ஒரு நாவலின் தொடக்கத்தைக் கதையின் முக்கியமான செல்திசைகளை எடுத்துக் காட்டவும் நாவலில் பின்னர் விழப்போகும் முடிச்சுகளை ஓரளவுக்கு முன்னறிவிக்கவும் பயன்படுத்துவது டால்ஸ்டாயின் பாணி.
இந்த வகையில் டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலுக்கு இரண்டு மகத்தான தொடக்கங்கள் இருக்கின்றன என்றே கருதுகிறேன்.
இதில் முதலாவது, நாவலின் தொடக்கத்தில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் நடக்கும் அன்னா பவ்லோவ்னா ஷெர்ரர் சீமாட்டியின் விருந்துபசரிப்பு.
இரண்டாவது தொடக்கம், நாவலின் ஏழாவது அத்தியாயத்தில் மாஸ்கோ நகரத்தில் இல்யா ரோஸ்தோவ் பெருமகனின் வீட்டில் நடக்கும் நாடாஷா ரோஸ்தோவ்வின் அறிமுகம்.
நாவலின் இரண்டு தொடக்கங்களும் (அக்கால மேல்தட்டு மக்களைப் பொறுத்த அளவில்) முக்கியமான சமூக நிகழ்வுகளின் பின்னணியில் நடப்பதாக டால்ஸ்டாய் காட்டுகிறார்.
ஷெர்ரர் சீமாட்டியின் விருந்துபசரிப்பு வெறும் தனிப்பட்ட விருந்து கொண்டாட்டமல்ல. அவள் ரஷ்யப் பேரரசரின் தாயார் மரியா ஃப்யதோரோவ்னாவின் அந்தரகப் பணிப்பெண்ணா வேலை செய்தாள். இதனால்தான் வாஸிலி குராகின் போன்றவர்கள் ஆங்கிலேயத் தூதரின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உபசரிப்புக்குத் தாமதமாகப் போனாலும் பரவாயில்லை என்று ஷெர்ரரின் வீட்டில் வந்து தலைகாட்டி விட்டுப் போகிறார்கள்.
மாஸ்கோவில் நடக்கும் நாவலின் இரண்டாவது தொடக்கமும் முக்கியமான சமூக நிகழ்வுதான். ரஷ்யர்கள் அவர்கள் பிறந்த நாளைக் கொண்டாடாமல் அவர்கள் எந்தக் கிறித்துவப் பரிசுத்தரின் பெயரைத் தாங்கியிருக்கிறார்களோ அவர்களின் நினைவு நாளையே பிறந்த நாளாகக் கருதி கொண்டாடுவார்கள். இதைப் ‘பெயர் தினம்’ என்று அவர்கள் அழைப்பார்கள்.
நாவலின் கதைப்படி ஏழாவது அத்தியாயம் இல்யா ரோஸ்தோவ்வின் மனைவி மற்றும் இளைய மகளின் பெயர் தினத்தோடு தொடங்குகிறது.
ஷெர்ரரின் விருந்துபசரிப்பில் நடப்பதுபோல் ஒருவர் மாற்றி ஒருவர் ரோஸ்தோவ்களின் வீட்டில் பிரவேசிக்க இது ஒரு காரணமாகிறது.
ஷெர்ரரின் விருந்துபசரிப்பிலும் ரோஸ்தோவ்களின் பெயர் தினத்திலும் முக்கியமான கதாபாத்திரங்கள் அறிமுகமாகும் தருணத்தில் வாசகர்களைக் கதைக்குள் பிரவேசிக்க வைக்கும் டால்ஸ்டாயின் உத்தி கவனிக்கத் தக்கது.
டால்ஸ்டாய் அறிமுகப்படுத்தும் கதாபாத்திரங்களோடு வாசகர்களான நாமும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகர மேல்தட்டுச் சமுதாயத்துக்கும் மாஸ்லோ சமுதாயத்துக்கும் அறிமுகமாவதுபோல் நாவலின் இந்தத் தொடக்கங்கள் அமைந்துள்ளான.
ஷெர்ரர் சீமாட்டி நடத்தியது போன்ற விருந்து உபசரிப்பைப் போன்ற உபசரிப்புக்களே அந்நாட்களில் ஊருக்குப் புதிதாக வந்த பெரிய மனிதர்கள் மற்ற பெரிய மனிதர்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் தளமாக அமைந்தன.
கதைப்படி வெளிநாட்டில் படித்துவிட்டு வந்த பியர் பேஷுகோவ் ஷெர்ரரின் இந்த விருந்துபசரிப்பின் போதுதான் தன்னை செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்திலுள்ள உயர்குடி மக்களுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள ஷெர்ரரின் விருந்துபசரிப்பைத் தேர்ந்தெடுக்கிறான்.
ஆனால் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் உபசரிப்புக்கும் மாஸ்கோ உபசரிப்புக்கும் இடையில்தான் எவ்வளவு வித்தியாசம்!
