
இன்று பலவிதமான அக்கப்போர்களுக்கு நடுவிலே யதார்த்தவாதத்தைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரையை வாசித்தேன்.
41 பக்கங்கள். ஓவியம், இலக்கியம், நாடகம், மெய்யியல் ஆகிய துறைகளில் யதார்த்தவாதத்தின் வளர்ச்சியையும் அதன் முக்கியக் கூறுகளையும் கட்டுரையை எழுதியிருந்தவர் விளக்கியிருந்தார்.
ஆனால் யதார்த்தவாதம் என்பது என்ன என்ற விளக்கத்தைத் தர முயன்ற ‘உள்ளதை உள்ளபடியே விவரிப்பதுதான் யதார்த்தவாதம்’ என்று சொல்லியிருந்தார்.
மூன்றாம் மனிதரின் பார்வையில் ஒரு சம்பவத்தையோ சூழலையோ விவரிப்பது யதார்த்தவாதத்தின் அடிப்படை என்ற போதிலும்கூட கட்டுரையாசிரியர் கொடுத்த விளக்கம் கொஞ்சமும் பயனில்லாதது.
ஒரு சம்பவத்தையோ சூழலையோ யதார்த்தவாதத்தின் அடிப்படையில் விளக்க முனையும் யாரும் பார்ப்பதையும் கேட்பதையும் உணர்வதையும் எல்லாம் வகைதொகையின்றி விவரிப்பதில்லை.
அதி தீவிர யதார்த்தவாதி என்று வருணிக்கப்படும் பிரெஞ்சு எழுத்தாளர் மார்செல் ப்ரூஸ்ட் (La Recherche du temps perdue, தொலைந்து போல காலத்தைத் தேடி) கூட கண்ணில் பட்டதையெல்லாம் வகை தொகையில்லாமல் வருணிக்கவில்லை.
‘ஒரு குறிப்பிட்ட தரிசனத்தை வாசகர்களுக்குக் காட்டும் வகையில் கவனமாகச் சேகரிக்கப்பட்ட நுண்விவரங்களின் தொகுப்பே யதார்த்தவாத எழுத்து’ என்று எனக்கு நானே வரையறுத்துக் கொள்கிறேன்..
தொழில்துறை வளர்ச்சியால் நசுக்கப்பட்ட எளிய தொழிலாளர்களின் வாழ்வை விவரிக்க வந்த சார்லஸ் டிக்கன்ஸ்-சும் விக்டர் ஹ்யூகோவும் இத்தகைய யதார்த்தவாத எழுத்தை அவர்களுடைய நாவல்களில் பயன்படுத்தினார்கள்.
ப்ரூஸ்ட் கடந்த காலச் சம்பவங்களின் தீவிரத்தையும் அவற்றின் விளைவுகளையும் கொண்டு சேர்க்க தனது நாவலில் மிக நுண்ணிய விவரணைகளை எடுத்தாண்டார்.
எழுத்தாளன் நேரடியாகத் தன் கருத்தினைத் திணித்து வாசகனைச் சலிப்படையச் செய்வதைக் காட்டிலும் வேகமாகப் படித்தால் கவனிக்காமல் கடந்து போய்விடக் கூடிய விவரங்களில் கூட்டை வைத்தே வாசகனை ஒரு முக்கிய தரிசனத்துக்கு அழைத்துச் செல்வது சுவராசியமான முயற்சி.
19ம் நூற்றாண்டின் ரஷ்ய நாவலாசிரியர்கள் புறவயமான இந்த விவரிப்புகளை மனிதர்களின் அகவயமான உணர்ச்சிகள், சிந்தனைகள் ஆகியவற்றுக்குக் கொண்டு வந்தார்கள்.
இது ரஷ்ய யதார்த்தவாதம் என்று பெயர் பெற்றது. ரஷ்யாவின் ஆன்மாவை (Русская душа – ருஷ்காயா தூஷா) எழுத்துக்கள் வெளிப்படுத்தி ஒட்டுமொத்த மனித இனத்தின் அகவய உந்துதல்களைப் பற்றிய ஒரு தரிசனத்தைத் தந்தன. ரஷ்ய நாவல்களின் வசீகரிக்கும் செவ்வியல் தன்மைக்கு இதுவும் ஒரு காரணம்.
தஸ்தவ்யஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’, ‘கரமசோவ் சகோதரர்களும்’ ரஷ்ய யதார்த்தவாதத்தின் உச்சமாகக் கருதப்படுகின்றன
டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ மேற்கூறிய இரண்டு நாவல்களையும்விட இன்னும் உன்னதமானது. அகவயமான உணர்ச்சிகளை மட்டுமின்றி புறவயமான சூழல்களையும் மிக நுண்ணிய விவரணைகளால் விவரித்து சத்தியத்தைப் பற்றிய தரிசனத்தை வாசகருக்குத் தரக்கூடியது.
யதார்த்தவாத எழுத்தை ஆராய விரும்பும் நண்பர்கள் தஸ்தவ்யஸ்கி, டால்ஸ்டாய் மட்டுமின்றி மார்செல் ஃப்ரூஸ்ட், சார்லஸ் டிக்கென்ஸ், விக்டர் ஹ்யூகோ ஆகியோரையும் முழுக்க வாசிப்பது நல்லது.