
வர விஷ்ணுலோகம் என்று பெயரிடப்பட்டிருந்த கம்போடியாவின் அங்கோர் வாட் பிரதான கோவில் கம்போடிய மன்னன் இரண்டாம் சூர்யவர்மனின் ஆட்சி காலமான 1113-1150ல் அவனுடைய தலைநகரமான யசோதரபுரத்தில் கட்டப்பட்டது.
அங்கோர் என்ற சொல்லுக்கு ‘நகரம்’ என்று பெயர். வாட் என்றால் கோவில். அங்கோர் வாட் என்ற சொற்றொடருக்கு ‘கோவில் நகரம்’ என்று பொருள்.
அங்கோர் வாட் கட்டப்பட்ட காலத்தில் தமிழகத்தில் சோழர்கள் ஆட்சி வலுபெற்றிருந்தது. ஆனாலும் கோவிலின் அமைப்புமுறை, சடங்குகள், கம்போடிய ராஜ குடும்பத்தின் அடையாளங்கள் யாவற்றிலும் பல்லவர்களின் தாக்கத்தையே அதிகமாகக் காண முடிகிறது.
இதற்குச் சான்றாகக் கம்போடியாவின் பழைய அங்கோர் போரேய் நகரத்திலுள்ள கோவில் அமைப்புக்களை நாம் குறிப்பிடலாம்.
550ம் ஆண்டில் ருத்திரவர்மனின் ஆட்சி முடியும்வரை ஃபூ நான் மண்டலத்தின் தலைநகரமாக இருந்த வியாதபுரம்தான் இன்றைய அங்கோர் போரேய்.
அங்கோர் போரேய் என்றால் ‘பழைய நகரம்’ என்று பொருள்.
அங்கு முக்கியமான துறைமுகம் இருந்ததாகச் சான்றுகள் கிடைக்கின்றன. பல்லவர், ரோமர்கள் நாணயத்தைக் கண்டெடுத்திருக்கிறார்கள்.
தாய்லாந்து வளைகுடாவும் தென் சீனக் கடலும் சந்திக்கும் இடத்தில் மெகோன்ஹ் நதியின் முகவாயிலிருந்து கொஞ்சம் உள்ளே அங்கோர் போரேய் இருக்கிறது.
அக்காலத்தில் கம்போடியாவில் இருந்த துறைமுகம் யூ ஓக். இது கொஞ்சம் கிழக்கே தாய்லாந்து வளைகுடாவுக்கு அருகில் இருக்கிறது (கடற்கரையல்ல). யூ ஓக் இப்போது வியட்நாம் வசமுள்ளது.
மா இராசமாணிக்கனார் கூற்றுப்படி காஞ்சிபுரம் கிமு இரண்டாம் நூற்றாண்டிலேயே குறிப்பிடத்தக்க கலைநகரமாகவும், பௌத்த, ஜைன, சைவ மதங்களின் மையமாகவும் கலாசாலையாகவும் திகழ்ந்தது.
புஷ்பேசு ஜாதி, புருஷேசு விஷ்ணு
நாரீஷு ரம்பா நகரேஷு காஞ்சி “ என்று வடமொழியில் நகரங்களின் இலக்கணமாகக் காஞ்சிபுரம் புகழப்படுகிறது.
இயூன் சுங் போன்ற சீனப் பயணிகளும் புத்த பிக்குகளும் காஞ்சிக்குப் புத்த சூத்திரங்களைத் தேடியும், சர்வ கலாசாலையில் கற்பதற்காகவும் காஞ்சிபுரத்துக்கு வந்து போனதாகச் சான்றுகள் நிறையவே உள்ளன.
அப்படியே தமிழ் நாட்டவரும் கிபி முதல் ஐந்து நூற்றாண்டுகளில் சீனாவுக்கு வணிகத்துக்காகவும் மதப் பிரச்சாரத்துக்காகவும் பயணித்திருக்கிறார்கள்.
இந்தப் பயணங்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூர் தீவைத் திரும்பி சீனாவை அடையும் முன்னால் அங்கோர் போரேய்-இல் தங்கி ஓய்வெடுத்திருக்கிறார்கள். இப்படி அங்கு பல்லவர் மொழி, மதம், கலாச்சாரம், புராணக் கதைகள் மற்றும் வரலாறு பரவியிருக்க வாய்ப்புண்டு.
பழைய கம்போடியாவின் ஆன்மீக, அரசியல், கலாச்சார வளர்ச்சியில் காஞ்சிபுரத்தின் பங்கு மிக அதிகம்.