நவீனக் கவிதைகளின் ஆரம்பப் புள்ளிகளில் ஒருவராக இருந்தவர் அமெரிக்கக் கவிஞர் எஸ்ரா பவுண்ட் (1885-1972).
1935ல் இவர் எழுதிய “புதுமையாக்கு” (Make It New) என்ற கட்டுரைத் தொகுப்பு நவீனக் கவிதைக்கான அறைகூவலாகவும் முழக்க வாசகமாகவும் ஒருசேர அமைந்தது.
‘புதுமையாக்கு’ என்ற முழக்கம் கவிதைகளின் உள்ளடக்கத்தை மட்டுமல்லாது, அவற்றின் அழகியலை, சொல் பிரயோகத்தை, வடிவத்தை, படிமங்களை அனைத்தையும் புரட்டிப்போட கவிஞர்களை அழைத்தது.
டி.எஸ். எலியட்-டின் The Love Song of Alfred J. Prufrock போன்ற புகழ்பெற்ற நவீனக் கவிதைகளையும், அவற்றில் காணக் கிடக்கும் மிகப் புதுமையான சொற்சித்திரங்களையும், வடிவங்களையும் சாத்தியமாக்கியது.
கவிதையில் மட்டுமல்லாது உரைநடையிலும் எஸ்ரா பவுண்டின் தாக்கம் முக்கியமானது. Samuel Beckett, Virginia Woolf தொடங்கி அமெரிக்க எழுத்துலகில் எல்லா எழுத்து வடிவங்களிலும் உருவான பெரும் மாற்றத்துக்கு எஸ்ரா பவுண்டின் இந்த முழக்க வரியே காரணம்.
எல்லாவற்றையும் புதுமையாக்கு என்ற வாசகம் பழையதை எல்லாம் தள்ளிவிடு என்ற அர்த்தத்தைத் தந்தாலும், உண்மையில் எஸ்ரா பவுண்ட் உணர்ச்சிகளைத் தழும்பவிட்டுச் சொற்களையும் அபத்தமான படிமங்களையும் பெருக்கிக் காட்டும் ரோமாண்டிஸிசக் கவிதைகளையே எதிர்த்தார்.
பழைய ஜப்பானிய ஹைக்கூக்கள், சீனக் கவிதைகள், பண்டைய கிரேக்கப் பாடல்கள், சமஸ்கிருத செய்யுள்கள் ஆகியவற்றை ஆழமாக வாசித்த பவுண்ட் அவற்றை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார்.
பண்டைய கவிதைகளில் (தமிழ்ச் சங்கப் பாடல்களையும் சேர்த்து) காணப்படும் (1) துல்லியமான, அலட்டலில்லாத சொல் பிரயோகம், (2) சொற்செட்டு, (3) கூர்மையான சித்திரங்கள், (4) சொற்களின் ஒலிகளை எடுத்துக் காட்டும் ஓசைநயம் ஆகியவற்றை உள்ளடக்கிக் கவிதைகள் எழுதப்பட வேண்டும் என்ற பவுண்ட் கருதினார்.
மொழியைச் சுருக்கி, சித்திரங்களின் வழியாக அர்த்தத்தைக் கடத்தும் இந்த உத்தி imagism என்று அழைக்கப்பட்டது.
இப்படி அர்த்தத்தைக் கடத்தும் சித்திரங்களை பவுண்ட் ‘ஒளி மிகுந்த சித்திரங்கள்’ என்று அழைத்தார்.
இந்த உத்தியின் உதாரணமாக பவுண்ட் எழுதிய ‘மெட்ரோ ஸ்டேஷனில்’ என்ற கவிதை புகழ்பெற்றது. இரண்டே வரிகளுடைய இந்தக் கவிதை ஆங்கிலத்தில் வினைச்சொற்களையே பயன்படுத்தாதது. ஹைக்கூ வடிவத்தில் இல்லாவிட்டாலும் ஆங்கில மொழியின் முதல் ஹைக்கூ என்று அழைக்கப்படுவது.
“கூட்டத்தில் இந்த முகங்களின் தோற்றம்:
நனைந்த, கறுப்புக் கிளையில் பூவிதழ்கள்”.
