யூகியோ மிஷிமா – நடுக்கோடையில் ஒரு மரணம்

நான் இதுவரை வாசித்த சிறுகதைகளில் (எந்த மொழியிலும்) ஜப்பானிய எழுத்தாளர் யுகியோ மிஷிமாவின் ‘நடுக்கோடையில் ஒரு மரணம்’ (‘Death in Midsummer’) என்ற கதையை மிகச் சிறந்தவற்றில் ஒன்றாகக் கருதுகிறேன்.

[மிஷிமா 1925ல் பிறந்து எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் என்று அறியப்பட்டு 1970ல் ஜப்பானில் மீண்டும் மன்னராட்சியை நிறுவ முனைந்து தோற்றுப் போய் சடங்குப்பூர்வமாகத் தற்கொலை செய்து கொண்டார் என்பது வேறு கதை]

கதையின் கதாநாயகி தோமோகோ தனது குழந்தைகள் மூவரோடும் திருமணம் செய்து கொள்ளாத முதிர்கன்னியான தன் கணவனின் சகோதரி யாசுவேயோடும் விடுமுறைக்காகக் கடற்கரைக்குப் போகிறாள். அலுவலகமே கண்ணாக இருக்கும் அவள் கணவன் நகரத்திலேயே தங்கிவிடுகிறான். விடுமுறைக்கு வந்த சொகுசில் தோமோகோ மத்தியானத் தூக்கம் போட யாசுவேயோடு கடற்கரைக்குப் போயிருக்கும் குழந்தைகளில் இருவர் கடலில் மூழ்கி இறந்துவிடுகிறார்கள். அவர்கள் நீரில் மூழ்குவதைக் காணும் யாசுவே மாரடைப்பால் அங்கேயே செத்துப் போகிறாள்.

மிச்ச கதை தோமோகோ தன் கணவனுக்கு இந்தச் செய்தியைச் சொல்வதற்காகப் படும் அவஸ்தையையும் பல மாதங்களாக அவள்  குற்ற உணர்ச்சியில் தன்னைத்தானே நொந்து கொள்வதையும், மிச்சமிருக்கும் குழந்தைக்கு எந்தவிதமான ஆபத்தும் நேர்ந்துவிடக் கூடாது என்று பரிதாவிப்பதையும், பின்பு அவர்கள் வாழ்க்கை மெல்ல மெல்ல சகஜமாகி அவள் வேறொரு குழந்தை பெற்றுக் கொள்வதையும் சொல்கிறது. இரண்டு வருடங்களின் இறுதியில் தோமோகோ தனது கணவனை வற்புறுத்தித் தன் இரண்டு குழந்தைகளோடும் அதே கடற்கரைக்கு விடுமுறைக்குப் போகிறாள். அவள் கடலை வெறித்துப் பார்ப்பதுபோல் கதை முடிகிறது.

கடற்கரையில் தொடங்கிய கதை கடற்கரையில் முடியும் அதே சமயத்தில் கதையும் நடுக்கோடையிலிருந்து நகர்ந்து பருவங்கள் மாறி மாறி மீண்டும் நடுக்கோடைக்கே வந்து சிறுகதையின் கட்டமைப்பிலும் உட்பொருளிலும் ஒரு வட்டம் முழுமையாகி விடுகிறது.

மிஷிமாவுக்கே உரிய மிகத் துல்லிமான வருணனைகள் மற்றும் உரையாடல்கள். இந்த வகையில் பல இடங்களில் மிஷிமா ஹெமிங்வேயை நினைவுறுத்துகிறார். ஆனால் இந்த வடிவத் துல்லியமும் மொழித் துல்லியமும் எந்தவிதமான தர்க்கத்துக்கும் உட்படாத மரணங்களை விவரிக்கப் பயன்படுவதுதான் நகைமுரண்.

