ஜேம்ஸ் ஜாய்ஸ் – வெளிப்படுத்துதல்கள்

ஆங்கில இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படும் ஜேம்ஸ் ஜாய்ஸ் பிறப்பால் ஐரிஷ்காரர்.

1882ல் டப்ளினில் பிறந்த ஜாய்ஸ் Dubliners என்ற சிறுகதைத் தொகுப்பையும், The Portrait of the Artist as a Young Man, Ulysses மற்றும் Finnegan’s Wake ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார்.

அவர் எழுதியதெல்லாமே ஆங்கிலத்தில் வாசிக்கப்பட வேண்டிய நூல்களின் பட்டியலில் சேர்ந்ததுதான் ஆச்சரியம்.

ஜாய்ஸ்-இன் நூல்கள் அடைந்த வெற்றிக்கு அவற்றில் காணப்படும் காட்சி மற்றும் மனிதச் சித்தரிப்புக்களின் சிறப்பே காரணம் என்பது பல விமர்சகர்களின் கருத்து.

உதாரணத்திற்கு, 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டப்ளின் நகர வாழ்க்கையின் பிற்போக்குத்தனத்தையும், மனிதர்களை முன்னேற விடாமல் தடுக்கும் சமுதாயக் கட்டுப்பாடுகளைக் காட்டும் வகையில் அமைந்த Dubliners கதைகள்கூட சித்தரிப்புகளின் துல்லியத்தாலும் அழகினாலும் உயிர்பெற்றுவிடுகின்றன.

ஒரு கதையில் வரும் ஒவ்வொரு சொல்லையும் சிறு விவரத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்ற ஜாய்ஸ் பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டார்.

விவரிக்க வந்ததை மிகத் துல்லியமான, சிறு அர்த்தப் பிறழ்ச்சியும் இல்லாத சொற்களால் விவரிக்க வேண்டும் என்ற அவருடைய விருப்பம் சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதைத் தாண்டியும் அந்தந்த வார்த்தையின் வேர்கள்வரை போய் ஆராய்வதுவரை நீண்டது.

வீணான வார்த்தைகள் எதுவும் இல்லாமல் ,கதைக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் ஒரு சூழலையோ மனிதனையோ வருணிக்கத் துல்லியமாக என்ன வார்த்தை தேவையோ அதை மட்டுமே பயன்படுத்துவது என்ற ஜாய்ஸ்-இன் தேடல் அவர் வாழ்நாள் முழுவதும் நீடித்தது.

இந்த உந்துதளின் விளைவாக நிறைய வருணனைகளோடு 1903ல் எழுதத் தொடங்கிய Stephen Hero என்ற நீண்ட நாவலை சுருக்கியும் ஐந்து அத்தியாயங்களில் கூர்மையாக்கியும் பின்னாளில் The Portrait of the Artist as a Young Man என்று முழுவதும் மாற்றி எழுதினார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரபலமாக இருந்த குறியீட்டுவாதம் மற்றும் யதார்த்தவாதம் ஆகியவற்றின் கூறுகளை இணைத்து புது மாதிரியான எழுத்துப் பாணியை ஜாய்ஸ் உருவாக்கினார்.

யதார்த்தவாத பாணியில் அமைந்த மிகப்பல விவரிப்புக்களைக் கதைகளில் சேர்ந்த அதே சமயம், கதாபாத்திரங்களின் அகவயமான உணர்வுச் சிக்கல்களைச் சித்தரிக்க ஜாய்ஸ் நுணுக்கமாக குறியீடுகளையும் வார்த்தை படிமங்களையும் அந்த விவரிப்புகளிடையே சேர்த்தார்.

ஜாய்ஸ் தனது எழுத்தில் பயன்படுத்திய துல்லியமான சித்தரிப்புக்களும், மிக நுணுக்கமான வகையில் செதுக்கப்பட்ட வார்த்தை படிமங்களும் குறிப்பிட்ட ஒரு நோக்கத்துக்காகப் பயன்பட்டன.

ஒரு கதையில் வரும் விவரிப்புக்களும் நுணுக்கமான வார்த்தை படிமங்களும் கதைக்குத் தொடர்பில்லாத விஷயங்கள் களையப்பட்டு, செதுக்கப்பட்டதுபோல் வெளிப்படும்போது அந்த விவரிப்பின் வழியாக வாசகனுக்குத் திடீரென்று வாசிப்பின் இடையே ஆழமான புரிதல் ஏற்படும் என்று ஜாய்ஸ் நம்பினார்.

வாசகனை ஈர்க்கும் இந்த திடீர் புரிதலுக்கு அவர் ஆங்கிலத்தில் epiphany என்று பெயரிட்டார். இந்த வார்த்தைக்கு வெளிப்படுத்துதல் என்று பொருள்.

நுணுக்கமும், துல்லியமும் கலந்த விவரிப்புக்களின் வழியாக ஆழமான உண்மைகள் திடீரென வெளிப்படும் என்று ஜாய்ஸ் கருதினார்.

ஜாய்ஸ் மிக இள வயதில் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் நாளிலேயே வருணனைகள் நிறைந்த சிறு சிறு உரைநடை பகுதிகளின் மூலமாக ஒரு மனிதரைப் பற்றியோ சூழலைப் பற்றியோ உண்மைகளை வெளிக் கொண்டுவர முயன்றிருக்கிறார்.

அப்படி அவர் எழுதிப் பார்த்த உரைநடைப் பகுதிகளுக்கு ஜாய்ஸ் தந்த பெயர் ‘வெளிப்படுத்துதல்கள்’.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s