Category: கட்டுரைகள்

உம்பெர்ட்டோ எஃகோ-வின் பார்வையில் புனைவும் அபுனைவும்

மெய்யியல் பேராசிரியரான உம்பெர்ட்டோ எஃகோ தனது ஐம்பத்து ஒன்பதாம் வயதில் Il Nomine Della Rosa (The Name of the Rose) என்ற பெயரில் தனது முதல் நாவலை எழுதினார்.

ஐரோப்பிய பாணியில் மெய்யியல், இறையியல், தத்துவ விசாரணைகள், வரலாற்றுத் தரவுகள் எல்லாம் கலந்த துப்பறியும் நாவல்.

இதைத் தொடர்ந்து அதே பாணியில் எஃகோ மேலும் ஆறு நாவல்கள் எழுதினார். இத்தாலிய மொழியில் மட்டுமின்றி உலகத்தின் பல்வேறு மொழிகளிலும் எஃகோவின் நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டுப் பெரும் வரவேற்பைப் பெற்றன.

தனது எழுபத்து ஏழாவது வயதில் ‘ஒரு இளம் நாவலாசிரியனின் தன்னறிக்கை’ (The Confessions of a Young Novelist) என்ற தலைப்பில் புனைவிலக்கியத்தைக் குறித்த விரிவுரைகளை வழங்கினார்.

முதல் விரிவுரையில் புனைவிலக்கியத்தின் இயல்புகளை எடுத்துக் காட்ட விரும்பிய எஃகோ மெய்யியல் பேராசிரியர்களின் பாணியிலே ஒரு கேள்வியை எழுப்புகிறார்.

“புனைவுக்கும் அபுனைவுக்கும் அப்படி என்னத்தான் வித்தியாசம்?”

ஒரு நூலகத்துக்குப்ப் போய்ப் பார்த்தால் நூலகத்திற்கு வந்திருக்கும் புதிய புத்தகங்களை அடுக்குகளில் பிரித்து வைக்கும் நூலகர் எந்தச் சிரமும் இல்லாமல் புனைவு இலக்கியம் என்றும் அபுனைவு இலக்கியம் என்றும் பிரித்து வைப்பதை எஃகோ சுட்டிக் காட்டுகிறார்.

அதனால் எஃகோ எழுப்பும் கேள்விகிக்கு எடுத்த எடுப்பிலேயே பதில் வருமாம்: அபுனைவு உண்மையானது. புனைவு கற்பனையானது.

ஆனால் எஃகோ இந்தப் பாகுபாட்டினைக் கேள்விக்குள்ளாக்குகிறார். வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு முன்னால் ‘பூமி தட்டை’ என்று எழுதியிருக்கும் ‘அறிவியல்’ நூல்கள் அனைத்தும் இந்த வரையறையின்படி அபுனைவுகள்தானா?

வாழ்க்கைப் போராட்டத்தின் பல உண்மைகளை, பல மெய்யியல் தரிசனங்களை அப்பட்டமாய் எடுத்துக் காட்டும் தஸ்தவ்யெஸ்கி, டால்ஸ்டாய் போன்றவர்களின் எழுத்துக்களில் உண்மைகள் இல்லவே இல்லையா?

பின்பு எப்படி இந்தப் பாகுபாடு?

இரண்டாவதாக, புனைவுக்கும் அபுனைவுக்கும் இடையே வேறுபாடு காண நினைப்பவர்கள் பயன்படுத்தும் வேறொரு அளவுகோல்: அபுனைவை எளிதில் துல்லியமான முறையில் மொழிபெயர்க்கலாம். புனைவைத் துல்லியமாகவோ, முழுமையாகவோ மொழிபெயர்ப்பது கடினம் என்பது.

இதற்கும் எஃகோ பதில் தருகிறார். மொழிபெயர்ப்பில் மெய்யியல் அறிஞர் ஹெய்டெகரை வாசித்துப் புரிந்து கொண்டவர்களைவிட மொழிபெயர்ப்பில் டால்ஸ்டாயை வாசித்து அனுபவித்தவர்கள் அதிகம்.

