
1877ல் அன்னா கரனீனா நாவலை முடித்த பிறகு ரஷ்ய நாவலாசிரியர் டால்ஸ்டாயின் ஆன்மீக வாழ்வில் பெரும் திருப்புமுனை ஏற்படுகிறது. கிறித்துவ மதத்தின் உண்மையான போதனைகள் தனக்கு விளங்கிவிட்டதாகக் கருதிய டால்ஸ்டாய் தனது புதிய புரிதல்களை எடுத்துரைக்க 1893ல் ‘கர்த்தரின் ராஜ்ஜியம் உங்களுக்குள்ளே’ என்ற கட்டுரையையும், 1898ல் ‘கலை என்றால் என்ன?’ என்ற கட்டுரையையும் எழுதினார்.
டால்ஸ்டாயின் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த ஆன்மீகத் திருப்புமுனை 1863ல் தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்திற்குப் பிறகு ‘கோடைக்காலக் காட்சிகளின் பனிக்காலக் குறிப்புகள்’ என்ற கட்டுரையை எழுதியபின் தஸ்தவ்யஸ்கியின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஆன்மிகத் திருப்பத்துக்கு ஒப்ப்பானது.
நாகரிக சமுதாயத்திலும் மதச்சடங்குகளிலும் பொய்யும் போலித்தனமும் ஆழ வேரூன்றியிருப்பதாக டால்ஸ்டாய் கருதினார். வாழ்க்கையைப் பற்றிச் சிந்திப்பதிலிருந்தும் அதைவிட முக்கியமாக மரணத்தைப் பற்றிச் சிந்திப்பதிலிருந்தும் மனிதனைத் திசை திருப்புவதே நாகரிக வாழ்க்கை தனது குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது என்பது டால்ஸ்டாயின் அபிப்பிராயம். மரணத்தைப் பற்றிச் சிந்திக்காதவரை மனிதன் பாவங்களைத் துணிந்தே செய்கிறான்.
மரணம் என்பது மனிதர்களின் அத்தனை பலவீனங்களின் மொத்த வடிவமாகவும் இருக்கிறது. அது, மனிதர்களை மொத்தமாக உருத்தெரியாமல் சிதைக்கிறது.
மரணத்தை முழுவதுமாய் அறிந்து கொள்வது மட்டுமின்றித் தனது பலவீனங்களோடும் சிதைவுகளோடும் அதை முழுமனதாக ஏற்றுக் கொள்வதால் மட்டுமே மனிதனால் கர்த்தரின் ராஜ்ஜியத்தில் புத்துயிர்ப்பைப் பெற முடியும் என்பது டால்ஸ்டாயின் கருத்தாய் இருந்தது.
மரணப் பரியந்தம்வரை தனது மானுட பலவீனங்களை ஏற்றுக் கொண்டதாலேயே இயேசு புத்துயிர்ப்புப் பெற்று மற்ற மனிதர்களை இரட்சிக்கும் ஆற்றலைப் பெற்றார் என்று டால்ஸ்டாய் நம்பினார்.
இக்கருத்துக்களை விளக்கும்வகையில் எழுதப்பட்டவையே டால்ஸ்டாயின் 1877ம் ஆண்டுக்குப் பிந்திய படைப்புக்கள்.
1886ல் வெளிவந்த ‘இவான் இலியிச்சின் மரணம்’, 1898ல் வெளிவந்த ‘தந்தை செர்கியஸ்’, 1899ல் வெளிவந்த ‘புத்துயிர்ப்பு’ மற்றும் 1904ல் வெளிவந்த ‘ஹாஜி முராட்’ ஆகிய நான்கு படைப்புக்களும் மரணத்தின் சிதைவுகளின் வழியாகப் புத்துயிர்ப்பு பெறும் மனிதர்களைப் பற்றிய கதைகளாகவே இருக்கின்றன.
மரணம் தன் உடலையும் குடும்ப வாழ்வையும் மெல்லச் சிதைப்பதைத் தியானித்தபடி மரணிக்கும் இவான் இலியிச், ஒரு பெண்ணிடம் வசமிழக்காமலிருக்கத் தனது விரலை வெட்டி உருவத்தைச் சிதைத்துக் கொண்டாலும் பிறகு வேறொரு பெண்ணிடம் தனது தூய்மையை இழந்து சைபீரியாவில் வேலையாளாய்ப் போகும் தந்தை செர்கியஸ், ஒரு பெண்ணுக்குச் செய்த துரோகத்தை எண்ணி வருந்தி அவளைச் சிறையில் போய்ப் பார்க்கும் புத்துயிர்ப்பின் நெக்லுயுதோவ், ரஷ்ய போர்வீரர்களால் தலை துண்டிக்கப்பட்டுச் சாகும் ஹாஜி முராட் ஆகிய அனைவரும் தங்கள் சிதைவின் மத்தியில் ஏதோ ஒரு கணத்தில் தங்கள் பலவீனங்களை முழுவதுமாகத் தரிசித்து ஏற்றுக் கொள்வதாக டால்ஸ்டாய் காட்டியிருப்பார்.
அந்தக் கணமே அவர்களின் புத்துயிர்ப்பையும் கர்த்தரின் ராஜ்ஜியத்திற்குள் அவர்களுடைய பிரவேசத்தையும் சாத்தியமாக்கும்.
இளமைக் காலத்தில் தான் செய்த மிகப் பெரிய பாவங்களை எண்ணி வாழ்நாள் முழுவதும் வருந்திய டால்ஸ்டாய் தனது சொந்த புத்துயிர்ப்புக்குக் கண்டுகொண்ட வழியாகவும்கூட நாம் இந்த நாவல்களைப் புரிந்து கொள்ளலாம்.