குறுங்கதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று என்னிடம் கேட்பவர்களிடம் நான் எடுத்து வைக்கும் மிகச் சிறந்த உதாரணங்களில் ஒன்று ரோபர்ட் வால்சர் (Robert Walser)-இன் ‘She Writes’ என்ற கதை. சுமார் 750 வார்த்தைகளே நீளமுடையது.
ஒரே பத்தியாய் ஒரு கடிதத்தின் வடிவத்தில் எழுதப்பட்ட புனைவு. பணக் கஷ்டத்தில் இருக்கும் ஓர் இளம்பெண் தன்னை வைத்து நிர்வாண ஓவியம் ஒன்றைத் தீட்டியிருக்கும் திருமணமான ஓவியனிடம் கொஞ்சம் பணம் கேட்டு எழுதுவதுபோல் அமைந்திருக்கிறது. அந்த ஓவியன் தனக்குத் திருமணமாகவில்லை என்று சொல்லி அந்தப் பெண்ணை ஏமாற்றி அவளுடன் உறவும் கொண்டிருக்கிறான். பின்னர் அவள் கண்களில் படாமல் போக்குக் காட்டுகிறான். இதற்கிடையில் அந்தப் பெண் பல முறை ஓவியனைத் தேடி அவன் வீட்டிற்குப் போகிறாள். அங்கு அவனுக்கு மனைவி மட்டுமில்லாது குழந்தையும் இருப்பது அவளுக்குத் தெரிய வருகிறது. ஓவியக் கண்காட்சியில் அந்த ஓவியன் தன்னை நிர்வாணமாய் வரைந்து வைத்திருக்கும் நிர்வாண ஓவியத்தையும் அவள் பார்க்கிறாள்.
‘ஏ கிழட்டு மிருகமே’ என்று தொடங்கும் வால்சரின் இந்தக் குறுங்கதைத் தன்னைவிட வயது முதிர்ந்த ஓர் ஆணால் வஞ்சிக்கப்பட்ட இளம்பெண்ணின் கோபத்தையும் ஆற்றாமையையும் மிக அற்புதமாகச் சொல்கிறது. வறுமையில் இருக்கும் அவளுக்குச் சொந்தம் என்று சொல்லிக் கொள்வதற்கு இருப்பது அவளுடைய உடல் மட்டும்தான். இன்னும் துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால் அவளிடம் இருக்கும் கற்பும் நிர்வாணமும். பொய்கள் பேசியும், மிகுந்த தந்திரத்தாலும் அந்த முதிர்ந்த ஓவியன் அந்த இரண்டையுமே அவளிடமிருந்து பறித்துக் கொண்டு அவற்றைப் பொதுப் பார்வைக்கான பொருளாக்கி மலினப்படுத்தி விடுகிறான்.
வால்சர் ஒரு முதிர்ந்த ஆணின் பசப்பு வார்த்தைகளை நம்பித் தனது கற்பைத் தொலைத்த பெண்ணின் கதையாக இதை எழுதியிருக்கலாம்தான். ஆனால் அவனை ஓவியனாக்கியதிலும் அவள் உடம்பை நிர்வாண ஓவியமாக்குவதாகக் காட்டியதிலும்தான் வால்சரின் கலை உச்சத்தை அடைகிறது. அது ஒரு துருவம் என்றால், வறுமையில் காரணத்தால் தன்னை ஏமாற்றியவனிடமே காசு கேட்கப் போகும் பெண்ணின் அவமான உணர்வும் மனக்குழப்பமும் மற்றொரு துருவம். ஓவியனிடம் பணம் கேட்டு எழுதும் அதே நேரத்தில் தனது சுயமதிப்பை எவ்விதத்திலும் குறைத்துவிட முடியாது என்று அவள் வாதாட முயல்கிறாள். அவன் தனது உடலைத்தான் பொதுப்பொருளாக்க முடிந்தது, தனது பெண்மையை அவனால் எந்த விதத்திலும் தீண்ட முடியாது என்று சொல்கிறாள்.
“ஓவியத்தில் என்னைத் தத்ரூபமாக வரைந்துவிட்டதாக நினைக்கிறாயா? இல்லை, பன்றியே. படத்தில் இருப்பது நானோ வேறு உயிரோடிருக்கும் எந்தப் பெண்ணுமோ அல்ல. ஏதோ பெண்களின் உருவத்துக்கும் உனது ஓவியத்துக்கும் குத்துமதிப்பாகச் சில ஒப்புமைகள் இருக்கின்றன, அவ்வளவுதான்.”
