சி செய்யும் நண்பரிடம் போயிருக்கிறார்.

கோகோலின் ‘மூக்கு’ சிறுகதையில் வரும் மூக்கு அதற்குச் சொந்தக்காரனான கோவால்யோவ்வைவிட சமூக மாண்பு உடையதாக இருக்கிறது. அந்த ஒற்றைக் காரணத்தினாலேயே அதற்கு கோவால்யோவைவிட அதிக கௌரவம் கிடைக்கிறது.

போலீஸ்காரர்களும் நீதிமன்றமும் கோவால்யோவின் புகாரை ஏற்க மறுப்பதிலிருந்து முகத்தோற்றத்தை வைத்தே ஒரு மனிதனின் சமூகத் தகுதியை எடை போடுவதென்பது அந்நாளைய அரசாங்க இயந்திரத்தாலும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது என்பதைக் கோகோல் காட்டுகிறார்.

அவர் வாழ்ந்த சமுதாயத்தில் வேரோடியிருந்த இந்தப் போலித்தனத்தை தன்னுடைய மற்ற படைப்புகளிலும் கோகோல் சாடியிருப்பது கவனிக்கத் தக்கது.

மூக்கு முகத்திலிருந்து கழன்று சில நாள் தன்னிச்சையாக வாழ்ந்துவிட்டு மீண்டும் காரணமேதும் இல்லாமல் முகத்தோடு வந்து ஒட்டிக் கொள்ளும் கதையின் மாய யதார்த்தம் கோகோல் புஷ்கினிடமிருந்து கற்றுக் கொண்டது. அவருக்குப் பின் வந்த துர்கனேவ், தஸ்தவ்யஸ்கி, டால்ஸ்டாய் ஆகியோரது நாவல்களிலும் கதைகளிலும் இத்தகைய மாய யதார்த்தக் கூறுகள் மிக மிக அபூர்வமாகவே தென்படுகின்றன.

இந்த வகையில் கோகோலின் வாரிசு என்றால் அது இருபதாம் நூற்றாண்டில் எழுதிய புல்காகோவ்வைத்தான் சொல்ல முடியும்.

அன்னா அக்மத்தோவாவின் கவிதைகள்

1888ல் ரஷ்யாவின் ஓடெஸ்ஸா நகரத்தில் பிறந்த அன்னா கோரெங்கோ என்ற இயற்பெயர் கொண்ட அன்னா அக்மத்தோவா ரஷ்ய மொழியின் மிகச் சிறந்த கவிஞர்களின் ஒருவராய்க் கருதப்படுகிறார்.

ஆனால் அவர் வாழ்க்கை எந்த வகையில் பார்த்தாலும் இனிமையானதாக அமைந்திருக்கவில்லை. 1910ல் தனது இருபத்து இரண்டாவது வயதில் அக்மத்தோவா குமிலெவ் என்ற கவிஞரைத் திருமணம் செய்து கொண்டார். அவருடைய மண வாழ்க்கை மிகுந்த துன்பம் நிறைந்ததாக இருந்தது.

ஓசிப் மெண்டல்ஸ்தாம், செர்கெய் கோரோடெட்ஸ்கி போன்ற புகழ்ப்பெற்ற கவிஞர்களோடு அக்மத்தோவாவுக்கு இருந்த பரிச்சயத்தையும், அவருடைய கவிதைகளுக்கு வளர்ந்து வரும் புகழையும் வெறுத்த குமிலெவ் அவரைக் கவிதை எழுதக் கூடாது என்று வற்புறுத்த ஆரம்பித்தார்.

1918ல் அக்மத்தோவாவும் குமிலெவ்வும் விவாகரத்து செய்து கொண்டார்கள். அதே வருடம் ரஷ்யாவின் மன்னராட்சியும் முடிவுக்கு வந்து ரஷ்யாவில் போல்ஷெவிக் அரசாங்கம் நிறுவப்பட்டது. 1921ல் குமிலெவ்வுக்கு அரசாங்கம் மரண தண்டனை விதித்தது. 1925ல் அக்மத்தோவாவின் கவிதைகளை அரசாங்கம் தடை செய்தது. 1953 ஸ்டாலினின் மரணம்வரை அக்மத்தோவாவின் கவிதைகள்மீது இந்தத் தடை நடப்பில் இருந்தது. ஸ்டாலினின் மரணத்துக்குப் பிறகு இந்தத் தடை தளர்த்தப்பட்டாலும் அக்மத்தோவா அரசாங்கக் கண்காணிப்பிலேயே இருந்தார். 1965லும் 1966லும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட அக்மத்தோவா 1966ல் மாரடைப்பால் காலமானார்.

உடலைப் பிரதானமாகக் கொண்ட உணர்வுமயமான காதலை ஆன்மீகச் சாயலுடைய மொழியில் அக்மத்தோவாவின் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.

