இன்று ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கும் சில சிங்கப்பூர்க் கவிஞர்கள் என்னைச் சந்தித்தார்கள்.
வருட இறுதியில் வெளிவரவிருக்கும் என் ஆங்கிலக் குறுநாவல் ஒன்றை எடிட் செய்யும் பெண்ணும் இதில் அடக்கம்.
சிங்கப்பூரில் எழுதப்படும் ஆங்கிலப் படைப்புக்கள் ஏன் ஆங்கிலம் கூறு நல்லுலகில் இன்னமும் பரவலாகப் பெயர் வாங்கவில்லை என்று பேச்சுத் திரும்பியது.
(அவரவர் கவலை அவர்களுக்கு).
Tropeகளின் பிரச்சனையாக இருக்கலாம் என்றேன்.
என்ன என்பதுபோல் பார்த்தார்கள்.
Tropeகள் ஒவ்வொரு மொழியிலும் அர்த்தத்தைக் கடத்த ஏற்பட்டிருக்கும் குறுக்குவழிகள். படிமங்கள், உருவகங்கள், உவமைகள், மரபுத் தொடர்கள், குறிப்பிட்ட பாத்திரப் படைப்புக்கள், வரலாறு மற்றும் செவிவழிக் கதைகளிலிருந்து உருவப்பட்டிருக்கும் மனிதர்கள் ஆகியவற்றின் கூட்டுக் கலவை.
ஒவ்வொரு மொழிக்கும் இவை வேறுபடும். ‘குயில்போல் குரல்’ என்றால் தமிழில் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரைப் பற்றி ஒரு கருத்து தமிழ் பேசுபவர்களிடையே ஏற்படும். மற்ற மொழிகளில் சொல்லிப் பாருங்கள் – இந்த உவமை அர்த்தமற்றதாக இருக்கும்.
கிரேக்க croeseusஐத் தமிழில் குபேரன் என்றால்தான் (அடிக்குறிப்புகள் இன்றி) முழுமையாக அர்த்தப்படும். தமிழ்க் கண்ணகிக்கு அந்தப் பக்கம் துல்லியமான கதாபாத்திரம் இல்லை. King Learக்கும் அவர் மகள்களுக்கும் இந்தப் பக்கம் அப்படியான கதாபாத்திரங்கள் இல்லாததுபோல் – திருதராஷ்டிரன்கூட மகன்களால்தான் கெட்டான்.
அதுபோல் வாழ்க்கை ஆதாரத்தைக் குறிக்க சீன மொழியிலும் தென்கிழக்காசியாவின் பல மொழிகளிலும் ‘அரிசி’ என்ற பொருள் பயன்படும். மேற்கத்திய மொழிகளிலும், மத்திய கிழக்கிலும்கூட அரிசி சுவாரஸ்யப்படாது. ரொட்டிதான்.
அன்னை குழந்தைக்காகச் செய்யும் தியாகம் போன்ற சில tropeகள் மனித இனம் அத்தனைக்கும் பொது.
ஒரு மொழியின் வார்த்தைகளோடு எவ்வளவுதான் பரிச்சயம் ஏற்பட்டிருந்தாலும் tropeகளில் சறுக்கினால் அந்தப் பேச்சோ படைப்போ அந்நியமாய் ஒலிக்கிறது.
அந்நியமானதாகத் தோன்றும் படைப்பு அம்மொழியை பிறந்ததிலிருந்து பேசுவோரின் மனதுக்கு நெருக்கமாவது சவாலான விஷயம்.
மிகப் பெரிய மொழியறிஞர்கள் செய்யும் மொழிபெயர்ப்புக்கள்கூட மோசமாக இருப்பதற்கு மொழியாளுமை அல்ல, இந்த tropeகளே காரணம் என்றேன்.
இருமொழியோ பல மொழியோ பேசுபவர்கள் முனைந்து பயிற்சி மேற்கொண்டால் ஒழிய இந்தப் போதாமையைத் தாண்டிப் போக முடியாது.
எழுத நினைக்கும் மொழியின் tropeகளில் வாசிப்பு மூலமாக, வெகுஜன ஊடகங்களின் வழியாக முழுக்க நம்மை மூழ்கடித்துக் கொள்ள வேண்டும். அந்த மொழியின் இலக்கியத்தோடு வாழ வேண்டும்.
மற்றவர்கள் நமது முயற்சிகளைப் பார்த்துச் சிரிப்பார்களே என்று அஞ்சாத ‘வெட்கங்கெட்ட’ தனமும் அவசியம்.
Tropeகளைப் பழகப் பழகத்தான் அவை நமக்குக் கைவரப்பெறும்.
அப்போதுகூட வெற்றி கிட்டுமா என்று சொல்ல முடியாது.
மிகுந்த உழைப்பு அவசியம்.
சென்னையிலிருக்கும் சாதாரண ஆட்டோகாரர் கூட நாம் வாய் திறந்து பேசுகையில் உள்ளூர்வாசியல்ல என்று உடனே கண்டுபிடித்துவிடக் கூடிய சாத்தியம்தான் அதிகம்.
