ரஷ்ய இலக்கியத்தின் பொற்காலம் என்று கருதப்படும் புஷ்கின், கோகோல், துர்கனேவ், தஸ்தவ்யஸ்கி, டால்ஸ்டாய் முதலானோரின் படைப்புக்களை வாசிப்பவர்கள் அப்படைப்புக்களின் மேற்கத்திய வடிவ அமைதியினோடு தனித்துவமான ரஷ்ய அடையாளமும் மதிப்பீடுகளும் விரவியே இருப்பதைக் காண்பார்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி இருபதாம் நூற்றாண்டில் நடந்தேறிய ரஷ்யப் புரட்சிவரையில் ரஷ்ய இலக்கியத்தில் மேற்கத்திய கலை வடிவம், அழகியல் – ரஷ்ய தேசியம், தெய்வீகம் என்ற இந்த இருமை தொடர்ந்து காணப்படுகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதே காலக்கட்டத்தில் உருவான ஏனைய ஐரோப்பிய மொழி நாவல்கள் மற்றும் படைப்புக்களையும்விட ரஷ்ய இலக்கியத்தின் செறிவுக்கும் ஆழத்துக்கும் இந்த இருமை காரணமாக இருந்தது என்றும் சொல்லலாம்.
கோகோல், துர்கனேவ், டால்ஸ்டாய், தஸ்தவ்யஸ்கி ஆகியோரது முதிர்ந்த பின்னாளைய நாவல்களில் இந்த இருமைக்கு இடையே உள்ள மோதல்களும், சமரசங்களும் விவாதிக்கப்பட்டன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ரஷ்யப் படைப்புக்கள் தேசியத்தின் மீதும் தெய்வீகத்தின்மீதும் காட்டிய கவனத்திற்கு ரஷ்யாவின் வரலாறும் ஆரம்பக்கால இலக்கியப் போக்குகளும் மிக முக்கியமான காரணங்கள்.
ஏனைய ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடுகையில் மிகத் தாமதமாகவே ரஷ்யா ஓர் ஒருமித்த நாடாக உருவானது. ரஷ்ய நாட்டின் முதல் வெளிப்பாடாக ரஷ்ய நிலப்பரப்பின் வடமேற்குப் பகுதியில் ருஸ்’ என்று சிறு ராஜ்ஜியம் 862ல்தான் அமைக்கப்பட்டது. ஸ்டாராயா லாதோகா, நோவ்கோரோத் என்ற இரு நகரங்களைச் சுற்றி அமைந்திருந்த இந்த சிறு ராஜ்ஜியத்தின் குடிமக்கள் பெரும்பாலும் ஸ்லாவ் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ருஸ்’ ராஜ்ஜியம் ஸ்காண்டிநேவிய நிலப்பரப்பிலிருந்து வந்திருந்த வைக்கிங்குகளின் ஆட்சியில்தான் இருந்தது.
அதே காலக்கட்டத்தில் ரஷ்யாவின் மற்ற பகுதிகளில் ஸ்லாவ் இன மக்கள் சிறு சிறு குழுக்களாகவும் குட்டி ராஜ்ஜியங்களாகவும் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள்.
ருஸ்’ ராஜ்ஜியம் அமைந்த இருபது ஆண்டுகளில் நோவ்கோரோத்தின் இளவரசனான ஓலெக் இப்போது உக்ரைன் இருக்கும் நிலப்பரப்பிலுள்ள கியெவ் நகரத்தின்மீது படையெடுத்து அங்கு நிலவிவந்த ஸ்லாவிக் மக்களின் ராஜ்ஜியத்தை ருஸ்’ ராஜ்ஜியத்தோடு சேர்த்துக் கொண்டான். ருஸ்’உம் கியெவ்வும் இணைந்த இந்த ராஜ்ஜியமே நவீன ரஷ்ய நாட்டின் முன்னோடியாகப் பார்க்கப்படுகிறது.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இந்த கியெவ்விய ருஸ்’ ராஜ்ஜியம் 1237 மங்கோலிய படையெடுப்புவரையில் கியெவ்விய மகா இளவரசர்களின் ஆட்சியின் கீழ் நிலைத்திருந்தது. இந்தக் காலக்கட்டத்தில் கியெவ் மற்ற ஸ்லாவிய சிறு ராஜ்ஜியங்களோடு ஓயாமல் போரிட்டு வந்தது.
