ரோமாண்டிஸத்துக்கு ரஷ்ய யதார்த்தவாதம் கொடுக்க முயன்ற 1,300 பக்க அடிதான் டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ என்பது அந்த நாவலில் நெப்போலியனைக் குறித்துச் சேர்க்கப்பட்டிருக்கும் தகவல்களைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.
முன்னொரு கட்டுரையில் நான் குறிப்பிட்டிருந்ததைப்போல் தனிமனிதர்களின் பேராசை, வன்மம், வீரம் போன்ற அதிதீவிர உணர்ச்சிகள் அவர்களைச் சுற்றியிருக்கும் நிலவியலையும் அந்த நிலவியலில் நிகழும் சம்பவங்களின் வரலாற்றுப் போக்கையும் மாற்றியமைக்கக் கூடியவை என்பது ரோமாண்டிஸசத்தின் அடிப்படை சித்தாந்தம்.
பிறப்பினால் எந்த விதச் சிறப்பும் இல்லாத தனிமனிதனான நெப்போலியன் கொஞ்ச காலத்துக்கு மாற்றியமைத்து ஐரோப்பாவின் மற்ற முடிசூடிய மன்னர்களைத் தனக்கு முன்னால் அடிபணிய வைத்தது ரோமாண்டிஸசத்தின் ஆதரவாளர்களுக்கே ஒரு ரோமாண்டிஸிச நாவலின் கதையாகத்தான் தோன்றியிருக்க வேண்டும்.
அந்த நெப்போலியனை ரஷ்யாவின் கடுமையான பனிக்காலம் என்ற யதார்த்தம் ஓட ஓட விரட்டியது என்பதுகூட இந்த நாவலை ரோமாண்டிஸிச யதார்த்தவாதக் கோட்பாடுகளுக்கு இடையே நடந்த கருத்துப் போரின் வெளிப்பாடாகப் பார்க்க இடம் தருகிறது.
ஆனால் டால்ஸ்டாய் என்னதான் சொன்னாலும் ரோமாண்டிஸிசம் யதார்த்தத்தைவிட்டுக் கழன்றுவிட்ட வெறும் உணர்ச்சிகளின் பிதற்றல் அல்ல.
ரோமாண்டிஸிசத்துக்கு முன்னால் தோன்றிய அறிவுசார் (Enlightenment) கோட்பாடு மனிதனின் பகுத்தறிவால் வகுக்கப்பட்ட அரசியல், அறிவியல், அழகியல் மற்றும் ஆன்மீக விதிகளைப் பின்பற்றுவதாலேயே மனிதன் பூமியின்மீது அப்பழுக்கே இல்லாத – எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் – உன்னத சமூக அமைப்பை அமைத்துவிட முடியும் என்று நம்பியது.
இந்த உன்னத அமைப்பை உத்தோப்பியா என்று பெயர் கொடுத்து அழைத்தார்கள்.
அடிப்படையில் கைகளில் சட்டப் புத்தகங்களையும், இலக்கண விதிகளையும், ஸ்கேல்களையும் தூக்கிக் கொண்டலையும் இந்தக் கணக்குப்பிள்ளைகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் ராஜ்ஜியத்துக்கு எதிராகத் தனிமனிதர்களின் மதிப்பையும், அவர்களின் உணர்வுகளுக்குத் தரப்பட வேண்டிய முக்கியத்துவத்தையும், தீவிர உணர்ச்சியால் உந்தப்பட்ட தனிமனிதர்கள் அடையக்கூடிய உயரங்களையும் அல்லது தடுமாறி விழக்கூடிய படுபாதாளங்களையும் காட்டுவதற்காகவே 1800 வாக்கில் ரோமாண்டிஸிசம் எழுந்தது.
கதேயின் The Sorrows of Young Werther, மேரி ஷெல்லியின் Frankenstein, ப்ராம் ஸ்டோக்கரின் டிராகுலா ஆகிய நாவல்கள் அறிவியல், சமூக மற்றும் மதம் சார்ந்த கட்டுப்பாடுகளை மீறியும் தனிமனிதர்களின் தீவிர உணர்ச்சி வேகத்தைக் கொண்டாடுகின்றன.
கதேயின் ஃபவுஸ்ட் நாடகம் அறிவியல், இறையியல், கலை படிப்பிலெல்லாம் கரை கண்டும்கூட மனிதனின் ஆன்மீக அலசல்களுக்குத் தேவையான பதில்களைக் காணாமல் பேரறிவு வேண்டிச் சாத்தானிடம் ஒப்பந்தம் செய்து கொள்ளும் தனிமனிதனைக் காட்டியது.
