தஸ்தயெஸ்கியின் ‘சூதாடி’ குறுநாவலின் அடிப்படைக் கருத்து ஒரு விதத்தில் மகாபாரதக் கதையை அறிந்தவர்கள் அனைவருக்கும் பரிச்சயமானதாகவே இருக்கும்.
சூதாட்ட வெறியில் பணம் முதற்கொண்டு சேனைகள், நாடு, தம்பிகள், மனைவி முதற்கொண்டு தன்னையும்கூட இழக்கும் தர்ம புத்திரனைப் போலவே சூதாடி நாவலின் கதாநாயகனான அலெக்ஸி இவானோவிச்சும், ஓய்வுபெற்ற தளபதியும், தளபதியின் உறவுக்காரியான மாஸ்கோ கிழவியும் ரூலத்தன்பர்க் சூதாட்ட விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நூற்றுக்கணக்கானவர்களும் தங்களையே இழக்கத் தலைப்படுகிறார்கள்.
ஆனால் தர்ம புத்திரன் சூதாட்டப் பிரியன் என்றாலும்கூட கௌரவர்களின் சபையில் நடந்த சூதாட்ட நிகழ்வில் தன்னையும் தன்னைச் சார்ந்திருந்தவர்களையும் தோற்ற பிறகு அவன் மீண்டும் அதே அளவில் சூதாட்டத்தில் இறங்கியதாகச் சேதி இல்லை. ஆனால் தஸ்தவ்யஸ்கியின் நாவலில் சூதாட்ட வெறி அதனால் பாதிக்கப்பட்டவர்களைப் பெரும் காய்ச்சலாய்ப் பீடித்து அவர்களை மீண்டும் மீண்டும் சூதாட்டத்தில் ஈடுபடச் செய்கிறது. சூதாட்டத்தில் ஒரு வகையான ரூலட் விளையாட்டின் பெயரையே பெயராகக் கொண்ட ரூலத்தன்பர்க் நகரத்திற்குச் சும்மா வந்தவளான மாஸ்கோ கிழவியையும் கிருமித் தொற்றுப்போல் தொற்றிக் கொள்கிறது.
தர்ம புத்திரனைப் பிடித்த சூதாட்ட வெறி ஒரு குறிப்பிட்ட கால நேரத்திற்கு நிகழ்ந்த மயக்கம் என்றால் தஸ்தவ்யெஸ்கியின் நாவல் காண்பிக்கும் சூதாட்ட வெறி அருகில் வந்தவர்களைத் தொற்றிக் கொண்டு மெல்ல அவர்களின் அடிப்படை இயல்புகளைச் சிதைத்து அவர்களை மனிதர்களுக்கும் கீழான நிலையில் அடிமையாக்கும் அளவுக்குத் தீப்போல பற்றிக் கொண்டு நின்று நிதானமாக அவர்களை முற்றிலும் அழித்துச் சின்னாபின்னமாக்கும் பெருநோய்.
ஓய்வுபெற்ற ரஷ்ய தளபதி ஒருத்தரின் குழந்தைகளுக்கு வீட்டோடு வாத்தியாராக வேலை செய்கிறான் கதாநாயகன். அவர்கள் குடும்பம் மொத்தமும் சூதாட்டத்திற்குப் பெயர்போன ஜெர்மனியின் ரூலத்தன்பர்க் நகரத்தில் தங்கியிருப்பதாகக் கதை அமைந்திருக்கிறது. சூதாட்டப் பிரியரான ஐம்பத்து ஐந்து வயதான தளபதி தன் சொத்துக்கள் முழுவதையும் பிரஞ்சுக்காரனான டி கிரியூவிடம் அடகு வைத்திருக்கிறார். டி கிரியூவின் உறவுக்காரி என்று சொல்லப்படும் பிரஞ்சுக்கார இளம்பெண்ணிடம் தளபதி பைத்தியமாக இருக்கிறார். டி கிரியூவும் பிளாஞ் என்ற அந்த இளம்பெண்ணும் அவள் தாயார் என்று சொல்லப்படும் மற்றொரு பெண்ணும் தளபதிக்கு அவனுடைய அத்தையான மாஸ்கோ கிழவியிடமிருந்து வந்து சேர வேண்டிய சொத்து வரும் என்று எண்ணி அவருடனேயே இருக்கிறார்கள். அத்தை சாகக் கிடக்கிறாள் என்று செய்தி வரவே தளபதியும் அவருடைய வளர்ப்பு மகள் போலினாவும் அவள் செத்துவிட்டாளா என்று அறிந்து கொள்ள மாஸ்கோவுக்குத் தந்திகளை அனுப்புகிறார்கள்.