சண்டையும் சமாதானமும் மாறி மாறி வந்து கொண்டிருந்த வேளையில் கியேவ்விய ருஸ் ராஜ்ஜியம் 988ம் ஆண்டு கிரேக்க கிறித்துவத்தை ஏற்றுக் கொண்டது. ருஸ்’ ரஜ்ஜியத்தில் மதப்பிரச்சாரம் செய்ய வந்த கிரில் மற்றும் மெத்தோடியஸ் என்ற சகோதரர்கள் வேதாகமங்களை மக்களின் மொழியில் எழுதுவதற்காக் ககிரிலிய எழுத்து என்ற எழுத்துமுறையை உருவாக்கினார்கள். இந்த எழுத்துமுறையே ரஷ்ய இலக்கியத்தின் ஆரம்பத்துக்கு வழிகோலியது.
கிரில் மெத்தோடியஸ் ஆகியோரால் எழுத்துமுறைக்குக் கொண்டு வரப்பட்ட மொழி பழைய கிழக்கு ஸ்லாவியம் என்றும் பழைய ரஷ்யம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த மொழி பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டுவரை புழக்கத்தில் இருந்தது. இதிலிருந்துதான் நவீன ரஷ்ய, பைலோருஷ்ய மற்றும் உக்ரைனிய மொழிகள் தோன்றின.
கிரிலையும் மெத்தோடியஸ்ஸையும் தொடர்ந்து பல கிறித்துவ துறவிகள் ரஷ்ய நிலப்பரப்பு எங்கும் சென்று கிறித்துவ மதப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். அதே சமயம், கியெவ்விய ருஸ்’ஸில் பயன்பாட்டிற்கு வந்திருந்த கிரிலிய எழுத்து முறையை ஸ்லாவிய மக்களிடையே புழக்கத்திற்குக் கொண்டு வந்திருந்தார்கள். கிறித்துவத் துறவிகள் கொண்டு வந்த இந்த எழுத்து முறை ஸ்லாவிய மக்களிடையே அவர்கள் எல்லோரும் ஒரே மொழியைப் பேசும் ஓரினத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பிரக்ஞையை உண்டு பண்ணியது. கிரேக்கத்திலிருந்து கொண்டுவரப்பட்டு ஸ்லாவிய நிலங்களில் பரப்பப்பட்ட கியேவ்விய கிறித்துவமும் ஸ்லாவிய மக்களிடையே மெல்ல ஒற்றுமையை உருவாக்கியது.
ஆனாலும் ஸ்லாவிய குட்டி ராஜ்ஜியங்கள் பலவும் கியேவ்-ருஸ்ஸோடும் தங்களுக்கிடையிலேயும் போரிட்டுக் கொண்டுதான் இருந்தன.
பதினோராம் நூற்றாண்டு தொடங்கிப் பழைய ரஷ்ய மொழியில் இலக்கியங்கள் தோன்ற ஆரம்பித்தன. இப்படி உருவான இலக்கியங்கள் பெரும்பாலும் கவிதை நடையில் அமைந்திருந்தன. பதினைந்தாம் நூற்றாண்டுவரை உருவாக்கப்பட்ட இந்தப் பழைய ரஷ்ய இலக்கியங்கள் மிகப் பெரும்பாலும் ருஸ்’ இளவரசர்கள் பங்கெடுத்த முக்கியமான போர்களின் வருணனைகள், பைலினாக்கள் என்று அழைக்கப்பட்ட வாய்மொழிக் காவியங்கள், கிறித்துவச் சபையின் பரிசுத்தர்களின் வாழ்க்கை வரலாறுகள் என்ற வகைமைகளாகவே இருந்தன.
இந்தக் காலக்கட்டத்தின் பழைய ரஷ்ய இலக்கியங்களின் உள்ளடக்கம் ஸ்லாவிய மக்களின் தேசிய, ஆன்மீக உணர்வுகளை வளர்க்கும் வகையிலும், குறிப்பிட்ட அரசர்களின் வம்சாவழிச் சிறப்பையும் அதிகாரத்தையும் நிலைநிறுத்துபவையாகவும் அமைந்திருந்தன. ஆரம்ப நாள் முதலே பலம்வாய்ந்த ஒருங்கிணைந்த கிறித்துவ ஸ்லாவியப் பேரரசை உருவாக்குவதே இந்த இலக்கியங்களின் தலையாய நோக்கமாக இருந்தது.
