ஜோசே லூயிஸ் போர்ஹெஸ்-இன் மிகவும் புகழ்பெற்ற கதைகளில் ‘உக்பார், த்லொன் மற்றும் ஓர்பிஸ் தெர்தியஸ் (மூன்றாவது உலகம்)”-உம் ஒன்று.
போர்ஹெஸ்-இன் பாணியில் மனிதனால் எதையும் உண்மையில் அறிந்து கொள்ள முடியுமா என்ற மெய்யியல் விசாரணையைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை.
”எப்பொருள் எத்தன்மைத்தாயினும்…” மற்றும் “எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்…” அதன் மெய்ப்பொருளை அறிய மனதின் பகுத்து அறிந்து கொள்ளும் ஆற்றல் உதவும் என்பது பொது நம்பிக்கை.
ஆனால் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜார்ஜ் பெர்க்கிலி என்ற ஆங்கிலேய பாதிரியார் subjective idealism என்ற மெய்யியல் கோட்பாட்டை முன் வைத்தார்.
இந்தக் கோட்பாட்டின்படி மனதும் அதில் தோன்றும் எண்ணங்களுமே உண்மையானவை – அல்லது அர்த்தமுள்ளவை. இது கொஞ்சம் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவும் யதார்த்தத்திலிருந்து விலகிய சிந்தனையாகவும் தோன்றலாம்.
எனினும் ஒரு அழகிய பெண்ணைக் காண்பதாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த உருவம் பெண் என்றும், இப்படி இப்படியெல்லாம் மாமிசம் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதுதான் பேரழகு என்றும் உங்கள் மனம்தான் முடிவு செய்கிறது. நம் மனத்தின் பின்னல்களில் தவிர இந்த உருவம் பெண் என்பதோ, அவள் அழகானவள் என்பதோ அந்தச் சதைக் கோளத்தின் எந்தத் தனிப்பட்ட இயல்புகளிலோ குணாம்சங்களிலோ எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படி பொறிக்கப்பட்டிருக்கவில்லை. வேறொருத்தன் கண்ணுக்கு அந்தப் பெண் அசிங்கமானவளாகத் தோன்றலாம். அல்லது அது பெண் இல்லை என்று சில பல காரணங்களால் அவன் வாதிடலாம்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், நாம் எதை உண்மை என்று நம்புகிறோம் என்பதை நமது மனமும் அதன் தர்க்கத்துக்கு உட்படாத எண்ணங்களுமே தீர்மானிக்கின்றன.
அத்வைதம் மற்றும் யோகாசார பௌத்தத்தின் கொள்கைகளுக்கு நிகரான புரிதல் இது.
இதையே போர்ஹெஸ் கதையாக்குகிறார்.
’உக்பார், த்லொன் மற்றும் ஓர்பிஸ் தெர்தியஸ்’ என்ற கதையின் தொடக்கத்தில் கதைசொல்லியும் (போர்ஹெஸ்) அர்ஜெண்டீனிய எழுத்தாளர் அதொல்ஃபோ பியோய் காசாரெஸ்-உம் கூட்டாக ஒரு கதையைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
’உக்பார், த்லொன் மற்றும் ஓர்பிஸ் தெர்தியஸ்’ கதையில் அடுத்து வரும் சம்பவங்கள் அனைத்தும் ஒரு நிலைக்கண்ணாடியும் என்சைக்ளோபிடீயா என்றழைக்கப்படும் கலையகராதி புத்தகம் ஒன்றும் ஒன்றுக்கொன்று பக்கத்தில் இருந்ததால் என்று போர்ஜெஸ் சொல்கிறார். ஒரு நாவலாசிரியர் தனது கதையில் எப்படித் தவறான விவரங்களைச் சேர்த்திருக்கிறார் என்று பேச்சுத் திரும்புகிறது. அப்போது பியோய் உக்பார் என்ற நாட்டில் வாழ்ந்து வந்த சிந்தனையாளர் ஒருவர் ‘நிலைக்கண்ணாடிகளும் உடலுறவும் மனிதர்களைப் பெருக்கிக் காட்டுவதால் வெறுக்கத்தக்கவை’ என்று கூறியிருப்பதை நினைவுகூர்கிறார். அப்போது உக்பார் எங்கு இருக்கிறது என்று போர்ஹெஸ் கேட்க என்சைக்ளோபீடியாவின் மலிவான காப்பி ஒன்றில் அதைப் படித்ததாகப் பியோய் சொல்கிறார். ஆனால் இருவரும் கைவசம் இருக்கும் என்சைக்ளோபீடியாக்களைப் புரட்டிப் பார்க்கும்போது பியோய்யின் கைவசம் இருக்கும் மலிவுப் பிரதியில் மட்டுமே உக்பார் குறிப்பிடப்பட்டிருப்பது தெரிய வருகிறது. பியோய்யின் கையிலிருக்கும் புத்தகத்தில் உக்பார் ஈராக்கின் அருகில் இருப்பதாகவும், அதன் இலக்கியம் முழுவதும் மாய யதார்த்த வகையைச் சேர்ந்தது என்பதும் எழுதியிருக்கிறது. அதிலும் உக்பார் நாட்டு மக்கள் எழுதிய கதைகள் யாவுமே மிலெய்னாஸ் மற்றும் த்லோன் என்ற இரண்டே இரண்டு உலகங்களைப் பற்றி மட்டுமே எழுதப்பட்டவை என்று அறிந்து கொள்கிறார்கள்.
