க்யூபிஸ மூக்கு – பூவிதழ் உமேஷ் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து

மனிதன் எதிர்காலத்தில் மூக்குக்கண்ணாடி அணிந்து கொள்வான் என்று அறிந்துதான் கடவுள் மூக்கை முக்கோண வடிவத்தில் படைத்தார் என்று பழைய நகைச்சுவை ஒன்று உண்டு.

உண்மையில் மனித முகத்தில் மூக்கு ஏன் முக்கோண வடிவத்தில் இருக்கிறது? 

ஒரு பதில்:  நெற்றி, கண்கள், வாய், கன்னங்கள் என்று ஒன்றை ஒன்று இடித்துக் கொண்டிருக்கும் முகத்தில் மூக்கு நடுவில் முக்கோண வடிவத்தில் இருந்தால்தான் உயிர்வாழத் தேவையான பிராணவாயுவை மனித மிருகம் உள்ளிழுத்துக் கொள்ளச் சுலபமாக இருக்கும் என்பது.

வேறொரு பதில்: மூக்கு முக்கோணமானதால்தான் மனித முகத்தில் தற்போதைய உள்ளடக்கம் சாத்தியம் என்று.

மூக்கின் முக்கியத்துவத்திற்கு மூலகாரணி செயல்பாடா வடிவமா என்ற கேள்விக்குப் பதில் சற்றுச் சவாலானதுதான்.

இதையே கவிதைக்குக் கொண்டு வாருங்கள். கவிதையின் உள்ளடக்கம்தான் கவிதையின் வடிவத்தைத் தீர்மானிக்கிறது என்பது பொது நம்பிக்கை. ஆனால் வடிவம் மாறினால் மொழியும் கருத்தும் மாறும் என்பதும் உண்மைதானே? உலகத்தின் எல்லா மொழிகளிலும் காதலைப் பரிமாறிக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட சொற்பிரயோகங்கள் யாவும் மிக மெல்லிய ஓசைகளால் செவிகளைக் காயப்படுத்தாத வகையில் பூச்சரம் போன்ற வாக்கியங்களாக இருக்கின்றன.

வல்லின ஓசைகளால் வெட்டி வெட்டிப் பேசும் வாக்கியங்களால் அதே வகையில் காதலைச் சொல்ல முடியுமா என்பது ஆய்வுக்குரியது.

கருவியும் கருத்தும் ஒன்றையொன்று தீர்மானித்துக் கொள்கின்றன.

பூவிதழ் உமேஷின் “சதுரமான மூக்கு” என்ற இக்கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள் தமிழ்க் கவிதைகளின் கருத்தையும் கருவிகளையும் புதுமையாக்க முயல்கின்றன. 

நவீனக் கவிதைகளின் பாட்டன் எஸ்ரா பவுண்டின் ‘எல்லாவற்றையும் புதுமையாக்கு’ என்ற முழக்க நாதத்துக்கு ஏற்ப கருத்திலும், களத்திலும், காட்சியிலும், மொழியிலும் பூவிதழ் உமேஷ் தனது முந்தைய தொகுப்பான ‘வெயில் ஒளிந்து கொள்ளும் அழகி’யில்’ தென்பட்ட ரோமாண்டிஸ தாக்கத்திலிருந்து தன்னை முழுதாய் விடுவித்துக் கொண்டிருக்கிறார்.

க்யூபிஸ ஓவியத்தின் தந்தையான பாப்லோ பிகாஸோவிடம் ‘நீங்கள் ஏன் மனித உடல்களையும் முகத்தையும் எப்போதும்போல் இரண்டு பரிமாண உருவங்களாக வரையாமல் பக்கங்கள் விரித்து வைக்கப்பட்டிருக்கும் அட்டைப் பெட்டிபோல சதுரங்களாகவும், செவ்வகங்களாகவும், வட்டங்களாகவும் முப்பரிமாணத்தில் வரைகிறீர்கள்?” என்று ஒருவர் கேட்டாராம். பிகாஸோ சற்றும் யோசிக்காமல் “பல ஆயிரம் வருஷங்களாய் முகத்திலும் உடம்பிலும் உள்ள சில பகுதிகள் மட்டும் வெளிச்சத்தில் தெரிய மற்ற பகுதிகள் இருட்டில் மறைந்திருந்திருந்தன. கலையின் வேலை மறைக்கப்பட்ட அனைத்தையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து அனைத்தையும் மறு ஆய்வுக்கு உட்படுத்துவதுதான்” என்றாராம்.

க்யூபிஸ ஓவியத்தின் பின்னால் கேலிச்சித்திரத்துக்கு ஒப்பான கேலி இருப்பதுபோல் தோன்றினாலும் அதன் அடிநாதமாக இருக்கும் சமூக விமர்சனமும் கோபமும் மிகப் பெரியவை. பிகாஸோ சொன்னதற்கும் எஸ்ரா பவுண்டு சொன்னதற்கும் இடையே உள்ள நோக்கம் ஒன்றுதான் – பழைய சௌகரியமான பழக்கங்களுக்கும் புகுந்து அவற்றைக் கலையென்று சொல்லிப் புழுத்துப் போகாதே!

