மனதைக் கவர்ந்த குறுநாவல்கள்: ஜான் ஸ்டய்ன்பெக்கின் “The Pearl” (முத்து)

மெக்ஸிகோவின் லா பாஸ் நகரத்தின் புறநகர்ப் பகுதியில் கடற்கரையோரமாக அப்பிரதேசத்தின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கினோ என்பவன் வாழ்ந்து வருகிறான். அவன் இனத்தினரின் தொழில் முத்துக்குளிப்பது.

குறுநாவலின் தொடக்கத்தில் அவன் கைக்குழந்தையைத் தேள் கொட்டிவிட கினோவும் அவன் மனைவி ஹுவானாவும் குழந்தையை நகரத்தில் இருக்கும் ஸ்பானிய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவரிடம் தூக்கிக் கொண்டு போகிறார்கள்.

நகரத்தில் வாழும் ஸ்பானிய வம்சாவளி மக்களுக்குப் பழங்குடியினரைக் கண்டால் இளக்காரம், வெறுப்பு. கினோ இதை அறிந்திருந்தாலும், மருத்துவரிடம் போக வேண்டாம் என்று உள்ளூற தன்மானம் தடுத்தாலும் குழந்தையின் நலத்தைக் கருதியும் ஹூவானாவின் பிடிவாதத்துக்கு விட்டுக் கொடுத்தும் மருத்துவரின் மாளிகையின் வாசலில் போய் நிற்கிறான்.

கினோவிடம் பணமில்லை என்று அறிந்த பிறகு மருத்துவர் வீட்டிலிருந்தபடியே வீட்டில் இல்லை என்று தனது வேலைக்காரனைச் சொல்லச் சொல்கிறார். எப்படியாவது பணத்தைத் திரட்டிக் குழந்தைக்கு வைத்தியம் பார்த்துவிட வேண்டும் என்ற வெறியில் கினோவும் ஹுவானாவும் குழந்தையுடன் படகில் ஏறி கடலுக்கு முத்துக் குளிக்கப் போகிறார்கள்.

தெய்வாதீனமாக கினோவின் கைகளில் அன்றுவரை அவன் ஊரில் எவரும் பார்த்திராத அளவுக்குப் பெரியதும் பிரகாசமானதுமான முத்து கிடைக்கிறது.  முத்து கிடைத்த வேளையில் குழந்தையின் தோளில் ஏற்பட்டிருந்த வீக்கமும் குறைந்து போயிருப்பதாகக் கினோவும் ஹுவானாவும் உணர்கிறார்கள். முத்தை விற்றுக் கிடைக்கும் பணத்தில் ஹுவானாவை சமுதாயத்தில் உள்ள சடங்குகளுக்கு ஏற்பத் தேவாலயத்தில் வைத்துத் திருமணம் செய்யவும், குழந்தையைப் பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்கவும் கினோ முடிவெடுக்கிறான்.

ஆனால் அதே சமயம் முத்தை எடுத்துக் கொண்டு கரைக்கு வரும் கினோவுக்கும் அன்றிலிருந்து ஆபத்து ஆரம்பமாகிறது. காசில்லை என்றால் தேவலயத்தில் திருமணம் செய்ய முடியாது என்றிருந்த பாதிரியார் தானே வலிய வந்து கினோவின் குடிசைக்கு வருகிறார். இவ்வளவு அழகானதும் பெரிதானதுமான முத்தை அவனுக்குக் கொடுத்த ஆண்டவனுக்குக் கினோ ஏதேனும் காணிக்கைத் தருவான் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்துவிட்டுப் போகிறார். அவன் கையில் பணமில்லாத காரணத்தால் குழந்தையைப் பார்க்க மறுத்த மருத்துவர் – அதுவரை பழங்குடியினர் வாழ்ந்த பகுதிகளுக்கு வருவதைத் தவிர்த்திருந்தாலும்கூட – தானே குழந்தையைப் பரிசோதித்துப் பார்க்கக் கினோவின் குடிசைக்கு வருகிறார். தோளில் வீக்கம் வற்ற ஆரம்பித்திருந்தாலும் குழந்தையைப் பரிசோதிக்கும் மருத்துவர் குழந்தைக்கு விஷம் ஏறியிருப்பதாகவும் குழந்தையைக் காப்பாற்ற முயல்வதாகவும் சொல்கிறார். குழந்தைக்கு ஏதோ  ஒரு மருத்தை வர் வாயில் புகட்ட அவர் சொன்னது போலவே சரியாக ஒரு மணி நேரத்தில் குழந்தை வாந்தி எடுக்கிறது. பின்பு அவர் சொன்னது போலவே ஒரு மணி நேரத்தில் அவர் திரும்ப வந்து  மருத்து தந்ததும் குழந்தை குணமாகிறது. அவர் வந்து குடிசையை நோட்டமிட்டுப் போன பிறகு இரவில் மர்ம நபர்கள்  கினோவின் குடிசையில் புதைத்து வைத்திருக்கும் முத்தைக் களவாட முயல்கிறார்கள். அவர்களைத் துரத்தும்போது  கினோவுக்குக் காயம் ஏற்படுகிறது.

