கிறிஸ்துவுக்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் கிரேக்கத்தைச் சேர்ந்த லெஸ்போஸ் தீவில் பிறந்த சாஃபோ மேற்கத்திய கவிதை மரபின் முதன்மை பெண் கவிஞராகக் கருதப்படுகிறார்.
பண்டைய கிரேக்க கவிதை மரபு ஏற்றுக் கொள்ளும் பிண்டார் முதலான ஒன்பது பெரும் கவிஞர் வரிசையில் சேர்க்கப்பட்ட கவிஞர்களில் சாஃபோ ஒரே பெண் கவிஞர்.
சாஃபோவைப் பற்றி நமக்குக் கிடைக்கும் விவரங்கள் மிகச் சொற்பமே. அவர் குடும்பத்தைப் பற்றியோ அவர் தோற்றம், கணவர் பற்றியோ நமக்குக் கிடைக்கும் தகவல்கள் அதிக ஆதாரங்கள் இல்லாதவை. பல இட்டுக்கதைகளிலிருந்தும், பின்னாளில் சாஃபோவின் காம இச்சையைக் கேலி செய்து அரிஸ்டோஃபனீஸ் போன்றோர் எழுதிய நகைச்சுவை நாடகங்ளிலிருந்தும் சேகரிக்கப்பட்டவை.
சாஃபோ என்பவள் விபச்சாரி என்றும் ஃபாவோன் என்ற படகுக்காரனிடம் கொண்ட ஒருதலைக் காதல் தோற்றதால் மலையிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டவள் என்றும் கதையுண்டு. ஆனால் இது சாஃபோ ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து காமத்தை மையமாகக் கொண்டு எழுதிய அப்பட்டமான காதல் கவிதைகளுக்கு விளக்கும் வகையில் ஆணாதிக்கவாதிகள் கிளப்பிவிட்ட அவதூறாகத்தான் தோன்றுகிறது. இந்தப் போக்கு இன்றும் முடியவில்லை.
ஆனால் சாஃபோவின் வரிகளிலிருந்து அவள் உயர்ந்த குடியில் பிறந்தவள் என்பது உறுதியாகிறது.
500 கவிதைகள் எழுதியதாக நம்பப்படும் சாஃபோவின் கவிதைகளிலிருந்து அர்த்தம் செய்யக்கூடிய இரண்டாயிரம் வரிகளாகத் துணுக்குகளே மிஞ்சியிருக்கின்றன. அவள் கவிதைகளைப் பல்வேறு காலக்கட்டங்களில் பின்னாளில் வந்த கிறிஸ்துவ தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் பொது ஒழுக்கத்துக்கு ஊறு விளைவிப்பவை என்று அழித்துவிட்டார்கள். மிக அண்மையாக 1073ம் ஆண்டு ரோமில் அவள் எழுத்துக்கள் எரிக்கப்பட்டன.
சாஃபோவின் கவிதைகள் சிந்தனையை அசைத்துப் பார்க்கும் அளவுக்குப் பாசாங்கற்ற படிமங்கள் நிறைந்தவை. மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில் பேசப்படும் எளிமையான செறிவுள்ள பண்டைய கிரேக்க மொழியில் எழுதப்பட்டவை.
சாஃபோ கவிதைகளின் படிம துல்லியத்தையும், இயற்கை வர்ணனைகளையும், எளிய செறிவுள்ள சொல்லாட்சியையும் அதே காலத்து நம் சங்கத் தமிழ்க் கவிதைகளோடு ஒப்பு நோக்கலாம்.
பண்டைய கிரேக்க இலக்கியத்தை பலதரப்பட்ட யாப்பு வகைகளில் கவிதைகளை எழுதிய சாஃபோ அவற்றினூடாக அழகிய ஆண்கள் மீதும் தன் தோழிகளாக இருந்த அழகிய பெண்கள் மீதும் அவளுக்கிருந்த காதலையும், காம இச்சையையும் மறைக்காமல் தெரியப்படுத்துகிறாள். அவர்கள் பிரிந்து போகும் போதும் அவர்கள் தனக்குக் கிட்டாதபோதும் அவளுக்கு ஏற்படும் துன்பத்தைப் பேசுகிறாள்.
லத்தீன் பெரும் கவிஞர் ஓவித் சாஃபோவைக் காதலிக்கக் கற்றுத் தந்த பெரும் கவிஞராகவே பார்க்கிறார். ‘லெஸ்போஸின் சாஃபோ நமக்குப் பெண்களைக் காதலிக்கக் கற்றுத் தந்ததைத் தவிர வேறு என்ன செய்தாள்?’ என்பது அவர் கேள்வி – lesbia quid docuit Sappho nisi amare puella?
லெஸ்போஸின் பிறந்த லெஸ்பியனான சாஃபோ தன் தோழிகளோடு வைத்திருந்த உறவின் அடிப்படையில் இன்றும் ஓரினப் பெண் சேர்க்கையாளர்களுக்கு ‘லெஸ்பியன்’ என்ற பெயர் வழங்குகிறது.
பெண்களின் எண்ணங்கள் ஆண்களின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளின் கீழ் நசுங்கிவிடாமல் இலக்கியத்தில் வெளிப்பட வேண்டும் என்று நினைப்பவர்களுக்குச் சாஃபோவின் கவிதைகள் ஆறுதல். பெரும் உற்சாகம்.
தன்னைக் காமத்தில் வாட்டிய காம தேவனைப் பார்த்து ஒரு பெண் கேட்கும் கேள்வியாகச் சாஃபோ எழுதிய கவிதையின் இரண்டு வார்த்தைகள் மட்டும் மிஞ்சியுள்ளன.
அதில் சாஃபோ மன்மதனைப் பார்த்துச் சொல்கிறாள் : optais amme – நீ எங்களை எரிக்கிறாய்.
சாஃபோ எழுதிய புகழ்ப்பெற்ற கவிதைத் துணுக்கொன்றின் எனது மொழிப்பெயர்ப்பு அடியில் தந்திருக்கிறேன்.
—
திரும்பி வா, கொங்கிலா*
(கொங்கிலா என்பவள் சாஃபோவின் தோழி)
ஒரு செயல்
உன் அழகிய முகம்
இல்லையென்றால், பனிக்காலமும்
வலியில்லாத நிலையும்
உனக்கு ஆணையிடுகிறேன், ஆபாந்தீஸ்
யாழை எடுத்து மீட்டு
உன்னைச் சுற்றியும் மீண்டும்
இச்சை சூழ்ந்திருக்க
கொங்கிலாவைப் பற்றிப் பாடு
அவள் அழகானவள்.
அவள் உடுப்பு மாற்றுவதைப்
பார்த்தபோது
உனக்கு ஆசை கிளர்ந்தது
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்
கிப்ரோஸில் பிறந்தவள்
ஒரு முறை ‘நான் விரும்புகிறேன்’
என்ற ஒற்றை வார்த்தையைப்
பிரார்த்தனையாகச் சொன்னதற்காக
என்னைக் கடிந்து கொண்டாள்.