இதே நேரத்தில் குறுநாவலின் கதாநாயகன் அலெக்ஸி போலினாவைக் காதலிக்கிறான். அவளுக்காக எல்லாவிதமான அடிமைத்தனங்களையும் அவமானங்களையும் தாங்கிக் கொள்கிறான். ஆனால் போலினா அவனிடத்தில் பாராமுகமாகவே இருக்கிறாள். அவனை வேண்டுமென்றே அவமானப்படுத்துகிறாள். தனக்குப் பணம் தேவைப்படுகிறது என்று சொல்லி அவனைச் சூதாடத் தூண்டுகிறாள். பின்னர் அவள் டி கிரியூவிடம் ஐம்பதாயிரம் பிராங்குகளுக்குக் கடன்பட்டிருப்பதும் அதைத் திருப்பித்தர அவளுக்குப் பணம் தேவைப்படுவதும் அலெக்ஸிக்குத் தெளிவாகிறது. பித்துப் பிடித்ததுபோல் சூதாடி அலெக்ஸி அவளுக்காக இரண்டு லட்சம் பிராங்குகளை வெல்கிறான். ஆனால் பணத்தை வைத்துக் கொண்டு டி கிரியூவைப்போலவே அலெக்ஸியும் தன்னை வாங்க நினைப்பதாகக் கூறும் போலினா ஆஸ்ட்லி என்ற ஆங்கிலேயனோடு ஓடிப் போகிறாள். இதற்கிடையில் ரூலத்தன்பர்க் நகரத்தில் நல்ல தெம்போடு பிரசன்னமாகும் மாஸ்கோ அத்தைக்கிழவி சூதாட்டத்தால் ஈர்க்கப்பட்டு ஒரு லட்சம் ரூபிள்கள்வரை இழக்கிறாள். அவளிடமிருந்து தளபதிக்கு எந்தச் சொத்தும் வர வாய்ப்பில்லை என்று நினைக்கும் டி கிரியூவும் பிளாஞ்சும் அவரை விட்டுப் பிரிகிறார்கள். பிளாஞ் அலெக்ஸியைத் தன்னுடன் பாரீஸ் நகரத்துக்கு வரச் சொல்கிறாள். அவனுக்கு ‘பட்டப் பகலில் நட்சத்திரங்களைக் காட்டப் போவதாக’ வாக்களிக்கிறாள். பாரீஸில் பிளாஞ்சுக்காகத் தன் மொத்தப் பணத்தையும் அலெக்ஸி செலவழிக்கிறான். கடைசியில் பிளாஞ் பாரீஸுக்குத் தன்னைத் தேடி வந்த தளபதியைத் திருமணம் செய்து கொள்ள ஒட்டாண்டியாக மீண்டும் ஜெர்மனிக்குப் போகிறான். கையில் காசில்லாத நிலையில் மீண்டும் ஆஸ்ட்லியைச் சந்திக்கிறான். அலெக்ஸியைப் பார்த்துவரவே போலினா தன்னை அனுப்பியதாகச் சொல்லும் ஆஸ்ட்லி போலினா உண்மையில் அலெக்ஸியைக் காதலித்ததாகச் சொல்கிறார். அலெக்ஸியின் நிலையைத் தெரிந்து கொண்டு நிறைய பணம் கையிலிருந்தால் அலெக்ஸி அதைச் சூதாட்டத்தில் தொலைத்துவிடுவான் என்று சொல்லி அவனுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டுப் போகிறார்.
சூதாட்டத்தில் ஒரே கணத்தில் இழந்ததையெல்லாம் மீட்க முடியும் என்ற எண்ணத்தில் அலெக்ஸி ஆழ்ந்திருக்கும் இடத்தில் குறுநாவல் முடிகிறது.
தஸ்தவ்யெஸ்கியின் ‘சூதாடி’ குறுநாவலைச் சூதாட்டத்துக்கு எதிரான பிரச்சாரமாகப் பார்க்கலாம்தான். ஆனால் அது வெறும் மேம்போக்கான வாசிப்புத்தான்.