நாகரிகத்தின் உச்சமாகவும் அரசவையின் இருப்பிடமாகவும் இருக்கக்கூடிய செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் நடந்தேறும் முதல் மூன்று அத்தியாயங்களில் நடக்கும் உரையாடல்கள் யாவற்றிலும் பிரெஞ்சு மொழியின் ஆதிக்கம். (‘போரும் அமைதியும்’ நாவலின் முதல் வரைவில் டால்ஸ்டாய் இந்த உரையாடல்கள் அனைத்தையும் பிரெஞ்சிலேயே எழுதினார். பின்வரும் பதிப்புகளில்தான் அவற்றை ரஷ்ய மொழிக்கு மாற்றினார்).
பிரெஞ்சில் பேசுவது நாகரிகத்தின் உச்சம் என்றும் ரஷ்ய மொழியில் பேசுவபவன் நாட்டுப்புறத்தான் என்ற எண்ணம் ரஷ்ய மேல்தட்டு மக்களிடையே வேரூன்றியிருந்த காலம்.
விருந்துபசரிப்பின்போது பதினைந்தாம் லூயி மன்னரின் அரசவையில் பயன்படுத்தப்பட்ட பிரெஞ்சு சொல்வழக்கை உரையாடலில் நுழைத்துவிட்டதாகக் கருதி அன்னா பவ்லோவ்னா ஷெர்ரர் மகிழ்கிறாள்.
ரஷ்ய மொழியில் நகைச்சுவைக் கதையைச் சொல்லும் இப்போலிட் குராகினை எல்லோரும் ஏளனமாகப் பார்க்கிறார்கள். பிரெஞ்சுக்காரரான மோர்ட்மார்ட் பிரவு சொல்லும் நெப்போலியனைப் பற்றிய கதையை வாய் பிளந்து கேட்கிறார்கள்.
மாறாக, மாஸ்கோவில் இல்யா ரோஸ்தோவ் பிரெஞ்சில் தட்டுத் தடுமாறிப் பேசுவதாக டால்ஸ்டாய் சித்தரிக்கிறார்.
அது மாத்திரமில்லாமல் நாகரிகமறிந்த ஷெர்ரர் சீமாட்டி தனது விருந்துபசரிப்புக்கு வந்திருக்கும் விருந்தினர்களின் உரையாடல் சிக்கலுக்குள்ளாகும் போதெல்லாம் அங்கு விரைந்து போய் அதைச் சரி செய்கிறாள்.
மாஸ்கோவில் இல்யாவின் மனைவி தன் வீட்டிற்கு வந்திருக்கும் காராகின் சீமாட்டியை எப்படி வீட்டை விட்டுக் கிளப்புவது என்று தெரியாமல் தத்தளிக்கிறாள்.
இந்த இரு வேறு ரஷ்யாக்களின் மோதல்தான் டால்ஸ்டாய் தனது நாவலுக்காக எடுத்துக் கொண்ட முக்கிய பிரச்சனை.
பிரெஞ்சு பேசும் ரஷ்யா ரஷ்ய பாரம்பரியத்திலும் மொழியிலும் ஆழ்ந்திருக்கும் ரஷ்யாவுக்கு நேரெதிராக இருக்கிறது.
லிஸாவும் இப்போலிட்டும் ஷெர்ரரின் உபசரிப்பை விட்டுக் கிளம்பும்போது மேலங்கிகளை அணிந்து கொள்ளும் நேரத்தில் தங்கள் வேலையாட்களுக்குப் புரியாது என்று நினைத்து பிரெஞ்சிலேயே பேசிக் கொள்கிறார்கள். ஆனால் வேலையாட்கள் பிரெஞ்சு புரியாததுபோல் முகத்தை வைத்துக் கொண்டார்கள் என்று டால்ஸ்டாய் சொல்கிறார்.
இந்த இரு வேறு ரஷ்யாக்களும் ஒன்றை ஒன்று பார்த்து முறைத்துக் கொள்கின்றன.
அதன் விளைவுகளை அலசுவதே டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ நாவலின் நோக்கம். வெறுமே நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகளோடு நடந்த போர்களைப் பட்டியலிடுவதல்ல.
இந்த பிளவும் இருமையும்தான் நாவலின் ஆரம்பத்தில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், மாஸ்கோ என்று இரு தொடக்கங்களை வைத்ததின் மகத்துவம்
இதுவும் சரிதான். அன்றைய ரஷ்ய வாழ்வில் ஒன்றோடொன்று முரண்பட்டிருந்த எதிர் துருவங்களைக் கோடிட்டுக் காட்டும் வகையில்தானே டால்ஸ்டாய் தனது நாவலுக்கு ‘போரும் அமைதியும்’ என்று இருமையைச் சுட்டிக் காட்டும் தலைப்பையே வைத்தார்.