கடவுள் செத்துவிட்டார் என்று சொல்லி, தனது தீவிர விருப்பத்தால் மட்டும்ர்ர் வரலாற்றை மாற்றியமைக்கக்கூடிய supermanஐ முன்மொழிந்த நீட்சேயோடு ரோமாண்டிஸிசமும் சேர்ந்து கொண்டு கடவுள் தத்துவத்தின் அஸ்திவாரத்தை அசைத்துப் பார்த்தது.
இந்தக் காலக்கட்டத்தில்தான் தனது தீவிர இச்சையால் கடவுளாகிவிட முயன்ற மேற்குலகின் சாத்தான் ரோமாண்டிஸிசத்தின் குறியீடாகச் இலக்கியப் படைப்புகளிலும் ஓவியங்களிலும் சித்தரிக்கப்பட்டான்.
ஃபிராங்கன்ஸ்டைன், டிராகுலா, ஃபவுஸ்ட் போன்ற படைப்புக்களின் கதாநாயகர்கள் யாவருமே முதலில் அறிவியலில் ஆழமாய் ஈடுபட்டுவிட்டு அதை நிராகரிப்பதுபோன்ற சித்தரிப்பில் அறிவுசார் இயக்கத்தைப் பற்றிய ரோமாண்டிஸிசத்தின் விமர்சனத்தைக் காணலாம்.
கதே நேரடியாகவே மனிதர்கள் அறிவியல் கோட்பாடுகளின்மீது கேலி செய்யும் வகையில் Elective Affinities என்ற நாவலை எழுதினார். அதில் வரும் தம்பதியர் மனித உடல்களை வெறும் ரசாயன மாற்றங்களால் தூண்டப்படும் பொட்டலங்களாகக் கருதித் தங்கள் வீட்டில் தங்கவரும் இளம்பெண்ணுக்கும் வேறொரு ஆணுக்கும் இடையே காம இச்சையைத் தூண்ட ‘அறிவியல்’ வழிமுறையில் முயல்கிறார்கள். இறுதியில் வீட்டின் எஜமானி புதிதாக வந்த ஆணிடமும், எஜமானம் இளம்பெண்ணிடம் காம இச்சை கொள்வதாகக் கதை போகிறது.
தனிமனிதர்களின் இச்சைகள் எவ்வளவு தீவிரமானவையாக இருந்தாலும் சுற்றியிருக்கும் சமூகம்,அரசியல், இயற்கை முதலான வாழ்க்கையின் புறச்சூழல்கள் அந்த இச்சைகளை மட்டுப்படுத்தியே தீரும் என்பதையும், மனிதர்களின் இச்சைகளையும் அவற்றை மட்டுப்படுத்தும் புறவயச் சக்திகளையும் விவரிப்பதே இலக்கியத்தின் கடமை என்பதையும் முக்கியமான கருத்தாகக் கொண்டு யதார்த்தவாதம் 19ம் நூற்றாண்டின் மத்தியில் எழுந்தது.
ஒருவகையில் ரோமாண்டிஸிசத்துக்கு எதிராக யதார்த்தவாதம் எழுந்ததற்கு உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தருகிறேன் என்ற சாக்கில் ரோமாண்டிஸிச படைப்புக்களில் சேர ஆரம்பித்த மிகைப்படுத்தப்பட்ட கதாபாத்திர வருணனைகளும் உரையாடல்களும் (ஓவர் பில்ட்-அப்புகள்) ஒரு காரணம்.
ஆனால் டால்ஸ்டாய் சொல்லியும்கூட ரோமாண்டிஸிசம் செத்துவிடவில்லை என்பதுதான் உண்மை.
இருபதாம் நூற்றாண்டில் சர்வாதிகாரப் போக்குகளை எதிர்த்து காஃப்கா போன்றோர் எழுதிய எழுத்துக்கள் தனிமனிதனின் மதிப்புக்காக வாதாடும் ரோமாண்டிஸிச மரபைச் சேர்ந்தவையாகவே அமைந்தன.
தனிமனிதர்களின் தீவிர இச்சைகளின் வீரியத்தைப் பேசும் படைப்புகளில் எல்லாம் இன்றுவரைக்கும் ரோமாண்டிஸிசத்தின் அம்சங்கள் தொடந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன.
