டால்ஸ்டாய் – உண்மையும் புனைவும்

வரலாற்றுச் சம்பவங்களை புனைவில் சேர்ப்பது சில சவால்களை எழுத்தாளனின் முன்னால் வைக்கிறது.

ஒன்று, எழுத்தாளன் ‘அதிகாரப்பூர்வமான்’ தகவல்களிலிருந்து கதையைப் புனையலாம். அல்லது, அதிகாரப்பூர்வத் தகவல்களுக்கு எதிராகத் தன்னுடைய கருத்துகளை முன்னெடுத்து வைத்துக் கதை புனையலாம்.

‘போரும் அமைதியும்’ நாவலின் பிற்சேர்க்கை இரண்டாம் பகுதியில் இந்த இரண்டு அணுகுமுறைகளையும் உண்மைக்குத் தூரமானவை என்றே டால்ஸ்டாய் சொல்கிறார்.

குறிப்பிட்ட தரவுகளிலிருந்தே ஒரு எழுத்தாளன் தன்னுடைய கதையைப் புனைந்தாலும்கூட புனைவின் அடிப்படை குறிப்பிட்ட ஒரு சிலரின் பார்வையின்படியே பாரபட்சமாக இருப்பதால் அத்தகைய புனைவில் உண்மை விளங்காது என்பது டால்ஸ்டாயின் கூற்று.

இதை விளக்க நாவலின் முதல் பாகத்தின் இறுதியில் நடக்கும் ஆஸ்டர்லிட்ஸ் போரை டால்ஸ்டாய் உதாரணமாகப் பயன்படுத்துகிறார். கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்டர்லிஸ்ட் போரை ஆராய்பவர்களுக்கு அந்தப் போர் ரஷ்யப் படைகளுக்கு மாபெரும் தோல்வியாகவும், நெப்போலியனுக்கு மாபெரும் வெற்றியாகவும் அமைந்தது என்ற சந்தேகமே இருக்காது.

‘போரும் அமைதியும்’ நாவலின் முதல் பாகத்தின் இறுதியில் ரஷ்யாவின் தோல்விக்குக் காரணமாக இருந்த ரஷ்ய-ஆஸ்திரிய தளபதிகளுக்கு இடையே இருந்த உட்பூசல்களையும், பரஸ்பர அவநம்பிக்கையையும், திட்டமிடாமையையும், இளம் ஜார் அலெக்ஸாண்டரின் அனுபவமின்மையையும் பட்டியலிடுகிறார்.

இரண்டாம் பாகத்தின் தொடக்கத்தில் இந்தத் தோல்வியின் செய்தி மாஸ்கோ நகரை எட்டுகிறது. அரச ரத்தம் சிறிதும் இல்லாத ஒரு சாமான்யனான நெப்போலியனிடம் மாட்சிமையுடைய ரஷ்யப் பேரரசர் தோற்றிருக்கக் கூடும் என்று முதலில் நம்பமுடியாமல் வாயடைத்துப் போகும் மாஸ்கோவாசிகள் பிறகு ரஷ்யத் தோல்விக்கான பல்வேறு காரணங்களைக் ‘கண்டுபிடிக்கிறார்கள்’.

தோல்விக்காக அவர்கள் சொல்லும் காரணங்கள் முக்கியமல்ல. ஆனால் அவை யாவும் ரஷ்யா உண்மையில் தோற்கவில்லை, பிறரின் சோம்பேறித்தனத்தால், தந்திரத்தால், அதிர்ஷ்டத்தால் தோல்வியடைந்ததாகச் சொல்லும் வகையிலேயே அமைந்திருக்கின்றன.

மாஸ்கோவாசிகளின் கருத்துப்படி இந்த அபிப்பிராயங்களே உண்மையாகவும், முதல் பாகத்தில் டால்ஸ்டாய் பதிவு செய்த ரஷ்ய தளபதிகளின் திறமையின்மை வெறும் புனைவாகவும் இருந்திருக்க வேண்டும்.

ரஷ்யர்களின் திறமையின்மையால்தான் போரில் தோல்வி ஏற்பட்டது என்று நம்புகிறவர்களுக்கு மாஸ்கோவாசிகளின் காரணங்களே புனைவாக இருந்திருக்கும்.

இதில் எந்தப் பிரதி உண்மை எந்தப் பிரதி கற்பனை என்பதல்ல கேள்வி.

உண்மைக்கும் புனைவுக்கும் உள்ள வேறுபாட்டைத் துல்லியமாக வரையறுப்பது அவ்வளவு சுலபமான காரியமோ, பயனுள்ள காரியமோ அல்ல.

ஆனால் பன்முகத் தன்மையுள்ள நாவல் வடிவம் பல தரப்பட்ட குரல்களை வாசகர்களின் முன் வைப்பதால் அவர்களை உண்மைக்கு மேலும் அருகே கொண்டு செல்ல வழி செய்கிறது என்பது கவனிக்கத் தக்கது.

சிறுகதை வடிவத்தையும், கவிதை வடிவத்தையும் ஒப்புநோக்க நாவல் வடிவத்துக்கு உள்ள முக்கிய சாத்தியக்கூறுகளில் இதுவும் ஒன்று.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s