
‘ரோம் நகரத்தைத் தேர்தெடுக்கிறேன். எனது சிறு வயதிலிருந்தே என்னை வசீகரித்த நகரம். என்னை எடுத்த எடுப்பிலேயே ஆட்கொண்ட நகரம். அங்கு நான் முதன் முறையாக 2003ல் போன போது, ஓர் உன்மத்த நிலையை அடைந்தேன், ஏதோ ஒரு தொடர்பு. சில நாள்களை மட்டும் அங்குக் கழித்த நிலையில், அங்குதான் நான் வாழ விதிக்கப்பட்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரிந்து போனது.
எனக்கு இதுவரைக்கும் ரோமில் நண்பர்கள் யாரும் இல்லை. யாரையும் பார்க்க நான் அங்கு போகவில்லை. என் வாழ்க்கையின் திசையை மாற்றிக் கொள்ளவும், இத்தாலிய மொழியை முற்றாக உள்வாங்கிக் கொள்ளவும் போகிறேன். ரோமில் இத்தாலிய மொழி தினமும் ஒவ்வொரு கணமும் என்னுடன் இருக்கும். எப்போதும் என் முன்னால் இருக்கும் இருப்பாய், அர்த்தமுள்ளதாக. தேவைப்படும்போது இயக்கி பின்னர் அணைத்துவிடும் விளக்கு ஸ்விட்ச்சாக இல்லாமல் இருக்கும்.
ரோமிற்குப் போகும் ஆயத்தமாக பயணத்திற்கு ஆறு மாதங்கள் முன்னரே ஆங்கிலத்தில் வாசிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டேன். இந்தக் கணத்திலிருந்து இத்தாலிய மொழியில் மட்டுமே வாசிப்பேன். இப்படி எனது முதன் மொழியிலிருந்து என்னை வலியப் பிரித்துக் கொள்வது சரியெனவே எனக்குத் தோன்றியது. அதை ஒருவகையான அதிகாரப்பூர்வத் துறவாகக் கருதினேன். மொழி யாத்திரை மேற்கொள்பவளாய் நான் ரோமுக்குப் போகப் போகிறேன். இதற்குப் பரிச்சயமானதை, தேவையானதை எல்லாம் துறக்க வேண்டும் என்று கருதினேன்.’
– ஜும்பா லாஹிரி, நியூ யார்க்கர் இதழில் 2015 நவம்பரில் வெளிவந்த நேர்காணல்.
1967ல் லண்டனின் பிறந்த வங்காளப் பெண்ணான நிலஞ்சனா லாஹிரி பின்னர் குடும்பத்தோடு அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். பெற்றோர் மேற்கு வங்காளத்தில் பிறந்தவர்கள். அமெரிக்காவில் அவருடைய அப்பா நூலகராக வேலை பார்த்தார்.
வங்காள மொழியில் கவிதைகள் எழுதிய ஜும்பாவின் தாயார் வீட்டில் வங்காள மொழி கற்பதையும் பேசுவதையும் கட்டாயமாக்கினாலும் ஜும்பாவுக்கு வங்காள மொழி பேச வந்ததே தவிர பரிச்சயமாகவில்லை. தன் தாய் தந்தையரின் மொழி அவருக்கு அந்நிய மொழியாக இருப்பதாகவும் தன்னை ஒரு அமெரிக்கப் பெண்ணாகவே ஜும்பா உணர்ந்தார்.
ஜும்பா வளர்ந்த பிறகு ஆங்கிலத்தில் எழுதிய The Interpretator of Maladies என்ற சிறுகதைத் தொகுப்பும் The Namesake என்ற நாவலும் பெரும் புகழ் பெற்றன. அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களின் பிரச்சனைகளை இவை இரண்டும் பேசுகின்றன. ஜும்பாவின் எளிய, அழகான ஆங்கில நடை விமர்சகர்களால் கொண்டாடப்படுகிறது.
நிலஞ்சனா என்ற பெயரை உச்சரிக்கச் அவருடைய அமெரிக்கத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் சிரமப்பட்டார். ஜும்பாவின் வீட்டிலுள்ளவர்கள் அவரை அழைக்கப் பயன்படுத்திய செல்ல பெயரையே ஆசிரியரும் பயன்படுத்தியதால் ஜும்பா என்ற பெயர் ஒட்டிக் கொண்டது.
தனது 48வது வயதில் ஜும்பா ஆங்கிலத்தையும் துறந்துவிட்டு இத்தாலிய மொழியைக் கற்க இத்தாலிக்குக் குடிபெயர்ந்தார். இப்போது இத்தாலிய மொழியில் மட்டுமே வாசிக்கிறார், எழுதுகிறார்.
தன் குடும்பம் நாடு நாடாய்க் குடிபெயர்ந்ததைப் போலவே தன்னக் ஒரு மொழி அகதி என்று ஜும்பா அழைத்துக் கொள்கிறார்.
மொழி என்பது அடையாளமும், ஆதாரமும். அதைத் துறந்துவிட்டு 48 வயதில் முற்றிலும் ஒரு புது மொழியைக் கற்க மட்டுமின்றி அதில் இலக்கியம் எழுதும் அளவுக்குப் பயிற்சி பெற என்ன மாதிரி வைராக்கியம் இருக்க வேண்டும்?
சரியோ தவறோ, அந்த அர்ப்பணிப்பு ஜும்பாவை மிகச் சுவாரசியமான எழுத்தாளுமையாக நம் கண் முன்னால் நிறுத்துகிறது.
இத்தாலிய மொழி கற்க அவர் எதிர்கொண்ட சவால்களைப் பற்றி ‘In Other Words’ (‘மற்ற வார்த்தைகளில்’) என்ற கட்டுரைத் தொகுப்பை ஜும்பா எழுதியிருக்கிறார்.
அவர் இத்தாலிய மொழியில் எழுதிய கதைகள் அவராலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. இத்தாலிய மொழியில் ஒரு நாவல் வெளிவர இருக்கிறது.
எழுத்தாளருக்கு மொழி கருவி. வேறொரு மொழியைக் கற்கும் முரட்டு வைத்தியம் எல்லாம் தேவையில்லை. நாம் எழுதும் மொழி பிழையின்றியும் துல்லியமாகவும் கைவரப் பெற மிகுந்த அர்ப்பணிப்பையும், உழைப்பையும் தருகிறோமா என்பது கேள்வி.
என்னைப் பொறுத்தவரையில் ஜும்பா லாஹிரி இதற்கு நல்ல முன்னுதாரணம்.