அக்மத்தோவாவின் கவிதைகளில் மிக இயல்பாய் அமைந்திருந்த இந்த கலவை அந்நாளைய சோவியத் அரசாங்கத் தணிக்கையாளர்களும் பல இலக்கிய விமர்சகர்களாலும் சமூக ஒழுக்கத்துக்கு எதிரானதாகக் கருதப்பட்டது. உடல் இச்சைகளை மையமாகக் கொண்ட கவிதைகளில் அக்மத்தோவா ஆன்மீகத்திலிருந்து இரவல் வாங்கிய படிமங்களையும் மொழியையும் பயன்படுத்துவதைக் கண்டித்த ஏய்க்கன்பாவும் என்ற விமர்சகர் அக்மத்தோவாவை “பாதி கன்னியாஸ்திரி, பாதி விபச்சாரி” என்று விமர்சித்தார். அக்மத்தோவாவின் கவிதைகளைச் சோவியத் அரசாங்கம் சமூக ஒழுக்கத்துக்கு ஊறு செய்வதாகச் சொல்லித் தடை செய்வதற்கு இந்த விமர்சனமே போதுமானதாக இருந்தது.

ஆர்தர் லூரி என்ற இசையமைப்பாளரோடு கள்ளத் தொடர்பு வைத்திருந்த அக்மத்தோவாவே “நாமெல்லோரும் இங்கே உல்லாசிகளும் விபச்சாரிகளும்தான்” என்ற 1913ம் ஆண்டு வெளிவந்த கவிதையில் இப்படி எழுதுகிறார்:

“நீ கறுப்பு நிற பைப்பைப் புகைத்துக் கொண்டிருக்கிறாய்
பைப்பிலிருந்து வெளிப்படும் புகை விநோதமான வடிவத்தில் இருக்கிறது
நான் இறுக்கமான ஸ்கர்ட்டை அணிந்திருக்கிறேன்
என்னை மேலும் வடிவழகு உடையவளாகக் காட்டிக் கொள்ள”

ஆனால் பெண்கள் உடல் ரீதியான ஆசைகளை வெளிப்படுத்துவதற்கு எதிராக அரசாங்கமும் ஆணாதிக்கமும் காட்டிய கடும் எதிர்ப்பை அக்மத்தோவா உணராமல் இல்லை.

“லோத்தின் மனைவி” என்ற 1922ல் எழுதப்பட்ட புகழ்ப்பெற்ற கவிதையில் லோத் என்ற தீர்க்கதரிசி சோதோமை விட்டு ஆண்டவர் கட்டளைப்படி வெளியேறியபோது ஆண்டவரால் அழிக்கப்படப் போகும் அந்த நகரத்தை ஆண்டவரின் கட்டளையை மீறித் திரும்பிப் பார்த்த லோத்தின் மனைவி உப்புத்தூணாய் மாற்றப்பட்டதைத் தனது நிலையோடு அக்மத்தோவா ஒப்பிடுகிறார். சோதோம் என்பது பாவங்கள் – குறிப்பாக உடல் இச்சை தொடர்பான பாவங்கள் – மலிந்திருந்ததால் ஆண்டவரால் அழிவுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. அரசாங்கம், திருச்சபை மற்றும் ஆணாதிக்க மனோபாவத்தின் குறியீடாக இருக்கும் லோத் ஆண்டவரின் கட்டளைப்படி அந்நகரத்தை விட்டு வெளியேறுகிறான். அந்த நகரத்தை விட்டு அவ்வளவு எளிதில் அகல முடியாத அவன் மனைவி அதை கடைசியாக ஒரு முறை ஏக்கத்தோடு திரும்பிப் பார்க்கிறாள். அவள்மீது ஆண்டவரின் சாபம் இறங்குகிறது.

“ஒற்றைப் பார்வை: கூரிய ஊசிபோன்ற வலி
அவள் ஓசை எழும்பும் முன்னே அவள் கண்களைத் தைத்து விடுகிறது

அவள் உடம்பு உதிர்ந்துவிழும் நிர்மலமான உப்பாக
அவள் விரைவான கால்கள் தரையில் வேரூன்றி நிற்கின்றன

இந்தப் பெண்ணுக்காக யார் அழுவார்கள்? நம் அக்கறைக்கு இவள் தகுதி இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் போனாளா?
ஆனாலும் திரும்ப நினைத்ததால் மரணத்தை ஏற்றுக் கொண்ட இவளை
என்னால் என்றும் நிராகரிக்க முடியாது.”

ஆனால் ரஷ்யாவில் அடக்குமுறையாலும் சர்வாதிகாரத்தாலும் எண்ணில்லாத மக்கள் சித்திரவதைக்குள்ளாகவும் சாகவும் ஆரம்பித்தபோது அக்மத்தோவாவின் கவிதைகளில் மாற்றம் ஏற்பட்டது. காதல் மீதிருந்த கவனம் மாறிப் பைபிளில் கொடிய அரசர்களை எதிர்த்துக் குரல் எழுப்பிய பழைய யூத தீர்க்கதரிசிகளில் ஒருவராகவே அக்மத்தோவா தன்னை உணர்ந்தார்.