அடுத்த நாள் முத்தை விற்கக் கினோ குடிசைவாசிகளோடு சேர்ந்து நகரத்துக்குள் போகிறான். அங்கிருக்கும் முத்து வியாபாரிகள் இவ்வளவு பெரிய முத்தை யாரும் வாங்க மாட்டார்கள் என்று சொல்லி மிகக் குறைந்த விலைக்குக் கேட்கிறார்கள். முத்து வியாபாரிகள் எல்லோரும் கூட்டுச் சேர்ந்திஉ கொண்டு தன்னை ஏமாற்றுவதாக உணர்ந்து கொள்ளும் கினோ தலைநகரத்துக்குப் போய் முத்தை விற்கப் போவதாகச் சொல்கிறான்.  இது நகரத்தில் உள்ள அதிகார வர்க்கத்தினருக்கு இடையில்  ஆத்ஹ்திரத்தை உண்டாக்குகிறது. ஹுவானா கினோவிடம் முத்து சபிக்கப்பட்ட பொருள் என்றும் அதைக் கடலில்  எறிந்து விடலாம் என்றும் சொல்கிறாள். அந்த நாள் இரவு  கினோ மீண்டும் மர்ம நபர்களால் தாக்கப்பட்டுப் படுகாயமடைகிறான். அவர்களைத் திருப்பித் தாக்கும்போது அவர்களில் ஒருவனைக் கினோ கொலை செய்ய நேரிடுகிறது. நகரத்துவாசியைக் கொன்ற பழங்குடியினனை ஊரிலுள்ளவர்கள் சும்மா விடமாட்டார்கள் என்று  உணர்ந்த  கினோவும் ஹுவானாவும்  ஊரை விட்டுத் தப்பித்துப் போக முடிவு செய்கிறார்கள். அவர்கள்  குடிசை எரிக்கப்படுகிறது. தப்பித்துப் போகும்போது அவர்களைப் பின்தொடர்ந்து வரும் ஊர்க்காரர்களைத் தற்காப்புக்காகக் கினோ கொல்ல நேர்கிறது. அந்தச் சண்டையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கினோவின் குழந்தை மண்டைச் சிதறிச் சாகிறது.

இறுதியில் கினோவும் ஹுவானாவும் குழந்தையின் சடலத்தோடு ஊருக்குத் திரும்பி வந்து முத்தைக் கடலில் வீசி எறிவதுபோல் கதை முடிகிறது,

1962 இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவர் ஜான் ஸ்டய்ன்பெக். 1930களில் அமெரிக்காவின் கலீஃபோர்னியா மாநிலத்து வயல்களிலும் பழத்தோட்டங்களிலும் எந்தவிதமான சட்டப்பாதுகாப்போ உரிமைகளோ இன்றிச் சொற்பச் சம்பளத்துக்குக் கிடைத்த வேலையைச் செய்து அநாதைகளைப்போல் சுற்றித் திரிந்த வெள்ளைத் தொழிலாளிகளைப்பற்றி அவர் எழுதிய The Grapes of Wrath, Of Mice and Men போன்ற படைப்புக்கள் பிரசித்திப் பெற்றவை. கலீஃபோர்னியாவின் பழத்தோட்டங்களில் நடந்த தொழிற்சங்கப் போராட்டத்தைப் பற்றி 1935ல் அவர் எழுதிய In Dubious Battle என்ற குறுநாவல் அமெரிக்காவிலேயே அவ்வகை புனைவெழுத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறது.

