ஷேக்ஸ்பியரும் ரஷ்ய நாவல் வாசிப்பும்

19ம் நூற்றாண்டின் ரஷ்ய நாவல்கள் குறித்த என் பதிவுகளைப் பார்த்த சில நண்பர்கள் ‘ரஷ்யச் செவ்விலக்கிய நாவல்களின் அடிப்படை விவாதங்களைப் புரிந்து கொள்வதற்கு உதவும் சாவி என்ன?’ என்று கேட்கிறார்கள்.

நானும் ரஷ்ய இலக்கியம் வாசிக்கிறேன் என்று எனது பதினேழாவது டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ நாவலை வாசிக்கத் தொடங்கி, முதன்முறையாக வாசித்த போது சுமார் 367-ஆவது பக்கத்தில் ‘போதும் போதும்’ என்று கைகளை உயரத் தூக்கி ஓடிப் போனவன்.

அந்த வகையில் எனக்கு உதவியாக இருந்த ஓர் ஆலோசனையைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்:

ஷேக்ஸ்பியரின் முக்கியமான நாடகங்களை ஊன்றி வாசித்து விட்டு ரஷ்ய நாவல்களை வாசிக்க ஆரம்பியுங்கள்.

துர்கனேவ், தஸ்தவ்யஸ்கி, டால்ஸ்டாய் ஆகியோரது நாவல்களை ஜேன் ஆஸ்டனின் நாவல்களைப் போலவோ ப்ராண்டே சகோதரிகள், சார்லஸ் டிக்கென்ஸ் நாவல்களைப் போலவோ வெறும் சம்பவக் குவியலாக மட்டும் வாசிக்க முயன்றால் ஆயாசம் மட்டுமே மிஞ்சும்.

19ம் நூற்றாண்டின் ரஷ்யச் செவ்விலக்கிய நாவல்கள் அனைத்தும் மனிதர்கள் எதிர்நோக்கிய அரசியல், ஆன்மீக, சமூகச் சிக்கல்களுக்கான விடை காணும் அலசலாகத்தான் எழுதப்பட்டிருக்கின்றன.

இந்நாவல்களில் உலவும் கதாபாத்திரங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கும் சம்பவங்களும் இந்த அலசலையும் விவாதத்தையும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் சேர்த்துக் கொள்ளப்பட்டவை.

ரஷ்ய நாவலாசிரியர்கள் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வழியாகத் தாங்கள் விவாதிக்கும் கோட்பாட்டடின் அல்லது அலசும் கேள்வியின் மீது ஒரு குறிப்பிட்ட பார்வையை வாசகர்களின் முன்னால் வைக்கிறார்கள்.

அதே சமயம், ரஷ்ய நாவலில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொரு கோட்பாட்டுப் பார்வையை விளக்கும் வெறும் தட்டையான குறியீடுகளாக மட்டும் இல்லாமல் கதையின் ஓட்டத்தோடு இயந்து இயங்கும் முழுமையான ஆளுமைகளாகவே இருக்கின்றன.

பல கதாபாத்திரங்களின் வழியாக எந்த ஒரு கேள்வியும் பன்முகப் பார்வையாகக் கதையோட்டத்தோடு இயந்து அலசப்படுவதே ரஷ்ய நாவல்களின் செவ்விலக்கியத் தன்மைக்கும் வெற்றிக்கும் காரணமாக அமைந்திருக்கின்றன.

இதை அவருடைய நாடகங்களின் வழியாக முதலில் செய்து காட்டியவர் ஷேக்ஸ்பியர்.

அதனால்தான் கோகோல், துர்கனேவ், தஸ்தவ்யஸ்கி, டால்ஸ்டாயிலிருந்து பின்னாளைய கார்க்கி, நபோகோவ்வரை முக்கியமான ரஷ்ய எழுத்தாளர்கள் எல்லோரும் அவரை அப்படிக் கொண்டாடுகிறார்கள்.

அதனால்தான் யாரையும் எளிதில் பாராட்டிவிடாத தென்னமெரிக்கப் போர்ஹெஸ் ஷேக்ஸ்பியரை மீண்டும் மீண்டும் சிலாகித்துப் பேசுகிறார்.