மூன்றாவதாக, நல்ல ஆற்றொழுக்கு போன்ற உரைநடையைப் புனைவு நூல்களே கொண்டிருக்கும் என்ற கருத்து. இதையும் எஃகோ தகர்க்கிறார். இத்தாலிய பள்ளிப் பிள்ளைகள் நல்ல உரைநடையின் உதாரணமாக கலீலியோவின் அறிவியல் கட்டுரைகளை வாசிக்கிறார்களாம். கிரேக்க மெய்யியலாளர் அரிஸ்டாட்டிலின் எழுதிய பிளேட்டோவின் உரையாடல்கள் அம்மொழி உரைநடையின் சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகின்றன.

நம்மூர் பழைய மீமாம்சகர்களின் பாணியில் புனைவுக்கும் அபுனைவுக்கும் இடையிலான வேறுபாட்டினைக் காட்டுவதாக எதிராளி எடுத்து வைக்கும் அளவுகோல்களை எல்லாம் (தன்னளவில்) தகர்த்துவிட்டு எஃகோ இறுதியாகப் புனைவுக்கும் அபுனைவுக்கும் இடையிலான உண்மையான வேறுபாட்டைக் காட்டும் உண்மையான அளவுகோலை எடுத்து வைக்கிறார்.

“அபுனைவு படைப்புக்கள் ஒரே அர்த்தத்தை தருவதற்காக மட்டுமே எழுதப்பட்டவை. ஆனால் புனைவு படைப்புக்கள் அப்படியல்ல. ஒரு புனைவு படைப்பைப் பல்வேறு கோணங்களிலிருந்தும் வாசகர்கள் அணுகி அவர்களுடைய அனுபவங்கள், வரலாற்று மற்றும் சமூகச் சூழலின் அடிப்படையில் புரிந்து கொள்ளலாம்.

அபுனைவு எழுத்தாளன் தனது கட்டுரை தவறாகப் புரிந்து கொள்ளப்படும்போது நிச்சயம் தனது தரப்பினை எடுத்து வைப்பான். புனைவு எழுத்தாளனுக்கு அந்த அருகதை பெரும்பாலும் வழங்கப்படுவதில்லை. தனது கருத்துக்கு நேரெதிரான வகையில் தனது படைப்பு புரிந்து கொள்ளப்பட்டாலும்கூட அவன் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கிறான்.”

புனைவு இலக்கியம் மட்டும் பல்வேறு புரிதல்களுக்கு ஏன் இடம் தருகிறது என்பதையும் எஃகோ தனது முதல் விரிவுரையில் ஆராய்கிறார்.

நல்ல புனைவு என்பது மனித வாழ்க்கையை அதன் எல்லா விதமான முரண்களோடும் வாசனின் முன்னால் எடுத்துத் தருகிறது. உண்மையில் சொல்லப் போனால் நல்ல புனைவு மனித வாழ்க்கையை ‘முரண்களின் சங்கிலித் தொடராகவே’ காண்பிக்கிறது.

இந்தக் காரணத்தால் நல்ல புனைவு அபுனைவு கட்டுரைகளைப்போல் இதுதான் விடை என்று எதையும் வாசகனின் முன்னால் எடுத்து வைப்பதில்லை. மிஞ்சிப் போனால் வாழ்க்கையின் சிக்கலைச் சமாளிக்க இதுவும் ஒரு வழி என்று குறிப்புணர்த்திவிட்டு அமைகிறது.

வாசகர்களுக்குப் போதனைகளை அள்ளித் தரும் படைப்புக்கள் எஃகோவின் கண்ணில் படாமல் இல்லை. வாழ்க்கையை மிக எளிமையான சட்டகத்தின் வழியாகப் பார்த்துத் தீர்வு சொல்லும் இத்தகைய எழுத்தாளர்களை வெறும் உணர்ச்சிமயமானவர்கள், தள்ளத் தக்கவர்கள் என்று எஃகோ சொல்கிறார்.