அனைத்தையும் புதுமையாக்கு.

அதே கோபத்தையும் விமர்சனத்தையும்தான் பூவிதழ் உமேஷ் தனது ‘சதுரமான மூக்கு’ தொகுப்புக் கவிதைகளுக்குள் கொண்டு வந்திருக்கிறார்.  தொகுப்பின் முதல் கவிதையான குறைந்த “பியானோ தன்மையுள்ள வாய்” என்ற கவிதையே அவரது இந்தக் க்யூபிஸக் கோபத்திற்கு முன்னுரையாய் நிற்கிறது. மெல்ல அழிந்து போய்க் கொண்டிருக்கும் தமிழ் இலக்கிய திணைவகைகளுக்கு அடையாளங்களாய்ச் சித்தரிக்கப்பட்டிருக்கும் மலைநாடனும் சமவெளி நாடனும் பேசிக் கொள்வதைப் போன்ற சுவையான கவிதை.

மலைநாடன் : 

மேகங்களை அலமாரியாகப் பயன்படுத்தும்

எங்கள் பெண்களின்  கைகள் மிகவும் நீளமானவை

அவர்கள் வைக்கும் பொருள்கள் எடை குறைவானவை

சில நேரங்களில் காற்றே அவற்றை இடமாற்றி வைக்கும்.

சமவெளி நாடன்: 

தொலைவில் தெரியும்போது மட்டும் குள்ளமான எம் பெண்கள்

கனவுகளில்  சிக்கல்களைத் தீர்த்துக்கொள்கிறார்கள். 
சில நேரங்களில் தூக்கத்தின் உள்ளே இருந்து

மிகச்சிறிய பொருள்களைக் எடுத்துவருகிறார்கள்.

சமவெளி நாடன்:

வானம் பழையதாகிவிட்டது அதனால்

கிட்டத்தட்ட இளமையாகவே இருக்க விரும்புகிறேன்

 
மலைநாடன்:

அரசு மக்களை எதிரிகளைப் போல  நடத்துவதால்

கிட்டத்தட்ட உண்மைகளை மட்டும் கனவு காண விரும்புகிறேன்.


ஒரு சமுதாயத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறையும் அவலமுமே சமூகத்தில் நிகழும் வன்முறைக்கும் அவலத்துக்கும் அலகையாகவும் அடையாளமாகவும் மாறிவிடுகிறது. இது புறநானூற்றுக் காலத்திலிருந்து இந்தப் பூவிதழ் உமேஷ் காலம்வரை தொடர்ந்து வருவதுதான் துயரம்.

இப்படித் தொகுப்பு மொத்தமும் உமேஷ் மனித வாழ்வின் சமுதாயத்தின் பல்வேறு உணர்வுகளை, கேடுகளை, உணர்ச்சிகளைக் க்யூபிஸ ஓவியமாய் வெளிச்சத்திற்குத் திறந்து காட்டி கலையின் துல்லியமான அனுமானிகளால் அளந்து பார்க்கிறார். அதற்கு ஏதுவாக அவர் இத்தொகுப்பில் முயன்றுள்ள புதிய கவிதா வடிவங்களும் மொழி பரிச்சோதனைகளும் அவருக்குக் கை கொடுக்கின்றன.

‘டைம்   இஸ்  எ  பியூட்டிபுள் கேர்ள்’ என்றொரு கவிதை.

 
உழவரே! உழவரே!

விதைத்த மறுநாளே அறுவடைக்குத் தாயாராகும்

தானியம் போல   பற்களை  மாற்றி இருக்கிறேன்

உங்களின் ஏர்க்குச்சியால் அவற்றை விழ வைக்க முயன்றால்

முளைக்காத பற்களும் விழுந்துவிடும் ~ என்றாள்

உழவர், அவளைப் பார்த்தவாரே “ச்சோ! ச்சோ” என

காற்றில் பறக்கும் புழுதியையும் மாடுகளையும் அவளையும்

ஏர்க்குச்சியால் விரட்டினார்.

அவளுடைய முளைக்காமலிருந்த பல் ஈற்றை அவர்

காட்டுயானம் நெல்லில்  கீறி இருக்கிறார், அதனால் மண்ணில் சற்று பெரிய தானியம் போல் விழுந்து எழுந்தாள்.


இந்தக் கவிதைகளினூடே எல்லாம் பூவிதழின் சமூக விமர்சனத்தோடு தெரிவது வாரத்தின் ஏதாவது ஒரு நாளை மறந்துவிடும் பேர்கள் மீதும் (‘பூனைகளைத் தலையனணயாகக்  கேட்கும் விருந்தினர்கள்’),  திருவாளர்கள் குடிகாரர்கள் மீதும், அவசர வாழ்க்கையில் பாசத்தைத் தேடி அலைபவர்கள்மீதும் (‘நீரின் ஞாபகத்தை யாராலும் அழிக்க முடியாது என்றார் இயேசு’) இருக்கும் தீராத மனித நேயம்.

