
போர்க்களங்களை வருணிப்பதில் மிகச் சிறந்த எழுத்தாளராகக் கருதப்பட்ட எர்னெஸ்ட் ஹெமிங்வே போர்க்கதைகளை உள்ளடக்கிய சிறந்த கதைகளைத் தொகுத்து ‘Men at War’ என்ற தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்.
அந்தத் தொகுப்பில் போர்க்களச் சூழலை வருணிப்பதில் தலை சிறந்தவராக அவர் லியோ டால்ஸ்டாயைக் குறிப்பிடுகிறார்.
போர்களை விவரிப்பதில் டால்ஸ்டாய்க்கு இருந்த பேராற்றலுக்கு இள வயதில் டால்ஸ்டாயிக்குக் கிடைத்த போர்க்கள அனுபவங்கள் (பார்க்க – அவர் எழுதிய ‘மே மாதத்தில் வெவஸ்தபோல்’ என்ற மூன்று கதைகள் அடங்கிய தொகுப்பு) மட்டுமின்றி தனிப்பட்ட போர்களைப் பற்றி அவன் முன்னெடுத்த ஆழமான ஆராய்ச்சியும் காரணம்.
ஒற்றைப் பதிவுகளை மட்டும் படித்துவிட்டு டால்ஸ்டாய் போர்களைப் பற்றி எழுதவில்லை. எழுதப்போகும் போரைக் குறித்த பத்திரிகைச் செய்திகளை மட்டுமின்றி அந்தப் போரில் பங்கெடுத்த முக்கியமானவர்களின் கடிதங்கள், டைரிக் குறிப்புகள், அந்தப் போரை முன்னடத்திய தளபதிகள் மேலிடத்துக்கு அளித்த அறிக்கைகள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் ஆகிய எல்லாவற்றையும் படித்த பிறகே அந்தப் போரைப் பற்றி எழுதினார்.
‘போரும் அமைதியும்’ நாவலில் போரோதினோ, ஓஸ்த்ரோவோ ஆகிய மிக முக்கியமான போர்களோடு நாவலின் முதலாம் பாகத்தின் இரண்டாம் பகுதியில் அத்தியாங்கள் 16-21வரை ஷோன்கிராபன் (Schongraben) போரைப் பற்றி டால்ஸ்டாய் அளிக்கும் வருணனையை முக்கியமானதாக நான் கருதுகிறேன்.
நாவலில் தரப்பட்டிருக்கும் இந்தப் போரின் பின்னணி சுவாரசியமானது. ஆஸ்திரியப் பேரரசின் தலைநகரமான வியன்னாவை கைப்பற்றிய பிறகு நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் ரஷ்யத் தளபதி குத்துஸோவ்வின் படைகளைத் துரத்திக் கொண்டு வருகின்றன.
தன் படைகளைவிட மும்மடங்கு பெரிதான பிரெஞ்சுப் படைகளின் பிடியிலிருந்து தப்ப நினைக்கும் குத்துஸோவ் தன் படையின் ஒரு சிறு பகுதியை முன்னால் நிறுத்திவிட்டு ரஷ்யப் படையணியின் பெரும்பகுதியோடு பாதுகாப்பான நிலைகளுக்குப் பின்னோக்கிச் செல்ல நினைக்கிறார்.
முன்னால் விடப்பட்ட ரஷ்ய படைவீரர்கள் போர் ஓரிரண்டு நாள்களுக்குப் பின்னர்தான் தொடங்கும் என்று எண்ணிப் பல நாள்களில் முதன்முறையாகச் சூடான உணவைச் சமைத்துக் கொண்டும், தேய்ந்துபோன தமது காலணிகளையும் கிழிந்துபோன சீருடைகளையும் சீர் செய்து கொண்டிருக்கும்போது நெப்போலியனின் படைகள் திடீரென்று தாக்க ஆரம்பிக்கின்றன.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் சரித்திரப்பூர்வப் பதிவுகளின்படி ரஷ்யப் படையினர் எப்படி நடந்து கொண்டார்கள் என்று விவரிக்கும் அதே வேளையில் டால்ஸ்டாய் தனிப்பட்ட ரஷ்ய வீரர்களின் மன நிலையை, வீரத்தை, ரஷ்ய தளபதிகளின் இயலாமையை, அவர்களுக்கு இடையே இருந்த போட்டியை, பகையை, வெள்ளம்போல் பாய்ந்து வரும் பிரெஞ்சுப் படைகளின் முன்னால் உயிரைக் கையில் பிடித்தபடி கலைந்து ஓடும் படைவீரர்களைக் கட்டுப்படுத்த முடியாத அதிகாரிகளின் இயலாமையை டால்ஸ்டாய் படம் பிடிக்கிறார்.
