தியானத்தில் சமாதி நிலையை அடையும் ராமகிருஷ்ண பரம்ஹம்சர் தான் முற்றும் பிரம்மத்தில் கரைந்து போகாமல் இருக்கக் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் யாரெனும் அவர் வாயில் இனிப்பைப் புகட்டிவிடக் கேட்டுக் கொள்வார் என்ற கதை உள்ளது.
தஸ்தவ்யெஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ கதையின் கதாநாயகன் கனவுலகில் கரைந்து போகாமல் இருக்க செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் தெருக்களும் அதில் புழங்கும் மனிதர்களும் வாயில் புகட்டிய இனிப்பாக உபயோகப்படுகிறார்கள்.
நகர வாழ்க்கையின் கொடுமை மிகுந்த தனிமையில் காலத்தைக் கடத்தும் அவன் செயிண்ட் பீட்டர்ஸ்ர்க் நகரத்தின் வீதிகளை வலம் வந்தே தன் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்கிறான். ஒரு வகையில் நகரமே அவன் இருப்பை உறுதிபடுத்துகிறது. நகரத்து மனிதர்களின் இன்ப துன்பங்களே அவனது இன்ப துன்பங்களாகின்றன. நகரத்தின் கட்டடங்களோடு அவன் இருப்பு பின்னிப் பிணைந்திருப்பதை தன் வீட்டைத் தன்னோடு தூக்கி அலையும் நத்தையையும் ஆமையையும் தன்னோடு ஒப்பிட்டுக் காட்டும் அற்புத உருவகத்தால் அவன் கதையில் சொல்லிக் காட்டுகிறான்.
நேற்று (11 நவம்பர்) தஸ்தவ்யஸ்கியின் பிறந்த தேதி. அதே சமயம் நேற்று வெண்ணிற இரவுகளின் செம்பதிப்பு வெளிவந்துள்ளது.
தஸ்தவ்யஸ்கியின் அசடன், குற்றமும் தண்டனையும் போன்ற மகத்தான நாவல்களில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கும் பல முக்கியக் கருத்துக்களைத் தன்னுள் கொண்டிருப்பதால் இது முக்கியமான கதை.
மிகுந்த தனிமையில் வாழும் கதையின் கதாநாயகன் கனவுகளிலும் கற்பனைகளிலும் மொத்தமாய் வாழ்ந்து வருகிறான். அவன் தன்னைத் தானே ‘கனவு காண்பவன்’ என்று சொல்லிக் கொள்கிறான். யதார்த்த வாழ்வைவிட அவனுக்குக் கனவுகளே சாரமுள்ளவையாகத் தோன்றுகின்றன. யதார்த்த வாழ்க்கையில் அவனால் செயல்பட முடியாமல் போகிறது. நஸ்தெங்காவிடம் தன் வரலாற்றைச் சொல்லும்போது அது அவனுக்கே ஒரு புனைவு போல தோன்றுகிறது. கனவுகளே அவனைப் பொறுத்தவரை உண்மையானவை.
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் இரவுகளில்கூட சூரிய வெளிச்சம் முழுமையாக மறையாமல் புகைப்படலம்போல் நீண்டு கிடக்கும் கோடை மாதத்தின் ‘வெண்ணிற இரவுகளில்’ நகர மனிதர்கள் விடுமுறைக்காக நகரத்தைவிட்டு நீங்குகிறார்கள். இது அவனது தனிமையை மேலும் அதிகமாக்குகிறது. அந்த நேரத்தில் தெருவில் நஸ்தெங்கா என்ற பெண்ணைச் சந்திக்கிறான். அவள் ஒரு வருடத்திற்கு முன்னால் தன்னைவிட்டு மாஸ்கோ நகரத்துக்குப் பிரிந்து போன காதலனுக்காகக் காத்திருக்கிறாள். இருவரும் நான்கு இரவுகள் சந்தித்துக் கொண்டு தங்களது பரஸ்பரத் தனிமையைப் போக்கிக் கொள்கிறார்கள். தன்னிடம் அன்பாகப் பேசும் முதல் பெண்ணான நஸ்தெங்காவிடம் கதாநாயகன் காதல் கொள்கிறான். காதலன் வரவே மாட்டான் என்று நஸ்தெங்கா முடிவு செய்து கதாநாயகனின் காதலை ஏற்றுக் கொள்ளும் நேரத்தில் காதலன் திரும்பிவரக் கதாநாயகனோடு கைகோர்த்து நடந்து செல்லும் நஸ்தெங்கா அவனை விட்டுக் காதலனைக் கட்டிக் கொள்கிறாள்.
