டால்ஸ்டாய் – நவீனத்துவத்தின் அல்லல்கள்

நவீன யுகத்தின் காரணிகளாக அமைந்த தொழில்நுட்ப மாற்றங்களும் ஜனநாயக எழுச்சியும் நாவல் வடிவத்தின் உருவாக்கத்திற்கும் காரணமாகவும் அமைந்தன என்று மிலான் குண்டேரா முதற்கொண்டு பல விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

அதே சமயம் தனிமனிதர்களை நவீன யுகத்திற்குள் இட்டுச் சென்ற புதிய தொழில்நுட்பமும் ஜனநாயக உணர்ச்சியுமே அவர்களை பெரும் குழப்பத்துக்கு ஆளாக்கி மனிதர்களுக்குள் ஆன்மீக வெற்றிடத்தை உருவாக்கின என்பதும் உண்மை.

ஒரு வகையில் பார்க்கப்போனால் வெகு சில மனிதர்களே நவீனத்துவத்தைத் தேடிப் போய் ஏற்றுக் கொண்டார்கள் என்று சொல்ல முடியும். வரலாற்றின்படி பார்த்தால் நம்மில் பெரும்பாலோர்மீது நவீனத்துவத்துமும் அதற்குக் காரணமான புதிய தொழில்நுட்பமும் சமூக மாற்றங்களும் திணிக்கப்படுகின்றன.

டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ விவரிக்கும் 1805லிருந்து-1820 வரையிலான காலக்கட்டத்தில் ரஷ்யப் பேரரசின்மீது நெப்போலியனால் நவீனத்துவம் திணிக்கப்பட்டது.

அரசகுல ரத்தம் கொஞ்சமும் இல்லாத சாமானியனான நெப்போலியன் சர்வாதிகாரியாக இருந்த போதிலும் விசித்திரமான வகையில் பிரெஞ்சு மக்களாட்சிக் கோட்பாடுகளான விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றையும் மேற்கு ஐரோப்பாபின் நவீன தொழில்நுட்பத்தையும் ரஷ்யாவின் எல்லைகளுக்குக் கொண்டு வந்தான்.

நெப்போலியனின் போர் வன்முறை எந்த அளவுக்கு ரஷ்யாவைப் புரட்டிப் போட்டதோ அதே அளவுக்கு அவன் கொண்டு வந்த நவீனத்துவமும் ரஷ்யாவின் ஆன்மாவின் பாரம்பரியங்களைக் கேள்விக்குள்ளாக்கி பழைய ரஷ்யாவுக்கும் புதுமைக்காகக் காத்திருக்கும் புதிய ரஷ்யாவுக்குமிடையே பெரும் விவாதத்தை உருவாக்கியது.

ரஷ்யாவின்மீது நெப்போலியனால் கட்டவிழ்க்கப்பட்ட இந்த அதிர்ச்சியையும், குழப்பத்தையும், பெரும் விவாதத்தையும் துல்லியமாகச் சித்தரிப்பதால்தான் ‘போரும் அமைதியும்’ மற்ற எந்த ரஷ்ய நாவலைவிடவும் உன்னத இடத்தில் வைக்கப்படுகிறது.

நாவலின் முதல் அத்தியாயத்தில் பிரெஞ்சு குடியரசுக் கொள்கைகளைப் பாராட்டும் பியேர் பேஷுகோவ் தன் மனைவி ஹெலெனின் துரோகத்துக்குப் பிறகு அதே கொள்கைகளை வலியுறுத்தும் freemasons அமைப்பில் சேர்ந்து தன் மனக்குழப்பத்துக்குத் தீர்வு காண்பதாக டால்ஸ்டாய் அமைத்திருப்பது அற்புதமான சித்தரிப்பு.

பிரஞ்சுப் புரட்சியின் மக்களாட்சிக் கொள்கைகள் வெறும் அரசியல் தொடர்பானவை மட்டுமல்ல என்றும் தனி மனிதர்களின் ஆன்மீகத் தேடல்களுக்கும் மோட்சத்துக்குமேகூட இனி அவைதான் கதி என்பதை இதைவிடச் சிறப்பாகச் சொல்லியிருக்க முடியாது.

