நெப்போலியனும் ரோமாண்டிஸிசமும்

டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ நாவலின் உண்மையான கதாநாயகன் இத்தாலியின் கார்ஸிகா தீவில் பிறந்து பிரெஞ்சு சாம்ராஜ்ஜியத்தின் முதன்மை தளபதியாகவும் பின்னர் பேரரசனாகவும் தன்னை உயர்த்திக் கொண்ட நெப்போலியன் போனபார்ட்.

‘போரும் அமைதியும்’ நாவலில் நெப்போலியனுக்குத் தரப்படும் முக்கியத்துவத்துக்கு அரசுரிமையோடு தொடர்பே இல்லாத எளிமையான குடும்பத்தில் பிறந்து தன் சொந்த வீர சாகசங்களால் பேரரசன் என்ற நிலைக்கு உயர்ந்தான் என்பதோ, ஐரோப்பியாவின் மிகப் பலம்வாய்ந்த பாரம்பரியமான ஆஸ்திரிய, ப்ரஸ்ஸிய மற்றும் ரஷ்யப் பேரரசுகளைப் போரில் தோற்கடித்தான் என்பதோ மட்டும் காரணமாயிருக்கவில்லை.

நெப்போலியனின் வருகை இலக்கியத்தில் அப்போது உச்சத்திலிருந்த
ரோமாண்டிஸிசம் என்ற கொள்கையோடு பின்னிப் பிணைந்திருந்ததே நெப்போலியன் என்னும் மாபெரும் படிமத்தின் உருவாக்கத்திற்குக் காரணமாக அமைந்தது.

18ம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் ஐரோப்பிய இலக்கியத்தில் ரோமாண்டிஸிசம் என்ற கொள்கை தலைதூக்கியது. இலக்கியத்தில் உருவாகியுள்ள நவீனத்துவம், பின்நவீனத்துவம் போன்ற மற்ற எல்லா கொள்கைகளையும் போலவே ரோமாண்டிஸிசம் என்பது அதற்கு முன்னாலிருந்த வேறேதோ கொள்கைக்கு எதிராகத்தான் உருவானது.

மற்ற இலக்கியக் கொள்கைகள் எப்படி இசை, நாடகம், அரசியல், ஓவியம், விஞ்ஞானம், மதம் என்று எப்படி சமூக வாழ்வின் சகல அம்சங்களையும் பாதித்தனவோ அப்படியே ரோமாண்டிஸிசமும் பாதித்தது.

18ம் நூற்றாண்டுக்கு முந்திய ஐரோப்பாவில் enlightenment என்ற அறிவுசார் கொள்கை உச்சத்தில் இருந்தது. இந்தக் கொள்கை மனிதனின் பகுத்தறிவையும்ம், விஞ்ஞான முயற்சிகளையும் முன்னிலைப்படுத்தி மனித அறிவால் சாதிக்க முடியாத காரியங்கள் எதுவுமே இல்லை என்று பறைசாற்றியது. ஐசக் நியூட்டனைப் போன்ற விஞ்ஞானிகள் இந்த அறிவுசார் கொள்கையின் முன்னுதாரணங்களாகக் கருதப்பட்டார்கள். 18ம் நூற்றாண்டுக்கு முந்திய ஐரோப்பிய இலக்கியங்கள் (உ.தா. கதேயின் Elective Affinities என்ற நாவல்) பகுத்தறிவு, விஞ்ஞானக் கோட்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவப்பட்ட சமுதாய வாழ்க்கையைப் பேசின. அறிவின் சட்டகங்களுக்குள் ஒழுங்கப்படுத்தப்பட்ட சமுதாய வாழ்க்கையையும் கலையையும் சிறப்பித்துச் சொல்லும் வகையில் எழுதப்பட்டிருந்தன.

பகுத்தறிவையும் விஞ்ஞானத்தையும் அடிப்படையாகக் கொண்ட சமூகத்தில் தனிமனிதனின் உணர்ச்சிகளுக்கும் விருப்பங்களுக்கும் உள்ள முக்கியத்துவம் மங்கி வந்தது.

இதற்கு எதிராக எழுந்த ரோமாண்டிஸிசம் தனி மனித உணர்ச்சிகளும்ம் முயற்சிகளும்தான் சரித்திரத்தை முன்னகர்த்திச் செல்லும் காரணிகள் என்று பிரச்சாரம் செய்தது. அறிவுசார் கோட்பாடு பகுத்தறிவை முன்னிறுத்த, ரோமாண்டிஸிசம் மனிதனின் அகவய உணர்ச்சிகளையும் முயற்சிகளையும் முன்னிறுத்தியது.

எங்கேயோ பெயர் தெரியாத குடும்பத்தில் பிறந்து உணர்ச்சி வேகத்தாலும் அசுர முயற்சியாலும் தன்னைப் பேரரசன் நிலைக்கு மேம்படுத்திக் கொண்ட நெப்போலியன் ரோமாண்டிஸிசக் கொள்கையின் ஒப்பாரும் மிக்காருமற்ற கதாநாயகனாய்க் கொண்டாடப்பட்டான்.

