
எனக்கென்னமோ Lolita நாவலின் கிளுகிளுப்பைத் தாண்டி தமிழ் வாசகர்கள் விளாடிமிர் நபோகோவ்-ஐக் கண்டு கொள்ளவில்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது.
1899ல் ரஷ்யாவில் பிறந்து 1977ல் அமெரிக்காவில் காலமான நபோகோவ் பல அற்புதமான நாவல்களையும், கவிதைகளையும் எழுதியவர். அதையும் தாண்டி மேற்கத்திய இலக்கியம் பற்றியும், ரஷ்ய இலக்கியம் பற்றியும் மிகச் சிறந்த விரிவுரைகளை ஆற்றியிருக்கிறார்.
செர்வாண்டெஸ்ஸின் டான் கியோட்டே நாவலைப் பற்றி அவராற்றிய விரிவுரைகள் ஒரு பொக்கிஷம். தனி புத்தகமாகவே கிடைக்கிறது.
ரஷ்யாவில் வாழ்ந்த போது நபோகோவ் எழுதிய நாவல்களில் மிகச் சிறந்த மூன்று நாவல்களில் 1934ல் வெளிவந்த ‘சிரச்சேதத்துக்கு ஓர் அழைப்பு’ ( Invitation to a Beheading) என்ற நாவலும் ஒன்று.
நண்பர்கள் தேடிப் பிடித்தேனும் இதை வாசிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்.
நாவல் 30 வயதான சின்சினாட்டஸ் என்பவன் சிறையில் கழிக்கும் கடைசி 20 நாட்களை விவரிக்கிறது. கற்பனை தேசம் ஒன்றின் குடிமகனான சின்சினாட்டஸ்-க்கு ‘நோஸ்டிக் இழிசெயல்களில் ஈடுபட்டதற்காக’ மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
நோஸ்டிஸிஸம் என்பது கிறித்துவ திருச்சபையின் ஆரம்ப நாட்களில் எழுந்த ஒரு போதனையாகும். அதிகாரப்பூர்வ திருச்சபை கேள்விகளைக் கேட்காத மெய் விசுவாசமே மனிதன் இரட்சிப்பை அடையும் வழி என்று போதித்தது.
நோஸ்டிக்குகள் இதற்கு மாறாக மனிதன் அறிவைப் பயன்படுத்தி வேத வசனங்களை ஆராய்ந்து மெய்ஞ்ஞானத்தை அடைவதன் மூலமாகவே இரட்சிப்பைப் பெற முடியும் என்று போதித்தார்கள்.
நம்மூர் ஜைனர்களைப் போல் உடம்பு தீமையானது என்றும், அதைத் துறப்பதே இரட்சிப்பு வழி என்பதும் அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தது. இதெல்லாம் அதிகாரப்பூர்வ கிறித்துவத்துக்கு எதிரானதாகக் கருதப்பட்டது.
ரோமச் சக்கரசர்த்திகளின் ஆதரவு அதிகாரப்பூர்வத் திருச்சபையின் பக்கம் இருந்ததால் நோஸ்டிக்குகளும் அவர்களது குருமார்களும் நாளடைவில் அழித்து ஒழிக்கப்பட்டார்கள்.
நோஸ்டிக் இழிசெயல்களுக்காகக் கைது செய்யப்படும் சின்சினாட்டஸ்-ஸின் மீது சமூகத்தில் உள்ள மற்றவர்களோடு ஒத்துப் போகவில்லை என்ற குற்றம் சாட்டப்படுகிறது. மற்றவர்கள் போலியாக சிரிக்கும்போதும் முகமன் சொல்லிக் கொள்ளும்போதும் அவன் அதில் கலந்து கொள்ளாமல் இருக்கிறான். அதனால் அவனுடைய தலை பொதுமக்களின் பார்வைக்கு முன்னால் துண்டிக்கப்பட வேண்டும் என்று தண்டனை.
அறிவினால் இரட்சிப்பு என்ற கொள்கைக்காக உயிரை விடக்காத்திருக்கும் சின்சினாட்டாஸ் சிறையிலிருக்கும் இருபது நாளும் தனக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படப் போகும் தேதியை அறிந்து கொள்ள முடியாமல் திண்டாடுகிறான். சிறை அதிகாரிகள் முதலில் ஒராளாகவும் பிறகு இன்னொருவராகவும் மாறுகிறார்கள். சின்சினாட்டஸுக்கு உண்மையாக இல்லாத அவன் மனைவி தான் செய்த குற்றங்களுக்காக மனம் வருந்தி ஊருக்கு உண்மையாக இருக்கும்படி அவனுக்குப் போதனை செய்கிறாள்.
போலிகளால் சூழப்பட்டிருக்கும் சின்சினாட்டஸ் தன்னை வருத்தும் மரண பயத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டி அதை விவரித்து எழுத ஆரம்பிக்கிறான்.
கடைசியில் சின்சினாட்டஸுக்கு மரண தண்டனை நிறைவேற்றப் படுகிறது. நோஸ்டிக்குகளின் நம்பிக்கைப்படியே போலியான உடம்பிலிருந்து விடுதலையான நிம்மதியோடு சின்சினாட்டஸின் ஆத்மா அந்த இடத்தைவிட்டுப் போவதாக நாவல் முடிகிறது.
‘சிரச்சேதத்துக்கு ஓர் அழைப்பு’ நபோகோவ்வின் நாவல்களிலேயே மிக பலமான தத்துவ அடிப்படையைக் கொண்ட நாவல். போலி மனிதர்களிடையே உண்மையை நாடும் மனிதன் மாட்டிக் கொண்டால் அவனுக்கு என்னவெல்லாம் நடக்கும் என்ற விசாரணை.
இதில் பழைய நோஸ்டிக்குகளின் போதனைகளை புனைவில் சேர்த்தது நபோகோவ்வின் தனித்திறமை.
சின்சினாட்டஸ் போலிகளுக்கிடையே மாட்டிக் கொண்ட போது எழுத்தில் தஞ்சமடைவதாக நபோகோவ் காட்டுவது முக்கியமானது. வெறும் தோற்றங்களைவிட தாளில் எழுதப்படும் எழுத்து சத்தியமுள்ளது, நிரந்தரமானது.
நல்ல கதையும், நாவலும் அப்படித்தான்.