ரஷ்யாவின் மிகக் கொடுமையான குளிர்காலத்தின் உச்சத்தில் ஒரு தோப்பை வாங்குவதற்காக வாஸிலி அந்திரேயேவிச் என்ற வியாபாரி குதிரை பூட்டிய சறுக்குப் பலகையில் தனது வேலையாளான நிகிதாவோடு கிளம்புகிறான். வியாபாரத்தில் லாபம் வரும் என்ற காரணத்தால் மட்டுமல்ல, அவன் வாங்க விரும்பும் தோப்பை வியாபாரத்தில் தனக்குப் போட்டியாய் இருப்பவர்கள் வாங்கி விடுவார்களோ என்ற எண்ணமும் அந்த மோசமான சூழ்நிலையில் வாஸிலி அந்திரேயேவிச் புறப்பட்டுப் போவதற்குக் காரணமாக இருக்கிறது.
தனது முந்தைய வியாபார வெற்றிகளின் காரணத்தால் தான் நினைப்பது மட்டுமே நடக்க வேண்டும் என்று நினைக்கும் வாஸிலி அந்திரேயேவிச் நிகிதா சொல்வதைக் கேட்காமல் குறுக்குவழியில் போகிறான். கடுமையான பனிப்பொழிவில் அவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். ஒருவழியாக அவர்கள் போக நினைத்ததற்குப் பதிலாக வேறொரு கிராமத்திற்கு போய்ச் சேருகிறார்கள். தன் வியாபாரம் போய்விடும் என்ற அச்சத்தில் வாஸிலி அங்கு நிற்காமல் தொடர்ந்து பயணிக்க முடிவு செய்கிறான். மீண்டும் பனிப்பொழிவில் தொலைந்து போய் மீண்டும் அதே கிராமத்திற்கு வந்து சேர்கிறார்கள். இம்முறை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ஓய்வெடுக்கிறார்கள். கொஞ்சம் இளைபாறிய பிறகு வீட்டின் எஜமானன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வெளியே வானம் இருட்ட ஆரம்பித்திருப்பதைக்கூட கருத்தில் கொள்ளாமல் வாஸிலி மீண்டும் கிளம்ப உத்தரவிடுகிறான்.
நிகிதாவுக்கு இது சரியென்று தோன்றாவிட்டாலும் வாஸிலி எஜமானன் ஆயிற்றே – ஏதும் பேசாமல் அவருடன் கிளம்புகிறான்.
கதையின் நான்காவது பகுதியின் ஆரம்பத்தில் இருவரும் மீண்டும் தொலைந்துபோய் கடுமையான பனிப்பொழிவின் நடுவில் ஒரு வனாந்திரத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்களது குதிரை மேலும் ஓரடி எடுத்து வைக்க முடியாதபடிக்குக் களைத்துப் போயிருக்கிறது. இருவரும் அந்த இடத்திலேயே ஓர் மறைவான பகுதியில் குழியைத் தோண்டி முடிந்தவரைக்கும் தங்களைத் தாங்களே துணிகளாலும் போர்வைகளாலும் போர்த்திக் கொண்டு சுருண்டு படுக்கிறார்கள். எஜமானனான வாஸிலி அந்திரேயேவிச் இரண்டு கம்பிளி கோட்டுகளை அணிந்திருக்கிறான். நிகிதாவுக்குக் கிழிசல் நிறைந்த சொக்காயும் தேய்ந்து போன பூட்ஸுகளும்.
இரவின் ஒரு கணத்தில் வாஸிலி தனது வேலையாளை அங்கேயே விட்டுவிட்டுக் குதிரையில் தான் மட்டும் ஏறி எப்படியாவது தப்பித்து விட முடிவு செய்கிறான். அப்படிச் செய்தால் பனியில் மாட்டிய நிகிதா நிச்சயம் இறந்து போவான் என்று அவனுக்குத் தெரிந்திருந்தாலும் அதைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. தன் உயிரே முக்கியம் என்று கிளம்புகிறான். கொஞ்ச தூரம் போன பிறகு கண்ணுக்கெட்டிய தூரம்வரை பனிமட்டுமே தெரியும் வனாந்திரத்தில் மீண்டும் காணாமல் போகிறான். சுற்றிச் சுற்றி வந்தாலும் பனிக்காற்றில் பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கும் ஒருவகையான கசப்பு மூலிகைச் செடிகள் இருக்கும் இடத்துக்கே மீண்டும் மீண்டும் வாஸிலி வருகிறான். குதிரை எங்கோ போய்விட கடைசியாக ஒருமுறை முயன்று வாஸிலி நடக்க ஆரம்பிக்க அவன் எங்கிருந்து தொடங்கினானோ நிகிதாவும் சறுக்குப் பலகையும் இருக்கும் இடத்துக்கே வந்து சேர்கிறான். குதிரையும் அங்கு வந்திருக்கிறது.
தனக்குச் சாவு நிச்சயமாய் வரப்போகிறது என்று வாஸிலி உணர்ந்து கொள்கிறான். தன் பணமோ, வெளி வேஷத்துக்காகப் பின் பற்றிய மதமோ, பக்தியோ தன்னை இறப்பிலிருந்து காப்பாற்றாது என்று உணர்கிறான்.
குளிரில் கிட்டத்தட்ட உறைந்து போயிருக்கும் நிகிதா தான் சாகப் போவதற்காக வாஸிலியிடம் மன்னிப்புக் கேட்கிறான். கதையின் உச்சமான கணத்தில் வாஸிலி தன்னைவிட கீழானவன் என்று நினைத்த தன் வேலையாள்மீது படுத்து அவன் குளிரால் செத்துவிடாமல் இருக்க அவனை ஆரத் தழுவிக் கொள்கிறான். நிகிதாவுக்கு உற்சாகம் தரும் வகையில் பேசுகிறான்..
