போர்ஹெஸ் வழியாக ரோபர்ட்டோ போலான்யோ வந்து இப்போது ஜேம்ஸ் எல்ரோய்-இன் புகழ்ப்பெற்ற துப்பறியும் கதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
1945-இல் போர்ஹெஸ்ஸும் மற்றொரு புகழ்பெற்ற அர்ஜெண்டீனிய எழுத்தாளரான அடொல்ஃபோ பியொய் காசாரெஸ்ஸும் El Septimo Circulo (‘ஏழாவது வட்டம்’) என்ற ஆங்கிலத்திலிருந்து ஸ்பானிய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட துப்பறியும் நாவல்களின் தொடர் ஒன்றை வெளியிடத் திட்டமிட்டார்கள்.
துப்பறியும் கதைகளின் மீது போர்ஹெஸ்ஸுக்கு இருந்த ஈர்ப்பு அனைவரும் அறிந்தது.
எந்தவிதமான சம்பவ நகர்வும் இல்லாமல் வடிவ நேர்த்தியில்லாமல் இருக்கும் உளவியல் நாவல்களோடு ஒப்பிடும் போது தொடக்கம், நடுப்பகுதி, தெளிவான முடிவு என்ற கதைக்குரிய செவ்வியல் இலக்கணங்களை உடைய துப்பறியும் கதைகளைப் புனைவெழுத்தின் மிகச் சிறந்த வடிவமாகப் போர்ஹெஸ் கருதினார்.
தனது கட்டுரைகளின் போர்ஹெஸ் தனது புனைவு பற்றிய புரிதல்களுக்கே புகழ்ப்பெற்ற ஆங்கிலத் துப்பறியும் கதாசிரியர்களான எட்கர் ஆலன் போ, ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன், வில்கி காலின்ஸ், ஜி. கே செஸ்டர்டர்ன், ஏடன் ஃபில்பாட்ஸ், எல்லரி குவீன் ஆகியோரை வாசித்ததே காரணம் என்கிறார்.
துப்பறியும் கதைகளின் மீது போர்ஹெஸ்ஸுக்கு இருந்த இந்த ஈர்ப்பு ரோபர்ட்டோ போலான்யோவுக்கும் இருந்தது. 2003ல் பிளேபாய் சஞ்சிகையின் மெக்ஸிகோ இதழுக்கு அளித்த நேர்காணலில் எழுத்தாளனாக இருப்பதைவிட துப்பறிவாளராக இருக்கவே தான் விரும்பியதாகப் போலான்யோ சொல்லியிருக்கிறார்.
அமெரிக்கத் துப்பறியும் கதாசிரியரான ஜேம்ஸ் எல்ரோய்தான் உலகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்று போலான்யோ (சிரிக்காமல்) சொன்னதுண்டு.
போர்ஹெஸ்ஸின் புகழ்ப்பெற்ற பல கதைகளும், 2666 முதற்கொண்டு போலான்யோவின் பெரும்பாலான நாவல்களும் குற்றங்களையும் அவற்றைத் துப்பறிதலையும் மையமாகக் கொண்டிருக்கின்றன.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் துப்பறியும் கதைகளின் மீது ஒரு புனைவு வடிவமாகப் போர்ஹெஸ்ஸும் போலான்யோவும் வைத்த பெருமதிப்பின் காரணம் புரியும்.
மற்ற எல்லாப் புனைவு எழுத்துக்களையும்விட துப்பறியும் கதைகள் மிகுந்த திட்டமிடுதலை அவசியமாக்குகின்றன.
துப்பறியும் கதையில் குறிப்பிட்ட பகுதிகளில் வெளியிடப்படும் விவரங்களின் மீதும், கதையோட்டத்தின்மீதும் எழுத்தாளனின் துல்லியமான கண்காணிப்பும் அவசியம்.
மற்ற கதைகளில் விவரங்கள் கூடினாலோ குறைந்தாலோ அல்லது தவறான இடத்தில் வெளியிடப்பட்டாலோகூட கதை பிழைத்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டு. ஆனால் துப்பறியும் கதைகளில் அப்படியல்ல. இதில் ஒன்று நடந்தால்கூட வாசகருக்குக் கதையின்மேல் இருக்கும் சுவாரசியம் குன்றி அதைத் தூக்கிப் போட்டு விடுவார்கள்.
துப்பறியும் கதைகள் எழுதுவது கத்திமேல் நடப்பது போன்றது; அது எல்லா புனைவு எழுத்தாளர்களுக்கு நல்ல பயிற்சி என்பது போர்ஹெஸ்ஸின் கருத்து.
ஒரு புனைவு எழுத்தாளன் முழு எழுத்தாற்றலையும் காட்டக் கூடிய களம் துப்பறியும் கதைகள்.
புலவருக்கு வெண்பா புலி என்பதுபோல புனைவு எழுத்தாளர்களுக்குத் துப்பறியும் கதைகள் புலி.
கொரோனா காலத்தில் துப்பறியும் குறுங்கதைகளும், கதைகளும் குறைவாகவே வருவது (போர்ஹெஸ்ஸின் பார்வையில்) கவலைக்கிடமானதே.
[தொடரும்]

உங்களின் எழுத்துகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஒவ்வொருமுறையும் புதியவற்றைக் கற்றுக்கொள்ள முடிகிறது. உங்கள் வாசிப்பின் வழி நீங்கள் அறிமுகம் செய்யும் எழுத்தாளர்களும் எழுத்தாக்கங்களும் மிக முக்கியமானதாகவே அமைகிறது.. இன்றுவரை உங்களின் படைப்புகளை நூலாக்கமாக நான் வாசித்திருக்கவில்லை என்றாலும் அக்குறை விரைவில் தீர்க்கப்படும் என நம்புகிறேன்.
துப்பறியும் கதைகள் பற்றி எழுத ஆரம்பித்துள்ளீர்கள் அடுத்த பாகங்களை வாசிக்க ஆவலை எழுந்துவிட்டது.
உங்களிடமிருந்து பாடம் போல பலவற்றை கற்றுவருகிறேன். உங்கள் அறிமுகங்களுக்கும் உங்கள் தொடர் எழுத்தாக்கங்களுக்கும் என் நன்றியும் அன்பும்.
LikeLike