ஆனால் தனது நிர்வாணத்தை முதன்முதலாகக் கண்ட ஆண் அல்லவா? அவளுடைய உடலை முழுவதுமாகத் தன் கைகளில் வாங்கிக் கொண்டவன். கடுமையான வார்த்தைகளால் அவனைத் தூஷிக்கும் வேளையிலும் அந்தப் பெண் அவனுடைய கயமைத்தனங்களுக்கு அவளே விளக்கம் சொல்வது போலவும் அவன் சுவாரஸ்யமானவன்தான் என்று அவள் சொல்வது போலவும் வால்சர் சித்தரிக்கிறார். கடைசியில் அவன் மனைவியிடம் போய் அவனுடைய திருவிளையாடல்களைச் சொல்லும் வாய்ப்பு அவளுக்கு இருக்கிறது என்று தெரிந்த போதும் அவள் அதை நிராகரிக்கிறாள்.
“நல்லவளான உன் பிரிய மனைவி உன்னைப் பெரிய ஓவியன் என்று கற்பனை செய்திருக்கிறாள். அந்தக் கற்பனையிலேயே அவள் இருக்கட்டும். உனக்கும் அதுதான் நல்லது. எனக்கு உன்மீது கொஞ்சம்கூட மரியாதை இல்லை. என்னைப் பொறுத்தவரிக்கும் நீ ஒரு விளையாட்டுத்தனமான செல்ல குரங்கு. போது, சொன்னதைப்போல் செய், நான் கேட்டதை உடனே அனுப்பு”
என்று இந்தக் கதையை வால்சர் முடிக்கிறார்.
குறுங்கதை என்பது கடைசியில் ஒரு ‘ட்விஸ்ட்’ வைத்து வாசகர்களுக்கு கிளுகிளுப்பூட்டவோ வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கவோ மட்டும் ஏற்பட்ட வடிவம் அல்ல. போதனைகளை அள்ளி வழங்கும் குட்டிப் பிரசங்கமோ சொற்களால் செய்து காட்டப்படும் கோமாளித்தனமோ அல்ல.
வெறும் வார்த்தை அடுக்குகளால் ஏற்படக் கூடிய அலங்காரத் திரைகளை விலக்கி ஒரு மிகச் சிறிய தருணத்தில் மனித வாழ்வின் மகத்துவத்தையோ அல்பத்தனத்தையோ காட்டக் கூடிய சாத்தியங்கள் உள்ளவை குறுங்கதைகள்.
மிகச் சில வார்த்தைகளைக் கொண்டே ஒரு தேர்ந்த குறுங்கதை ஆசிரியரால் ஒரு பெரிய வாழ்வைக் குறிப்புக்களால் உணர்த்திவிட முடியும். இதைத்தான் வால்சர் இந்த மிகச் சிறிய கதையில் செய்திருக்கிறார்.
தேவையில்லாத விவரிப்புக்களை விலக்கிய சொற்செட்டும் மிக நுண்ணிய வகையில் அமைக்கப்பட்ட கதைக் கட்டுமானமும்தான் குறுங்கதை வடிவத்தின் பலங்கள். வால்சரின் இந்தக் கதை முதல் சில வரிகளில் பணம் கேட்டு எழுதும் பெண்ணைப் பற்றிப் பணம் பறிப்பவள் என்ற எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கிப் பின்பு சின்னச் சின்ன விவரங்களால் அவளுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அவமதிப்பை எடுத்துக் காட்டுகிறது.
1878ல் சுவிட்சர்லாந்தில் பிறந்த ராபர்ட் வால்சர் பதினான்கு வயதில் வீட்டை விட்டு வெளியேறி சிறு சிறு வேலைகள் செய்து தேசாந்திரியாய்த் திரிந்தார். குறுங்கதை வடிவத்தை மிகச் சிறப்பாய்க் கையாண்டவர்களில் காலத்தில் முந்தியவராகக் கருதப்படுகிறார். காஃப்காவுக்கும், லிடியா டேவிஸ்ஸுக்கும் முன்னோடியாகக் கருதப்படுகிறார். இவ்விருவரும் வால்சரின் எழுத்தின் மீது அவர்கள் வைத்திருந்த பெரும் மதிப்பை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள்.
வால்சரின் ’Berlin Stories’ என்ற தொகுப்பும், ‘Girlfriends, Ghosts and Other Stories’ என்ற தொகுப்பும் வாசிக்கத் தகுந்தவை.
அருமையான பகிர்வு. நன்றி சார்…
LikeLike