“என் உதடுகள் இனிமேலும்/
முத்தமிடுவதில்லை, அவை தீர்க்கதரிசனங்களைச் சொல்கின்றன”

தீர்க்கதரிசனத்திற்கு மட்டுமன்றி கவிதைக்கும் பெயரில்லாத கொடுமைகளுக்கு அடையாளம் தருவதும் அவற்றைப் பெயரிட்டு அழைப்பதுமே தலையாய பணியாக இருக்கிறது. கொடுமைகளைப் பெயரிட்டழைக்கும்போதுதான் அவை மனிதர்களின் நினைவில் தங்கி வரலாறாய் எழுதப்படும் சாத்தியத்தைப் பெறுகின்றன. பெயரிட்டு அழைக்கப்படாத எந்தக் கொடுமையும் விரைவில் நினைவிலிருந்து அகன்றுவிடுகிறது.

கொடுமைகளைப் பதிவு செய்யாமல் அழிய விடுவது கொடுமைக்கு ஆளான மக்களுக்குத் தீர்க்கதரிசிகள் மட்டுமல்ல, கவிஞர்கள்கூட செய்யும் துரோகம்.

Requiem என்ற கவிதையில் அக்மத்தோவா இப்படி எழுதுகிறார்.

“பதினேழு மாதங்களை லெனின்கிராட் சிறைச்சாலைக்கு வெளியே இருந்த ஒரு வரிசையில் நின்று கழித்தேன். ஒரு நாள் கூட்டத்தில் இருந்த யாரோ என்னை அடையாளம் கண்டு கொண்டார். எனக்குப் பின்னால் குளிரால் நீலம் பாய்ந்திருந்த உதடுகளோடு நின்றிருந்த பெண் யாரும் என்னை யாரும் என் பெயரால் அழைத்துக் கேட்டதில்லைதான். இப்போது நம்மெல்லோருக்கும் பொதுவாக இருந்த அசமந்தத்தை உதறி எழுந்தவள்போல் அவள் என்னிடம் மிகத் தாழ்ந்த குரலில் கேட்டாள் (இங்கு எல்லோரும் மிகத் தாழ்வான குரலில்தான் பேசிக் கொண்டார்கள்): ” இதை உன்னால் விவரிக்க முடியுமா?”


நான் சொன்னேன்: “என்னால் முடியும்” என்று


அப்போது புன்னகை போன்ற ஏதோ ஒன்று ஒரு காலத்தில் அவள் முகமாய் இருந்த பகுதியின்மீது மின்னல்போல் பரவி மறைந்தது.”

மிகுந்த கறுமையான நாட்களில் வெளிச்சத்தை நாடி நின்றவை அன்னா அக்மத்தோவாவின் கவிதைகள். அந்தக் கறுமைக்கு நடுவில் அவையே வெளிச்சமாகவும் இருந்ததில் ஆச்சரியமில்லை.

“எனக்குப் பிரியமானவர்களின் ஆன்மாக்கள் எல்லாம் நட்சத்திரங்களுக்குப் பறந்துவிட்டன.

நான் இழப்பதற்கு யாருமே இல்லை – ஆண்டவனுக்கு ஸ்தோத்திரம்”

– திரும்புதல், 1944

பத்து ரஷ்ய சிறுகதைகள் – புஷ்கினின் “ஸ்பேடுகளின் ராணி”

(ரஷ்ய இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான பத்து சிறுகதைகளைப் பற்றி இன்றிலிருந்து ஒவ்வொன்றாகப் பதிவிடலாம் என்று எண்ணியிருக்கிறேன்)

நவீன ரஷ்ய நாவல் மற்றும் சிறுகதை இலக்கியத்தின் வளர்ச்சியில் அலெக்ஸாண்டர் புஷ்கினின் பங்களிப்பு மகத்தானது.

1799ல் பிறந்து 1837ல் தனது முப்பத்தேழாவது வயதில் டி’அந்தஸ் என்பவரோடு நடைபெற்ற சடங்குபூர்வமான துப்பாக்கிச் சண்டையில் (duel) இறந்து போன புஷ்கின் நவீன ரஷிய இலக்கியத்தின் தந்தை என்றே கொண்டாடப்படுகிறார்.

புஷ்கினின் காலம்வரைக்கும் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளோடு ஒப்பிடுகையில் ரஷ்ய மொழி இலக்கிய நயமற்ற மொழியாகத்தான் கருதப்பட்டது. ரஷ்ய மொழி பின்னாளில் அடைந்த இலக்கிய அழகிற்கும் நயத்துக்கும் புஷ்கினே தோற்றுவாயாகக் கருதப்படுகிறார்.

அவர் எழுதிய ‘இயூஜீன் ஓனெகின்’ நாவல் எப்படி பிற்கால ரஷ்ய செவ்வியல் நாவல்களுக்கு முன்னோடியாகக் கருதப்படுகிறதோ, அதுபோலவே அவருடைய சிறுகதைகளும் வடிவத்தாலும் உள்ளடக்கத்தாலும் பின்னாளில் செக்கோவ் போன்றவர்கள் எழுதிய சிறுகதைக்கு முன்னோடியாகக் கொண்டாடப்படுகின்றன.

புஷ்கின் எழுதிய சிறுகதைகளில் மிக முக்கியமானதாக அவருடைய “ஸ்பேடுகளின் ராணி” கதை கருதப்படுகிறது.

