
1863ல் வெளிவந்த லியோ டால்ஸ்டாயின் “கோஸால்குகள்” நாவல் அவருடைய முதல் முக்கிய நாவலாகக் கருதப்படுகிறது.
இந்த நாவலுக்குப் பின்னர்தான் 1869ல் போரும் அமைதியும், 1877 அன்னா கரனீனா பின்பு உயிர்ப்பு போன்ற அவருடைய பின்னாளைய நாவல்கள் வெளிவந்தன.
தஸ்தவ்யஸ்கியின் வாழ்வின் பிற்பகுதியில் வெளிவந்த மகத்தான நாவல்களுக்கு அவருடைய ‘பாதாளக் குறிப்புகள்’ எப்படி ஆரம்பமாக இருக்கிறதோ அதுபோலவே டால்ஸ்டாயின் வாழ்க்கையின் பிற்பகுதியில் வெளிவந்த மிக மகத்தான படைப்புகளின் தொடக்கமாகக் கோஸாக்குகள் நாவல் இருக்கிறது.
மாஸ்கோவின் உயர்ந்த குடும்பங்களில் பிறந்த ஓலெனின் என்ற இளைஞன் மாஸ்கோ செல்வப் பிரபுக்களின் வாழ்க்கையின் போலித்தனங்களால் அலுத்துப்போய் கோஸாக்கு இன மக்கள் வாழும் தெற்கு ரஷ்யப் புல்வெளிகளுக்குப் பயணமாவதாகக் கதை.
வீரத்திற்கும் தன்மானத்துக்கும் பேர்போன கோஸாக்கு மக்களின் வாழ்க்கை முறைகளை முழுவதுமாய் அறிந்து கொள்ள விரும்பி ஓலெனின் எனோச்கா என்ற கோஸாக்குக் கிழவனோடு நட்பு கொள்கிறான். எனோச்காவோடு கோஸாக்குகளோடு மது குடிப்பதிலும், வேட்டையாடுவதிலும் நாள்களைக் கழிக்கிறான்.
அப்போது அவனுக்கு மரியாங்கா என்ற கோஸாக்குப் பெண்மீது காதல் ஏற்படுகிறது. ஆனால் அவள் லூக்கா என்ற கோஸாக்கு இளைஞனுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கிறாள். கோஸாக்கு கிராமத்தைத் தாக்கிக் கொள்ளையடிக்க வந்த செச்சன் இனத்தவர்களில் ஒருவனைக் கொன்ற லூக்கா அக்கிராமத்தார்களால் கொண்டாடப்படுகிறான். மரியாங்கா லூக்காவுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கராள் எஜ்று அறிந்த லூக்கா முதலில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயல்கிறான். லூக்காவோடும் மரியாங்காவோடும் நட்பாக இருக்கிறான்.
புல்வெளிகளில் வாழும் கோஸாக்குகள் குதிரைகளை எவ்வளவு போற்றுகிறார்கள் என்று அறிந்த ஓலெனின் லூக்காவுக்கு ஒரு குதிரையைப் பரிசளிக்கிறான். ஓலெனின் மரியாங்காமீது காதல் கொண்டிருப்பதை அறிந்திருக்கும் லூக்கா குதிரையை வாங்கிக் கொண்டாலும் ஓலெனினைச் சந்தேகத்தோடே நடத்துகிறான்.
ஆனால் மாஸ்கோவிலிருந்து வரும் நண்பனின் தூண்டலால் ஓலெனினின் எண்ணம் மாறுகிறது. ஓலெனின் மரியாங்காவை பின் தொடர்கிறான். அவளிடம் தனது காதலைச் சொல்கிறான். மீண்டும் செச்சன்களோடு நடந்த சண்டையில் லூக்காவின் வயிற்றில் குண்டடி பட்டிருக்கும் வேளையில் நிச்சயதார்த்தம் முடிந்திருக்கும் மரியாங்காவிடம் போய் அவளைத் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்கிறான். அவள் கோபத்தோடு அவனை மறுக்கிறாள்.
அவளை அடையவே முடியாது என்று முடிவுக்கு வரும் ஓலெனின் அந்தக் கிராமத்தைவிட்டுப் போகிறான். தன்னை வழியனுப்ப வந்த எனோச்காவை அவன் திரும்பிப் பார்க்கும்போது எனோச்கா அவனை மறந்திருப்பது ஓலெனினுக்குப் புலனாகிறது.
கோஸாக்குகளோடு தான் என்றுமே ஒன்றாகியிருக்க முடியாது என்பதை ஓலெனின் உணர்கிறான்.
டால்ஸ்டாயின் பின்னாளைய நாவல்களில் முழுமை பெறப் போகும் சில அடிப்படைச் சிந்தனைகள் புள்ளியிலிருப்து கோடு போட்டதுபோல் இந்த நாவலில் இருந்து சொடங்குகின்றன.
டால்ஸ்டாய் நகரம் என்பது அதில் வாழும் மனிதர்களின் நல்ல குணங்கள் அனைத்தையும் சீரழிப்பதாகக் கருதினார். ஓலெனின் என்னதான் முயன்றிருந்தாலும் கோஸாக்கு ஆகியிருக்க முடியாது.
அதே சமயம் நகரம் தந்திரம் மிகுந்தது. வீரத்தால் இன்றி தந்திரத்தால் ஜெயிக்க முயல்வது. ஓலெனின் கிழவன் எனோச்காவோடு நட்பு ஏற்படுத்திக் கொண்டு கோஸாக்காகப் பார்ப்பதும், லூக்காவுக்குக் குதிரையைப் பரிசளிப்பதும், லூக்கா அடிபட்டிருக்கும் நேரம் பார்த்து மரியாங்காவோடு திருமணம் பேசுவதும் இந்த அருவருக்கத்தக்க தந்திரத்தின் வெளிப்பாடுகள்.
மரியாங்காவை எப்படியும் அடைந்துவிடும்படி தூண்டும் அவன் மாஸ்கோ நண்பன் இந்த நகரத் தந்திரத்தின் குறியீடு.
மாறாக ரஷ்யாவின் தூரத்துப் புல்வெளிகளில் வாழும் கோஸாக்கு இன மக்கள் எளிமையானவர்களாகவும் வீரம் மிகுந்தவர்களாகவும் டால்ஸ்டாயால் சித்தரிக்கப்படுகிறார்கள். இந்த எளிமையும் நேர்மையும் வீரமும் அவர்கள் வாழும் பரந்த புல்வெளிகளின் இயல்பாகவும் கொடையாகவும் காட்டப்படுகிறது.
நகரத்தின் போலித்தனங்கள் கிராமப்புறங்களின் எளிமை, வீரம் டால்ஸ்டாயின் பின்னாளைய நாவல்களில் மீண்டும் மீண்டும் அலசப்படும் பொருள்கள்.
இந்த அலசலின் முடிவு டால்ஸ்டாயின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றி அமைத்தது.
முதுமையில் தனது மேல்தட்டு வாழ்க்கையை துறந்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய டால்ஸ்டாய் அஸ்டாபோவோ ரயில் நிலையத்தில் செத்துப் போகும்வரை அவரை வழி நடத்திச் சென்றது.