“எழுத்தெண்ணி எழுதிய கதைகள்”
மற்றவர்கள் இந்தக் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தை எப்படிக் கடந்தினார்களோ என்னவோ தயாஜி அவருக்குக் கிடைத்த நேரத்தில் ஒரு பகுதியை இந்தத் தொகுப்பில் இருக்கும் 120 குறுங்கதைகளை எழுதுவதில் செலவிட்டார்.
ஒரு சில மாதங்களுக்கு தயாஜியின் குறுங்கதைகள் ஒவ்வொரு நாளும் தவறாமல் முகநூலில் பதிவேற்றப்பட்டுக் கொண்டிருந்தன.
இந்த முன்னுரை எழுதும் இவ்வேளையில் இலக்கிய விமர்சனத்தைப் பற்றிய தனது தீர்க்கமான கருத்துக்களை முகநூலில் சின்னச் சின்னப் பதிவுகளாகப் பதிவிட்டு வருகிறார்.
தயாஜியின் இந்த உழைப்பும் இலக்கியத் தேடலும் அசாத்தியமானவை. மலேசியாவில் உருவாகியிருக்கும் மிகப்பெரிய இலக்கியத் தாகம் கொண்ட பல இந்நாள் படைப்பாளிகளின் வரிசையில் தயாஜி ஒருவர். மனித வாழ்க்கையின் சிக்கலான பகுதிகளை ஆராய்ந்து அந்தச் சிக்கல்களுக்கு இடையேயும் இறுமாந்து நிற்கும் மனிதத்தை வெளிக்கொணர்வது இலக்கியத்தின் பணி என்று தயாஜி திடமாக நம்புகிறார்
இத்தொகுப்பிலுள்ள அமானுஷ்யம், சாகசம், காதல், சமூகச் சீர்கேடுகள் ஆகியவற்றைக் களனாகக் கொண்டு எழுதப்பட்டடிருக்கும் குறுங்கதைகளிலும்கூட சவால்களை மீறி மனித மாண்புகளைத் தேடும் தயாஜியின் இந்த எண்ணமே முன்னால் நிற்கிறது. மலேசிய மண்ணின் யதார்த்தங்களைக் குறுங்கதைகளுக்குள் களமாகவும், பேச்சு வழக்காகவும், வர்ணனைகளாகவும் புகுத்த தயாஜி முயன்றிருப்பதால் குறுங்கதைகள் பல இடங்களில் ஜீவ ரேகைகள் கொண்டவையாய் மாறுகின்றன.
குறுங்கதை வடிவம் மிகப் பழைமையானது. எல்லா மனிதக் கலாச்சாரங்களிலும் புகழ்பெற்ற குறுங்கதைகள் உண்டு. ஈசாப் தொடங்கி நம் நாட்டு நீதிக்கதைகள், பஞ்சதந்திரம், மகாபாரத உபகதைகள், யூதர்களின் ‘பிர்கே அவோட்’ என்ற ஞானியர் கதைகள், அரேபிய இரவுகள் என்றழைக்கப்படும் ஆயிரத்தொரு இரவு கதைகள், ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்ஸனின் தேவதைக் கதைகள் வரைக்கும் நீளமான பாரம்பரியம் உள்ளது குறுங்கதை வடிவம். போதனைக்காகவும், பொழுது போக்கிற்காகவும் பெரும்பாலும் பயன்பட்ட இந்த வடிவத்தை சென்ற நூற்றாண்டில் காஃப்காவும், ரோபர்ட் வால்சரும், இத்தாலோ கால்வினோவும் சமூக விமர்சனத்துக்கான கூர்மையான வடிவமாகப் பயன்படுத்தினார்கள்.
குறுங்கதை எழுதுவது சவாலான காரியம். குணச்சித்திர வர்ணனைகளுக்கும் குறுங்கதைகளுக்கும் மயிரிழை அளவு வேறுபாடுதான் உண்டு. குணச்சித்திர வர்ணனைகள் கதாபாத்திரங்களின் மாறாத குண இயல்புகளையும் சூழலையும் படம் பிடித்துக் காட்டும் புகைப்படங்கள்.
குறுங்கதைகள் சிறுகதைகளைப்போல் ஒரு கதாபாத்திரத்திற்கு ஏற்படும் மாற்றத்தையோ கதாபாத்திரத்திற்கு நிகழ்வுகளின் வழியாக கிடைக்கும் புதிய தரிசனத்தையோ சித்தரிக்கின்றன. ஆனால் அதே சமயம் கவிதைகளுக்குள்ள சொற்செட்டும் வீச்சும் நிறைந்து குறுங்கதைகள் சிறுகதைகளைவிட கவித்துவம் நிறைந்திருப்பவையாக திகழ்கின்றன. அந்தக் கால யாப்பிலக்கிணத்தின்படி கட்டளைக் கலித்துறை போன்ற செய்யுள் வகைகளை எழுத்தெண்ணிப் பாடுவார்கள்.
அப்படி எழுத்தெண்ணி சர்வ கவனத்துடன் எழுத வேண்டிய கவிதைக்கும் சிறுகதைக்கும் இடைப்பட்ட வடிவம் குறுங்கதை.
தயாஜியின் இந்தக் குறுங்கதைகள் இந்த லாவகத்தைப் பல இடங்களில் நெருங்கி வரத்தான் செய்கின்றன. இதற்கு தயாஜியின் கூர்மையான அவதானிப்பம் அற உணர்வும் அழகியல் பார்வையும் கை கொடுக்கின்றன.
இத்தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளும் சிறுகதைகளின் சுவாரசியமான நகர்வுகளையும் தரிசனத்தையும் நல்ல கவிதைக்குரிய வியப்பையும் தேடி நகர்கின்றன.
சமூக ஊடகங்களில் சித்திரமும் சத்தமும் புதிய தலைமுறை வாசகர்களின் கவனத்தைச் சிதறடிக்கும் காலத்தில் இத்தகைய குறுங்கதைகள் புதியவர்களை வாசிப்புக்கு அழைத்து வரக்கூடிய வல்லமை மிகுந்தவை.
வித்தைக்காரன் கையிலிருக்கும் பழத்தையோ புறாவையோ பெட்டிக்குள் வைத்து மறையச் செய்து மீண்டும் வேறெங்கிருந்தோ வரவழைக்கிறான். அவன் நம் கவனத்தைத் திருப்பி ஏமாற்றுகிறான் என்று தெரிந்தாலும் வித்தையால் நமக்கு ஏற்படும் இன்பம் குறையாமல்தானே இருக்கிறது.
தயாஜி நல்ல வித்தைக்காரராக அறியப்படும் நாள் தூரத்தில் இல்லை.

நன்றியும் அன்பும்…..
LikeLike