தனது சக அதிகாரிகள் சீட்டாடுவதை ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றும் ஹெர்மான் என்ற ஜெர்மானிய ராணுவ அதிகாரி பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்குச் சூதாடிப் பழக்கமில்லை.

சீட்டாடிக் கொண்டிருக்கும் தோம்ஸ்கி என்பவன் சூதாட்டத்தில் வெற்றிபெற “மூன்று சீட்டுகளின்” ரகசியம் ஒன்று உள்ளதாகவும, அது தனது பாட்டிக்கு மட்டுமே தெரியும் என்றும் சொல்கிறான்.

தோம்ஸ்கியின் பாட்டியான அந்த முதிய சீமாட்டி பல ஆண்டுகளுக்கு முன்னால் சூதாட்டத்தில் தோற்றுக் கொண்டிருந்தபோது ஒரு பிரபுவிடமிருந்து அந்த ரகசியத்தைக் கற்றுக் கொண்டாள் என்று தோம்ஸ்கி சொல்கிறான்.

இதைக் கேள்விப்படும் ஹெர்மானுக்கு எப்படியும் அந்த மூன்று சீட்டுகளின் ரகசியத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. இன்னமும் உயிரோடிருக்கும் எண்பத்தேழு வயதான சீமாட்டியின் வீட்டிற்குள் நுழைவதற்காக அவள் வீட்டில் வசிக்கும் லிசாவியெட்டா என்ற இளம் பெண்ணைக் காதலிப்பதுபோல் நடிக்கிறான்.

வீட்டிற்குள் எப்படியோ நுழைந்த பிறகு ரகசியத்தைத் தன்னிடம் சொல்லச் சொல்லிச் சீமாட்டியை வற்புறுத்துகிறான். அவள் அது வெறும் கற்பனைக் கதை என்று சொல்லி மழுப்புகிறாள். கோபமடைந்த ஹெர்மான் தனது துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகிறான். கிழவி பயத்தால் செத்துப் போகிறாள். லிசாவியெட்டாவின் அறைக்கு ஓடிப்போகும் ஹெர்மான் தான் கிழவியைக் கொல்லவில்லை என்றும், தனது துப்பாக்கியில் குண்டே இல்லை என்றும் சொல்கிறான். அவன் தன்னைக் காதலிப்பதாகச் சொன்னது பொய் என்று அறிந்து கொள்ளும் லிசவியெட்டா அவனை வெறுக்கிறாள். ஆனாலும் அவன் தப்பிப் போக உதவுகிறாள்.

பின்னர் சீமாட்டியின் சவ அடக்கத்துக்கு ஹெர்மான் போகிறான். அங்கு சீமாட்டியின் பிணம் அவனைக் கண் திறந்து பார்க்கிறது. அன்றிரவு ஹெர்மானுக்கு முன்னால் தோன்றும் இறந்து போன சீமாட்டியின் பேய் மூன்று சீட்டுகளின் ரகசியம் “மூன்று, ஏழு, ஏஸ் (ace) சீட்டு” என்று அவனுக்குச் சொல்கிறது. ஆனால் அவன் ஓர் இரவு ஒரே எண்ணை மட்டுமே வைத்து ஆட வேண்டும் என்றும், லிசவியெட்டாவை மணந்து கொள்ள வேண்டும் என்றும் பேய் கட்டளையிடுகிறது.

தன் மொத்த சேமிப்பையும் எடுத்துக் கொண்டு சூதாடப் போகும் ஹெர்மான் முதல் நாள் மூன்று என்ற எண்மீது சூதாடி பெரும் பணத்தை ஜெயிக்கிறான். இரண்டாம் நாளும் அது போலவே ஏழு என்ற எண்மீது பணம் கட்டி ஜெயிக்கிறான். மூன்றாம் நாள் ஏஸ் என்ற சீட்டின்மீது பணத்தைக் கட்டி ஆடுகிறான். ஆனால் சீட்டுக்கள் திறக்கப்படும்போது அவன் ஸ்பேடுகளின் ராணிமீது பணம் கட்டியிருப்பது தெரிய வருகிறது. சீட்டிலிருக்கும் ஸ்பேடுகளின் ராணி சித்திரம் அவனைப் பார்த்துக் கண்ணடிக்கிறது. ராணியின் முகமும் செத்துப்போன சீமாட்டியின் முகம்போல் இருக்கிறது.

அச்சத்தில் ஓடிப்போகும் ஹெர்மான் பைத்தியமாகிறான். மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஹெர்மான் ‘மூன்று, ஏழு, ஏஸ் – மூன்று, ஏழு, ராணி’ என்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டும் அசாதரணமான வேகத்தில் சொல்லிக் கொண்டே இருக்கிறான். லிசவியெட்டா சீமாட்டியின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தவரின் மகனை மணக்கிறாள்.

குற்றம் அதைச் செய்யும் மனிதனின்மீது ஏற்படுத்தும் நுண்ணிய விளைவுகளையும், அதற்குரிய தண்டனையை அவன் அனுபவிப்பதையும் மிக நுணுக்கமாகப் புஷ்கினின் “ஸ்பேடுகளின் ராணி” கதை சொல்கிறது. இவ்வகையில் கோகோல், துர்கனேவ், தஸ்தவ்யெஸ்கி ஆகியோரது பின்னாளைய நாவல்களின் முன்னோடியாகவே புஷ்கினின் இந்தக் கதை திகழ்கிறது.

