
“நாவல் என்பது வெறும் வரலாற்றுத் தரவுகளின் தொகுப்பல்ல.”
‘போரும் அமைதியும்’ அடிப்படையில் ஒரு வரலாற்று நாவல்.
1805லிருந்து 1820 வரை ரஷ்ய வரலாற்றில் நடந்த சம்பவங்களை எழுதுவதற்காக டால்ஸ்டாய் ரஷ்ய-பிரஞ்சு படைகளுக்கிடையே நடந்த போர்களைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள், செய்தித் துணுக்குகள், தனிமனிதர்களின் பதிவுகள், டைரிக் குறிப்புகள், கடிதங்கள் என்று அனைத்தையும் படித்தார் என்று அவருடைய வாழ்க்கை வரலாறு சொல்கிறது.
அது மட்டுமில்லாமல் 1812ல் நெப்போலியன் ரஷ்யாவின் மீது படையெடுத்தபோது நடந்தேறிய சம்பவங்களையும், பிரெஞ்சுப் படைகளினால் மாஸ்கோ நகரத்துக்கு ஏற்பட்ட பேரழிவையும் நேரில் பார்த்தவர்களிடமும் டால்ஸ்டாய் பேசியிருக்கிறார்.
நெப்போலியன் முதற்கொண்டு அந்தக் காலத்தில் வாழ்ந்த முக்கிய மனிதர்கள் அனைவருடைய வாழ்க்கை வரலாறுகளையும் டால்ஸ்டாய் படித்திருக்கிறார்.
‘போரும் அமைதியும்’ நாவலில் வரும் கதாபாத்திரங்கள் கிட்டத்தட்ட 160 பேர் உண்மையில் வாழ்ந்தவர்கள் என்று ஒரு கணக்கு சொல்கிறது. ஓஸ்ட்ரொவ்னோ போர் முதற்கொண்டு அந்தக் காலக்கட்டத்தில் நடந்தேறிய போர்களின் விவரங்கள் நாவலில் துல்லியமாகப் பதிவாகி இருக்கின்றன.
நெப்போலியன் ரஷ்யா மீது படையெடுப்பதற்கு முன்னால் 1811ல் ரஷ்ய வானத்த்தில் தெரிந்த எரிநட்சத்திரமும் நாவலில் பதிவாகியிருக்கிறது.
ஆனாலும் நாவல் என்பது வெறும் வரலாற்றுச் சம்பவங்களின் தொகுப்பல்ல என்பதில் டால்ஸ்டாய் உறுதியாக இருந்தார்.
ஒரு சாராரின் பார்வையின்படி எழுதப்படும் வரலாற்று அபுனைவுகளைவிட பல தரப்பட்ட மக்களின் அனுபவங்களின் தொகுப்பாக இருக்கும் நாவல்தான் வரலாற்று உண்மைகளுக்கு இன்னும் நெருக்கமாக இருக்க முடியும் என்பது டால்ஸ்டாயின் வாதம்.
டால்ஸ்டாய் வாழ்ந்த காலத்தில் வரலாறு என்பது சில முக்கிய மனிதர்களாலேயே நடத்திச் செல்லப் படுகிறது என்ற நம்பிக்கை இருந்தது. இதற்கு ‘Great Man Theory’ என்று பெயர். ஆனால் டால்ஸ்டாயின் கருத்துப்படி வரலாறு என்பது பல்லாயிரம் மனிதர்களின் சின்னச் சின்னச் செயல்களால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்று டால்ஸ்டாய் நம்பினார்.
இந்தப் பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் செயல்களை விவரிப்பதே நாவலின் நோக்கம் என்று டால்ஸ்டாய் நம்பினார். ‘போரும் அமைதியும்’ நாவலின் பிரம்மாண்டத்துக்கு இதுவும் ஒரு காரணம்.
டால்ஸ்டாய் வரலாறு பற்றிய தனது கருத்துக்களை ‘போரும் அமைதியும்’ நாவலின் பிற்சேர்க்கையின் இரண்டாம் பகுதியில் உள்ள நீளமான கட்டுரையில் தருகிறார்.
‘போரும் அமைதியும்’ நாவலின் மூன்றாவது பகுதியில் டால்ஸ்டாயின் கருத்தை விளக்கும் இந்தப் பகுதி வருகிறது (மொழிபெயர்ப்பு என்னுடையது):
“நெப்போலியன் போரின் போக்கை நிர்ணயிக்கவில்லை. ஏனென்றால் அவன் இட்ட கட்டளைகளில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை. போரில் என்ன நடந்தது என்பதுகூட அவனுக்குத் தெரியாது. ஆகையால் போரில் ஒருவரை ஒருவர் கொன்றது அவன் விருப்பத்தின்படி நடக்காமல் அவனை மீறி, ஒரே செயலில் ஒன்றாய்ச் சேர்ந்து செயல்பட்ட லட்சக்கணக்கானவர்களின் விருப்பத்தின்படியே நடந்தது. அவன் விருப்பப்படிதான் எல்லாம் நடக்கிறது என்று நெப்போலியனுக்குத் தோன்றியது – அவ்வளவுதான்.”