
முப்பது பக்கங்களுக்கு நீளும் ஜப்பானிய எழுத்தாளர் யசுனாரி கவபத்தாவின் ‘இஸு ஆட்டக்காரி’ சிறுகதை என்று சிலரால் அழைக்கப்பட்டாலும், குறுநாவல்தான்.
கதையின் போக்கில் சிறுகதைக்குரிய ஒருமை இருந்தாலும், குறுநாவல்களுக்குரிய கதாபாத்திரச் செறிவும், சமூகச் சூழல் அலசல்களும் அதற்கு உண்டு.
உலகப் போர்களுக்கு முந்திய காலம். தோக்கியோவிலிருந்து பதினெட்டு வயது மாணவன் விடுமுறைக்காக இஸு தீபகற்பத்திற்குப் போகிறேன். அங்கு மலைகளுக்கிடையே அமைந்திருக்கும் விடுதியில் ஊர் ஊராகப் பயணப்படும் இசைக்குழுவினரைச் சந்திக்கிறான்.
இருபத்து மூன்று வயதான இளைஞன், பதினேழு வயதான அவன் மனைவி, நாய்க்குட்டியைத் தூக்கி வைத்திருக்கும் கிழட்டு மாமியார், இளைஞனின் தங்கை, வேலைக்காரப் பெண்.
கவுரூ என்ற பெயருடைய இளைஞனின் தங்கையின் நடனத்தை ஏதேச்சையாகக் காணும் மாணவன் அவளிடம் ஈர்க்கப்படுகிறான். எய்கிச்சி என்ற இளைஞனிடம் நெருங்கிப் பழக ஆரம்பிக்கிறான்.
அந்த இசைக்குழுவினரோடு ஷிமோதா நகரம்வரை பயணப்படுகிறான்.
அப்போது பதினைந்து வயதானவள் என்று நினைத்துக் கொண்டிருந்த கவுரூ உண்மையில் பதின்மூன்று வயதே நிரம்பியவள் என்று அவனுக்குத் தெரிய வருகிறது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜப்பானிய சமுதாயத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை கவபத்தா குறுநாவலில் வரும் சின்னச் சின்ன விவரிப்புக்களால் எடுத்துக் காட்டுகிறார்.
மாணவனும் எய்கிச்சியும் நெருங்கிப் பழகியபோதும் இரவில் விடுதி ஒன்றில் தங்கப் போகும்போது தோக்கியோவிலிருந்து வந்திருக்கும் ‘உயர்ந்த குடியில் பிறந்த’ மாணவனுக்கு எய்கிச்சி வேறொரு ‘நல்ல’ விடுதியைப் பார்த்துத் தருகிறான்.
மாணவன் அவன் தங்கியிருக்கும் விடுதிக்கு எய்கிச்சியை வரவழைத்து விருந்து கொடுக்கிறான். எய்கிச்சி கிளம்பிப் போனபிறகு விடுதிக்காரப் பெண்மணி ‘இத்தனை நல்ல உணவை இப்படிப்பட்டவர்களுக்குத் தந்தது வீண்’ என்று கூறுகிறாள்.
ஷிமோதாவுக்குப் போகும் வழியில் இருக்கும் பல கிராமங்களின் முகப்புக்களில் ‘இசைக்குழுவினர் கிராமத்தின் எல்லைக்குள் வரக் கூடாது’ என்று அறிவிப்பு தொங்குகிறது.
இசைக்குழு பெண்கள் யார் அழைத்தாலும் போக வேண்டிய விலைமாதர்கள் என்ற வழக்கம் நடப்பில் இருந்த காலம்.
ஷிமோதாவுக்குப் போகும் வழியில் விடுதிகளில் தங்கியிருக்கும் வேளைகளில் மற்ற விடுதிகளிலிருந்து அழைப்பு வர கவுரூ மட்டுமின்றி அவள் அண்ணியும் அவர்களுடைய பணிப்பெண்ணும்கூட மாணவனிடம் காத்திருக்கச் சொல்லிவிட்டுப் ‘போய் வருகிறார்கள்’.