அரசியல் கணக்குகளின்படி பழைய ஐரோப்பாவின் பெரும் பேரரசுகளிடம் தோற்றிருக்க வேண்டிய அவனுடைய வெற்றிகள் வறட்டு அறிவு வாதங்களைவிட மனிதனின் உணர்ச்சியும் முயற்சியுமே வரலாற்றை மாற்றியமைக்கக் கூடியவை என்ற கருத்தை வலியுறுத்துவதாகக் கருதப்பட்டது.

நெப்போலியனை எதிர்த்தவர்கள்கூட தடுக்க முடியாத அவனுடைய வளர்ச்சியை அசுரத்தனமானதாகவும் அமானுஷ்யங்கள் நிறைந்ததாகவும் கருதினார்கள்.

‘போரும் அமைதியும்’ நாவலின் தொடக்கத்தில் ஷெர்ரர் சீமாட்டி நெப்போலியனை ‘அந்தி கிறிஸ்து’ என்று அழைக்கிறாள். ஆனால் நெப்போலியனின் படைகளை எதிர்த்துப் போரிடும் ஆண்ட்ரே போல்கோன்ஸி, போரிஸ் த்ருபெட்ஸ்கோய், நிக்கோலே ரோஸ்தோவ் போன்ற இளைஞர்கள்கூட நெப்போலியனுடைய வெற்றிகளின் வசீகரத்தில் மயங்கியவர்களாக டால்ஸ்டாயின் காட்டப்படுகிறார்கள். போரில் ஈடுபடாவிட்டாலும் ப்யர் பேஷுவோவ் நாவலின் முதலாவது அத்தியாயத்தில் நெப்போலியனின் சமூக, அரசியல் கொள்கைகளைப் பாராட்டிப் பேசுகிறான்

நெப்போலியனைப் போலவே ஏதேனும் ஒரு போரில் வீரச் செயல்களைச் செய்து வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஆண்ட்ரேயின் ரகசிய குறிக்கோளை அறிந்து கொள்ளும் அவன் தந்தை நிக்கோலாய் தனது மகன் உண்மையில் நாட்டைப் பாதுகாப்பதற்காகப் போருக்குப் போகவில்லை என்று உணர்ந்து கொள்கிறார். சாதாரண போர்வீரனாய் இருந்த நெப்போலியனின் வெற்றிகள் ரஷ்ய இளைஞர்கள் அனைவருக்கும் போதையேற்றிவிட்டதாகக் கருத்து தெரிவிக்கிறார்.

‘போரும் அமைதியும்’ நாவலில் வரும் பெரும்பாலான இளம் ரஷ்ய கதாபாத்திரங்களும் நெப்போலியனிடம் ஈர்க்கப்படுகிறார்கள்.

இந்த ஈர்ப்பு நெப்போலியன் என்ற தனி மனிதனிடம் ஏற்பட்ட கவர்ச்சி என்பதைவிட மனித உணர்ச்சிகளும் முயற்சியும் வாழ்க்கையில் உயர்வைத் தரும் என்ற ரோமாண்டிஸிசக் கொள்கையின்மீது ஏற்பட்ட ஈர்ப்பாகவே நான் கருதுகிறேன்.

ஆனால் நாவலில் இப்படி நெப்போலியன்போலவே உணர்ச்சியாலும், விருப்பத்தாலும், முயற்சியாலும் தங்களை முன்னேற்றிக் கொள்ளத் துடிக்கும் போல்கோன்ஸ்கி, ரோஸ்தோவ், த்ருபெட்ஸ்கோய் ஆகிய அனைவரும் வாழ்க்கையின் அபத்தங்களிலும் போர் என்னும் அர்த்தமற்ற வன்முறைக்குள்ளும் சிக்கித் வாழ்க்கையில் தோற்பதாக டால்ஸாய் சித்தரிக்கிறார்.

மிக உன்னதமான மனித உணர்ச்சிகளையும் முயற்சிகளையும் கூட வாழ்க்கையின் பிரம்மாண்டம் சிதைத்து விடுகிறது.

உலகத்தையே தனது காலடிக்குக் கொண்டு வந்த நெப்போலியன் தன் கடைசி காலத்தை செயிண்ட் ஹெலீனா என்ற சிறு தீவில் கைதியாகக் கழித்தான்.

ரோமாண்டிஸிசத்தின் குறைபாடுகளை விமர்சிக்கும் வகையில்தான் 1850க்குப் பிறகு நவீனத்துவம் உருவானது.

வாழ்க்கையின் பிரம்மாண்டத்தை அள்ளித் தரும் வகையில் எழுதப்பட்ட மிக நீண்ட நாவலான ‘போரும் அமைதியும்’ ரோமாண்டிஸியக் கொள்கைகளை விமர்சித்த – ரோமாண்டிஸிசத்தை எதிர்த்த – முக்கிய நவீனத்துவ நாவல்களில் ஒன்று என்பதில் ஐயமில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s