ஆனால் சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டு தன் பண்ணைகளில் வாழும் அடிமைகளுக்கு விடுதலை, கல்வி, மருத்துவ உதவி ஆகியவற்றைத் தர முன்வரும் பேஷுகோவ் தனது பண்ணை நிர்வாகிகளால் ஏமாற்றப்படுகிறான். அவன் சொல்வதைக் கேட்பதுபோல் நடிக்கும் பண்ணை நிர்வாகிகள் அடிமைகளின் நலத்துக்காகப்.பேஷுகோவ் முன்னெடுக்கும் திட்டங்களை வைத்தே அந்த அடிமைகளை மேலும் அடிமைப்படுத்துகிறார்கள்.

நவீன யுகத்தின் மிகப் பெரும் குழப்பங்களில் ஒன்றான நல்லது-தீயது இடையிலான மயக்கம் பேஷுகோவ்வின் வாழ்க்கையிலும் உண்டாகிறது.

ஆனால் பேஷுகோவ்வைப் பொறுத்தவரையில் அவன் வஞ்சிக்கப்பட்டதை அறியாததால் மிக மகிழ்ச்சியாக இருக்கிறான். தனது அடிமைகளுக்குச் செய்த நன்மைகள் என்று அவன் கருதும் காரியங்களால் அவன் பரிசுத்தமானதாக உணர்கிறான்.

அவன் உண்மையில் பரிசுத்தவானானானா? இல்லையா?

நல்ல விளையுமென்று நினைத்து நாம் செய்யும் நல்ல செயல்கள் உண்மையில் நல்லது தரவில்லை என்றாலும் அவற்றைச் செய்ததாக எண்ணி நாம் அடையும் மகிழ்ச்சியின் மதிப்பு என்ன?

நாம் நல்லதே.நினைத்தாலும் அதை நடக்கவிடாமல் நம் திட்டங்களை ஒன்றுமில்லாதவையாக்கும் பேஷுகோவ்வின் பண்ணை நிர்வாகிகள் போன்ற பிரம்மாண்டமான சமூகக் கட்டமைப்பின் பிடியில் நாம் சிக்கியிருக்கும் வரையில் நாம் நன்மை செய்தால் என்ன? செய்யாமல் விட்டால்தான் என்ன?

நாவலின் ஓரிடத்தில் பியெர்-இடம் பேசும் ஆண்ட்ரே போல்கோன்ஸ்கி முதலில் சமூகத்தால் நல்லவை என்று கருதப்பட்ட வீரச் செயல்களைத் தான் செய்ததாகவும் ஆஸ்டர்லிஸ்ட் போருக்குப் பிறகு தானும் தன் குடும்பமும் மனவருத்தமும் நோயும் இல்லாமல் வாழ்ந்தாலே போதும்.என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகவும் சொல்கிறான்.

‘போரும் அமைதியும்’ நாவல் எழுதப்பட்டுச் சுமார் 150 வருடங்களுக்குப் பிறகு வாழும் மனிதர்களில் பலரும் போல்கோன்ஸ்கியின் இதே மன நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று நாம் உணர்ந்து கொள்ளும்போது ‘போரும் அமைதியும்’ நாவலின் பிரம்மாண்டம் புரிகிறது.

ரஷ்யாவின் ஒரு குறிப்பிட்ட சரித்திரக் காலக்கட்டத்தில் நவீனத்துக்வத்துக்கும் பழைமைக்கும் இடையில் வெடித்த பூசலையும் அது தனிமனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்திய பலதரபட்டச் சிக்கல்களை துல்லியமாக விவரிப்பது ‘போரும் அமைதியும்’ நாவலின் சிறப்பு.

வாசிப்பின் போது டால்ஸ்டாய் சித்தரிக்கும் இந்தப் பூசல்களைக் கவனத்தில் கொள்வது நமது வாசிப்பை ஆழமாக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s