குறுநாவலின் மிகச் சிறந்த பகுதி ஒன்றில் மழை அடித்துப் பெய்யும் ஓசையினூடாக அடுத்த விடுதியில் கூடியிருக்கும் ஆடவர்களுக்காகக் கவுரூ வாசிக்கும் ஜப்பானிய மத்தளத்தின் ஓசை மாணவனுக்குக் கேட்பதுபோலவும் அந்த ஓசை அடங்கும்போது என்ன நடந்திருக்கும் என்று மாணவனுக்குப் புரிவதுபோலவும் கவபத்தா விவரிக்கிறார்.
குடும்ப வறுமையின் காரணமாகவே தன் தங்கையை இந்தத் தொழிலுக்கு வரவழைத்ததாக ஒரு நாள் தனியாக இருக்கும்போது எய்கிச்சி மாணவனிடம் சொல்கிறான்.
ஊர் ஊராய்ப் பயணப்படும் இசைக்குழுவினரின் பாவப்பட்ட வாழ்க்கைக்கு எதிர்ச் சித்திரமாக இஸு நடனக்காரியான பதின்மூன்று வயது கவுரூவின் குழந்தைதனத்தையும் கள்ளங் கபடமற்ற குணத்தையும் கவபத்தா காட்டுகிறார்.
எய்கிச்சியும் மாணவனும் நதியில் குளிக்க வரும்போது அங்கு கவுரூவும் மற்ற இரண்டு பெண்களும் நிர்வாணமாகக் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். அண்ணனும் மாணவனும் அங்கு வந்ததைப் பார்த்த மகிழ்ச்சியில் தன் நிர்வாணத்தையும் மறந்து கவுரூ வெள்ளை வெளேரென்ற பாதங்களை உயர்த்தி நின்றபடி அவர்களுக்குக் கையசைக்கிறாள்.
குறுநாவலின் பின்னொரு பகுதியில் கவுரூவின் சிரிப்பு மலர்கள் சிரிப்பதுபோல் இருந்ததென்று வருணிக்கும் மாணவன் அவள் ஒருத்தியின் சிரிப்பை வருணிக்கும்போதுதான் இந்த உவமை தயக்கமில்லாமல் இயல்பாக வருகிறது என்று சொல்கிறான்.
கவுரூவும் மாணவனிடம் பிரியம் காட்டுகிறாள். மாணவனிடம் ஏற்பட்ட பிரியத்தை விளக்கக் கவுரூ அவள் அண்ணியிடம் ‘அவன் நல்லவனாக இருக்கிறான். இப்படிப்பட்ட நல்லவன் நம்மோடு இருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது’ என்கிறாள்.
ஷிமோதா சென்று சேர்ந்தபின் அப்போதுதான் ஜப்பானுக்கு வந்திருந்த ஊமைப்படங்களில் ஒன்றைப் பார்க்க மாணவன் தன்னைச் சினிமாவுக்கு அழைத்துப் போக வேண்டும் என்பது கவுரு மிகப் பெரிய ஆசையாக இருக்கிறது.
ஆனால் அவர்களுடன் இருக்கும் கிழவி மாணவனுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள சமூக ஏற்றத் தாழ்வுகளை மனதில் கொண்டு கவுரூவை மாணவனுடன் போக விடாமல் தடுக்கிறாள்.
தன் கையிலிருந்த பணம் தீர்ந்துபோகவே மாணவன் மீண்டும் அவர்களை பனிக்காலத்தின்போது சந்திப்பதாகச் சொல்லிவிட்டுத் தோக்கியோவிற்குக் கப்பலில் கிளம்பிப் போவதாக குறுநாவல் முடிகிறது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உச்சம் பெற்ற ஜப்பானிய யதார்த்தவாத எழுத்தின் மிகச் சிறந்த உதாரணங்களில் ஒன்று யசுனாரி கவபத்தாவின் ‘இஸு ஆட்டக்காரி’ குறுநாவல்.