இன்றைய இந்தோனேசிய தலைநகரமான ஜகர்த்தா அமைந்துள்ள ஜாவா தீவு பண்டைய வடமொழி நூல்களில் ‘யவதிவீபம்’ என்று அழைக்கப்படுகிறது.
யவ: என்றால் வடமொழியில் பார்லி அல்லது வாற்கோதுமை.
கடந்த ஒரு வாரமாக ஒரு புனைவுக்காக ஜாவா தீவின் மத்தியில் மெராபி மற்றும் சுந்தோரோ என்ற இரண்டு இரட்டை எரிமலைகள் சூழ்ந்திருக்கும் பகுதியில் உள்ள பண்டைய போரோபுதூர் புத்த ஆலயத்தைப் பற்றி வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்தப் பகுதியை ஆண்டு வந்த சைலேந்திர பேரரசின் மன்னனான சமரதுங்கனால் கட்டப்பட்டது என்று நம்பப்படும் போரோபுதூர் இன்றுவரை பல மர்மங்கள் தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது.
எரிமலைக் கற்களைக் கொண்டு புத்தத் தியான மண்டலச் சக்கரத்தின் வடிவத்தி கட்டப்பட்டிருக்கும் போரோபுதூர் ஆலய வளாகம் கட்டப்பட்ட ஒரிரு நூற்றாண்டுகளுக்கு உள்ளாகவே ஆள் நடமாட்டமில்லாத இடமாகக் காட்டுக்குள் மறைந்து போனது.
தொடர்ந்து ஏற்பட்ட எரிமலை வெடிப்புக்களால் விவசாயச் செழிப்புள்ள அப்பகுதி கைவிடப்பட்டது என்று நம்பப்பட்டாலும் போரோபுதூர் ஏன் மக்களின் நினைவிலிருந்து மறைந்து போனது என்பதற்கு எவ்விதமான தெளிவான காரணத்தையிம் இதுவரை சொல்ல முடியவில்லை.
நவீன சிங்கப்பூரை நிறுவியவராகக் கருதப்படும் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் சர் ஸ்டாம்ஃபோர்டு ராஃபிள்ஸ் ஜாவாவின் துணை ஆளுநராக இருந்த போது (தலைமையகம்: கொல்கத்தா), போரோபுதூர் வளாகம் மீண்டும் 1814ல் கண்டெடுக்கப்பட்டது. இது சிங்கப்பூரில் ராபிஃல்ஸ் காலடி வைப்பதற்குச் சுமார் 5 வருடங்களுக்கு முன்னால். முதலில் புல்லும் தாவரங்களும் மண்டிக் கிடந்த வளாகத்தை எல்லோரும் சிறு குன்று என்றுதான் நினைத்திருந்தார்கள்.
செடி கொடிகளை மீறியும் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்பட்ட இந்திய சிற்பக்கலை அம்சங்களைக் கொண்ட சிலைகளைப் பார்த்துத் தாவரங்களை அகற்றியபோது கோவில் தெரிந்திருக்கிறது.
ஒன்பது அடுக்குகளாக – முதல் ஆறு அடுக்குகள் சதுர வடிவத்திலும், அடுத்த மூன்று வட்ட வடிவத்திலும் உச்சியில் குவி மாடத்தோடு – அமைந்திருக்கும் போரோபுதூர் வளாகம் ஆலயம் என்று அழைக்கப்பட்டாலும் அதன் உட்புறமாகச் சென்று வழிபடுவதற்கு வழிபாட்டுக் கூடமிருந்ததாகத் தெரியவில்லை.
மாறாக ஆலயத்தின் வெளிப்புறத்தில்தான் வேலைப்பாடுகளும் சுவரில் பதித்த புடைப்புச் சிற்பங்களும் ஒவ்வொரு தளத்தையும் இணைக்கும் படிக்கட்டுகளும் நிறைந்திருக்கின்றன.
போரோபுதூர் ஆலயத்தின் வெளிப்புறத்தில் உள்ள வேலைப்படுகள் மற்றும் சிற்பங்களின் அடிப்படையில் பௌத்த மெய்யியல் போதனைகளை எடுத்துக் காட்டும் மூன்று பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள்.
முதல் பிரிவு ‘காமதாது’ அல்லது ஆசைகளின் பிரபஞ்சம் என்ற பிரிவில் ஒன்பதாம் நூற்றாண்டு ஜாவாவின் அன்றாட வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. வணிகர்கள், தொழிலாளர்கள், ஆடல் பெண்கள், அரசர்கள், குடும்ப வாழ்க்கைக் காட்சிகள் ஆகிய அனைத்தும் உடைகள், சிகையலங்காரம், முக பாவனைகள் ஆகியவற்றைத் துல்லியமாகக் காட்டும் வகையில் இவை அமைந்துள்ளன.