குறிப்பாக ஹெர்மான் தனது துப்பாக்கியைக் காட்டியதால் கிழட்டுச் சீமாட்டி செத்துப் போவதற்கும், தாச்தவ்யெஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்கோல்னிகோவ்வின் கையால் கிழவி சாவதற்கும் நிறையவே ஒற்றுமைகள் உள்ளன.

அது மட்டுமன்றி சூதாடும் மனிதர்களின் மனோ நிலைகளையும், சூதாட்டம் என்பது மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பதை விவரிப்பதில் புஷ்கின் சரி-தவறு என்று மேம்போக்கான அலசல்களை மீறி மனோதத்துவக் கண்ணோட்டத்தில் இக்கதையில் எழுதியிருக்கிறார்.

ரஷ்யர்கள் சூதாட்டத்தின் மீது வைத்திருக்கும் நாட்டத்தையும் அதனால் அவர்கள் சீரழிவதையும் பின்னாளில் பல ரஷ்ய நாவலாசிரியர்கள் – தஸ்தவ்யெஸ்கி உட்பட – பேசியிருக்கிறார்கள். என்றாலும் ஹெர்மான் என்ற ஜெர்மானியன்கூட சூதாட்டத்தின் மீது பித்தாவதுபோல் புஷ்கின் கதையை அமைத்திருக்கிறார்.

சூதாட்டம், கோபம், காமம் முதலான வெறித்தனங்கள் மனிதர்களுக்குள் ஏற்படுத்தும் உந்துதல்கள் அறிவுக்கு அப்பாற்பட்டவை. வெறும் விஞ்ஞானத்தால் பகுத்து அறிய முடியாதவை. சூதாட்டம் என்பது என்னவென்றே அறியாத, அறிந்து கொள்ள விரும்பாத ஹெர்மானும் இதற்கு அடிமையாகிப் பைத்தியமாகிப் போவது மனிதர்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் இந்த கருமை நிறைந்த வெறித்தனங்களுக்கு உதாரணமாகிப் போகிறது.

ஒருவன் செய்யும் குற்றம் அவனை முன்னேற விடாமல் ஒரே இடத்தில் கட்டிப்போட்டு விடுகிறது. ஹெர்மான் தனது குற்றற்திற்குக் காரணமாக் இருந்த வார்த்தைகளையே திரும்பத் திரும்பச் சொல்கிறான். ரஸ்கோல்நிகோவ் தனது குற்றத்தின் விவரங்களையே மீண்டும் மீண்டும் சிந்தித்தபடி அலைகிறான்.

இப்படித் தான் செய்த குற்றத்தின் நினைவுகளோடு ஸ்தம்பித்து நிற்பதே குற்றம் செய்த மனிதனுக்குத் தண்டனையாகிறது. அதுவே அவன் ஓய்வின்றித் தன்னோடு தூக்கி அலையும் நரகமாகவும் இருக்கிறது.

புத்தாண்டு நாளில் ஒரு ரஷ்ய மாஸ்டர் – தஸ்தவ்யெஸ்கியின் சூதாடி

புத்தாண்டு நாளில் ரஷ்ய மாஸ்டர்களின் ஒரு சுருக்கமான நாவலை வாசித்துவிட விரும்புவர்கள் தஸ்தவ்யெஸ்கியின் ‘சூதாடி”யை வாசிக்கலாம்.

1866ல் வெளிவந்த ‘சூதாடி’ நாவலை தஸ்தவெஸ்கி ஏன் எழுதினார் என்ற வரலாறு சுவாரஸ்யமானது. 1862ல் ஜெர்மனி, ஃபிரான்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்குப் போய்ச் சூதாடத் தொடங்கிய தஸ்தவ்யெஸ்கி 1863ல் தன்னிடமிருந்த எல்லாப் பணத்தையும் இழந்து தனது கைக்கடிகாரத்தை அடகு வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இதன் பிறகு ஸ்டெல்லோவ்ஸ்கி என்ற பதிப்பாளரிடம் பணச் சிரமத்தில் இருந்த தஸ்தவ்யெஸ்கி ஒரு ஒப்பந்தம் போடுகிறார்.

ஒப்பந்தத்தின் சாராம்சம் இதுதான். 1 நவம்பர் 1866க்குள் தஸ்தவ்யெஸ்கி குறிப்பிட்ட பக்கங்களையுடைய நாவலை எழுதித் தரவேண்டும். அப்படி அவர் எழுதித் தரவில்லை என்றால் 1 நவம்பர் 1875வரை அவர் எழுதும் எல்லா நாவல்களையும் தஸ்தவ்யெஸ்கிக்கு ஒற்றைக் காசு தராமல் பதிப்பிக்கும் உரிமை ஸ்டெல்லொவ்கிக்குப் போகும்.

