யாசுஷி இன்னோவுவே – ‘போலி கலைஞன்’

என்னைப் பொறுத்தவரைக்கும் யாசுஷி இன்னோவுவே-யின் ‘ The Counterfeiter’ குறுநாவல் ஜப்பானிய உரைநடை வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படைப்புக்களில் ஒன்று.

நேற்றிரவு முதன்முறையாக வாசித்தேன்.

பத்திரிகையில் நுண்கலைகளைப் பற்றிக் கட்டுரைகள் எழுதும் நிருபன் ஒருவன் புகழ்பெற்ற ஓவியர் கெய்காகு ஓனுகியின் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக எழுத ஓவியரின் மகனால் நியமிக்கப்படுகிறான்.

கெய்காகு வாழ்நாள் முழுவதும் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று தனது புகழ்பெற்ற ஓவியங்களை வரைந்ததால் அவருடைய வாழ்க்கைக் குறிப்புக்களைச் சேகரிப்பதில் ஏற்பட்ட குழப்பத்தால் பதின்மூன்று ஆண்டுகளுக்கு மேலாகப் பணியை முடிக்காமல் காலம் தாழ்த்துகிறான்.

எழுதியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்போது கெய்காகுவின் இளமைக்கால நாட்குறிப்புக்கள் அவன் கைக்குக் கிடைக்க அதில் கெய்காகு தனது இளமைக்கால நண்பரான ஷினோசாகியைப் பற்றி எழுதி வைத்திருக்கும் மூன்று குறிப்புக்கள் அவன் கண்களில் தென்படுகின்றன.

இந்த ஷினோசாகிதான் கெய்காகுவின் ஓவியங்களைக் காப்பியடித்து ஊரெல்லாம் அவற்றைக் கெய்காகுவின் ஓவியங்கள் என்று சொல்லி விற்றுவந்த ஹோசன் ஹாரா என்ற உண்மை நிருபனுக்குப் புலப்படுகிறது.

குறுநாவலின் மிச்சப் பகுதிகள் நிருபன் அதற்குமுன் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஹோசன் ஹாராவைப் பற்றி அறிந்து கொண்ட விவரங்களின் தொகுப்பாகவே விரிகிறது.

கெய்காகுவைப் போலவே ஓவியனாக வாழ்க்கையைத் தொடங்கிய ஹோசன் ஹாரா கலையுலகில் நிலைத்து நிற்க முடியாமல் கெய்காகுவின் ஓவியங்களின் காப்பிகளைச் சிறு பட்டணங்களிலும் ஜப்பானிய மலைக் கிராமங்களிலும் விற்று வந்திருக்கிறான். வாழ்க்கையின் இறுதியில் போர்க்காலத்தின்போது நிருபனது குடும்பம் தஞ்சம் தேடிப் போன மலைக் கிராமத்திற்கு வந்து அங்கு குழந்தைகளுக்கான வாண வேடிக்கைகளைச் செய்பவனாக வாழ்ந்து முடித்திருக்கிறான்.

கெய்காகுவின் மரணத்துக்குச் சரியாக இரண்டு வருடங்களுக்குப் பின் ஹோசன் ஹாராவின் மரணம் தனிமையில் நிகழ்ந்திருக்கிறது.

இரண்டாம் உலகப் போர் காலச் சூழலில் எழுதப்பட்ட கதை. அக்கால ஜப்பானிய எழுத்தின் மிகப் பெரிய பலமான யதார்த்த எழுத்துப் பாணியில் எழுதப்பட்ட குறுநாவல்.

முக்கியமில்லாதவைபோல் தோன்றும் சிறு சிறு விவரங்களாலும் இயற்கைச் சூழல், பருவக்காலம் ஆகியவற்றின் வருணனைகளால் கதாமாந்தர்களின் அகவயமான சிக்கல்களைத் திறமையாக விவரிக்கும் அபரிதமான சித்தரிப்பு. அதே சமயம், போர்ஹேஸின் மிகச் சிறந்த நாவல்களில் உள்ளது போல் விவரங்களின் துல்லியம், அந்தத் துல்லியத்தில் மறைந்து கிடக்கும் மர்மங்கள், மாய யதார்த்தம்.

