பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பிறகு பால்ஸாக், ஸ்டெந்தால், ஹூகோ ஆகியவர்களின் எழுத்துகளின் வெளிப்படத் தொடங்கிய பிரெஞ்சு யதார்த்தவாத எழுத்து குஸ்டாவ் ப்ளோபேர்ட்டின் நாவல்களின் உச்சத்தைத் தொட்டது.
யதார்த்தவாதம் குறிப்பிட்ட மனிதர்களையும் அவர்கள் வாழ்ந்து வந்த குறிப்பிட்ட சூழலையும் பற்றிய மிகத் துல்லியமான விவரிப்புக்களால் மனிதர்களின் என்பவர்கள் யார், அவர்களின் உண்மையான இயல்புகள் என்ன என்ற தரிசனத்தை எட்ட முயன்றன.
மனிதர்களையும் அவர்களால் நிகழ்த்தப்படும் சரித்திர நகர்வுகளையும் எழுதும்போது அவர்கள் வாழ்ந்த சூழலையும் துல்லியமாக விவரிப்பது அத்தியாவசியம் என்பது யதார்த்தவாதத்தின் அடிப்படைக் கோட்பாடு.
மனிதர்கள் அவர்கள் வாழ்கின்ற நிலவியல் சூழல், அணிகின்ற ஆடைகள், பேசுகின்ற மொழி, உண்கின்ற உணவு, அனுபவிக்கின்ற தட்பவெப்பங்களால் ஆகிய அனைத்தினாலும் பாதிக்கப்படுகிறார்கள். அதே சமயம் மனிதர்கள் இவற்றின்மீது ஓயாமல் ஆளுமை செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
மனிதன் – சூழல் ஆகிய இவ்விரண்டின் ஓயாத பரஸ்பரத் தாக்கத்தால்தான் சரித்திரமும், அரசியலும், ஆன்மீகப் பற்றுகளுமேகூட உருவாகின்றன என்கிறது யதார்த்தவாதம்,
சூழலிலிருந்து மனிதனைப் பிரிப்பது அவனை வெறும் தட்டையான கருத்தியல் குறியீடாக மட்டுமே மாற்றிவிடும் என்று பிரெஞ்சு யதார்த்தவாத எழுத்தாளர்கள் திடமாக நம்பினார்கள். இப்படிப்பட்ட படைப்புக்கள் தட்டையான படைப்புக்களாக விளங்குமே அன்றிச் செறிவுள்ள இலக்கியமாவது கடினம்.
பால்ஸாக் முதலியோர்களின் எழுத்து மிகச் செறிவான விவரிப்புக்கள் நிறைந்தவையாக இருந்தன. ஒரு வீட்டின் வரவேற்பறையை விவரித்தாலும் போர்க்களத்தை விவரித்தாலும் பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிரெஞ்சு நாவலாசரியர்கள் அவற்றில் காணப்படும் எல்லா விவரங்களையும் – ஆணியிலிருந்து யானைவரை, கதாபாத்திரங்களின் ஒவ்வோரு அசைவும் உள்பட – வாசகர்களின் கண்முன்னால் கொண்டுவர முயன்றார்கள்
பால்ஸாக்கின் நாவல் அத்தியாயங்களைப் படித்து அவற்றில் எழுதியுள்ளபடி காட்சிகளையும், உரையாடல்களையும், கதா மாந்தர்களின் நகர்வுகளையும் அமைத்த ஒரு முழுத் திரைப்படத்தைத் தயாரித்துவிட முடியும் என்பார்கள்.
ப்ளோபேர்ட் தனது நாவல்களில் இந்த விவரிப்புத் துல்லியத்தை மனிதர்களின் உள்ளார்ந்த நிலைகளை விவரிக்கும் வகையில் கூர்மையாக்கினார்.
ப்ளோபர்ட்டின் படைப்புக்களில் அளவில் சிறியதான ‘ஓர் எளிமையான இதயம்’ இவர் எழுத்து பாணிக்கு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
ஃபெலிசிட்டே என்ற ஏழைப் பெண் மாதாம் ஆபேயின் என்பவளிடம் வேலைக்காரியாகச் சேர்கிறாள். ஃபெலிசிட்டேயின் காதலன் ராணுவத்தில் கட்டாய ஆள்சேர்ப்பிலிருந்து தப்புவதற்காக ஒரு கிழவியைத் திருமணம் செய்து கொள்கிறான். காதல் தோல்வியில் மனமுடைந்து போகும் ஃபெலிசிட்டே தன் எஜமானியின் சேவையில் மட்டுமே காலத்தைக் கழிப்பது என்று முடிவு செய்கிறாள்.