நவீனக் கவிதைகளைப் பலரும் வித்தைகாட்டும் கோலாகப் பயன்படுத்தும் நேரத்தில் பூவிதழ் உமேஷ் நவீனத்துவத்தின் மனித நேய அடிப்படையைச் சிக்கெனப் பிடித்திருக்கிறார். அப்படியிருப்பதால்தான் பிகாஸோவின் ஓவியங்களை நினைவுபடுத்தும் ‘சதுரமான மூக்கு’ என்ற தலைப்பும் இவர் தொகுப்புக்கு அத்தனை அழகாய்ப் பொருந்தி வருகிறது.

ஆனால் பூவிதழ் உமேஷின் மனிதநேயம் தொழில்முறையாக அன்பைக் கையிலெடுத்திருக்கும் வறட்டு வேதாந்தியின் பார்வையல்ல.  உமேஷின் மனித நேயம் குழந்தைகளின் பார்வையைப்போல் அனைத்தையும் ஆச்சரியத்தோடு பார்ப்பது, அன்பு செலுத்தவும் குதூகலித்துக் குதிக்கவும் தயக்கமே காட்டாதது.

சிறந்த குழந்தை எழுத்தாளரான உமேஷ் குழந்தைகளின் எதையும் ஆர்வத்தோடும் ஆச்சரியத்தோடும் உற்றுப் பார்த்துக் கவனிக்கும் அதி உன்னதமான திறனை, குதூகலத்தை, பிரியத்தை இத்தொகுப்பிலிருக்கும் அத்தனைக் கவிதைகளுக்குள்ளும் கொண்டு வந்திருக்கிறார்.

யாரையும் துச்சமென்று கருதாத, யாரையும் விலக்கி வைக்காத, எல்லோரையும் அரவணைக்கக் காத்திருக்கும், புதுமைகளைப் பார்த்து ‘ஐ’ என்று வியந்து கைகொட்டும் அந்த நிர்விகல்பமற்ற பார்வைதான் இந்தக் கவிதைகளின் உக்கிரத்திற்கும் கனத்திற்கும் மத்தியிலும் அவற்றின் ஜீவகளை மாறாமல் பார்த்துக் கொள்கின்றன.

உமேஷே ஒரு கவிதையில் இந்தக் குழந்தைப் பார்வையின் தன்மையைச் சொல்கிறார்:

மலையைப் பார்த்த  குழந்தை

செத்துப்போன டைனோசரைப் புதைத்த இடம் இதுதானா? என்று கேட்டது

அருகில் கடலைப் பார்த்துக்கொண்டிருந்த  அம்மா

கடலைக் காகிதமாக நம்பிய யாரோ ஒருவன்

தொலைவில் கப்பலைத் தீட்டியிருக்கிறான் பார்!  என்றாள்

கடல் நீரை கையில் அள்ளிய குழந்தை இதுதான் சின்ன கடலா ?   என்றது.

கொஞ்சம் மணலை அள்ளி குழந்தையின் கையின் ஓரம் போட்டு

இதோ சின்ன கடற்கரை என்றாள் அம்மா.

பதிலுக்கான எதிர்பார்ப்பின்றி அடுத்த கேள்வியும்

கேள்விக்கான தேவையின்றி அடுத்த பதிலுமாக

உரையாடல் தொடர

ஒரு சிறிய பெட்டியை நகர்த்திவிடுவது  போல

ஒருவருக்கொருவர் அன்பை நகர்த்திக்கொண்டிருந்தார்கள்

(‘காணாமல்போன மொத்த அன்பும்’)


குழந்தைகள் உற்றுப் பார்ப்பதும், குதூகலிப்பதும், குதிப்பதும், விரல் நீட்டி ஆச்சரியப்படுவதும் மனிதர்கள்மேல், இந்தப் பிரபஞ்சத்தின்மேல், இந்தப் பிரபஞ்சத்திலுள்ள சகல உயிரினங்களின்மேல் அவர்களுக்கு இயல்பாகவே கொப்பளிக்கும் பேரன்பின் வெளிப்பாடுகளே.

தூய்மையான அன்பு அனைத்தையும் பிரகாசமாக்கிப் புதுமையாக்குகிறது. அன்பு வேறு புதுமை வேறல்ல.

பூவிதழ் உமேஷின் ‘சதுரமான மூக்கு’ எல்லாவற்றுக்கும் மேலாக இந்த உலகத்தின் மீதும் உலகத்தின் உயிர்கள் அனைத்தின்மீதும் இந்தக் கவிஞர் வைத்த அன்பில் மறுரூபமான வார்த்தைகளால் எழுதப்பட்ட தொகுப்பு.

அன்பு எப்படி ஜெயிக்காமல் போகும்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s