எழுத்தின் ரகசியம்: ஏர்னஸ்ட் ஹெமிங்வேயுடனான நேர்காணல்கள்

டி பாரிஸ் ரிவ்யூவுவில் ஹெமிங்வேயுடன் ஜார்ஜ் பிளிம்ப்டன் நடத்திய நேர்காணலின் எனது மொழிபெயர்ப்பு. மே 1954 இதழில் வெளிவந்தது. பிளிம்ப்டன் அக்காலத்தில் புகழ்ப்பெற்ற அமெரிக்க நிருபராகத் திகழ்ந்தவர். விளையாட்டுப் போட்டிகள் பற்றிய வருணனைகளுக்காக பிளிம்ப்டனின் எழுத்துப் பிரபலமாக இருந்தது. ஜார்ஜ் பிளிம்ப்டன்:  எழுதும் செயலில் ஈடுபட்டிருக்கும் நேரம் உங்களுக்குச் சந்தோஷம் தருகின்றதா? ஹெமிங்வே: ரொம்பவும். ஜா.பி,: எழுதுவதில் செலவழிக்கும் நேரத்தைப் பற்றி ஏதேனும் … Continue reading எழுத்தின் ரகசியம்: ஏர்னஸ்ட் ஹெமிங்வேயுடனான நேர்காணல்கள்

யுகியோ மிஷிமா – அழகான வன்முறைகள்

ஜப்பானிய எழுத்தாளர் யூகியோ மிஷிமா தனது நாற்பத்து ஐந்தாவது வயதில் நான்கு நண்பர்களோடு தோக்கியவிலிருக்கும் ஓர் இராணுவ முகாமிற்குள் புகுந்தார். உள்ளே புகுந்தவர்கள் முகாமின் தலைமை அதிகாரியை நாற்காலியோடு கட்டிப் போட்டார்கள். அதன் பிறகு ஒரு பால்கனியில் நின்றபடி தலையைச் சுற்றி நாட்டுப்பற்று வாசகங்கள் எழுதிய ஒரு துணியைக் கட்டியிருந்த மிஷிமா கீழே நின்ற இராணூவ வீரர்களை அரசாங்கத்துக்கு எதிராகப் புரட்சி செய்யத் … Continue reading யுகியோ மிஷிமா – அழகான வன்முறைகள்

கதை என்பதே இல்லை

மிலான் குண்டேராவின் ‘நாவல் கலை’யை மீண்டும் எட்டாவது முறையாகவோ ஒன்பதாவது முறையாகவோ வாசித்துக் கொண்டிருக்கிறேன். புகழ்பெற்ற நோர்வீஜிய எழுத்தாளர் கார்ல் ஓவ க்நாவுஸ்கார்ட் 2017 ஆற்றிய உரை ஒன்றில் குண்டேராவின் நாவல்களில் வரும் கதைசொல்லி அனைத்தும் அறிந்தவராக இருப்பதால் தன்னைக் குண்டேராவின் கதை சொல்லும் முறை ஈர்க்கவில்லை என்று சொல்லியுள்ளார். மாறாக, கதைசொல்லியும் வாசகனோடு கதையின் ஊடாக பயணம் செய்து கதையில் வரும் … Continue reading கதை என்பதே இல்லை

செத்துப்போன எழுத்தாளரும் இலக்கிய விமர்சனமும்

ஒரு படைப்பை எழுதி முடித்தவுடன் எழுத்தாளர் செத்துப்போய் விடுகிறார் என்று 1967ல் புகழ்பெற்ற பிரஞ்சு இலக்கிய விமர்சகர் ரோலண்ட் பார்த்ஸ் கட்டுரை எழுதினார். ‘எழுத்தாளரின் மரணம்; என்ற தலைப்பிட்டிருந்த அந்தக் கட்டுரையில் பார்த்ஸ் இலக்கிய விமர்சனத்தில் எழுத்தாளரின் நோக்கத்தையும் அவர் எழுதிய கால தேசச் சமூகச் சூழல்களையும் கருத்தில் எடுத்துக் கொள்ளும் பாரம்பரியமான இலக்கிய விமர்சன அணுகுமுறையைக் கடுமையாகச் சாடுகிறார். பார்த்ஸின் வாதத்தின்படி … Continue reading செத்துப்போன எழுத்தாளரும் இலக்கிய விமர்சனமும்