நாவலின் மிகக் குறிப்பிடத் தக்க வருணனைகளின் தொகுப்பான இந்த 6 அத்தியாயங்களில் பல நாள் போர்க் களத்தில் இருந்ததால் காலணிகள் தேய்ந்து போய் வெறுங்காலாக இருக்கும் காப்டன் தூஷின் நான்கு பீரங்கிகளை மட்டும் வைத்துக் கொண்டு தனது படையினர் பின் வாங்கியதையும் பொருட்படுத்தாமல் பெரும் எண்ணிக்கையிலிருக்கும் பிரெஞ்சு படைக்கு ஈடு கொடுத்து போரிடுகிறான்.
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் குடிபோதையில் போலீஸ்காரனைக் கரடிக்குட்டியோடு கட்டி ஆற்றில் எறிந்ததற்காக அதிகாரிப் பதவியிலிருந்து காலாட்படை வீரனாகப் பதவி குறைப்புச் செய்யப்பட்டிருக்கும் தோலோகோவ் போரின் நடுவில் தளபதியின் குதிரைச் சேணத்தைப் பிடித்தபடி தான் ஒரு பிரெஞ்சு அதிகாரியைச் சிறைப்பிடித்துள்ளதாகவும் போரில் அஞ்சாமல் போரிட்டதால் நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லித் தன்னை மறந்துவிட வேண்டாம் என்று கெஞ்சுகிறான்.
படைவீரர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைப் போரின் அமளியில் இழந்துவிட்ட தளபதி பாகாஷியோன் படைவீரர்கள் பீதியில் செய்யும் குழப்பமான காரியங்கள் அனைத்தும் தன் திட்டப்படியே நடப்பதாகக் காட்டிக் கொள்கிறார்.
ஆயிரம் பேரின் குழப்பமான சிறு சிறு செயல்களால் நடந்தேறும் ஒரு போரின் அவஸ்தையை மிக அற்புதமாக இந்த ஷோன்கிராபன் போர் வருணனையின்போது டால்ஸ்டாய் காட்டுகிறார்.
சரித்திரத்தில் நிகழ்ந்த ஒரு போருக்கு உள்ளே செயல்பட்ட ஆயிரமாயிரம் மனிதர்களின் உணர்வுகளையும், உன்னதங்களையும், இழிவுகளையும், வலிகளையும் துல்லியமாகக் காட்டுவதால் இந்த 6 அத்தியாயங்களில் டால்ஸ்டாயின் கலை உன்னத நிலையை அடைகிறது.
போர்களை மங்காத வீரத்தின் பிறப்பிடம் என்றும், புகழின் விளைநிலம் என்று குருட்டுத்தனமாகக் கொண்டாடும் மனிதர்களின் கருத்தினை இந்த வருணனை மிகத் தெளிவான முறையில் ஆனால் அதே சமயம் மிக நாசூக்கான முறையில் இந்த வருணனை சாடுகிறது.
‘போரும் அமைதியும்’ நாவலை நீங்கள் படிக்காவிட்டாலும் நாவலின் முதலாம் பாகத்தின் இரண்டாம் பகுதியில் அத்தியாங்கள் 16-21வரை ஷோன்கிராபன் (Schongraben) போரைப் பற்றி நிச்சயம் படித்துப் பாருங்கள்.