டால்ஸ்டாயின் பின்னாளைய கதைகளில் அழகியல் கூறுகளிலும் புனைவின் கட்டமைப்பிலும் “எஜமானனும் வேலையாளும்’ (Master and Man) என்ற கதையோடும் ‘மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்’ (What Men Live By) ஆகிய கதையோடும் ஒப்பிடத்தக்கது ‘அல்யோஷா பாத்திரம்’ (Alyosha the Pot) என்ற கதை.
கொஞ்சம் புத்திமந்தமுள்ள ஏழைப் பிள்ளையாக அல்யோஷா என்ற பையன். பாத்திரம் நிறைய பாலைக் கொண்டு போகும்போது கால் தடுக்கி விழுந்து அதை உடைத்ததால் அவனுக்கு ‘சட்டி’ என்று புனைப்பெயர் வருகிறது. சமூகத்தில் அவனுக்கென்று எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதைக் கதையின் தொடக்கமே சொல்கிறது – ” அல்யோஷாதான் இளையவன்”. இளையவன், இளைத்தவன். அவனுக்குப் படிப்பு ஏறவில்லை. எளிமையான பிரார்த்தனை ஜெபங்களைக்கூட ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாமல் கைகளால் சிலுவை குறியிட்டு மட்டுமே ஜெபிக்கிறான்.
ஆனால் அல்யோஷாவுக்குச் சளைக்காமல் வேலை செய்ய முடிகிறது. யார் என்ன திட்டினாலும் அடித்தாலும் புன்சிரிப்பை மட்டும் பதிலாகத் தந்துவிட்டு மேலும் உழைக்கிறான். மாடுபோல் உழைக்கும் மகனை ஒரு குடும்பத்தில் வேலைக்காரனாக அல்யோஷாவின் தகப்பன் சேர்த்துவிடுகிறான். குடும்பத்தில் உள்ள எல்லோருமே அவனை ஓய்வே இல்லாமல் வேலைக்கு ஏவுகிறார்கள். சம்பளக் காசு மொத்தத்தையும் அல்யோஷாவின் அப்பன் வாங்கிக் கொள்கிறான். கிழிந்த சட்டையிலும் தேய்ந்து போன காலணிகளிலும் வலம்வரும் அல்யோஷா புதுத்துணி வாங்கினால் எஜமானன் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்வான் என்றும் அதற்காக அப்பாவிடமிருந்து உதைவாங்க வேண்டும் என்றும் அஞ்சுகிறான்.
அல்யோஷாவை அதே வீட்டில் வேலை செய்யும் உஸ்தினியா என்ற சமையல்காரி காதலிக்கிறாள். வாழ்க்கையில் முதன்முறையாக தன்னால் கிடைக்கக்கூடிய உபயோகத்துக்காக அல்லாமல் தனக்காக ஒருத்தி தன்மீது அக்கறை காட்டுவதை உணரும் அல்யோஷாவின் இதயம் நிறைகிறது. ஆனால் வேலைக்காரியை இழக்க விரும்பாத வீட்டு எஜமானியும், மகனின் சம்பளத்தை இழக்க விரும்பாத அல்யோஷாவின் அப்பனும் அவர்கள் காதலைப் பிரிக்கிறார்கள். ஒரு பெருமூச்சை மட்டுமே வெளிப்படுத்தும் அல்யோஷா மீண்டும் ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு ‘சரி இந்த விஷயத்தை விட்டு விடுகிறேன்’ என்கிறான்.
ஒரு நாள் வீட்டின் கூரைமேல் துப்புரவு பணியில் இருக்கும் அல்யோஷா கீழே விழுகிறான். மூன்று நாள்களுக்குப் பிறகு ஏதோ அதிசயத்தைக் கண்ட முக பாவத்தோடு அல்யோஷா ‘படுக்கையில் நீட்டிப் படுத்து, செத்துப் போனான்.’