இள வயதில் மிகத் திறமையானவனை நண்பனாக்கிக் கொண்டதால்தான் ஹோசன் ஹாரா கெட்டுப் போனான் என்பது இனோவுவே இந்தக் குறுநாவலில் எடுத்து வைக்கும் கருத்து.

கெய்காகுவின் நட்பு இல்லாமல் இருந்திருந்தால் ஹோசன் ஹாரா தன் திறமையால் சோபித்திருப்பான். ஆனால் கெய்காகுவின் திறமை என்னும் பெரு நெருப்பு அவனை ஓவியனாக வளர விடாமல் முற்றிலும் அழித்து விடுகிறது.

அசா என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் ஹோசன் ஹாரா அவள் குடும்பத்தின் பெயரையே ஏற்றுக் கொண்டு தனது சொந்த பெயர் என்ற அடிப்படை அடையாளத்தையே இழப்பதுபோல் இனோவுவே காட்டுகிறார். கடைசியில் அவனுடைய ஏமாற்று வேலைகளையும் சட்ட விரோதமாக அவன் வாண வேடிக்கைகளைச் செய்வதையும் வெறுக்கும் அவன் மனைவி அவனை முதிய வயதில் தனியாக விட்டுப் பிரிந்து போகிறாள்.

ஹோசன் ஹாராவின் திருட்டுத்தனத்தை அறிந்து கொள்ளும் கெய்காகுவும் அவனைப் பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்துகிறான்.

வாண வேடிக்கைகளை உருவாக்கும்போது ஏற்பட்ட விபத்தில் ஹோசன் ஹாரா மூன்று கைவிரல்களை இழந்து ஓவியங்கள் வரையும் ஆற்றலை இழக்கிறான். என்ன இருந்தாலும் ஓவியன் அல்லவா? எப்படியேனும் கருன் ஊதா நிறத்தில் வாண வேடிக்கைகளைச் செய்ய அவன் கடுமையாக முயற்சிக்கிறான். ஆனால் அந்தக் கனவும் அவனுக்கு நிறைவேறாமல் போகிறது.

குறுநாவலின் கதாநாயகனைப் போலவே இனோவுவே-யும் பத்திரிகையில் நிருபராக வேலை பார்த்துப் பின்பு நாவல்களை எழுத வேலையை விட்டவர். பல்கலைக் கழகத்தில் நுண்கலை பட்டதாரி. அவரது எழுத்தில் நிருபர்களுக்கு உரிய விவரத் துல்லியமும், நுண்கலை ஓவியங்களைப் பற்றிய ஆழமான அறிவும் தெளிவாகத் தெரிகின்றன.

எந்த எழுத்தை எழுதுவதற்கு முன்னாலும் இன்னோவுவே அவ்வளவு கள ஆராய்ச்சி செய்வார் என்று அவரை மொழிபெயர்த்த லியோன் பிக்கோன் சொல்கிறார்.

ஒரு வகையில் பார்த்தால் The Counterfeiter இரண்டாம் உலகப் போரினால் முற்றிலும் அழிந்து போன பழைய ஜப்பானைப் பற்றியும் மறைந்து போன அதன் பழைய பண்பாடுகளைப் பற்றிய நாவல்.

யார் கண்ணிலும் படாமல் ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு மலைக்கிராமத்தில் ஹோசன் ஹாரா கெய்காகுவின் படைப்புக்கள் என்று பொய் சொல்லி விற்ற இரண்டு ஓவியங்களைக் காணும் நிருபன், அவற்றை வாங்கியவர்களிடம் அந்த ஓவியங்களைப் பற்றிய உண்மையைச் சொல்லாமல் வந்துவிடுகிறான்.

உண்மையைச் சொல்லி என்ன ஆகப் போகிறது என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறான். கெய்காகுவின் உண்மையான ஓவியங்களும் ஹோசன் ஹாரா செய்த போலிகளும் கால வெள்ளத்தில் கரைந்து போய் எந்தவித முக்கியத்துவமும் இல்லாமல் போகப் போகின்றவைதானே என்பது அவன் கருத்து.

யாசுஷி இன்னோவுவே வாசிக்கப்பட வேண்டிய எழுத்தாளர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s