கணவனால் வஞ்சிக்கப்பட்டவர்களின் கதைகள்

பௌத்த காப்பியமான குண்டலகேசியின் கதாநாயகிக்கும் அதற்கு எதிராக எழுதப்பட்ட சமண காப்பியமான நீலகேசியின் கதாநாயகிக்கும் இடையே சுவையான ஒற்றுமை உள்ளது.

இருவரும் கணவனால் ஏமாற்றப்பட்டவர்கள்.

மாஜி திருடனான குண்டலகேசியின் கணவன் அவளிடமிருக்கும் நகைகளைக் கைப்பற்ற நினைக்கிறான். அவளை மலையின் மீதிருந்து தள்ளிக் கொல்ல முடிவுசெய்து அவளை மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். கணவனின் தீய எண்ணத்தை உணர்ந்து கொண்ட குண்டலகேசி மலையின் உச்சியில் அவனைக் கடைசியாக வலம் வந்து வணங்குவதுபோல் பாவனை செய்து அவனை மலையுச்சியிலிருந்து தள்ளி விடுகிறாள். தனது செயலுக்காக வருந்தும் குண்டலகேசி பின்னர் பௌத்த பிக்குணியாக மாறி அறத்தைப் போதிப்பதாகக் கதை போகிறது.

நீலகேசியின் கதாநாயகி நீலி பிறப்பால் பிராமணப் பெண். விலைமாதர்களிடம் மயங்கித் தனது பணத்தை எல்லாம் இழக்கும் அவள் கணவன் நீலியினுடைய நகைகளைக் கைப்பற்றும் நோக்கத்தில் அவளை ஆள் நடமாட்டமில்லாத காட்டுக்குள் அழைத்துப் போகிறான் (அங்கு மலை, இங்கு காடு). நடுக்காட்டில் அவளுடைய நகைகளைப் பறித்துவிட்டு அவளையும் அவர்களுடைய குழந்தையையும் பாழுங் கிணற்றில் தள்ளிக் கொன்று விடுகிறான்.

நீலியும் அவள் குழந்தையும் பேய்களாக மாறி பழையனூர் பகுதியில் அலைகிறார்கள். அவளுக்குப் பழையனூர் நீலி என்ற பெயர் வருகிறது.

அடுத்த பிறப்பில் அவள் கணவன் வணிகனாகப் பிறந்து வியாபாரத்துக்காகப் பழையனூர் பகுதிக்கு வருகிறான். நீலிப்பேயும் அவள் குழந்தையும் பழைய வடிவத்தை எடுத்துக் கொண்டு அந்தப் பகுதியில் வாழும் வேளாளர்களிடம் போகிறார்கள். நீலி அவர்களிடம் அந்த வணிகன்தான் அவளுடைய கணவன் என்றும் அவளையும் குழந்தையையும் கைவிட்டுப் போக அவன் நினைக்கிறான் என்றும் சொல்கிறாள்.

வேளாளர்கள் வணிகனை விசாரிக்கிறார்கள். அவன் மறுப்பையும் மீறி நீலியுடன் குடும்பம் நடத்தும்படி அவனை வற்புறுத்துகிறார்கள். எந்த விபரீதம் நடந்தாலும் அதற்குத் தாங்களே பொறுப்பு என்றும் வாக்குத் தருகிறார்கள். ஒரே வீட்டில் கணவனும் மனைவியுமாய் இரவைக் கழிக்கும் நேரத்தில் நீலி மீண்டும் பேயாக மாறிக் கணவனைக் கொன்று மறைந்து போகிறாள்.

அடுத்த நாள் விவரம் அறிந்த வேளாளர்கள் எழுபது பேரும் செய்த பிழைக்காக வருந்தித் தீயில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

மீண்டும் பழையனூரில் நீலிப்பேயாகச் சுற்றும் அந்தப் பெண் பின்னாளில் முனிச்சந்திரர் என்ற சமண முனிவரைச் சந்தித்து அவருடைய போதனையால் மனம் மாறி சமண மதத்தைப் போதிப்பதாக நீலகேசி கதை தொடர்கிறது.

சேக்கிழாரும் பெரிய புராணத்தில் நீலியின் கதையைச் சொல்கிறார்.

குண்டலகேசியும் நீலகேசியும் நன்னெறியைப் போதிப்பது மட்டுமின்றி, பௌத்த குண்டலகேசி சமணத்தையும், சமண நீலகேசி பௌத்தத்தையும் விமர்சிப்பதுபோல இந்தக் காப்பியங்கள் அமைந்துள்ளன.

குண்டலகேசியின் கதை தம்மபத உரையிலும், தேரிகாதையிலும் காணக் கிடைக்கின்றது.

ஆனால் நீலகேசியின் கதை அப்படியல்ல. அவள் கதை சமண வரலாற்று நூல்கள் எதிலும் இல்லை.

நீலகேசி ஆசிரியர் தாமரை மலர்கள்மீது பாதம் பதிய நடந்த அருகக் கடவுளை வணங்கிவிட்டுத் தூங்கிய போது அவர் கனவில் தோன்றிய தேவதை அவருக்கு இந்தக் கதையைச் சொன்னதாகச் சொல்கிறார்.

‘தண்டா மரைமேல் நடந்த தான்தடந் தாள்வ ணங்கிக்
கண்டேன் கிடந்தேன் கனவின்னது கண்ட வாறே’

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s