நாவல் அலெக்ஸெய் இவானோவிச் என்பவனின் பார்வையில் சொல்லப்படுகிறது. அலெக்ஸெய் ‘ஜெனெரல்’ என்று அழைக்கப்படும் முன்னாள் அரசாங்க உயரதிகாரியின் குழந்தைகளுக்கு டியூஷன் மாஸ்டராக இருக்கிறான். ஜெனரலின் வளர்ப்புப் பெண்ணான போலினாவைக் காதலிக்கிறான்.

ஜெனரல் அரசாங்கச் சேவையிலிருந்த போது கையாடிய பணத்தை ஓய்வு பெறுவதற்கு முன் கட்டிவிட வேண்டிய கட்டாயத்தால் ஒரு பிரஞ்சு பிரபுவிடம் கடன் வாங்கியிருக்கிறார்.  அதைக் கட்ட முடியாமல் திணறுகிறார். மாஸ்கோவிலிருக்கும் அவருடைய பணக்கார அத்தைக் கிழவி ஒருத்தி நோய்வாய்ப்பட்டிருக்கிறாள் என்று கேள்விபடுகிறார். அவள் சொத்து தனக்குச் சேர வேண்டும் என்ற ஆவலில் அவள் செத்துவிட மாட்டாளா என்று ஆசைப்படுகிறார். 55 வயதான ஜெனெரல் ப்ளான்ச் என்ற இளம்பெண்ணைக் காதலிக்கிறார்.

அலெக்ஸெய் தன்னை வெறித்தனமாகக் காதலிப்பதை அறிந்த போலினா அவனை முட்டாள்தனமான செய்கைகளைச் செய்யத் தூண்டுகிறாள். அவள் தூண்டுதலின் பெயரில் சூதாடப் போகும் அலெக்ஸெய் பணத்தை வென்றுவிட்டுத் திரும்பும்போது அவனைப் பார்த்துச் சிரிக்கிறாள். அவன் தனது காதலை அவளிடம் சொல்லும்போதும் மீண்டும் சிரிக்கிறாள்.

இதற்கிடையில் அத்தைக் கிழவி ஜென்ரல் தங்கியிருக்கும் ஜெர்மன் நகரத்துக்கு வந்து தான் சாகப் போவதில்லை என்றும், தனது சொத்து ஜெனரலுக்கு இல்லை என்றும் சொல்கிறாள். பிறகு சூதாடச் செல்லும் கிழவி முதலில் பணத்தை வென்றாலும் பின்பு பெருந்தொகையைத் தோற்கிறாள்.

ஜெனரலுக்குப் பணம் கிடைக்கப் போவதில்லை என்று அறிந்து கொள்ளும் ப்ளான்ச் அவரை விட்டு மாஸ்கோ செல்கிறாள். ஜெனரலுக்குக் கடன் தந்த பிரஞ்சு பிரபு போலினா தனது வைப்பாட்டியாக வர வேண்டும் என்று நெருக்குதல் தர ஆரம்பிக்கிறான். போலினாவைக் காப்பாற்ற அலெக்ஸெய் மீண்டும் சூதாடுகிறான். அவளை மீட்கத் தேவையான தொகையை அவன் கொண்டு வந்து தரும்போது போலினா பணத்தை அவனிடம் விட்டெறிந்துவிட்டு ஓர் ஆங்கிலப் பிரவுவிடம் போய்விடுகிறாள்.

அலெக்ஸெய் ப்ளான்ச்சோடு பாரீஸுக்குல் போய் விடுகிறான். பிளான்ச்சின் உயர் சமூக கேளிக்கைகளில் ஈடுபட அலெக்ஸெய் தனது பணம் அத்தனையையும் செலவழிக்கிறான். திடீரென்று பிளான்ச் பாரிஸுக்குப் பின் தொடர்ந்து வந்த ஜெனரலைத் திருமணம் செய்து கொள்கிறாள்.

அலெக்ஸெய் தன் செலவுகளுக்காக நிரந்தர சூதாடியாக மாறுகிறான். ஒரு நாள் ஆங்கிலப் பிரபுவைச் சந்திக்கும் அலெக்ஸெய் அவனிடமிருந்து போலினா தன்னை உண்மையிலேயே காதலித்ததாக அறிகிறான். அத்தைக் கிழவியும் ஜெனரலும் செத்து விட்டதாகவும் அத்தைக் கிழவியின் சொத்து போலினாவுக்கு வந்ததாகவும் ஆங்கிலப் பிரவு சொல்கிறான். ஆங்கிலப் பிரபு அலெக்ஸெய்க்குக் கொஞ்சம் பணத்தைத் தருகிறான். அதை வைத்துச் சூதாட வேண்டாம் என்கிறான்.

அலெக்ஸெய் சுவிட்சர்லாந்துக்குப் போவதைப் பற்றியும் சூதாடுவதைப் பற்றியும் யோசிப்பதோடு நாவல் முடிகிறது.

தஸ்தவ்யெஸ்கி அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளின் வழியாக வாழ்வின் மிகப் பெரிய சிக்கல்களைத் தன் நாவல்களில் அலசுவது வழக்கம்.