ஏழைத் தொழிலாளிகளைச் சித்தரிக்கும் போது டால்ஸ்டாயின் பணக்காரத் திமிர் அவரையும் அறியாமல் வெளிப்படுவதாகவே ஒரு விமர்சனம் உண்டு. ‘எஜமானனும் வேலையாளும்’ என்ற கதையில் வரும் நிகிதா எஜமானனான வாஸிலி அந்திரேயேவிச்சைப்போல எந்தவிதமான மனப்போராட்டத்துக்கோ சஞ்சலத்துக்கோ உள்ளாவதில்லை. வாஸிலி பேராசைக்காரனாக அறிமுகமாகி, வேலைக்காரனை பனியில் சாக விட்டுச் செல்லும் துஷ்டனாக மாறிக் கடைசியில் வேலைக்காரனைக் காப்பாற்றும் செயலில் ஈடுபட்டிருக்கும் வேளையில் செத்துப்போய் மீட்சியடைகிறான். ஆனால் வேலைக்காரனான நிகிதாவோ பனியில் சுருண்டு படுத்துக் கொள்கிறான், சாகப் போவதைப் புரிந்து கொள்கிறான், காப்பாற்றப்பட்டவுடன் பழையபடியே வாழ்க்கையைத் தொடர்கிறான், பின்பு இருபது வருடங்கள் கழித்து இரு கைகளிலும் மெழுகுவர்த்திகளைப் பிடித்தபடி செத்துப் போகிறான்.
கிட்டத்தட்ட இந்தக் கதையில் வரும் அல்யோஷாவைப்போல.
டால்ஸ்டாய் உழைக்கும் ஏழை ரஷ்யர்களை ரோமாண்டிஸை செய்து எஜமானர்களின் கொடுமைகளுக்கிடையிலும் அவர்களை அப்பழுக்கற்ற சாதுக்களாக்கி அவருடைய சொந்த வர்க்கத் திமிரைக் காட்டுகிறார் என்பது குற்றச்சாட்டு. அதே சமயம் அந்தக் கொடுமைகளும் ஏதோ ஒரு வகையில் நியாயப்படுத்துகிறார் என்றும் விமர்சனம் எழுகிறது.
ஆனால் ஒரு சாதாரணக் குடிகாரனிலிருந்து ஜார் மன்னன்வரை பல நூறு ரஷ்ய மனிதர்களைச் எழுத்தில் சித்தரித்த அவருடைய அவதானிப்புக்களுக்கும் அகவயமானச் சித்திரங்களுக்கும் பெயர்போனவரான டால்ஸ்டாய் ஏழை உழைப்பாளிகளின் உளப்போராட்டங்களையும், அவர்கள் படும் பாடுகளையும் காண முடியாதவராக, எழுத முடியாதவராகப் போனார் என்று நாம் ஒப்புக் கொண்டால்தான் மேற்கூறிய விமர்சனங்கள் சரியாக இருக்கும்.
அப்படியென்றால் ‘அல்யோஷா பாத்திரம்’ என்ற கதை எதற்காக? கதையின் தலைப்பிலேயே பதிலின் ஒரு பகுதி இருக்கிறது. 1861வரை பல நூற்றாண்டுகளாக ரஷ்ய பெருநிலத்தில் வாழ்ந்த மிகப் பெருவாரியான மக்கள் (ஒரு காலத்தில் 80%) அடிமைகளாய், எந்தவித உரிமைகளும் இல்லாதவர்களாய், எஜமானர்களால் உடைமைகளைப்போல் வாங்கப்படவும் விற்கப்படவும் கூடியவர்களாக இருந்தார்கள். கோகோலின் ‘செத்த ஆன்மாக்கள்’ என்ற கதையை ஒப்பிட்டுப் பாருங்கள்.
