ரஷ்ய நாவல்களில் மனிதர்களின் மீட்சி

தஸ்தவ்யஸ்கியின் ‘ஓர் எழுத்தாளனின் நாட்குறிப்புக்களை’ வாசித்துக் கொண்டிருக்கிறேன்

தஸ்தவ்யஸ்கி முதலிய 19ம் நூற்றாண்டின் பெரும் ரஷ்ய செவ்விலக்கிய நாவலாசிரியர்கள் தங்கள் நாவல்களில் முன் வைத்த மிக முக்கியமான கேள்விகளில் முதலாவது:

‘மனிதர்கள் சுதந்திரமாகச் செயல்படக் கூடிய வாய்ப்பு இருந்தும்கூட ஏன் உடலிச்சைகளிலும் உளவியல் சிக்கல்களிலும் சிக்கி அவர்களையும் மீறிச் சீரழிந்து போகிறார்கள்?’

இரண்டாவது கேள்வி:

‘இந்தச் சீரழிவிலிருந்து அவர்கள் மீள என்ன வழி?’

இந்த இரண்டு கேள்விகளுக்கான விடையை நாம் புரிந்து கொண்டால் 19ம் நூற்றாண்டின் முக்கியமான ரஷ்ய நாவல்களை நாம் இன்னும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

மனிதன் என்பவன் ஆன்மாவைப் பொறுத்த வரையிலோ மனதைப் பொறுத்தவரையிலோ மேன்மையான சாத்தியங்களைக் கொண்டவனாக இருந்த போதிலும் அவன் முடிவின்றித் தனது உடம்போடு பிணைக்கப்பட்டிருக்கிறான் என்பதே ரஷ்யர்களின் கிறித்துவ மதக்கொள்கை.

ரோமன் கத்தோலிக்க அல்லது மேற்கத்திய கிறித்துவத்தோடு ஒப்பு நோக்க இந்த நம்பிக்கை ரஷ்ய கிறித்துவத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருந்தது.

மேற்கத்திய கிறித்துவம் உடலை நிராகரிப்பதால் மனிதன் மீட்படையலாம் என்று போதித்தது. உடலை நிராகரிக்கும் வழிகளாக அது உபவாசங்களையும், தன்னை வருத்திக் கொள்தலையும், பிரம்மச்சரியத்தையும் காட்டியது.

ரஷ்யர்களின் பார்வையில் பாவத்தின் பிறப்பிடமான உடம்பைத் துறப்பதாலோ குறிப்பிட்ட போதனைகளில் பலனாலோ மனிதனுக்கு மன்னிப்பும் மீட்சியும் வருவதில்லை என்று நம்பினார்கள்.

மனிதன் என்பவன் ஆன்மா-உடல் என்ற பிரிக்க முடியாத பிணைப்பின் கட்டமைப்பு என்பதால் உடலையும் ஆன்மாவையும் பிரித்தால் மனிதன் மனிதனாக இருக்க மாட்டார்கள் என்பது அவர்கள் வாதம்.

ஆனால், பாவத்தில் ஊறிப்போன உடம்பை வைத்துக் கொண்டு எப்படி மனிதன் மீட்சி அடைவது?

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த தஸ்தவ்யஸ்கியும் டால்ஸ்டாயும் ‘மனிதர்கள் மற்றவர் பார்வையில் தங்களைத் தாங்களே எல்லா வழிகளிலும் தாழ்த்தி, தங்கள் பலவீனங்களை ஏற்றுக் கொண்டு, யாரிடமும் எந்த பொல்லாப்பும் இல்லாமல் இருப்பதால்தான் மீட்சி அடைய முடியும்’ என்கிறார்கள்.

இதற்குச் சான்றாக அவர்கள் இயேசு கிறிஸ்துவைக் காட்டுகிறார்கள். சர்வ வல்லமையுள்ள கடவுளான கிறிஸ்து பலவீனமான மனிதனாகப் பிறந்து அனைவரிடமும் அன்பு செய்ததால் அவர் முழுமையான மனிதரானார் என்பது அவர்கள் வாதம்.

அப்படி முழுமையான மனிதரான கிறிஸ்து தன்னைச் சுற்றிப் பாவிகளையிம், விபச்சாரிகளையும், பொய்யர்களையும், திருடர்களையும், அசடர்களையும் சேர்த்துக் கொண்டார்.

அது போலவே துர்கனேவ்வும், தஸ்தவ்யஸ்கியும், டால்ஸ்டாயும் தங்கள் நாவல்களில் மீட்சியைப் பிரதிபலிக்கும் பாத்திரங்களாக விபச்சாரிகளையும், முட்டாள்களையும், குடிகாரர்களையும், காமத்தில் வீழ்ந்தவர்களையும் முன்னிறுத்தினார்கள்.

சோளம் கதிரிலிருந்து பிரிந்து நசுக்கப்பட்டுச் சுடப்படாமல் மற்றவர்களுக்குப் பயந்தரும் உணவாகாது என்று புதிய ஏற்பாட்டில் இயேசு சொல்கிறார்.

அது போலவே 19ம் நூற்றாண்டின் ரஷ்ய நாவல்களில் அசடனின் பிரின்ஸ் மிஷ்கின், குற்றமும் தண்டனையின் சோனியா, அலோய்ஷா கரமசோவ் போன்ற உடைந்து போனவர்களால் அல்லது உலகத்தின் பார்வையில் தோற்றுப் போவனர்களாலேயே மனிதர்களின் மீட்சியும் உன்னதமும் சித்தரிக்கப்படுகின்றன.

மாறாக துர்கனேவ்வின் ‘தந்தைகளும் மகன்களிலும்’ வரும் பார்ஸரோவ், ‘குற்றமும் தண்டனையும்’ நாவலில் வரும் ரஸ்கோல்நிகோவ், டால்ஸ்டாயின் அன்னா கரனினா போன்ற மெத்தப் படித்தவர்களும், நாகரிகம் வாய்ந்தவர்களும் தமது ஆற்றல்களையும் தந்திரங்களையும் நம்பி இருப்பதால் மீட்பிலிருந்து தூரம் விலகிப் போகிறார்கள்.

அருவருக்கத் தக்கவையாய்க் கருதப்பட்டாலும் தமது பலவீனங்களை ஏற்றுக் கொண்டு தாழ்மையுடன் நடந்து கொள்ளும் மனிதர்களை ஒரு பக்கமும், ஆற்றலையும் தந்திரத்தையும் பலத்தையும் நம்பும் மனிதர்களை எதிர்ப்பக்கமாகவும் நிறுத்தி 19ம் நூற்றாண்டின் ரஷ்ய நாவல்கள் நமது மீட்சிக்கு என்ன வழி என்று நம்மை அலசிப் பார்க்கச் சொல்கின்றன.

வாசகர்களைப் பார்த்து அவை கேட்கும் இந்தக் கேள்வியால்தான் அவை செவ்விலக்கியங்கள் ஆகின்றன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s