போர்ஹெஸ் ஏன் நாவல்களை எழுதாமல் கதைகளை மட்டுமே எழுதினார் என்பது மிக நல்ல கேள்வி.
இந்தக் கேள்வியை ஒருத்தர் போர்ஹெஸ்ஸிடமே கேட்டார். ஸ்பானிய மொழியில் இருக்கும் அந்த நேர்காணலின் சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன்.
நாவல்களை எழுதாமல் கதைகளை மட்டும் எழுதியதற்குப் போர்ஹெஸ் இரண்டு காரணங்களைச் சொல்கிறார்.
ஒன்று, சோம்பேறித்தனம். இரண்டு, கதை எழுதுவதில் தன்மீதே தனக்கு நம்பிக்கை குறைச்சல் என்பதால் படைப்பு மொத்தத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளக் கதைகளின் குறைவான நீளம் உதவுவதாகவும், நாவல்கள் மிக நீண்டவை என்பதால் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சிரமம் என்றும் சொல்கிறார்.
அந்த அர்ஜெண்டினீயக் கிழவன் குறும்புத்தனங்களுக்கு அப்பாற்பட்டவன் அல்ல என்பதால் அவன் தன்னைத் தானே சோம்பேறி என்று அழைத்துக் கொண்டதைக் கருத்தில் கொள்ளத் தேவையில்லை.
ஆனால் தனது கதையெழுதும் ஆற்றலைப் பற்றிய தனது அவநம்பிக்கைகளைப் போக்கும் அளவுக்கு கதையின் அளவு குறுகியதாய் இருக்கிறது என்று போர்ஹெஸ் சொல்வதில் நாவலுக்கும் கதைக்கும் இடையே போர்ஹெஸ் கண்ட மிக முக்கியமான வேற்றுமையின் ரகசியம் அடங்கியுள்ளது.
போர்ஜெஸ், கதை குறுகியதென்பதால் ஆங்கிலக் கவிதை வடிவமான சானட்டைப் போல அதை ஒரே பார்வை வீச்சில் வாசகன் பார்த்துவிட முடியும் என்கிறார்.
மாறாக, நாவல் பற்பல சம்பவங்களால் நிரம்பியிருப்பதால் பல விவரங்களை மறந்தால்தான் அதை ஒரே பார்வையாகப் பார்க்க முடியும் என்பது போர்ஹெஸ்ஸின் கருத்து.
அதாவது நாவல் படைப்பின் ஒருமையை இழந்த ஒரு வடிவமாகவே போர்ஹெஸ்ஸுக்குத் தோன்றியிருக்கிறது.
கதைகளை சானட்டோடு போர்ஹெஸ் ஒப்பிட்டது அர்த்தம் வாய்ந்தது. ஆங்கிலக் கவிதை வடிவங்களிலேயே மிகக் கண்டிப்பான விதிகளையுடையது சானட் (நமது வெண்பாவைப்போல).
நுண்ணிய அழகியல் வேலைப்பாடுகளையும் நுணுக்கங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு ஆங்கிலக் கவிதையின் உச்சக் கலை வடிவமாகக் கருதப்படுவது.
கதைகள் ஒரே பார்வையில் தமது உள்ளடக்கத்தை வாசகர்களுக்கு வெளிப்படுத்துதாலும், பல அழகியல் நுணுக்கங்களையும் வேலைப்பாடுகளையும் அனுமதிப்பதாலும் நாவல்களைவிட அவை சிறந்த வடிவம் என்று போர்ஹெஸ் சொல்லாமல் சொல்கிறார்.
கதைகள் நாவல்களுக்கு முன்னரே பல நூற்றாண்டுகளாக இருந்தன என்றும், நாவல் வடிவம் அழிந்தொழிந்த பின்னும் கதைகள் இருக்கும் என்றும் போர்ஹெஸ் ஆருடம் சொல்கிறார்.
ஒரு ரஷ்ய நாவலின் மனோதத்துவ அலசலைக் கதைகளால் தர முடியுமா என்ற கேள்விக்கும் போர்ஹெஸ் இந்த நேர்காணலிலேயே பதில் சொல்கிறார்.
ருட்யார்ட் கிப்லிங், ஹென்றி ஜேம்ஸ் ஆகியோரின் பல கதைகள் நாவல்களைவிட கனமான அகமுகச் சித்தரிப்புகளைக் கொண்டவை என்கிறார்.
தான் அநேகமாய் நாவல்கள் எழுதப் போவதில்லை என்று போர்ஹெஸ்ஸே சொன்னதுதான் இந்த நேர்காணலின் சிறப்பம்சம்.
http://news.bbc.co.uk/hi/spanish/misc/newsid_5081000/5081434.stm