இந்த நாவலின் மையப் புள்ளி சூதாட்டம் என்ற செயல் என்று தோன்றினாலும், தஸ்தவ்யெஸ்கியின் பார்வைக் குவிப்பு மொத்தமும் இந்நாவலில் பணம் உருவாக்கும் அடிமைத்தனத்தின் மீதும் அது மனித உறவுகள்மீது கொண்டுள்ள தாக்கத்தைச் சுற்றியே இருக்கிறது.

தஸ்தவ்யெஸ்கி இந்த நாவலில் எடுத்துக் காட்டும் அடிமைத்தனம் அவர் சொந்த வாழ்க்கையில் ஸ்டெல்லோவ்ஸ்கியிடம் பட்ட அடிமைத்தனத்தின் பிரதிபலிப்பு.

ஜெனரல் பிரஞ்சுக்காரனிடம் அடிமைப்பட்டதால் கிட்டத்தட்ட அவரிடம் அடிமை போலவே நடந்து கொள்கிறார். போலினா பிரஞ்சுக்காரருக்கு உடலால் அடிமையாகும் அபாயத்தில் இருக்கிறாள்.

ஆனால் அலெக்ஸெய் போலினாவிடமும், ப்ளான்சிடமும் காதலால் அடிமைபோல் நடந்து கொள்கிறான்.

பணம் தொடர்பான ஊதாரித்தனம்போலவே ஊதாரித்தனமான காதலும் மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. மனிதர்களை விடுதலை செய்யக்கூடும் என்று நம்பப்படும் பேரன்பு விலங்காய் அலெக்ஸெய்க்கு மாறுகிறது.

மனத்தளவில் உருவாகும் இந்த அடிமைத்தனம் நாளடைவில் அவனை நிரந்தர சூதாடியாக்கிச் சமூத்தாயத்தின் கண்களில் அவனை அடிமையாக்கி விடுகிறது.

பாவம் என்னும் அடிமைத்தனத்திலிருந்து மனிதர்களை மீட்க மீட்பர் ஒருவர் வருவார் என்பது கிறித்துவ சித்தாந்தம். ஆனால் இந்த நாவலில் வரும் அத்தைக் கிழவி போலி மீட்பராகிறாள். பணமிருந்தும் ஜெனரலின் குடும்பத்தைக் கடன் தொல்லையிலிருந்து மீட்க மறுக்கிறாள். தானே சூதாடி அடிமையுமாகிறாள்.

மாறாக சூதாடியாக மாறும் அலெக்ஸெய்யே போலினாவுக்கும் (ஒரு வகையில் ஜெனரலுக்கும்), ப்ளான்ச்சுக்கும் மீட்பராகிறான். ஆனால் பாவத்திற்கு எப்போதும் அப்பாலிருந்த கிறிஸ்து போல் அல்லாமல் அவனே அடிமையாகிறான். தஸ்தவ்யெஸ்கியின் நாவல்களின் வரும் பல பாத்திரங்களைப்போலவே (உதாரணத்திற்கு மிஷ்கின்) அலெக்ஸெய்யும் ஒரு வகையில் அசடனான, குறையுள்ள மீட்பன்.

அதனால் அவன் போலினாவுக்கும், ப்ளான்ச்சுக்கும் தந்த மீட்பு போலியானதாகுமா என்பது கேள்வி.

‘சூதாடி’ சின்ன நாவல் என்றாலும் காத்திரமானது. தஸ்தவ்யெஸ்கியின் நாவல்களில் வரும் பல முக்கிய அலசல்களை உள்ளடக்கியது.

புத்தாண்டு நாளில் வாசித்துப் பாருங்கள்.

ரஷ்ய நாவல்கள் – 200 ஆண்டுகளின் பருந்து பார்வை பட்டியல்

ரஷ்ய நாவல்களைப் பற்றிய உரையாடல் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

கீழ்க்கண்ட பட்டியலில் உள்ள நாவல்களை கடந்த ஓராண்டில் வாசித்தேன்.1833ல் தொடங்கி கிட்டத்தட்ட இருநூறாண்டுகளாய் நீளும் ரஷ்ய நாவல் வரலாற்றில் முக்கியமான படைப்புகளை வாசிக்கும்போது நாவல் இலக்கியத்தின் வளர்ச்சி, சாத்தியங்கள் மட்டுமின்றி, நாவல்களின் கட்டமைப்பு, உள்ளடக்கம் பற்றிய தெளிவு ஏற்பட மேலும் வாய்ப்புக்கள் அமையக் கூடும்.

ரஷ்ய இலக்கியத்தில் உள்ள எல்லா சிறந்த நாவல்களையும் இந்த பட்டியலில் சேர்த்துவிட்டதாக நான் எண்ணவில்லை. அது என் நோக்கமும் அல்ல. புனின், குப்ரின், ஓசிப் மாண்ட்ல்ஸ்தாம் என்று பல எழுத்தாளர்கள் இந்த பட்டியலில் விடுபட்டுள்ளார்கள். ஓராண்டில் ரஷ்ய இலக்கியத்தை ஒரு பருந்து பார்வையாகப் பார்க்க நினைத்தபோது உருவான பட்டியல்தான் இது.

