
செக் எழுத்தாளர் ஃப்ரான்ஸ் காஃப்காவின் படைப்புக்களைப் பற்றி எழுதுகிறவர்கள் பெரும்பாலும் முகமற்ற மாபெரும் சமுதாய இயந்திரத்தின் பிடியில் சிக்கித் தனிமனதச் சுதந்திரத்தை இழக்கும் மனிதர்களைப் பற்றிய கதைகளை காஃப்கா எழுதியதாகச் சொல்வார்கள்.
ஆனால், இது அரை பார்வைதான்.
காஃப்காவை இயக்கியது மேம்போக்கான தனிமனிதச் சுதந்திரங்களைவிட ஆழமான ஆன்மீக அடையாளச் சிக்கல் என்றும் கருத இடமுண்டு.
மேற்கு ஐரோப்பாவின் ஆஸ்திரியாவிலும் முழுக்கச் சேராமல் கிழக்கு ஐரோப்பியாவின் செக், அல்லது ஹங்கேரி கலாச்சாரத்திலும் முழுவதும் அடையாளப்படுத்திக் கொள்ளாமல், விரைவில் காலாவதியாகி மறைந்தே போய்விடக் காத்திருந்த ஆஸ்திரிய-ஹம்கேரிய பேரரசின் குடிமகனாக, முழுவதும் யூதனாகவும் இல்லாமல், ஐரோப்பியனாகவும் இல்லாமல் எங்கும் சேராமல் பூச்சிபோல் புறக்கணிக்கப்பட்ட ஒரு மனிதனின் உளச்சிக்கல்தான் அவர் கதைகளில் மீண்டும் மீண்டும் பேசப்படுகின்றன.
1924ல் நிகழ்ந்த தன் மரணத்துக்குச் சில வருடங்களுக்கு முன்னால் 1917லிருந்து 1918வரை நோய்வாய்ப்பட்டிருந்தபோது காப்ஃகா எழுதிவைத்த ஸூரொவ் குறுமொழிகளை நாலாயிரம் வருடத்தின் பாரம்பரியமும் ஆழமும் கொண்ட வட ஐரோப்பிய அஷ்கனாத்ஸி யூத சிந்தனை மரபை நவீன ஐரோப்பிய மரபோடும் ஜனநாயக உணர்ச்சியினோடும் பொருத்தித் தனக்கென்று ஒரு ஒருங்கிணைந்த அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள காஃப்கா எடுத்துக் கொண்ட முயற்சியாகவே கருத நிறைய இடமுள்ளது.
இந்த முயற்சியை காஃப்கா மட்டும் செய்யவில்லை. அவருக்கு முன்னால் மார்டின் பூபர், ஆப்ரஹாம் ஜோசுவா ஹெர்ஷெல் போன்ற யூத சிந்தனையாளர்களும் செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சிந்தனையின் பலனாக reform judaism என்ற புதிய யூத மதப் பிரிவே (கிட்டத்தட்ட இந்தியாவில் உருவான ஆர்ய சமாஜத்தின் அதே குறிக்கோள்களோடு) யூத மதத்தில் உருவானது.
காஃப்கா இறந்த அதே 1924ம் வருடம் பிறந்த ஜப்பானிய எழுத்தாளர் கோபோ ஆபே-யை ஜப்பானிய காஃப்கா என்றழைக்கிறார்கள்.
கவபத்தா, மிஷிமா என்று தொடங்கிப் பல ஜாம்பவான்கள் கோலோச்சிக் கொண்டிருந்த ஜப்பானிய இலக்கிய வெளியில் ஆபே தனக்கென ஒரு தனித்துவமான பாதையை அமைத்துக் கொண்டார்.
தனிமனிதர்களை நசுக்கும் அரசியல், பொருளாதார மற்றும் ஆன்மீகக் கட்டுமானங்களைத் தூக்கிப் பிடிக்கும் பாரம்பரிய கலை/இலக்கிய வடிவங்கள், வரையறைகள், முடிவுகள் ஆகிய எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டு எஸ்ரா பவுண்டு 1934ல் வழங்கிய அறிவுரைப்படி ‘எல்லாவற்றையும் புதுமையாக்கு’ என்ற நவீனத்துவ அழகியலின் அடிப்படையில் பயங்கரமான அருவருப்பைத் தூண்டும் மாய யதார்த்த படிமங்களைக் கொண்டு நவீன வாழ்க்கையின் குரூரங்களை ஆராயும் எழுத்துப் பாணியை (காஃப்காவின் சாயலில்) ஆபே தனக்கென உருவாக்கிக் கொண்டார்.