மாதாம் ஆபேயினின் மகனையும் மகளையும் தன் பிள்ளைகளைப்போல் வளர்ப்பதிலேயே தன் கவனத்தைச் செலுத்துகிறாள். இரு குழந்தைகளும் பள்ளிக்கூட வயதை எட்டியதும் படிப்பதற்காக வெளியூருக்குப் போக அவள் மனம் மீண்டும் உடைகிறது. பின்னர் அவள் பிரியம் வைத்திருக்கும் அவளுடைய அண்ணன் மகனும் கடலின் மாலுமியாகப் போய் மாண்டுவிடுகிறான். இந்த இழப்புகளுக்கு இடையில் மாதாம் ஆபேயினின் பக்கத்து வீட்டுக்காரம்மாளின் வீட்டில் அமெரிக்காவிலிருந்து ஒரு கறுப்பின வேலையாளும் பஞ்சவர்ணக்கிளியும் வந்து சேர்கிறார்கள். நாளடைவில் வெளியூருக்கு மாற்றலாகிப் போகும் அந்த அம்மாள் பஞ்சவர்ணக் கிளியை மாதாம் ஆபேயினிடம் விட்டுச் செல்கிறாள். தான் இழந்த அத்தனைப் பேர்களுக்குப் பதிலாகவும் ஃபெலிசிட்டே அந்தக் கிளியிடம் பாசம் காட்டுகிறாள். ஒரு நாள் கிளியும் செத்துப் போகிறது. ஃபெலிசிட்டே அதைப் பாடம் செய்யக் கொடுத்துத் தனது அறையில் செத்துப் போனவர்களின் பழைய உடைமைகளோடு பாடம் செய்யப்பட்ட அந்தக் கிளியை வைத்துக் கொள்கிறாள்.
கொஞ்ச நாளில் மாதாம் ஆபேயினும் செத்துப் போக, ஃபெலிசிட்டே கொஞ்சம் கொஞ்சமாகப் பலவீனமாகத் தொடங்குகிறாள். அவளுக்குக் காது கேட்காமல் போகிறது. அவளுடைய புத்தி சுவாதீனமும் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுக் கொள்கிறது. தேவாலயத்தில் பரிசுத்த ஆவியானவரின் குறியீடாக வரையப்பட்டிருக்கும் வெண்புறாவின் வம்சாவளிதான் தனது கிளி என்று நம்ப ஆரம்பிக்கிறாள்.
இறுதியாக ஒரு கிறிஸ்துவப் பண்டிகையின்போது அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைப்பதற்காக மற்றவர்கள் மலர்களையும் கைவினைப் பொருள்களையும் கொண்டுவர ஃபெலிசிட்டே தனது பாடம் செய்யப்பட்ட பஞ்சவர்ணக் கிளி அங்கு வைக்கப்பட வேண்டும் என்று சண்டை போடுகிறாள். தன் கிளியே பரிசுத்த ஆவியானவராக தன் ஆன்மாவைப் பெற்றுக் கொள்வதாக எண்ணிக் கொண்டே ஃபெலிசிட்டே செத்துப் போகிறாள்.
தனது சூழலையும், தான் படும் இன்னல்களையும் மீறியும் மிகச் சிறந்த தியாக குணங்களுடன் வாழும் மனிதர்களின் கதைகள் பத்தொன்பதாவது நூற்றாண்டு ஐரோப்பிய இலக்கியத்தில் (ரஷ்ய நாவல்கள் உள்பட) ஒன்றும் புதிதில்லைதான்.
ஆனால் துல்லியமான விவரிப்புக்களில் மட்டும் தங்கிக் கொஞ்சமும் உணர்ச்சி மிகுந்த நாடகத்தனமான நீண்ட உரைகளுக்கு விலகாத ஃப்ளோபெர்ட்டின் சொற்சிக்கனத்தால் ஃபெலிசிட்டேயும் அவளுடைய லூலூ என்ற பஞ்சவர்ணக் கிளியும் அமரத்துவம் பெற்றுவிடுகிறார்கள்.
#flaubert
