இவான் புனின் இலக்கியத்துக்கான முதல் பரிசைப் பெற்ற ரஷ்ய எழுத்தாளர். 1870ல் பிறந்த புனின் ‘சான் பிரான்சிஸ்கோவின் கனவான்’ போன்ற சிறப்பான சிறுகதைகளக் எழுதியிருக்கிறார். நாவல்களையும் எழுதியிருக்கிறார்.
ரஷ்யப் புரட்சிக்குப் பின் பிரான்சுக்கு அகதியாகப் போன புனின் 1953ல் காலமானார்.
1930ல் வெளிவந்த அவருடைய “ஆர்ஸெனியெவ்வின் வாழ்க்கை” நாவலுக்காக அவருக்கு மூன்றாண்டுகள் கழித்து 1933ல் நோபல் பரிசு கிடைத்தது.
புனின்-இன் வேறெந்த படைப்பையும்விட
“ஆர்ஸெனியெவ்வின் வாழ்க்கை” நாவலே அவருக்கு நோபல் பரிசு கிடைக்கக் காரணமாக இருந்தது. புனினேகூட இந்த நாவல்தான் ரஷ்ய நாவல் பாரம்பரித்தில் தனது இடத்தை நிறுவியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
நேற்றிரவு கோவையில் இருந்த போது மீண்டும் அதை ஒரு முறை வாசித்தேன்.
நான்கு பாகங்கள் உடைய இந்த நாவலைத் தனது வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே புனின் எழுதியிருக்கிறார்.சுயசரிதையின் வடிவத்தில் எழுதப்பட்டிருக்கும் நாவல். நாவல் அலெக்ஸெய் ஆர்ஸெனியெவ் என்ற கதாபாத்திரத்தையும், லீகா என்ற பெண்மீது அவனுக்கு இருந்த காதலையும் விவரிக்கிறது.
லீகாவின் தந்தை ஆர்ஸெனியெவ்வின் காதலை வன்மையாக எதிர்க்கிறார். லீகா திடீரென்று காணாமல் போகிறாள். ஆர்ஸெனியெவ் அவளைத் தேடிப் போகிறான். ஆனால் அவளுடைய தந்தை அவள் எங்கிருக்கிறாள் என்று சொல்ல மறுக்கிறாள்.
அலெக்ஸெய் லீகாவைத் தேடி அலைவது எளிமையான கதையமைப்புத்தான். ஆனால் அந்த நிறைவேறவே முடியாத காதலை மீட்கவே முடியாத புரட்சிக்கு முந்திய ரஷ்ய வாழ்க்கையோடு புனின் பிணைப்பதால் அந்த நாவல் வேறொரு தளத்தைத் தொடுகிறது.
அலெக்ஸெய் தனது நினைவுகளால் திடீரென்று காணாமல் போன லீகாவத் தொடர்ந்து தன்னளவில் உயிர்ப்பிக்க முயல்கிறான். ஆனால் அது காலத்திற்கு எதிரான முயற்சி என்று அவனுக்கு ஏதோ ஒரு வகையில் தெரிந்தே இருக்கிறது.
அதுபோலவே புனின்போல் பல லட்சம் ரஷ்யர்கள் தங்களிடமிருந்து திடீரென எச்சரிக்கையே இல்லாமல் பிடுங்கப்பட்ட ரஷ்யப் பெருநிலத்தை தம் நினைவுகளால் உயிர்ப்பித்தே கொண்டிருக்க அவருடைய சமகாலத்தில் முயன்றார்கள்.
புனின்-இன் நாவல்கூட அந்த முயற்சியில் ஒரு பகுதியே. ஆனால் காலம் நினைவுகளோடு எல்லாவற்றையும் சுத்தமாகத் துடைத்து ஒழிக்கக் காத்துக் கொண்டே இருந்தது.
நேற்று கோவையில் வெளியிடப்பட்ட பிரியாவின் ‘காலநதி’யும் சமூகச் சிக்கல்களோடு பிரிந்த காதலைச் சொல்லும் நாவல்தான்.
காதல் ஏற்படுத்தும் உறவுச்சிக்கல்கள் அதைவிடப் பெரிதான, மிக விஸ்தாரமான சமூக, அரசியல் அல்லது வரலாற்று இழப்புக்களைப் பின்னணியாகக் கொண்டு பேசப்படும்போது அந்த நாவல்களுக்கு அடர்த்தியும் கனமும் கூடி விடுகிறது.