வெண்ணிற இரவுகளின் கருப்பொருள் அன்பும் அதன் வகைகளும். முதல் வகையான அன்பு, மற்றவர்களை தனது விருப்பத்துக்காகவோ பாதுகாப்புக்காகவோ தன்னிடம் பிணைத்துக் கொள்ளும் ஒரு வகையான பிணைப்பு. நஸ்தெங்காவின் குருட்டுப் பாட்டி அப்படித்தான் அவளைத் தன்னோடு பிணைத்துக் கொள்ளப் பார்க்கிறாள். கதையின் இறுதியில் நஸ்தெங்காவும் கதாநாயகனைத் தன் வீட்டு அறையில் வாடகை தந்து குடியேற வற்புறுத்துகிறாள். கதாநாயகன் கற்பனையில் உருவாக்கிய காதலியை அவள் கணவனிடமிருந்து கொண்டு செல்வதாகக் கற்பனை செய்கிறான்.
இரண்டாவது வகை அன்பு, மனிதர்களை அன்றாட வாழ்வோடு பிணைப்பது. நஸ்தெங்காவோடு காதல் கொண்டபின் கதாநாயகன் கனவு காணாமல் இருக்கிறான். சீன இளவரசனைத் திருமணம் செய்து கொள்வதுபோல் கற்பனை செய்யும் நஸ்தெங்காவும் தனது வீட்டில் குடியேறிய இளைஞனோடு காதல் ஏற்பட்ட பின்பு இந்தக் கற்பனையை உதறி விடுகிறாள்.
ஆனால் இதற்கெல்லாம் மேலாக பிரியமானவர்களின் நலனைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்காத அன்பு உண்டு. இந்த அன்பைத்தான் தஸ்தவ்யஸ்கி இந்தக் கதையிலும் தனது பல நாவல்களிலும் மனிதர்களைத் துன்பங்களிலிருந்து மீட்கும் ஆற்றலுடையதாகக் காட்டுகிறார்.
தன்னைக் காதலிப்பதாகச் சொல்லிவிட்டு அடுத்த கணமே காதலனோடு போய்விடும் நஸ்தெங்கா கதாநாயகனிடம் கடிதம் வழியாக மன்னிப்புக் கேட்கிறாள். அந்த நேரத்தில் கதாநாயகன் ‘உன்னைக் கவலை கொடுத்துத் துன்புறுத்துவேன் என்றா நினைத்தாய்’ என்று கேட்கிறான். அவள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான்.
அதுவரை இரவுகளின் கனவு போன்ற மயக்கத்தில் கழிந்த கதை காலை நேரத்தின் வெளிச்சத்தில் முடிகிறது. அவனைச் சுற்றி இருக்கும் நகரம் கதாநாய்கனுக்குத் தெள்ளத் தெளிவாகத் தனது உண்மை இயல்புகளோடு தெரிகிறது.
எதிர்ப்பார்ப்புக்கள் இல்லாத தூய அன்பு மனிதர்களை மீட்கும். அவர்களைச் சூழ்நிலைகளைத் தாண்டியும் உன்னத நிலைக்கு அழைத்துச் செல்லும். இதுதான் தஸ்தவ்யெஸ்கியின் வாதம்.