தனது குழந்தைகள் மற்றும் சகோதரியின் மரணச் செய்தி வந்ததை உணர்ந்த தோமோகோவின் கணவன் அலுவலகத்தை விட்டு நகரத்திலிருந்து வெகு தூரத்திலிருக்கும் கடற்கரைக்கு விரையும்போது இதையே உணர்கிறான். வெயில், கடந்துபோகும் நிலம், மரங்கள், ஒளிமிகுந்த வானம் மொத்தமுமே இப்படிப்பட்ட துர்மரணங்கள் நடந்ததைப் பற்றிக் கவலைப்படாமலேயே தமது இயல்பிலேயே தொடர்கின்றன.  கடலில் மூன்று பேர் அநியாயமாகச் செத்தாலும் சரி, போரில் லட்சக் கணக்கானவர்கள் செத்தாலும் சரி உலகம் இப்படித்தான் தொடரும் என்று மிஷிமா கதையில் நடுவில் கமெண்ட் அடிக்கிறார்.

ஒரு சில மணி நேரம் உடல் சொகுசுக்கு ஆசைப்பட்டு மத்தியானத் தூக்கம்போட்ட காரணத்துக்காகத் தன்னைக் கணவன் முன்னும் மாமனார் மாமியார் முன்னும் சமுதாயத்தின் முன்னும் ஒழுக்கக் கெட்டவளாக, கொலை பாதகியாக உணரும் தோமோகோவையும் மெல்ல மெல்ல இந்த உலக இயக்கம் உள்ளிழுத்துக் கொள்கிறது. சமுதாயம் என்பதே சின்னச் சின்ன – ஆனால் மீற முடியாத – சடங்குகளால் ஆனது தானே. மறக்கவும் மன்னிக்கவுமே
முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்த மரணங்கள்தான். ஆனால் நாளாக நாளாகத் தோமோகோ நன்றாகத் தின்கிறாள், அலங்கரித்துக் கொள்கிறாள், கணவனோடு இசைக் கச்சேரி போகிறாள், மற்றொரு குழந்தையையும் பெற்றுக் கொள்கிறாள். சுலபமாகச் செத்துப் போய் பழியைத் தன் தலையில் ஏற்றியதற்காக யாசுவேயை நொந்து கொள்கிறாள். தன் சோகத்தை யாரும் கண்டு கொள்ளவில்லையே என்று பச்சாதாபப்படுகிறாள்.

கதையின் ஓரிடத்தில் தோமோகோ இறந்துபோன குழந்தைகளைப் பற்றிய நினைவே கழன்று போனதை நினைத்து வருந்துவதாக வருகிறது. அவள் மீண்டும் கடற்கரைக்குப் போவது இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அல்ல. கடல் அலைகளைப்போல சுய விமர்சனங்கள் இழந்துபோய் வெறும் சடங்குப்பூர்வமாகவே ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பிரபஞ்ச இயக்கத்திற்குத் தன்னையே ஒப்புக் கொடுத்ததன் அறிகுறியாகவே அவள் கடலை வெறித்துப் பார்க்கிறாள்.

தோமோகோவிற்கு முன்னும் பலர் அதே கடற்கரையில் தமது குழந்தைகளை இழந்திருக்கக் கூடும். அதற்குப் பின்னும் பலர் குழந்தைகளைப் பறி கொடுப்பார்கள். ஆனால் மனித சமுதாயம் மட்டும் தனது இச்சைகளோடும், பசிகளோடும், கனவுகளோடும், இன விருத்தியோடும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

சிறந்த சிறுகதையின் வெற்றியே அது வாசகருக்குத் தரும் தரிசனம்தான் என்பார்கள்.

நடுக்கோடை பிற்பகலில் ஏதோ ஒரு கடற்கரையில் நடக்கும் காரணமே அற்ற மூன்று மரணங்களைப் போலவே மனிதர்களைப் பாதிக்கும் எந்த ஒரு மரணமும்கூட மிக மகத்தானது என்பதும் அதே சமயம் மிக மிக அபத்தமானது என்பதும்தான் இந்தக் கதை சொல்லும் உண்மை.

இதற்கு அடிப்படைக் காரணம் இயற்கை இரக்கமற்றது என்பதல்ல. தாய்மை, தயை போன்ற உயர்ந்த உணர்வுகளின் இருப்பிடமாக நாம் கற்பனை செய்து கொண்டிருக்கும் மனிதன் உண்மையில் கடலலைகளைப் போலவே  மெல்லிய தாளக்கட்டுக்களைப்போன்ற சடங்குகளுக்குக் கட்டுப்பட்ட விலங்கு என்பதுதான் மிஷிமா இந்தக் கதையின் வழியாகச் சொல்லும் காரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s