1866ல் இந்த நாவலையும் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலையும் ஒரே நேரத்தில் எழுதிக் கொண்டிருந்த தஸ்தவ்யஸ்கி தனது சூதாட்டப் பழக்கத்தால் கடனில் மூழ்கியிருந்தார். அந்தக் கடனைக் கொஞ்சமாவது தீர்க்கக் குறிப்பிட்ட நாளுக்குள் நாவல் எழுதித் தருவதாகச் சொல்லி ஸ்டெல்லொவ்ஸ்கி என்ற பதிப்பாளரிடம் மூவாயிரம் ரூபிள்களுக்குக் கடன்பட்டிருந்தார். அடிமைத்தொழிலாய் நாவல்களை எழுதியே தீர வேண்டிய கட்டாயம் அவரை நெருக்கிக் கொண்டிருந்த வேளையில் தஸ்தவ்யெஸ்கி எழுதிய நாவல்தான் ‘சூதாடி’.
பெரு தொற்று நோயைப்போல் மனிதர்களைச் சீரழிக்கும் சூதாட்டத்தின் விளைவுகளைப் பற்றிய கதை என்றாலும்கூட ‘சூதாடி’ குறுநாவலில் மனித வாழ்க்கையைப் பற்றிய வேறொரு ஆழமான அலசலும் இருக்கத்தான் செய்கிறது.
சூதாட்ட விடுதியில் ஒரே நேரத்தில் தான் ஜெயித்த ஆயிரத்து நானூறு ஃப்ளோரின்களைத் தோற்கும் அலெக்ஸி ரூலத்தன்பர்க் நகரத்தைச் சுற்றி வாழ்ந்துவரும் ஜெர்மானியர்கள் கடுமையாக உழைத்து சிறுக சிறுகச் சேமிப்பதையும் இதனால் பல தலைமுறைகளுக்குப் பிறகே அவர்கள் குடும்பங்கள் செல்வச் செழிப்பாக வாழ வழி ஏற்படுவதையும் சுட்டிக் காட்டி ஏளனமாகப் பேசுகிறான். அவனைப் பொறுத்த வரையில் ஜெர்மானியர்கள் பல தலைமுறைகளாக உழைத்துப் பெறுவதை ஆபத்தானது என்றாலும்கூட சூதாட்டம் ஒரே நொடியில் பெற்றுத் தருகிறது என்று சொல்கிறான்.
பாரீஸ் நகரத்தின் உல்லாசங்களை அனுபவிக்க அழைக்கும் ப்ளாஞ் இரண்டே மாதங்களில் இரண்டு லட்சம் பிராங்குகளைச் செலவழித்துவிடலாம் என்று சொல்கிறாள். இத்தகைய பெரும் தொகையை அறுபதே நாட்களில் செலவழிப்பதா என்று அலெக்ஸி ஆச்சரியப்படும்போது அப்படி வாழும் இரண்டு மாதங்கள் ஒரு முழு வாழ்க்கைக்குச் சமம் என்று ப்ளாஞ் அலெக்ஸியிடம் சொல்கிறாள்.
தஸ்தவ்யெஸ்கி எழுதிக் கொண்டிருந்த காலத்தில் determinism அல்லது காரண காரிய வாதம் என்ற தத்துவம் புகழ்ப்பெற்றிருந்தது. பல வகையான மரபியல், சமூகவியல் காரணங்களுக்கும் விதிகளுக்கும் கட்டுப்பட்டுத்தான் மனிதர்கள் வாழ முடியும் என்று இந்தத் தத்துவம் பேசியது.
சூதாடி நாவலில் அலெக்ஸி சுட்டிக்காட்டிய ஜெர்மானியர்களும், போலினா மீது காதல்வயப்பட்டிருந்த போதும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு அஞ்சி அதை வெளியிட வெட்கப்பட்டுக் கொண்டிருந்த ஆஸ்ட்லியும் இந்தக் காரணகாரிய கோட்பாடுகளுக்கு உதாரணங்களாக வருகிறார்கள். கடைசியில் அவர்கள்தான் வெற்றிப் பெறுகிறார்கள் என்றாலும்கூட அவர்கள் வாழ்க்கைக் காரணங்களுக்கும் விதிகளுக்கும் அடிமைப்பட்டே நிகழ்கிறது.