இடையே வாசித்த (அதிகம் பேசப்பட்ட ஆனால் மொக்கையான) சில ரஷ்ய நாவல்களைப் பட்டியலில் இருந்து தூக்கி விட்டேன். நான்தான் நேரத்தை வீணடித்தேன் என்றால் நீங்களும் ஏன் வீணடிக்க வேண்டும்?

ரஷ்ய மொழியில் எழுதப்பட்டுள்ளதாலேயே நாவல் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

நாவல்களைப் படிக்கும் அதே நேரத்தில் விளாடிமிர் நபோகோவ்-இன் “ரஷ்ய இலக்கத்தியதைப் பற்றிய கட்டுரைகள்” போன்ற சில அறிமுக நூல்களை வாசிப்பது பயனுள்ளதாக அமையலாம்.

ரஷ்ய நாவல்களைப் பற்றிய குறிப்புகளை என் பிளாக்கில் தொடர்ந்து பகிர்கிறேன்

1. இயூஜீன் ஓனேகின் – அலெக்ஸாண்டர் புஷ்கின் (1833) – – இது கவிதை நடையில் எழுதப்பட்ட நாவல்

2. A Hero of Our Time, மிக்காயில் லெர்மந்தோவ் (1840)

3. Dead Souls, நிக்கோலே கோகோல் (1842)

4. தேவைப்படாத மனிதன் நாட்குறிப்பு, இவான் துர்கனேவ் (1850)

5. ஓப்லமோவ், இவான் கோன்சாரோவ் (1859)

6. தந்தைகளும், மகன்களும் – இவான் துர்கனேவ் (1862)

7. என்ன செய்யப்பட வேண்டும்?, நிக்கோலே செர்னிசெவ்ஸ்கி (1863)

8. பாதாளத்திலிருந்து குறிப்புகள்,  ஃபியோதர் தஸ்தவ்யெஸ்கி (Notes from the Underground, 1864)

9. குற்றமும் தண்டனையும், ஃபியோதர் தஸ்தவ்யெஸ்கி (1866)

10. போரும் அமைதியும், லியோ டால்ஸ்டாய் (1869)

11. அசடன், ஃபியோதர் தஸ்தவ்யெஸ்கி (1869)

12. கரமசோவ் சகோதரர்கள் ஃபியோதர் தஸ்தவ்யெஸ்கி, (1879/80)

13. அன்னா கரனீனா (1878), லியோ டால்ஸ்டாய்

14.  இவான் இலியிச்சின் மரணம் – லியோ டால்ஸ்டாய் (1886)

15. தி கிரோய்ட்சர் ஸோனாட்டா, லியோ டால்ஸ்டாய் (The Kreutzer Sonata, Lev Tolstoy 1889)

16. தாய், மாக்ஸிம் கோர்கி (1906)

17. பீட்டர்ஸ்பர்க், ஆந்த்ரே பெலி (Andrei Bely, 1922)

18.  நாம், எவ்கெனி சாம்யாத்தீன் (We, Evgeny Zamyatin,1920)

19. நாயின் இதயம், மிக்காயில் புல்காகோவ் Heart of a Dog, 1925)

20. மாஸ்டரும் மாகரிட்டாவும், மிக்காயில் புல்காகோவ் (1928-40)

21. லூஷின் தற்காப்பு  விளாடிமீர் நபோகோவ் (The Luzhin Defence, Vladimir Nabokov, 1930)

22. Invitation to a Beheading, விளாடிமீர் நபோகோவ் (1935-36)

23. பரிசு, விளாடிமீர் நபோகோவ் (The Gift, Vladimir Nabokov, 1937)

24.  Quiet Flows the Don, மிக்காயில் ஷோலோகோவ் (Mikhail Sholokov, 1940)

25. டாக்டர் ஷிவாகோ, பாரிஸ் பாஸ்டர்நாக் (1957)

26. வாழ்வும், விதியும், வாஸிலி க்ரோஸ்மான்  (Life and Fate, Vassily Grossman 1960)

27. இவான் தெனிஸோவிச்சின் வாழ்க்கையில் ஒரு நாள், அலெக்ஸாண்டர் ஸோல்சனிட்சின் (1962)

28. Cancer Ward, அலெக்ஸாண்டர் ஸோல்சனிட்சின் (1966)

29. Farewell to Matyora, வாலண்டின் ராஸ்புத்தீன் (Valentine Rasputin, 1972)

30. The Day Lasts More than a Hundred Years, Chinghiz Aimatov (1980)

31. The Foundation Pit, Andrei Platonov 1987)

32. தேச பக்தனின் ஆன்மா, எவ்கெனி போபோவ் (The Soul of a Patriot, Evgeny Popov, 1989)

33. ஓமோன் ரா, விக்டர் பெலெவின் (Omon Ra, Victor Pelevin, 1992)

34. Time: The Night, Lyudmila Petrushevskaya (1992)

35. Sankya, Zakhar Prilepin (2006)

36. The Funeral Party, Lyudmila Ulitskaya (1997)

37. Maidenhair, Mikhail Shiskin (2012)

38. The Women of Lazarus, Marina Stepnova (2012)