
ஃபெர்னாண்டோ சொரெண்டினோ 1970ல் இறுதியில் ஹோசே லூயிஸ் போர்ஹெஸ்ஸோடு ஏழு நேர்காணல்களை நடத்தினார்.
ஒரு நேர்காணலின்போது போர்ஹெஸ்ஸிடம் அவர் ஏன் நாவல்களை எழுதவில்லை என்று கேட்டார்.
அதற்குப் போர்ஹெஸ், நாவல்களை எழுதுவதைப் பற்றி அவர் சிந்தித்ததே இல்லை என்றார்.
ஒரு நாவல் வாசகர்களுக்குக் கடத்தக் கூடிய எல்லாவற்றையும் ஒரு நீண்ட சிறுகதை – வாசகருக்கு இன்னும் லகுவாகக் – கடத்திவிடும் என்று போர்ஹெஸ் சொல்கிறார்.
போர்ஹெஸ்ஸின் கூற்றுப்படி நாவல்களைவிடச் சிறுகதைகள் இரண்டு விதங்களில் வாசிப்புக்கு அனுகூலமானவை.
முதலாவதாக, ஒரு சிறுகதையில் உள்ள கதையின் கட்டுமானத்தையும் உள்ளடக்கத்தையும் ஒரே பார்வையில் வாசகர் எளிதாக உள்வாங்கிக் கொள்ளலாம்.
நாவலோ கதையை ஒரு சம்பவத்திலிருந்து மறு சம்பவத்துக்கு நகர்த்துவதையே நோக்கமாகக் கொண்டு இந்தச் சம்பவ நகர்விலேயே வாசகனின் கவனம் போகிறபடியால் கதையின் முழுகனத்தையும் வாசகனால் உள்வாங்கிக் கொள்வது சாத்தியமில்லை.
இரண்டாவது, சிறுகதையின் வடிவ ஒருமையினால் அதில் சேர்க்கப்படும் சம்பவங்களும் விவரிப்புகளும் அனைத்தும் கதையின் முக்கிய நோக்கத்தை முன்னகர்த்திச் செல்லும் விதத்தில் அமையும் சாத்தியம் நாவலில் உள்ளதைவிட அதிகம்.
முந்நூறு பக்க நீளமுள்ள ஒரு நாவலோ ஒரு சம்பவத்துக்கும் மறு சம்பவத்துக்கும் இடையில் ‘தர்க்கப்பூர்வமான’ தொடர்பை ஏற்படுத்த வார்த்தைகளை வீணாக்குகிறது.
இதன் காரணமாகவே பல நாவல்களைவிடவும் ருட்யார்ட் கிப்ளிங் மற்றும் ஜோசப் கான்ராட் போன்றவர்களின் நீண்ட சிறுகதைகள் பல நாவல்களைவிடவும் அடர்த்தியும் கனமும் உள்ளவையாக இருக்கின்றன என்கிறார் போர்ஹெஸ்.
ஒரு குறிப்பு: இங்கு போர்ஹெஸ் நீண்ட சிறுகதை என்று குறிப்பிடும் வடிவம் இன்றைய தமிழ்ச் சூழலில் குறுநாவல் என்று அழைக்கப்படுபவை. ஒரு வகையில் பா. வெங்கடேசனின் ‘ராஜன் மகள்’ நூலில் உள்ள நான்கு கதைகளும் போர்ஹெஸ் குறிப்பிடும் அடர்த்திக்கும் கனத்துக்கும் சிறப்பான உதாரணங்களாக என் நினைவுக்கு வருகின்றன.