ஆனால் சூதாட்டம் என்பது காரண காரியங்களுக்குக் கட்டுப்படாது. ஒரே நொடியில் அலெக்ஸியும் மாஸ்கோ கிழவியும் தளபதியும் பெரும் செல்வத்தைப் பெறுகிறார்கள். பின்பு ஒரே கணத்தில் அதை இழக்கிறார்கள்.
ஆனால் பணம் அல்ல இங்கே இலக்கு. குறுநாவலின் கதாநாயகன் தான் வென்ற பணத்தைக் கொஞ்சமும் தயக்கமில்லாமல் போலினாவுக்குத் தர முன் வருகிறான். இரண்டே மாதங்களில் பாரீஸில் ஆடம்பரக் கேளிக்கைகளில் இழக்கிறான். சூதாட்டில் பணத்தைக் கட்டி ஆடி ஜெயிக்கும் பணங்களை மீண்டும் சூதாட்டிலேயே எந்தச் சலனமும் இல்லாமல் இழக்கிறான். குறுநாவலில் பணத்தைப் பொருட்படுத்தாத தன்மை பிரபுக்களின் ராஜாக்களின் குணமாகச் சிலாகிக்கப்படுகிறது.
பின்பு சூதாட்டத்தின் மகத்துவம்தான் என்ன? காரண காரியங்களுக்கு உட்படாத சூதாட்டில் ஈடுபடும்போது அலெக்ஸிக்கு ஏற்படும் உணர்ச்சிகளின் தீவிரம் அவனுக்கு வாழ்க்கையின் சுவையைக் காட்டுகிறது. காரணங்களுக்கும் விதிகளுக்கும் அஞ்சி பாதி வாழ்க்கை வாழும் ரூலத்தன்பர்க் ஜெர்மானியர்கள், ஆஸ்ட்லி போன்றவர்களைவிட அலெக்ஸியும், ப்ளாஞ்சும், தளபதியும் இந்த உணர்ச்சித் தீவிரத்தில் முழு வாழ்க்கையையும் வாழ்ந்து விடுகிறார்கள்.
காரணங்களும் விதிகளும் ஏற்படுத்தும் அன்றாட அடிமைத்தனத்திற்கு எதிரான கலகக்குரல்தான் சூதாட்டம். சொந்தக் கடன்களாலும், பதிப்பக உரிமையாளரின் நெருக்குதலாகும் ஒரே மாதத்தில் ஒரு நாவலை எழுதும் கட்டாயத்துக்குள்ளான தஸ்தவ்யெஸ்கி இத்தகைய கட்டுப்பாடுகளற்ற சுதந்திரத்தைப் பற்றிச் சிந்தித்து இருக்க வேண்டும்.
காதலும் காரண காரியங்களற்ற சூதாட்டம்தான். எந்தவிதமான பற்றுக் கோடுகளுமில்லாமல் சூதாட்டத்தில் ஈடுபடும் அலெக்ஸி அதே போல் போலினாவின் இகழ்ச்சிகளையும் மீறி அவளிடம் மீண்டும் மீண்டும் அவமானப்படுகிறான். அவள் தன்னை மீண்டும் அவமானப்படுத்தி, தனது காலுக்குக் கீழே கிடக்கும் அடிமையாக நடத்த மாட்டாளா என்று ஏங்குகிறான்.
காதலைவிட, அதன் சூதாட்டத் தன்மையில் இருக்கும் உணர்ச்சித் தீவிரம் அவனுக்கு அர்த்தமுள்ளதாகத் தோன்றுகிறது. பாதிச் செத்ததுபோல் வாழும் திருமணத்தைவிட நிறைவேறாத காதலின் உணர்ச்சித் தீவிரம் அவனுக்கு முழு வாழ்க்கைக்குச் சமானமானதாகப் படுகிறது.
ஒரே நொடியென்றாலும் வாழ்க்கையை முழுக்க அள்ளிப் பருகிவிட்டு முற்றாய் அழிந்து போகும் பேராசைக்கும், விதிகளுக்கு உட்பட்டு வாழ்க்கையில் வெற்றியடையும் எண்ணத்துக்குமான தத்துவப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது தஸ்தவ்யெஸ்கியின் ‘சூதாடி’ குறுநாவல்.