உதாரணத்திற்கு, 13ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘இகோர்-இன் நடத்திய போரின் கதை’ நோவ்கோரோத்-செவெர்ஸ்க்கின் இளவரசன் இகோர் ஸ்வியாத்தோஸ்லாவிச் டான் நதிக்கரை போலோவ்த்ஸியர்கள்மீது 1202ல் நடத்திய படையெடுப்பைப் பதிவு செய்கிறது. இந்தக் காவியம் ஓயாமல் தங்களுக்கிடையே போரிட்டுக் கொண்டிருக்கும் ஸ்லாவிய இளவரசர்களைக் கண்டித்துக் கிழக்கிலிருந்து வரவிருக்கும் துருக்கியர்களுக்கெதிராய் ஒன்றுபடுமாறு வலியுறுத்துகிறது. ஆனாலும் 13ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷ்ய கிறித்துவம் ஸ்லாவிய மக்களிடையே முற்றாகப் பரவவில்லை என்பது இந்தப் படைப்பிலிருந்து தெளிவாகிறது. ஈகோர் கிறித்துவனான போதிலும் அவன் மனைவியான யாரோஸ்லாவ்னா பழைய நாட்டார் தெய்வங்களிடம் வேண்டிக் கொள்வதைப்போல் கதையில் வருகிறது.
பழைய ரஷ்யாவிலிருந்த ஸ்லாவிய ராஜ்ஜியங்களும் பிளவுபட்டே இருந்தன. 1213லிருந்து 1236வரையிலான காலக்கட்டத்தில் எழுதப்பட்ட காவியம் என்று கருதப்படும் ‘டானியல் ஸாதோச்நிக்கின் பிரார்த்தனை’ என்ற படைப்பில் பெரெயாஸ்லாவில் என்ற நகரத்தைச் சேர்ந்த டானியில் ஸாதோஸ்நிக் என்ற புலவன் பாடிப் பரிசில் பெறும் பழைய தமிழ்ப் புலவர்களைப் போலவே பெரெயாஸ்லாவில் இளவரசனான யாரோஸ்லாவிச் விசேவோலோதோவிச்சிடம் உதவி கேட்கிறான். எதுகை மோனைகள் நிறைந்த மொழியில் எழுதப்பட்ட இந்தப் படைப்பு முழுவதும் கிறித்துவ வேதங்களிலிருந்தும் பழைய ரஷயக் கதைகளிலிருந்தும் எடுத்தாளப்பட்ட வாசகங்களும், நாட்டார் வழக்குகளும், (பின்னாளில் பத்தொன்பதாம் நூற்றாண்டு படைப்புக்களில் வருவதுபோலவே) கிறித்துவப் பாதிரியார்களைப் பற்றிய நையாண்டியும், பரிகாசமும் நிறைந்திருக்கிறது.
1237ல் மங்கோலியர்கள் படையெடுத்து வந்து கியேவ்விய ருஸ்; ராஜ்ஜியத்தை முற்ற்லும் அழித்தார்கள். மங்கோலியர்களோடு நடைபெற்ற போரில் கியேவ்விய ருஸ்’ஸின் மக்கள்தொகையில் பாதிக்கு மேல் இறந்ததாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது, வேற்று மதத்தினரான மங்கோலியர்களுக்கு எதிராக அலெக்ஸாண்டர் நெவிஸ்கி என்ற கியேவ்விய மகா இளவரசன் தொடுத்த போரைப் பற்றி ‘அலெக்ஸாண்டர் நெவ்ஸ்கியின் வாழ்க்கை’ என்ற 14ம் நூற்றாண்டில் தொடக்கத்தில் வெளிவந்த படைப்பு பேசுகிறது. அலெக்ஸாண்டர் மங்கோலியர்களுக்கு எதிராக மட்டுமின்றி, 1242ல் ருஸ்’ஸின்மீது படையெடுத்து வந்த டுட்டோனிய ஜெர்மன் படையினரோடு போரிட்டுத் தோற்கடித்தான். மங்கோலியர்களோடு சமரசம் செய்து கொள்ள அவர்களின் தலைவனான பாத்து கானையும் போய்ப் பார்த்துவந்தார்.
ரஷ்யத் தேசிய அடையாளத்தைப் பாதுகாத்தற்காக அலெக்ஸாண்டர் நெவ்ஸ்கி ரஷ்ய திருச்சபையின் பரிசுத்தர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
அவருடைய வாழ்க்கை வரலாறும் ‘பரிசுத்தர்களின் வாழ்க்கை’ (ஸிவித்தியா ஸ்வியாத்திக்) என்ற இலக்கிய வகைமையாகவே கருதப்பட்டுகிறது,
ரஷ்ய இலக்கியத்தில் தேசியத்துக்கும் தெய்வீகத்துக்கும் இடையே இருந்த நெருங்கிய தொடர்பை இது தெளிவாகக் காட்டுகிறது.
பின்னால் பார்க்கப்போவதுபோல் இந்தத் தொடர்பு பத்தொன்பதாவது நூற்றாண்டு ரஷ்ய இலக்கியத்தில் பலவிதமான காரணங்களுக்காக வளர்ந்தே வந்தது.

அலெக்ஸாண்டர் நெவ்ஸ்கி