பல்லாயிரக்கான வருட பாரம்பரியம் கொண்ட ஜப்பான் பேரரசக் குடும்பம் அதிகாரத்தின் உச்சியிலிருந்தபோது பிறந்த ஆபே தன்னை வெளிப்படையாகவே கம்யூனிஸ அனுதாபியாகக் காட்டிக் கொண்டார். பின்னாளின் கட்சி முன்மொழிந்த சோஷலிச யதார்த்தவாத எழுத்தின் தரத்தையும் பயனையும் பற்றி அவருக்குச் சந்தேகம் எழுந்தாலும், கம்யூனிஸக் கொள்கையின்மீது அவருக்கு இருந்த பிடிப்பும், தஸ்தவ்யஸ்கி, போ, சீன எழுத்தாளஎ லூ சுன், மாயகோவ்ஸ்கி, காஃப்கா என்று அவருக்கு இருந்த தீவிர உலக இலக்கிய வாசிப்பும் அவருடைய எழுத்தைத் தனித்துவமாக்கிக் கொள்ள உதவின.
1962ல் வெளிவந்த The Woman in the Dunes என்ற ஆபேயின் நாவல் அவருடைய மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது.
தோக்கியோவில் வசிக்கும் ஒரு பள்ளி ஆசிரியன் பூச்சிகளைச் சேகரிப்பதற்காக மீன்பிடி கிராமம் ஒன்றிற்குப் பயணமாகிறான். நாள் முழுவதும் பூச்சிகளைச் சேகரிப்பவர், வேலையின் மும்முறத்தில் கடைசி பேருந்தைத் தவர விடுகிறான்.
அவனுக்கு ஆறுதல் சொல்லும் கிராமத்துவாசிகள் இரவு தங்கக் கயிற்றேணியின் வழியாக மணற்குன்றுகளின் அடியிலிருக்கும் வீட்டிற்கு இறக்கி விடுகிறார்கள்.
அடுத்த நாள் கண்விழித்துப் பார்க்கும் ஆசிரியர் மணற்குன்றுகளின் அடியில் ஒரு முழு நகரமே இருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போகிறான். அவனிருக்கும் வீட்டில் இருக்கும் பெண் வீட்டிற்குள் மணல் புகுந்துவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது அவர்கள் இருவரின் பொறுப்பு என்கிறாள். அவளுடன் வாழ்ந்து குழந்தைகள் பெற்றுக் கொள்ளா வேண்டும் என்று அவன் கட்டளையிடப்படுகிறான்.
மணற்குன்றுகளுக்கு அடியிலிருக்கும் ஊரைச் சுற்றிப் பார்க்கும்போது அதனைவிட்டு வெளியேற வழியே இல்லை என்று தெரிகிறது. நூலேணியும் காணாமல் போய்விட்டிருக்கிறது.
ஏழாண்டுகளுக்குப் பின்னும் ஆசிரியன் ஊர் திரும்பாமல் போகவே அவன் செத்துவிட்டதாக அறிவிக்கிறார்கள்.
தரைக்குள் வாழும் பூச்சிகளைச் சேகரிக்கப் போனவன் பூச்சிகளைப் போலவே மணலுக்கடியில் வாழ வற்புறுத்தப்படும் கதை. அந்தப் பூச்சி வாழ்க்கையை நெறிபடுத்தும் ஏகப்பட்ட விதிகள்.
மணற்குன்றுகளுக்கடியில் இருக்கும் தோக்கியோ, அல்லது சிங்கப்பூர், அல்லது இந்த உலகத்தில் இருக்கக்கூடிய மாநகரங்களில் ஒன்றாகக் கூட இருக்கலாம்.
இந்த நாவலில் எனக்கு மிகவும் பிடித்தது மணலுக்கடியில் இருக்கும் ஊரின் அமைப்பையும் விதிகள் ஒவ்வொன்றையும் ஆபே மிகுந்த அறிவார்ந்த முறையில் விளக்கிக் கொண்டு போவது.
இத்தனை அறிவார்ந்த, காரண காரியங்களோடு விளக்கப்படும் விதிகள் இவ்வளவு குரூரமானவையாக இருக்க முடியுமா என்று வாசகன் சிந்திக்கும் இடம்.
வாழ்க்கையில் பல வேளைகளில் குரூரமும் வன்முறையும் அறிவார்ந்த வேடமிட்டுக் கொண்டுதானே வருகிறது?
‘The Woman in the Dunes’ 1964ல் ஜப்பானிய new wave திரைப்படமாக வெளிவந்தது.