உக்பார் பற்றியோ த்லொன்னைப் பற்றியோ மற்ற எந்தத் தகவலும் சிக்காத நேரத்தில் ஹெர்பெர்ட் ஆஷ் என்ற ஆங்கிலேயன் பார் ஒன்றில் விட்டுச் சென்ற ஒரு புத்தகம் கதைசொல்லியின் கையில் கிடைக்கிறது. அதன் முகப்பில் ‘ஓர்பிஸ் தெர்தியஸ்’ (மூன்றாவது உலகம்) என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. அதை வாசித்துப் பார்க்கும்போது த்லொன் உலகத்தின் மொழி, கணக்கு சாஸ்திரம், மெய்யியல் பற்றி எல்லாம் விரிவாக எழுதியிருப்பதைக் கதைசொல்லி காண்கிறார்.
அந்தப் புத்தகத்தின்படி த்லொன்னில் இருப்பவர்கள் உலகத்தை ஒரே இடத்தில் பரவிக்கிடக்கக் கூடிய பொருள்களின் தொகுப்பாகப் பார்ப்பதில்லை. உலகை அவர்கள் பலதரப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பாகவே பார்க்கிறார்கள். இதைப் பிரதிபலிக்கும் வகையில் த்லொனில் வாழும் ஒரு பகுதியினர் பொருள்களைக் குறிக்கப் பெயர்ச் சொற்களிப் பயன்படுத்தாமல் அவற்றின் இயல்புகளைக் குறிக்கும் வினைச்சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். போர்ஹெஸ்ஸின் உதாரணம், ’நீருக்கு மேல் நிலவு’ என்று சொல்லாமல், ’வழிதலுக்கு மேல் சுடர்விடுதல்’. அதேபோல் த்லோனின் வேறொரு பகுதியினர் பெயர்ச்சொல்லுக்குப் பதிலாக அவற்றை வர்ணிக்கும் வார்த்தைகளைக் கொண்டே குறிப்பிடுகிறார்கள் – உ.தா. ‘தட்டையான ஜொலிப்பு’.
பொருளை நிர்ணயிக்கப் பெயர்ச்சொற்கள் இல்லாததால் உண்மைகளைத் தர்க்கப்பூர்வமாக விவரிக்க எந்தவிதமான ஸ்திரத்தன்மையும் இல்லாமல் அனுமானமும் தீர்மானமும் சாத்தியமில்லாமல் போகின்றன. அதே சமயம் தன்மைகளையும் செயல்களையும் கொண்டே பொருள்கள் அழைக்கப்படுவதால் ஒரே தன்மையுள்ள பொருள்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள் முக்கியமில்லாதவையாகி எல்லாம் ஒன்றே என்ற அத்வைதத் தத்தவம் நிலவுகிறது. தன்மைகளும் வினைகளுமே பொருள்களின் அடையாளமாவதால் கால நிர்ணயமும் சாத்தியமில்லாமல் மாறி, வரலாறு என்பதும் கதைகள் என்பவையும் அர்த்தமில்லாதவையாகின்றன.
கதைச் சம்பவங்களுக்குச் சிறுகதையின் கடைசிப் பகுதியில் 1947ல் பின்குறிப்பு எழுதும் கதைசொல்லி த்லொன் என்பது கபாலா, இலுமினாட்டிகள் போன்ற ’ஓர்பிஸ் தெர்தியஸ்’ என்ற ரகசியக் குழுவினர் உருவாக்கிய கற்பனை உலகம் ஒரு கடிதத்தின் மூலம் அறிந்து கொள்கிறார். அதே சமயம் கற்பனை என்று நினைத்த உலகத்திலிருந்து பல வகையான பொருள்கள் கதைசொல்லியைச் சுற்றியிருக்கும் பூமியில் கிடைக்கின்றன. உலகமே த்லொன் – ஆக மாறி வருகிறது என்று கதைசொல்லி சொல்கிறார்.
நாஜி சித்தாந்தம், யூத வெறுப்பைப்போல் ஒழுங்குப்படுத்தப்பட்ட எந்தச் சிந்தனையையும் உலகத்தார் ஏற்றுக் கொள்வது இயல்பே என்று சொல்லும் கதைசொல்லி பழைய ஆங்கில நூல் ஒன்றை ஸ்பானிய மொழியில் மொழிபெயர்ப்பதில் மீண்டும் கவனம் செலுத்துகிறார்.
நிலைக்கண்ணாடிகளும் கதைகளும் முன்னிருக்கும் பொருள்களை மட்டுமின்றி மனிதர்களையும் பெருக்கிக் காட்டுகின்றன. ஆனால் அவைப் பெருக்கிக் காட்டும் பொருள்கள் மாயங்களே. அவற்றில் உண்மையில்லை என்றே நம்புகிறோம்.
அதேபோல் மனித மனமும் பொருள்களையும், மனிதர்களையும் பெருக்கிக் காட்டுகிறது. மனம் காட்டும் சித்திரங்களை உண்மையற்றவை என்றே நம்புகிறோம்.
ஆனால் ஜார்ஜ் பெர்க்லி சொல்வதைப்போல் சுற்றியிருக்கும் பொருள்கள் யாவும் பொய்யாகி மனம் காட்டும் சித்திரங்கள் மட்டுமே உண்மையென்றால்?
கடைசியில் நாம் உண்மையென்று நம்பிக் கொண்டிருக்கும் பருப்பொருள்கள் யாவும் வெறும் சம்பவங்களாகவே நமது மனதிற்குள் ஒடுங்கி, உலகமே எல்லா மாய யதார்த்தக் கதைகளையும்விட மிகப் பெரிய மாய யதார்த்தக் கதையாகிப் போய்விடும்.