காலை உதயமாகும்போது வாஸிலி செத்துப் போயிருக்கிறான். நிகிதா பிழைத்துக் கொள்கிறான்.
‘எஜமானனும் வேலையாளும்’ கதையின் இந்த நான்காவது பகுதி வெறும் பிரச்சாரமாகப் போயிருக்கக் கூடிய சாத்தியம் மிக அதிகம். அப்படிப் போகாமல் காப்பாற்றுவது டால்ஸ்டாயின் கலை. ரஷ்யப் பனிப்பொழிவில் மாட்டிக் கொண்ட ஒருவர் அனுபவிக்கும் ஒவ்வொரு காட்சியையும் ஓசையையும் இன்னலையும் (வாஸிலி சிகரெட் பற்ற வைக்க முயலும்போது தீக்குச்சிகள் காற்றில் அணைந்துபோய் கடைசியில் சிரமப்பட்டுப் பற்ற வைத்த சிகரெட்டின் நுனிப்பகுதியைக் காற்று பிடுங்கிக் கொண்டு போவதுவரை) டால்ஸ்டாய் எழுதுவதுபோலவே வாஸிலி நிகிதா ஆகியோரது மனநிலைகளையும் மாறி மாறித் துல்லியமாகக் காட்டுகிறார். (நபோகோவ் தனது ‘ரஷ்ய இலக்கியத்தைக் குறித்த பேருரை’களில் டால்ஸ்டாயின் இந்த வருணனைத் துல்லியத்தை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார் – இது கதையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் மிகச் சிறந்த உபாயம் என்று).
ஆனால் அதையெல்லாம்விட மேலாக வாஸிலியிடம் நிகழ்ந்த மாற்றத்தை டால்ஸ்டாய் காண்பிக்கும் வகைதான் இலக்கியத்தின் உன்னதமான பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. வேலையாளைச் சாக விட்டுவிட்டுத் தான் மட்டும் தப்பித்துப் போகும் வாஸிலி அந்திரேயேவிச் மனம் மாறியதைப் பல வகைகளில் விவரித்திருக்கலாம். பலரும் மரண அச்சம் ஏற்பட்டதால் வாஸிலி மனம் திரும்பினான் என்று எழுதியிருப்பார்கள். ஆனால் இது வெறும் பக்திப் பிரச்சாரமாகவும் வறட்டுப் போதனையாகவுமே போயிருக்கும்.
ஆனால் டால்ஸ்டாய் வாஸிலியிம் மன மாற்றத்தை மிக இயல்பான வகையில் காட்டுகிறார். நிகிதாவை விட்டுவிட்டுப் போன பிறகு பனியில் திக்குத் தெரியாமல் அலையும் வாஸிலி கடைசியில் பனியில் மாட்டிய மூலிகைச் செடிக்கும், தனக்கும், குதிரைக்கும், நிகிதாவுக்கும் மரணம் பாரபட்சமில்லாமல் சம்பவிக்கப் போவதை உணர்கிறான். இதில் எந்தக் கடவுளும் எந்த விதிவிலக்கையும் தரப் போவதில்லை. அழிவைப் பொறுத்தவரை மனிதனும் ஒன்றுதான் செடியும் ஒன்றுதான்.
ஆனால் இறைவன் இல்லாத இடத்திலும் (கதையின் இறுதிப்பகுதிகளில் வாஸிலி இறக்கும் சமயத்தில் இறைவனின் குறிப்பு வருகிறது) மனிதத்தன்மை இருக்கலாம் என்று உணர்வதுதான் இந்தக் கதையின் உயிர்நாடி. தான் சாகும் தருணத்தில் தன் வேலையாளைக் காப்பாற்றத் தன்னால் ஒரு காரியத்தைச் செய்ய முடியும் என்ற தரிசனத்தை வாஸிலி பெற்றுக் கொள்கிறான்.
அந்தத் தரிசனம் பணப்பித்தனான, ஆணவம் பிடித்தவனான மிகச் சாதாரண வியாபாரி வாஸிலி அந்திரேயேவிச்சை ஒரே கணத்தில் மனிதர்களுள் உன்னதமானவனாக மாற்றியதுதான் ‘எஜமானனும் வேலையாளும்’ என்ற கதையின் சாராம்சம்.
ஆனால் பாருங்கள் – அப்படி உன்னதமானவனாக மாற வாஸிலி தன் அதிகாரத்தைத் துறக்கவோ தானே ஏழையாக மாறவோ தேவை ஏற்படவில்லை. தன் இடத்தில் இருந்தபடியே எஜமானன் என்ற நிலையில் இருந்து கொண்டே வேலையாளைப் பாதுகாக்கும் தன் கடமையைச் செய்வதாலேயே வாஸிலி உன்னதமானவனாகிறான்.
மாறுவதற்காக வாஸிலி தன் எஜமான நிலையை இழக்க நேர்ந்திருந்தால் இந்தக் கதையின் தலைப்பு அர்த்தமில்லாமல் போயிருக்கும். சிறுகதையின் ஒவ்வொரு பகுதியும் கதையை நகர்த்த வேண்டும் என்ற விதி இருக்க அப்படிப்பட்ட அடிப்படை பிழை செய்யக்கூடியவரா டால்ஸ்டாய்?
