டால்ஸ்டாய் – சிறு விவரங்களின் ஆத்ம தரிசனம்

(டால்ஸ்டாயின் குறிப்புக்கள் குறித்து நான் எழுதிக் கொண்டிருக்கும் நீண்ட கட்டுரையிலிருந்து)

1878ம் ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் (1869) மற்றும் அன்னா கரனீனா (1877) நாவல்களில் டால்ஸ்டாய் சேர்த்திருக்கும் எண்ணில்லாத சிறு விவரங்களைப் பார்த்து நம்மில் பலர் மலைத்திருக்கக் கூடும்.

சில வாசகர்கள் இதனாலேயே இந்நாவல்களை முடிக்காமல் விட்டிருக்கக் கூடும். சிலர் வாசித்தாலும் நாவலில் சேர்க்கப்பட்டிருக்கும் இச்சிறு விவரங்களைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் கடந்து போயிருக்கக் கூடும்.

ஆனால் டால்ஸ்டாய் இவ்விரண்டு நாவல்களிலும் ஆயிரக்கணக்கான சிறு விவரங்களை மிக துல்லியமான நோக்கங்களுக்காகவே சேர்த்தார் என்பதை அவருடைய குறிப்புக்கள் காட்டிக் கொடுக்கின்றன.

முதலாவது நோக்கம், மனித விவகாரங்களைப் பற்றிய டால்ஸ்டாயின் பார்வை தொடர்பானது. மனித விவகாரங்களில் ஏற்படும் மிகப் பிரம்மாண்டமான விளைவுகள் மிகச் சாதாரணமான, பெரும்பாலான மனிதர்கள் கவனிக்கத் தவறும் சிறு சிறு நிகழ்வுகளால் நிகழ்கிறது என்பது டால்ஸ்டாயின் பார்வையாக இருந்தது.

அன்னா கரனீனாவில் உறவுச் சிக்கல்களாகட்டும், 1812ல் அகண்ட ரஷ்யாவை அச்சுறுத்திய நெப்போலியனின் படையெடுப்பாகட்டும், அதற்குப் பின் திரும்பிய அமைதியோ, தனது கதைகளில் நிகழும் மரணங்களோ ஆகட்டும் அவை அனைத்தும் ஒரே கணத்தில் நிகழ்வதில்லை. பல பல சிறு நிகழ்வுகளின் கூட்டினால் நிகழ்கின்றன என்பது டால்ஸ்டாயின் அபிப்பிராயம்.

இந்த அடிப்படையில் எழுத்தாளனும் சரி வாசகனும் சரி ஒரு படைப்பில் இத்தகைய சிறு நிகழ்வுகளையும் விவரங்களையும் கவனித்து நடந்த, நடந்து கொண்டிருக்கும் அல்லது நடக்கவிருக்கும் பெரிய சம்பவங்களை அனுமானித்துக் கொள்ளலாம் என்று டால்ஸ்டாய் குறிப்பிடுகிறார்.

இப்படி அனுமானித்து அறிந்து கொள்ளும் ஆற்றல் மனித வரலாற்றில் மிக மெல்லிய நகர்வுகளால் முன்னேறிச் செல்லும் சத்தியத்தின் அசைவுகளையும் அறிந்து கொள்ள உதவும் என்று டால்ஸ்டாய் நம்பினார்.

சத்தியத்தின் இந்த அசைவுகளை அறிய முடியாத மனிதர்களால் இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.

சிறு விவரங்களைச் சேர்ப்பதின் இரண்டாவது நோக்கம் அழகியல் தொடர்பானது. கதையில் சேர்க்கப்படும் புறவயமான சிறு விவரங்களின் வழியாகத்தான் கதை கூறலில் மிக நுண்ணிய ஆத்ம தரிசனங்கள் சாத்தியமாகின்றன என்று டால்ஸ்டாய் கருதினார்.

போரும் அமைதியிலும் தனது மனைவி லீஸ பிள்ளை பெறும்போது மரணமடைந்துவிட்டதைப் பிரின்ஸ் ஆண்ட்ரே அறிந்து கொள்ளும் நேரத்தில் டால்ஸ்டாய் சேர்க்கும் புறவயமான வருணனைகள் ஆண்ட்ரேயின் அதிர்ச்சியை மட்டுமன்றி அவனது குற்ற உணர்வுகளையும் துல்லியமாகச் சொல்லிக் காட்டுகின்றன. சிறு விவரங்களால் ஆத்மாவின் நிலையைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காண்பிக்கும் டால்ஸ்டாயின் உத்தியின் மிகச் சிறந்த உதாரணமாக இருக்கும் நாவல் பகுதிகளில் இப்பகுதி ஒன்றாகக் கருதப்படுகிறது.

கலைஞன் என்பவன் பிரபஞ்சம் முழுவதையும் தனது படைப்புக்குள் கொண்டு வரவேண்டும் என்றும், சிறு விவரங்களாலான பிரபஞ்சத்தின் அடிப்படை ஒழுங்கை அவன் படைப்பு பிரதிபலிக்க வேண்டும் என்றும் இந்தக் காரணங்களால்தான் டால்ஸ்டாய் நம்பினார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s