
ரோமாண்டிஸிசம் அதீத மனித உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட – தனிமனித அனுபவத்தை மட்டுமே பிரதானமாகக் கருதும் – அழகியலை முன்னிறுத்துவதாக இன்றளவும்கூட பலத்த விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
ஓர் இலக்கியப் படைப்பு – குறிப்பாகக் கவிதை – பரவலான சமூகப் பிரச்சனைகளை அலசாமல் தனிமனிதர்கள் ஆசைகளையோ, அவலங்களையோ, விருப்பு வெறுப்புகளையோ முக்கியமாகப் பேசுமானால் அது எடுத்துக் கொண்ட பொருளை ‘ரோமாண்டிஸை செய்துவிட்டது’ என்று எழும் விமர்சனமே இதற்குச் சான்று.
இலக்கிய வடிவத்தின் செம்மையையோ, மொழியின் அழகியலையோ, தரவுகளின் துல்லியத்தையோ அடிப்படையாகக் கொள்ளாமல் படைப்பாளனின் உணர்ச்சிகளையே படைப்பின் சிறப்புக்கு அளவுகோலாகக் கொள்வது இலக்கியத் தரத்தை நாசமாக்கும் செயல் என்பது ரோமாண்டிஸத்தை விமர்சிப்பவர்களின் கருத்து.
பெரும்பாலும் இவர்கள் முகநூலில் வரும் கவிதைகளின்மீதுதான் போர் தொடுக்கிறார்கள்.
ஆனால் ரெனே டேகார்ட்ஸின் ‘சிந்திக்கிறேன் ஆகையால் இருக்கிறேன்” (cogito ergo sum) என்ற அறிவுசார் கொள்கைக்கும் இங்கிலாந்தில் தொடங்கி ஐரோப்பா முழுவதும் 18ம் நூற்றாண்டில் உச்சம் பெற்றிருந்த தொழில் மற்றும் அறிவியல் புரட்சிக்கு எதிராகவே ரோமாண்டிஸிசம் எழுந்தது என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்கள்.
ஐரோப்பாவில் நடந்த சிந்தனை, தொழில் மற்றும் அறிவியல் புரட்சிகள் மனித அறிவையும் தொழில் நுட்பத்தையும் மட்டும் முன்னிறுத்தவில்லை. அவை தொழிற்சாலைகள் எனப்படும் மாபெரும் தொழிற்கூடங்களுக்கும் வித்திட்டன.
தொழிற்கூடங்களையும், விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடங்களையும் பொறுத்தவரையில் தனி மனிதர்களோ அவர்களது உணர்ச்சிகளோ முக்கியமே இல்லை. உற்பத்தியில் இயந்திரங்களைப்போல் மனிதர்களும் ஓர் அங்கம். அவ்வளவுதான்.
அக்கால விஞ்ஞானமோ மனிதர்களை பல உடற்பாகங்களாலான வெறும் இயந்திரமாகத்தான் பார்த்தது.
மனிதர்களின் ஆத்ம பலத்தை நிராகரித்து அவர்களை வெறும் உற்பத்தி இயந்திரங்களாக மாற்றும் இந்தப் போக்கைக் கண்டித்தே 1800களில் ரோமாண்டிஸிசம் எழுந்தது. பொருளாதார, விஞ்ஞான லாபங்களையும் மீறி மனிதர்களின் உணர்ச்சிகளுக்கும் ஆன்மீகத் தேடல்களுக்கும் மதிப்பு உண்டு என்பதே ரோமாண்டிஸிசத்தின் அடிப்படை கொள்கை.
விஞ்ஞான வளர்ச்சியையும் தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் தாண்டி உணர்ச்சியால் தூண்டப்பட்ட தனி மனிதர்களின் செயல்களுக்கு வரலாற்றின் போக்கை மாற்றியமைக்கக் கூடிய வலிமை உண்டு என்பது ரோமாண்டிஸிசத்தின் கருத்து.
இந்தப் பார்வையின் அடிப்படையில் மாபெரும் உணர்ச்சிகளால் உந்தப்பட்ட மனிதர்களின் அகவயமான வாழ்க்கைச் சிக்கல்களை மேரி ஷெல்லியிம் Frankenstein முதற்கொண்டு பிராம் ஸ்டோக்கரின் Dracula வரையிலான ரோமாண்டிஸிசப் படைப்புகள் அலசின.
நீட்சே திடமான மன உறுதியினால் வரலாற்றை மாற்றியமைக்கக் கூடிய ‘super man’ என்ற மனிதனைக் கற்பனை செய்தார்.
ஜெர்மானிய இசையமைப்பாளர் வாக்னர் தன்னுடைய ஓபேராக்களில் இத்தகைய மனிதர்களையே கதாநாயகர்களாக முன்னிறுத்தினார்.
சிக்மண்டு ஃபிராய்டு தனிமனித உணர்ச்சிகளை அலசும் வகையில் தனது மனோவியல் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தினார்.
19ம் நூற்றாண்டில் எழுந்த இந்த ரோமாண்டிஸிசக் கொள்கையின் நீட்சியாகத்தான் 20ம் நூற்றாண்டில் தனி மனிதச் சுதந்திரத்தை முன்னிறுத்தும் இருத்தியலியல் கோட்பாட்டை சார்த்தரும் காம்யூவும் உருவாக்கினார்கள்.
கணினி தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் தனி மனிதர்களின் மதிப்பைக் குறைக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ள இன்றைய காலக்கட்டத்தில் மீண்டும் ரோமாண்டிஸிசம் சமூக வலைத்தளங்களின் வழியாக எழுந்துள்ளது வியப்பல்ல.
ரோமாண்டிஸிசத்துக்கு தனி மனிதர்களின் மதிப்பைப் பாதுகாக்கும் ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு என்பதை உணர்ந்து கொண்டால் அது கெட்ட வார்த்தை அல்ல என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
அதுவரைக்கும் வாழ்க முகநூல் கவிதைகள்!