
நவீன தென் அமெரிக்க நாவல், சிறுகதை இலக்கியத்தின் மிக முக்கிய ஆளுமையாகக் கருதப்படும் ரோபர்ட்டோ பொலான்யோ தன்னை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு கவிஞனாகத்தான் அடையாளம் கண்டு கொண்டார்.
உரைநடையைவிட கவிதையையே உன்னதமான கலை வடிவமாக பொலான்யோ கருதினார்.
“யாரையும்விட கவிதை துணிச்சலானது” என்பது பொலான்யோவின் கூற்று. 2003ல் பொலான்யோவின் மரணத்துக்குப் பின்பு அவர் எழுதிய அனைத்துக் கவிதைகளையும் 800 பக்கங்கள் வரும் ஒரே தொகுப்பாக அவர் வாரிசுகள் வெளியிட்டிருக்கிறார்கள்.
அவற்றில் 120 கவிதைகளை ஸ்பானிய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்த்திருக்கிறேன். இன்று மாலை வேலை முடிந்தது.
அந்தக் கவிதைகளில் ஒன்று.
SP, 2 நவம்பர் 2020
ஒரு வார இறுதி
அந்த வட்டாரத்தைச் சாத்திவிட்டார்கள். இன்னமும் பாதுகாப்பு வளையங்களாக நின்றுகொண்டிருப்பவர்கள் போலீஸ்காரர்கள் மாத்திரமே,
காதல் ஜோடிகள் தமது அறைகளைவிட்டு வெளியேறாமல்,
அலட்சியமும் மொட்டைத்தலையும் உடைய பாருக்குச் சொந்தக்காரன்,
கூரையில் பதிக்கப்பட்டிருக்கும் கண்ணாடிகளில் நிலவு.
செத்துப்போன போலீஸ்காரர்களும்
கடற்கரையில் கொழுந்து விட்டெரியும் வாகனங்களும் நிறைந்த ஒரு வார இறுதியைப் பற்றிக் கனவு காண்கிறேன்.
பயம் நிறைந்த இளமையான உடல்கள், இந்த வருடங்களுக்கு அப்படித்தான் குறிப்பு எழுதுவோம்:
பயம் நிறைந்த இளமையான உடல்கள், சுருங்கிப் போக ஆரம்பித்தபடி, புன்னகைத்தபடி, படித்தபடி, காலி குளியல் தொட்டியில் நீட்டிக் கிடந்த நிலையில்.
Un fin de semana
Han cerrado la zona. A esta hira
sólo quedan en pie los cordones
de la policía, las parejitas sin salir
de sus habitaciones,
el dueño del bar indiferente y calvo
la luna en la claraboya.
Sueño con un fin de semana
lleno de policías muertos y automóviles
quemandose en la playa.
Jóvenes cuerpos tímidos, así
resumiremos estos años:
jóvenes cuerpos tímidos que se arrugan,
que sonríen y estudian despatarrados
en la bañera vacía.