நவீனக் கவிதை, நவீன நாவல், நவீன ஓவியம் என்ற சொற்றொடர்களில் உள்ள ‘நவீனம்’ என்ற சொல் ‘புதுமை’ என்ற பொருளில் ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்டது.
ஆங்கிலத்தில் நவீனத்தைக் குறிக்க பயன்படுத்தப்படும் ‘modern’ என்ற வார்த்தை இதே பொருளைத்தான் தருகிறது. லத்தீனில் ‘modo’ அல்லது ‘இதோ இப்போது’ என்ற பொருள் தரும் வார்த்தையிலிருந்து பிறந்த சொல் ‘modern’. இந்தக் கணத்தைப் பிரதிபலிக்கும் எதுவும் மாடர்னானது அல்லது நவீனமானது.
பிறகு இந்த வார்த்தை ஏன் சுமார் 1890களிலிருந்து 1940களின் தொடக்கம் வரையிலான காலக்கட்டத்தில் எழுந்த ஒரு கலை, இலக்கிய இயக்கமான modernism அல்லது நவீனத்துவத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது என்று நீங்கள் கேட்கலாம்.
இலக்கியத்தில் நவீனத்துவத்தைப் புரிந்துகொள்ள நவீன ஓவியத்தின் பிதாமகராகக் கருதப்படும் க்ளோத் மோனே-யின் (Claude Monet) ‘செயிண்ட் லாசார் ரயில் நிலையம்’ என்ற பெயருடைய ஓவியங்களைக் காண்பதால் அறிந்து கொள்ளலாம்.
பிரஞ்சுக்காரரான மோனே 1877ல் பாரீஸில் உள்ள செயிண்ட் லாசார் ரயில் நிலையத்தை மையமாகக் கொண்டு பல ஓவியங்களைத் தீட்டினார். அந்த ஓவியங்களின் குறிக்கோள் ஒரே கோணத்திலிருந்து பார்க்கும்போது அந்த ரயில் நிலையத்தின் தோற்றத்தில் இரவு, பகல், பனிப் பொழிவு போன்ற தட்ப வெப்ப மாற்றங்கள், ரயில் வண்டி நிலையத்திற்குள் நுழையும்போது அது விட்டுக்கொண்டே வரும் புகை ஆகியவற்றால் ரயில் நிலையத்தின் நிறங்களிலும் வெளிப்புறத் தோற்றத்திலும் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்வது.
ஆனால் பழைய ஓவியர்களைப்போல் மோனே ரயில் நிலையத்தைத் துல்லியமான கோடுகளால் வரைந்து பின் அக்கோடுகளுக்குள் வண்ணம் தீட்டவில்லை. மாறாக நேரடியாகவே தூரிகையால் சாயத் தீற்றல்கள், சுழிப்புக்கள் மற்றும் பட்டைகள் மூலமாகவே அந்தக் காட்சிகளைத் தீட்டினார்.
காட்சிகள், பொருட்கள் என்பவனவற்றைத் தாண்டி அவர் கண் நிறங்களையும், வடிவங்களையும் பதிவு செய்ய தொடங்கியிருந்தது. மோனே பின்னாளில் வரைந்த ‘அல்லிகள்’ மற்றும் ‘வைக்கோல் போர்கள்’ ஆகிய ஓவியங்கள்கூட வெளிச்ச வேறுபாடுகளால் ஏற்படும் காட்சி மாற்றங்களைப் பதிவு செய்பவையாக இதே பாணியில் தீட்டப்பட்டன.
‘ஒரு பறவை பாடுவதைப்போல் நான் ஓவியன் தீட்ட விரும்புகிறேன்’ என்றார் மோனே.
இதில் என்ன நவீனத்துவம் என்கிறீர்களா?
இலக்கிய நவீனத்துவத்தின் இரண்டு முக்கியக் கோட்பாடுகளை மோனேயின் ஓவியங்களில் காணலாம்:
1. பழைய ஓவியர்கள் காட்சிகளையும் பொருள்களையும் துல்லியமாக வரைவதே ஓவியக்கலை என்றார்கள். ஆனால் மோனேயின் ஓவியங்கள் ஓவியத்தின் கருப்பொருளைத் தாண்டி கலை உத்திகள், வெளிச்ச மாற்றங்கள் ஆகியவை காட்சியில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் முக்கியமாகக் கொண்டன.
போதனைகளயோ, வெறும் பொழுதுபோக்கையோ மையமாகக் கொண்ட கதைகளிலிருந்து இலக்கிய நவீனத்துவம் மாறுபட்ட கதைக்கூறல் உத்திகளையும், இலக்கியப் பிரதியின் வடிவத்தைக் குறித்த சோதனை முயற்சிகளையும், புதிய சொல்லாடல்களையும், நான் லீனியர் கதை சொல்லலையும் பிரதானப்படுத்தியது.
படைபின் உத்திகளை முன்னிறுத்தியதால் இவ்வியக்கம் ‘கலை கலைக்காகவே’ (Art for Art’s sake) என்ற முழக்க வரியினால் அறியப்பட்டது.
அதே சமயம் படைப்பின் உத்திகள் பிரதானமானதால் ‘எல்லாவற்றையும் புதுமையாக்கு’ (‘Make everything new’) என்ற வாசகம் நவீனத்துவத்தின் தாரக மந்திரமானது.
2. பழைய ஓவியம் ஏதோ ஒரு கணத்தில் துல்லியமாக வரையப்பட்ட ரயில் நிலையத்தையோ, அல்லிகளைகோ, வைக்கோல் போர்களையோ மாத்திரமோ மாற்றங்களில்லாத சத்தியமாகக் காண்பிக்க, மோனே பொருள்களின் தோற்றமும் குணமும் சூழ்நிலையால் மாறிக் கொண்டே இருப்பதைக் காட்டினார். ஒரே காட்சியின் பல கூறுகளாகத் தீட்டப்பட்ட பல ஓவியங்கள் வழியாக மட்டுமே எப்படி ஒரு பொருளின் உண்மையான முகம் தெரியுமோ அதுபோலவே ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு மனிதனின் நல்லதும் கெட்டதும் சேர்ந்த பிளவுபட்ட பல கூறுகளைக் காண்பிப்பதால் மட்டுமே சமுதாயத்தின் அல்லது மனிதர்களின் உண்மையான சொரூபத்தைப் புனைவில் கொண்டு வர முடியும் என்று இலக்கிய நவீனத்துவம் நம்பியது.
மனிதர்களின் ஆன்மாவிலும் மனிதச் சமுதாயத்திலும் ஏற்பட்டிருக்கும் மிக ஆழமான பிளவுகளை ஆராய்ந்து ஒரு முழுமையான தரிசனத்தைத் தருவதையே நவீன படைப்புக்கள் தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன.