முதல் சதுரத் தளத்துக்குப் பிந்திய “ரூபதாது” அல்லது உருவங்களின் பிரபஞ்சம் என்ற அடுத்த ஐந்து சதுரக் தளங்களில் புத்தரின் முற்பிறவிகளின் வரலாறுகளாக ஜாதகக் கதை காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. இவை கௌதம புத்தர் பரிபூரண ஞான நிலையை அடைய என்னென்ன முயற்சிகளை எடுத்துக் கொண்டார் என்பதைக் காட்டுவதாக அமைகின்றன.
அடுத்த மூன்று வட்ட வடிவமான தளங்கள் ‘அரூப தாது’ அல்லது உருவமில்லாத பிரபஞ்சம் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் துளையிடப்பட்ட குவிமாடங்களுக்குள் வெவ்வேறு கை முத்திரைகளோடு 72 புத்தர் சிலைகள்.
உச்சியிலிருக்கும் குவிமாடம் மர்மமான வகையில் காலியாகவே உள்ளது. அதில் மற்ற புத்த ஆலயங்களில் உள்ளதுபோல் புத்தரின் பற்களில் ஒன்றையோ அஸ்தியையோ வைத்திருந்திருக்கக் கூடும் என்றாலும் அதற்கான தடயங்கள் ஏதும் இல்லை.
போரோபுதூர் என்ற பெயரின் பொருள்கூட அறியப்படாத ரகசியமாகவே இருக்கிறது. இப்போது அழைக்கப்படும் பெயர்கூட ராபிஃல்ஸ் காலத்தில் வந்த ஐரோப்பியர் ஆலய வளாகத்தைக் கண்டெடுத்தபோது சுற்றியிருந்த மக்கள் சொன்ன பெயர்தான். ஆனால் ஜாவா மொழியில் இதற்கு அர்த்தம் ஏதுமில்லை.
சில அறிஞர்கள் போரோபுதூரின் பழைய பெயர் ‘பூமி சம்பார புத்தார’ அல்லது ‘போதிசத்துவனாவதற்குக் (கடக்க வேண்டிய) பத்து நிலைகளால் ஏற்படும் புண்ணியங்களின் தொகுப்பான மலை’ என்று சொல்கிறார்கள். ஆனால் இது பெரும்பாலும் ஊகமே.
சராசரி குடும்ப வாழ்க்கையிலிருந்து அறத்தோடு ஒழுகும் வாழ்க்கைக்கு முன்னேறி பின்னர் புத்த நிலைக்குக் கடந்து போகும் படிநிலைகளாகக் காட்டும் கல்லாலான சமய போதனையாகப் போரோபுதூரைக் காணலாம்தான். ஆசைகளைத் துறக்கத் துன்பம் மிகுந்த கூர்மையான கோணங்களைக் கொண்ட சதுரத் தளங்கள் சிக்கலில்லாத வட்டத் தளங்களுக்கு வழிவிடுகின்றன.
இவ்வகையில் பார்த்தால் போரோபுதூர் திபெத்திய மஹாயாண தாந்த்ரீகப் பௌத்தத்தின் வெளிப்பாடாகக் காணலாம். பௌத்தத் தாந்த்ரீகத்தில் பரிநிர்வாண நிலையை ‘இன்னும் விரைவாக’ அடையும் வழிகளாக மண்டலச் சக்கரங்கள் பயன்படுகின்றன. அப்படிப் பார்க்கப் போனால் போரோபுதூர் மனதால் தியானிக்கப்படும் மண்டலமாக அல்லாமல் கால் நடையாக நடந்து தியானிக்கும் மண்டலமாக இருந்திருக்கக் கூடும்.
ஆனால் அதற்குள் வழிபாடுகள் நடந்ததாக அறிகுறிகள் இல்லை. இத்தனைச் சிற்ப வேலைப்பாடுகளும் தியானத்துக்காக மட்டும்தானா? அல்லது சைலேந்திர மன்னர்களின் சமாதியின் மேலோ புத்த பிக்கு ஒருவரின் சமாதியின் மேலோ இந்தக் கட்டடம் கட்டப்பட்டதா? அல்லது சைலேந்திர மன்னர்கள் போரில் நடத்திய வன்முறைகளுக்கான பிராயச்சித்தமாகக் கட்டப்பட்டதா என்று இதுவரை அறியமுடியவில்லை.
இந்த மர்மக் கோவிலை இத்தனை முயற்சி எடுத்துக் கட்டியவர்களின் ஆசைகளிலும், கனவுகளிலும், ஏமாற்றங்களிலும், பகைகளிலும்தான் பல கதைகள் ஒளிந்திருக்கின்றன.
அவை இவ்வட்டாரத்தின் நினைவுகளுக்குள் கலந்து இன்றும் உயிர்ப்போடு இருக்கும் கதைகளாகவும் இருக்கக் கூடும்.
[உலக வாழ்க்கைச் சித்திரங்களிலிருந்து பரமபதம் வரையில் தியானிக்கும் படிநிலைகளாகத்தான் நம் நவராத்திரி கொலுவின் அமைப்பும் இருக்கிறது என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்]