அல்யோஷா பாத்திரம் என்று கேலிக்காக அழைக்கப்பட்டாலும் உண்மையிலேயே அவன் புத்திமந்தத்தாலும் தனது ஏழ்மையினாலும் வெறும் உபயோகத்துக்கான பொருளாகத்தான் இருக்கிறான். உஸ்தினா அவனைக் காதலிக்க ஆரம்பிக்கும்போதுதான் அவனை மனிதனாக மதிக்கும் வேறொரு ஜீவன் கதையில் அறிமுகமாகிறது. ஆனால் அல்யோஷாவின் உளவியல் சித்திரத்தை டால்ஸ்டாய் சரியாக வெளிக்கொண்டு வரவில்லை என்று விமர்சிக்கும் வாசகர்கள் மட்டும் உத்தமர்களா என்பதுதான் டால்ஸ்டாய் நம் முன்னால் வைக்கும் முக்கியமான கேள்வி. நாம் தினம் தினம் கடந்து போகும் சாதாரண ஊழியரின் மனச்சங்கடங்களை மகிழ்ச்சிகளை உற்சாகங்களைப் பற்றி நாம் எப்போது கடைசியாக யோசித்தோம்? நம் வீட்டு வேலைக்காரர்கள் மனதில் சுமந்து கொண்டிருக்கும் காயங்களைப்பற்றி? உணவங்காடிகளில் மேசைகளைத் துடைத்துச் சுத்தம் செய்யும் ஊழியர்களின் இன்பதுன்பங்களைப்பற்றி?
நம்மைப் பொறுத்தவரைக்கும் அவர்கள் எல்லோரும் அல்யோஷாக்களே. நமக்கு அவர்கள் உபயோகப்படும்வரை அவர்களை நாம் உபயோகப்படுத்திக் கொள்கிறோம். அவர்கள் உபயோகப்படாதபோது அவர்களை ஏசுகிறோம், தகுந்த இடங்களில் முறையிடுகிறோம்.
அப்படி நாம் சுலபமாய்ப் பாத்திரங்களாகச், சட்டிகளாகப் பானைகளாக, வீட்டுப் பொருள்களாக எண்ணிக் கடந்து போகும் மனிதர்களுக்குள்ளும் அளவிட முடியாத அளவுக்கு ஜீவனூற்றும் ஆன்மீகச் சாத்தங்களும் இருப்பதைக் காட்டத்தான் அல்யோஷா என்ற கதை. பல்வேறு கொடுமைகளையும் துரோகங்களையும் சந்தித்தும் நம்மில் எத்தனை பேருக்கும் அல்யோஷாவைப்போல் புன்சிரிப்போடு கடந்துபோக முடியும்?
ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தைக் காட்டு என்ற போதனையைக் கேலி செய்ய நினைப்பவர்கள்தான் நம்மில் அதிகம். ரஷ்ய நாவலாசிரியர் விளாடிமிர் நபோகோவ் ஓரிடத்தில் ‘சத்தியத்தின் இருப்பிடத்தையும் அதன் குணங்களையும் முழு பலத்தோடு தேடிப்போன ரஷ்ய நாவலாசிரியர்களில் டால்ஸ்டாய் முதன்மையானவர்’ என்கிறார்.
பயனற்றவனாகக் கருதப்படும் மனிதனுக்குள்ளேயும் இருக்கும் ஆன்மீகப் பேராற்றலையும் மதிப்பையும் காட்டக்கூடிய கதைதான் ‘அல்யோஷா பாத்திரம்’.
ஒரு மனிதன் முழுபலத்தோடு இயேசுநாதரின் இந்தப் போதனையைக் கைக்கொண்டால் என்ன நடக்கும் என்பதை ஆராய்வது.
அல்யோஷா இத்தனை நல்லவனாக இருக்க முடியுமா என்பது சவாலல்ல. அல்யோஷாபோல உன்னால் ஒரு மணி நேரம் இருக்க முடியுமா என்ற சவாலைத்தான் டால்ஸ்டாய் நமக்கு முன்னால் வைக்கிறார்.
இலக்கியம் அவரைப் பொறுத்தவரை இப்படித்தான் வாசகர்களுக்குச் சவால்விட வேண்டும் என்பது டால்ஸ்டாயின் கருத்து.
