எழுத்தில் அர்ப்பணிப்பு – பெனிலொப்பி ஃபிட்ஸ்ஜெராட்

Penelope Fitzgerald என்ற ஒரு பிரிட்டிஷ் பெண் நாவலாசிரியர். 1979ல் ‘Offshore’ என்ற நாவலுக்காக Booker பரிசை வென்றவர். 2008ல் The Times நாளிதழ் 1945 முதல் எழுதும் மிகச் சிறந்த ஐம்பது பிரிட்டிஷ் நாவலாசிரியர்களில் ஃபிட்ஸ்ஜெராட்-டையும் குறிப்பிட்டது.

இதில் குறிப்பிடத்தக்கச் செய்தி என்னவென்றால் 1916ல் பிறந்த ஃபிட்ஸ்ஜெராட் தன் முதல் நாவலான ‘The Golden Child’-ஐ வெளியிட்டது 1977-ல் அவர் அறுபதாவது வயதில். தன் இலக்கியப் பணியைத் தொடங்கியது அதற்கு இரண்டு வருடத்திற்கு முன்னால்தான். 1975லும் 1977லும் இரண்டு வாழ்க்கை வரலாறுகளை ஃபிட்ஸ்ஜெராட் எழுதி வெளியிட்டார்.

அதற்கு முன்னால் குடிபோதைக்கு அடிமையானவரும், செக் மோசடி செய்ததால் வழக்கறிஞர் தொழிலிலிருந்து நீக்கப்பட்ட பழைய மிலிட்டரிக்காரரான தனது கணவரைப் பார்த்துக் கொள்வதிலும், தன் குடும்பத்தை வறுமையில் மூழ்கிப் போகாமல் பார்த்துக் கொள்வதிலும் அவர் காலம் கழிந்தது. புத்தகக் கடையில் வேலை செய்தும், ஆசிரியராகப் பணி புரிந்தும் ஃபிட்ஸ்ஜெராட் பணத்தை திரட்டினார். குடும்பத்தோடு அவர் வாழ்ந்து வந்த வீட்டுப்படகு அவருடைய கடிதங்களோடும் ஆவணங்களோடும் இரண்டு முறை தண்ணீரில் மூழ்கியது. ‘Offshore’ என்ற நாவல் இந்த வீட்டுப் படகுவாசிகளின் வாழ்க்கையைச் சொல்லகிறது.

ஃபிட்ஸ்ஜெராட் தனது 69 வயது தொடங்கி எழுதிய நான்கு வரலாற்று நாவல்கள்தான் இலக்கியத்தில் அவருடைய இடத்தை நிலைநாட்டின. நான்கும் நான்கு விதம்.  1950களில் கம்யூனிஸ்ட் இத்தாலியில் நடப்பதாக ஒரு கதை (Innocence, 1986).  கம்யூனிஸத்துக்கு முந்திய மாஸ்கோவில் நடப்பதாக மற்றொன்று (The Beginning of Spring, 1988). 1912ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஏற்பட்ட இயற்பியல் புரட்சிகளின் தோற்றுவாய்க் காலத்தில் நடப்பதாக மூன்றாவது (The Gate of Angels, 1990). பதினெட்டாவது நூற்றாண்டு ஜெர்மனியில் ஏற்பட்ட மெய்யியல் விவாதங்களை விவரிக்கும் Blue Flower என்ற 1995 வருடத்து நாவல் நான்காவது.

இந்த நான்கு நாவல்களிலும் அந்தந்தக் காலக்கட்டங்களின் வாழ்க்கை முறையின் மிக நுணுக்கமான செய்திகளை ஃபிட்ஸ்ஜெராட் தன் நாவல்களில் புகுத்தியிருப்பார். உதாரணத்திற்கு, புரட்சிக்கு முந்திய ரஷ்யாவில் நிலவிய கையூட்டுப் பழக்க வழக்கங்கள். 1950களில் இத்தாலிய கம்யூனிஸ்டுகளின் சித்தாந்தப் போக்கு மற்றும் அமைப்பு முறை.  1910களில் தலையெடுத்த இயற்பியல் கண்டுபிடிப்புக்களின் விவரங்கள். பதினெட்டாம் நூற்றாண்டின் ஜெர்மானிய மெய்யியல் மற்றும் அங்கு நடத்தப்பட்ட உப்பளத் தொழிலின் விவரங்கள்.

A.S. Byatt ஒருமுறை இந்தக் கேள்வியை ஃபிட்ஸ்ஜெராட்டிடம் கேட்டபோது அவர் ஜெர்மானிய உப்புத் தொழிலைப் பற்றிய குறிப்புக்களை முழுவதும் ஜெர்மன் மொழியில் படித்ததாகப் பதில் சொன்னார் என்று Julian Barnes என்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் சொல்கிறார்.

அந்த வயதில் அந்த அர்ப்பணிப்புப் பெரிது.

ஃபிட்ஸ்ஜெராட்டிடம் கவனிக்கத்தக்க மற்றொரு விஷயம் அவரது சரளமாம ஆங்கில எழுத்து நடையும் அவர் எழுத்திலிருக்கும் சொற்சிக்கமும். எதை விவரித்தாலும் வார்த்தைகளை அதிகம் செலவழிக்காமல் இருப்பது ஃபிட்ஸ்ஜெராட்டின் குணமாம்.

வழவழா என்று விவரிப்பது வாசகனின் அறிவைக் கேலி செய்வதற்கு ஒப்பாகும் என்பது ஃபிட்ஸ்ஜெராட்டின் கருத்து.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s