1947ல் ஸ்டய்ன்பெக் எழுதிய The Pearl மெக்ஸிக்கச் சமுதாயத்தில் ஸ்பானிய வம்சாவளியினருக்கும் பழங்குடியினருக்கும் இடையே நிலவிய மிகக் கொடூரமான சமூகப் படிநிலைகளை அடிப்படையாகக் கொண்டது. குறுநாவலில் சொல்லப்பட்டிருப்பதைப்போல மெக்ஸிகோவில் ஸ்பானியர்கள் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து இது நானூறு வருடத்துக் கொடூரம். ஸ்பானியர்கள் அறிமுகப்படுத்திய சமூகச் சடங்குகளோடும் நிறுவனங்களோடும் ஒத்துப்போவதாலேயே தனது குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள முதலில் கினோ நினைக்கிறான். முத்தைக் கண்டெடுத்த நேரத்தில் சமயச் சடங்குகளின்படி ஹுவானாவைத் தேவாலயத்தில் வைத்துத் திருமணம் செய்து கொள்ளவும் குழந்தைக்கு நல்ல படிப்புத் தரவுமே அவனுக்கு எண்ணம் போகிறது. ஆனால் பழங்குடியினன் ஒருவன் எவ்வகையிலும் தங்களுக்கு நிகராக மேலே வந்துவிடக் கூடாது என்ற நகரத்தில் வாழும் ஸ்பானிய ஆதிக்க வர்க்கத்தின் எண்ணம் அம்பலமாகவே குழந்தையைப் படிக்க வைப்பது வெறும் கனவாக மட்டுமில்லாமல் கினோவுக்கு பெரும் வெறியாக மாறுகிறது. தங்கள் கூட்டத்தில் ஒருவன் படித்தான் என்றால் பாதிரியார் உள்பட நகரத்துவாசிகள் செய்யும் ஏமாற்றுவேலைகளைப் புரிந்து கொள்ளவும் நூல்களிலிருந்து விஷயங்களைத் தானே  படித்து அவர்களுக்கு விளக்கிச் சொல்லவும் ஒருவன் கிடைத்துவிடுவான் என்று கினோ நினைக்கிறான்.

ஆனால் நகரத்து முத்து வியாபார்களைப் புறக்கணித்துவிட்டுத் தலைநகரத்துக்குப் போய் முத்தினை வியாபாரம் செய்யக் கினோ துணிந்தது அவனின்மீது மிகப்பெரிய அடக்குமுறையை ஏவி விடுகிறது.  குறுநாவலில் கினோ முத்தைக் கொண்டு சென்று தலை நகரத்தில் விற்கலாம் என்று எண்ணும் கட்டத்தில் அவனுடைய அண்ணன் ஹுவான் தாமஸ் அது சாதாராண முடிவு இல்லை என்றும், கினோ தன்னையும் அறியாமல் மிகப் பெரிய ஆபத்தான நகர்வை ஏற்படுத்தியிருப்பதாகவும் சொல்வான். அதே சமயத்தில் கினோவின் முன்னோர்களில் சிலர் தலைநகரத்துக்குச் சென்று முத்தைத் தங்களுக்காக விற்றுத் தர சிலரை நியமித்ததாகவும் அவர்களால் ஏமாற்றபட்டு எல்லாவற்றையும் இழந்ததாகவும் சொல்வான். இதைப்பற்றிப் பாதிரியார்கூட  தங்களுக்கு ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கும் இடத்தைவிட்டு அகலக்கால் வைக்கத் துணிபவர்களுக்குக் கர்த்தர் கொடுக்கும் தண்டனை என்று தேவாலயத்தில் வருடாவருடம் பிரசங்கம் செய்வாராம்.

ஸ்டய்ன்பெக் எழுதிய The Pearl தன் உழைப்பால் தன்னை மேம்படுத்திக் கொள்ளத் துணிந்த ஓர் ஏழையை ஆதிக்க வர்க்கம் அடித்து நொறுக்கி மீண்டும் அவன் இடத்திற்குக் கொண்டு வரும் கதை. குறுநாவலின் கடைசியில் கினோ ஹூவானாவும் தங்கள் எதிர்காலத்துக்கு ஒரே நம்பிக்கையாக இருந்த குழந்தையையும் இழந்து அவர் வாழ்ந்த கடற்கரைக்கு வருவது அதைத்தான் காட்டுகிறது.

மிக உக்கிரமான எழுத்து.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s