முரண்களைக் கொண்டாடுதல் : சீனத் தத்தவங்களின் அடிப்படை

சமீபத்தில் சீன எழுத்தாளர் தோங் ஜூன் -இன் நாவலை மொழிப்பெயர்க்கும்போது சீனத் தத்துவங்களைப் பற்றிக் கொஞ்சம் ஆழமாகவே வாசிக்க நேர்ந்தது. சீனத் தத்துவச் சிந்தனை மட்டுமல்ல, பண்டைய சீன ஆன்மீகம், போர்க்கலை, இலக்கியம், சமூக வாழ்வு, உணவு முறை என்ற அத்தனையும் யின் – யாங் என்ற இருமைக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. அது என்ன யின் – யாங்? ஒரு வட்டத்துக்குள் … Continue reading முரண்களைக் கொண்டாடுதல் : சீனத் தத்தவங்களின் அடிப்படை

உம்பெர்ட்டோ எஃகோ: வரலாறு என்னும் புனைவு

இத்தாலிய எழுத்தாளர் உம்பெர்ட்டோ எஃகோ பேசியதாக ஓர் உரை இருக்கிறது. அதன் தலைப்பு “எதிர்காலத்தைப் பற்றிப் பொய் சொல்வது வரலாற்றை உருவாக்குகிறது” என்பதாகும். புனைவுக்கும் வரலாற்றுக்கும் இடையே சிக்கல் நிறைந்த ஆனால் அத்தியாவசியமான, பிரிக்க முடியாத தொடர்பு இருக்கிறது. வரலாறு என்பது ஒருவரின் பார்வையில் மட்டும் எழுதப்பட்ட புனைவு என்று வாதிடுவோரும் உண்டு, உதாரணத்துக்கு ஹிட்லரின் நாஜிக்கள் இரண்டாம் உலகப் போரை வென்றிருந்தாலோ, … Continue reading உம்பெர்ட்டோ எஃகோ: வரலாறு என்னும் புனைவு

கவிதை ஏன் இன்னும் சாகவில்லை

24 ஏப்ரல் 2015 வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் 1992லிருந்து 2012 வரை வருடத்தில் ஒரு முறையாவது கவிதை வாசித்த மொத்த அமெரிக்கர்களின்எண்ணிக்கை பாதிக்கும் மேல் 17%லிருந்து 6,7%க்குக் குறைந்து போனதாகக் காட்டுகின்றன. இந்தப் புள்ளிவிவரங்கள் அமெரிக்க அரசாங்கத்தின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக இசை, நாடகம், நடனம், ஓவியம் முதலான கலைகளில் அமெரிக்கர்களின் ஈடுபாடு தொடர்பாகக் … Continue reading கவிதை ஏன் இன்னும் சாகவில்லை

எதிர் நூலகம் – யாரும் வாசிக்காத நூல்களைச் சேகரித்தல்

பல வருடங்களுக்கு முன்னால் என் வீட்டில் இருக்கும்  நூல்களைப் பார்த்த போது எனக்கு ஓர் உண்மை விளங்க ஆரம்பித்தது. என்னிடமிருந்த நூல்களில் பல நூல்கள் மற்றவர்களின் பரிந்துரையில் நான் வாசித்தது. யாரேனும் நலன்விரும்பி நான் எழுத்துத் துறையில் போதிய பாதுகாப்புகளைச் செய்து கொள்ளாமல் காலடி எடுத்து வைத்திருப்பதைத் தெரிந்து கொண்டு ‘இந்திந்த நூல்களை நிச்சயம் வாசியுங்கள்’ என்பார். இந்த நூல்களை வாசிப்பது எழுத்துத் … Continue reading எதிர் நூலகம் – யாரும் வாசிக்காத நூல்களைச் சேகரித்தல்

ரோமான்ஸ் – வெகுஜன இலக்கியம்

நாலாந்தர இலக்கியத்தைப் பற்றி விவாதம் மும்முரமாகப் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் ஆங்கிலம் முதலான மேற்கத்திய மொழிகளில் வருடா வருடம் பெரும் எண்ணிக்கையில் வெளிவந்து நிறைய விற்கும் ரோமான்ஸ் நாவல்களை ஒரு பார்வை பார்த்துவிடுவது நல்லது. அடையவே முடியாத என்று எல்லோரும் கருதும் அழகான இளம் பெண்ணும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு அடங்க மறுக்கும் மிகக் கட்டுமஸ்தான ஆணும் காதல் வயப்படுவதையும், அந்தக் காதலால் விளையும் … Continue reading ரோமான்ஸ் – வெகுஜன இலக்கியம்