பின்னாளில் ரஷ்ய நாவல்களில் தஸ்தவ்யஸ்கியும் மற்றவர்களும் செய்ததுபோலவே ஷேக்ஸ்பியரும் தனது நாடகங்களில் மனித மனதின் மிக நுணுக்கமான நகர்வுகளை உரையாடல்களின் மூலமாகவும் தனிப்பேச்சுக்களின் மூலமாகவும் (soliloquies) படம் பிடித்துக் காட்டுகிறார்.

ஷேக்ஸ்பியரின் உரையாடல்களும் தனிப்பேச்சுகளும் ரஷ்ய இலக்கியத்தின் உச்ச நாவல்களில் உள்ள உரையாடல்களுக்கும் கதாபாத்திரங்களிம் சுய பரிசோதனைக்கும் மாதிரியாக அமைந்திருக்கின்றன என்று துணிந்தே சொல்லலாம்.

ஒவ்வொரு நாடகத்திலும் அவர் அறிமுகப்படுத்தும் கதாபாத்திரங்கள் (நகைச்சுவைக் கதாபாத்திரங்கள் உட்பட) வாசகர்களின் முன்னாலிருக்கும் கேள்வியைப் பல கோணங்களில், பல வேளைகளில் ஒன்றுக்கொன்று நேரெதிராக இருக்கக் கூடிய கோட்பாடுகளின் அடிப்படையில் அலசுகின்றன.

ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் முக்கியக் கதையோடு சேர்ந்து வரக்கூடிய உபகதைகள் சில நேரங்களில் தனித் தடத்திலும் சில நேரங்களில் முக்கியக் கதையோடு இணைந்தும் பயணிக்கும். இந்த உத்தியைப் பயன்படுத்தி ஷேக்ஸ்பியர் தனது நாடகச் சம்பவங்களின் தாக்கத்தை மேலும் செறிவாக்குவார்.

‘போரும் அமைதி’ நாவல் முதற்கொண்டு பல ரஷ்ய நாவல்களில் இதே உத்தி பயன்படுத்தப்பட்டிருப்பதை எளிதில் காணலாம்.

ஆனால் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் தெளிவான காட்சிகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதால் இந்நகர்வுகளையும் உரையாடல் உத்திகளையும் அடையாளம் கண்டு கொள்வது சுலபம்.

இதில் நல்ல பயிற்சி பெற்றுவிட்டால் ரஷ்யச் செவ்விலக்கிய நாவல்களை எளிதில் வாசித்து அறிந்து கொள்ளலாம் என்பது என் அனுபவம்.

ஷேக்ஸ்பியர் 37 நாடகங்களை எழுதியிருக்கிறார். எல்லாவற்றையும் வாசிக்க வேண்டுமா என்றால், இல்லை.

ரஷ்ய நாவல்களில் நுழைய விரும்புகிறவர்கள் நிச்சயம் ஊன்றி வாசிக்க வேண்டிய நாடகங்கள் என் கணிப்பில் எட்டு இருக்கின்றன.

ஷேக்ஸ்பியர் எழுதிய 12 துன்பியல் நாடகங்களில் ஐந்து: ஹாம்லட், கிங் லீயர், ஜூலியஸ் சீசர், ஓத்தெல்லோ, மெக்பெத்.

அவர் எழுதிய 14 காமெடிகளில் மூன்று: வெனீஸின் வணிகன், Midsummer Night’s Dream, Tempest அல்லது Twelfth Night.

அவருடைய 11 வரலாற்று நாடகங்களும் வெறும் போர். வாசித்து எதுவும் ஆகப் போவதில்லை.

துன்பியல் நாடகங்களில்கூட நான் ஜூலியஸ் சீசரைவிட டைட்டஸ் அந்த்ரோனிக்கஸ் பிரமாதம் என்பேன்.

ஆனால் ஜூலியஸ் சீசர் எல்லோருக்கும் பரிச்சயமான கதை. அதனால் பரவாயில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s